திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 5:

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-5ல்.,

12. வரை அலங்காரச் சருக்கம்.
13. கணங்கள் வருகைச் சருக்கம்.
14. இமயமலையில் இறைவன் எழுந்தருளிய சருக்கம்.
15. அகத்தியரைத் தென் திசைக்கு அனுப்பிய சருக்கம்.
16. கிரௌஞ்சகிரி சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

12. வரை அலங்காரச் சருக்கம்:

இமயமலையின் மன்னன் இமயவரம்பன் தேவதச்சனை அழைத்து இமயமலையில் திருமண மண்டபமும், திருமணத்துக்கு வருபவர் தங்குவதற்குப் பல மாளிகைகளும் அமைத்து, மலையையும் அழகுபடுத்தச் சொன்னார். அதன்படியே உடனே வேலைகள் தொடங்கப்பட்டது. இமயத்தில் இருக்கும் பூ மரங்கள் எல்லாம் கால்களாகவும், அதன் கிளைகள் எல்லாம் குறுக்கே பரப்பிய வாரிகளாகவும், மேகங்கள் நிழல் செய்யும் கோபுரத்து தட்டிகளாகவும் அமைத்து, இமயமலை முழுவதும் மிகப் பெரிய பந்தலை உருவாக்கினான். மாடங்களிலும், மாளிகைகளிலும், கோபுரங்களிலும், அரங்குகளிலும், அம்பலங்களிலும், கொடிகளையும், தோரணங்களையும், வரிசை வரிசையாக அமைத்தான். மனமேடைகளிலும், உப்பரிகைகளிலும், அன்றலர்ந்த மலர்களால் அலங்காரம் செய்தான். நவமணிகளால் தூண்கள் அமைத்து அவற்றில் பல அற்புத வேலைப்பாடுகள் கொண்ட பதுமைகளை அமைத்தான்.

வாழையும், கமுகும், வரிசையாக நாட்டி, வீதியெங்கும் குறு மணலை பரப்பி, இருமருங்கும் சந்தனத்தைக் கரைத்துத் தெளித்துத் தெய்வலோகம் போல விளங்க செய்தான். திருமணத்துக்கு வரும் திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோருக்கு தனித்தனி மாளிகைகள் அமைத்தான். தேவர், முனிவர், கணங்கள் ஆகியோருக்கு தனி மாளிகை அமைத்தான். இமயத்தின் நடுநாயகமாக மிகப்பெரிய திருமண மண்டபம் அமைத்தான். திருமண மண்டபத்தின் முன்னால் இருமருங்கும், வரிசையாகத் தேவலோக மங்கையர் போன்று, புதுமையான பல இயந்திர பாவைகளை அமைத்தான். அப்பாவைகளில் சில ஆடவும், சில இசைக்கருவிகளை இயக்கவும் செய்தன.

யானை, குதிரை, மான், பசு ஆகிய விலங்குகளையும், மயில், குயில், கிளி, பூவை ஆகிய பறவைகளையும் பொன்னாலும் மணியாலும் செய்து அமைத்தான். இவ்வாறு அமைத்துத் திருமண மண்டபத்தின் உள்ளே சிவபெருமானும், பார்வதியும் அமர்வதற்கான இந்திரநீலத்தால் ஆன இரண்டு ஆசனங்களை அமைத்தான். மண்டபத்தைச் சுற்றிலும் பல பொய்கைகளையும், பூங்காக்களையும், அமைத்தான். இவ்வாறு தேவதச்சன் இமயமலையை எழில் மாலையாக்கி விட்டுச் சென்றான். இமயவரம்பன் வந்து சுற்றிப் பார்த்து எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டான். பின்பு ஆயிரக்கணக்கான அரசப் பிரதிநிதிகளை அனுப்பி, அனைத்து உலகத்தாரையும் திருமணத்துக்கு அழைத்து வரச் சொன்னான். திருமால், இந்திரன், பிரம்மன் ஆகியோரை இமயவரம்பன் நேரில் சென்று அழைத்தான். அவர்கள் இறைவனுடன் சேர்ந்து வருகிறோம் என மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

இவ்வாறு திருமண ஏற்பாடுகளை எல்லாம் செம்மையாகச் செய்து விட்டு, மாப்பிள்ளைக்கு அழைப்பு விடுக்கக் கயிலைமலைக்கு சென்றான் இமயவரம்பன். பொன்மயமான இமயத்தில் இருந்து வெள்ளி மயமான கயிலை மலைக்கு சென்ற இமயவரம்பன் அங்கு சிவபெருமானை தரிசித்து, வணங்கி பணிந்து நின்றான். பின்னர் அவரிடம்., இறைவா.! சித்திரை மாதம் உத்திரம் அன்று நாள் நன்றாக இருக்கிறது, என்றும் அன்று தங்கள் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் நிமித்தர்கள் நிச்சயித்திருக்கிறார்கள். அதற்கு முன்பே தாங்கள் அங்கு எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்தான் இமயவரம்பன். அதனை கேட்ட இறைவனும், புன்முறுவல் புரிந்து, அப்படியே யாம் வருவோம், நீ சென்று மற்ற ஏற்பாடுகளை கவனி என்று கூறி இமயவரம்பனை வழியனுப்பி வைக்கிறார். அதனை ஏற்று இமயவரம்பனும் மகிழ்ச்சியுடன் இமயம் வந்து சேருகிறான் என சூதமா முனிவர் கூறுகிறார்.

13. கணங்கள் வருகைச் சருக்கம்:

எம்பெருமான் இமயவரம்பனுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, நந்தி தேவரை நோக்கி, நந்தி..! நீ சென்று திருமால், பிரம்மன், இந்திரன் மற்றும் தேவர்களை எனது சார்பாக திருமணத்துக்கு அழைப்பு விடுத்து வா எனக் கூறுகிறார். இறைவனின் ஆணைப்படியே நந்தி தேவரும் தேவர் உலகம் முழுவதும் சென்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார். நந்தி தேவரின் அழைப்பை ஏற்ற அனைவரும் கயிலைக்கு புறப்பட தயாராயினர்.

திருமால், பிரம்மன், இந்திரன், தேவர், முனிவர், கணங்கள், சூரியர், சந்திரர், விஞ்சையர், வித்தியாதரர், கின்னரர், கிம்புருடர், கருடர், கந்தர்வர், சித்தர், வீரபுத்திரர், வீரபுத்திரி, குண்டோதரன், ஆகியோரும் வேதங்கள், ஆகமங்கள், மந்திரங்கள், பஞ்ச பூதங்கள், ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், எட்டு மலைகள், எட்டு யானைகள், எட்டு நாகங்கள், பதினான்கு உலகங்கள் ஆகியவையும் திருக்கயிலாய மலைக்கு வந்து சேர்ந்தார்கள். இந்த கூட்டத்தைக் கண்ட நந்தி தேவர், ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்து, இறைவனிடம் சென்று கூறுகிறார். அதனை கேட்ட இறைவன் அனைவரையும் தம் முன்னே அழைத்து வரும்படி உத்தரவிடுகிறார். அதன்படியே நந்தியெம்பெருமானும் அனைவரையும் உள்ளே அழைத்து வருகிறார். உள்ளே வந்த அனைவரும் சிவபெருமானை பணிந்து வணங்கி நிற்கின்றனர். அப்போது பிரம்மதேவர் இறைவனின் அருகே சென்று, இறைவா.! நேற்று வரை தாங்கள் இந்தக் கோலத்தில் இருந்தது சரி. ஆனால் இன்று தாங்கள் மணமகன். எனவே அதற்கு ஏற்றார் போல திருக்கோலம் புனைய வேண்டும். பாம்பு, எலும்பு, மான், மழு, யானைத்தோல், வேங்கைத்தோல் ஆகியவற்றை நீக்கி விட்டு, இதோ நான் கொண்டு வந்திருக்கும் ஆடை, அணிகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கூறுகிறார். அதனை கேட்ட இறைவன் லேசான புன்னகையுடன் அவற்றை ஏற்றுக் கொண்டார். பின் நந்தி தேவரை நோக்கி, நந்தி..! நாம் இமயத்துக்கு புறப்படுவோம் என்று கூறுகிறார்.இறைவனின் ஆணையை நந்திதேவர் எல்லோருக்கும் தெரிவித்து இமயத்துக்கு புறப்பட சொன்னார் என்று சூதமா முனிவர் சொல்லி மேலும் தொடர்கிறார்.

14. இமயமலையில் இறைவன் எழுந்தருளிய சருக்கம்:

திருக்கயிலாய மலைக்கு வந்து சேர்ந்த கணங்களுடன் இறைவன் இமயமலைக்கு புறப்பட்டார். இறைவனோடு வருகிறோம் என்ற மகிழ்ச்சியில் அந்தக் கூட்டம், ஆடிப் பாடிக் கொண்டாட்டம் போட்டுக் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு ஒரே கொண்டாட்டமாக கூட்டம் இமயத்தைச் சென்று சேர்ந்தது. இமயத்தில் பெருத்த கூட்டம் இருந்தது. இரண்டு கூட்டங்களும் சங்கமம் ஆயின. இமயவரம்பன் தனது. மனைவியரோடும், சுற்றத்தாரோடும் வந்து, முறைப்படி சிவபெருமானையும், தேவர்கள் கூட்டத்தையும் வரவேற்று அழைத்து சென்று மணமகன் மாளிகையில் அமரச் செய்தான். திருமாலும், திசைமுகனும் மணமகனாக மஹாதேவருக்கு அலங்காரம் செய்தார்கள்.

திருமால் தான் கொண்டு வந்திருந்த பட்டு பீதாம்பர ஆடைகளை அணியச் செய்து, நான்முகன் கொண்டு வந்திருந்த நவமணிகளால் ஆன அணிகலன்களை அணிவித்து அலங்காரம் செய்தனர். அமுதுக்கு இனிமை சேர்ப்பது போல, அழகுக்கு அழகு சேர்த்தார்கள். சிவபெருமானுக்கு மாப்பிள்ளையான, திருமாலே அவருக்கு மாப்பிள்ளை தோழனாக இருந்தார். அவரே மாப்பிள்ளையின் கையைப் பிடித்து மணமேடைக்கு அழைத்து வந்தார். கலைமகளும், அலைமகளும் மணமகளின் தோழியாக இருந்து பார்வதியை அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வருகிறார்கள். அங்கே பிரம்மதேவன் புரோகிதராக அமர்ந்தான் என்று கூறி முடித்த சூதமா முனிவர், நைமிசாரணிய முனிவர்களுக்கு அகத்தியரை தென் திசைக்கு அனுப்பிய சருக்கம் பற்றி தொடர்ந்து கூறுகிறார்.

15. அகத்தியரைத் தென் திசைக்கு அனுப்பிய சருக்கம்:

பிரம்மன் புரோகிதராக அமர்ந்து மந்திரங்களைச் சொல்ல தொடங்கினான். அப்போது ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. அனைவரும் அங்கும் இங்கும் ஓடினார்கள். இமயமலையில் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடி விட்டதால், பூமியின் வடபகுதி தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்து விட்டது. இதனால் சமநிலை இல்லாமல் பூமி தள்ளாடியது. அதனால் தான் அனைவரும் அலறியபடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். இதையறிந்த தேவர்கள் நாரதருடன் சென்று சிவபெருமானை சந்தித்து நிலைமையை கூறி முறையிட்டார்கள். அதனைக் கேட்ட இறைவன், தேவர்களே கலங்காதீர்கள், எனக்கு இணையான ஒருவனை தென்பகுதிக்கு அனுப்பினால் எல்லாம் சமநிலை பெற்றுவிடும் எனக்கூறி அகத்திய முனிவரை அழைத்து வர செய்கிறார். அவர் கூறிய மறுகணமே அகத்தியர் இறைவன் முன் வந்து வணங்கி நிற்கிறார். அவரிடம் அகத்தியா..! சமநிலை இன்றி ஆடிக் கொண்டிருக்கும் பூமியை சமநிலை படுத்த வேண்டும், அதற்காக நீ இப்போதே தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்கு செல்ல வேண்டும், உடனே புறப்பட்டு செல் என உத்தரவிடுகிறார் பெருமான்.

அதனை கேட்ட அகத்தியர் சற்று தயங்கிய படியே, இறைவா..! இத்தனை கோடி பேர்கள் இங்கு உமது திருக்கல்யாணத்தை காண கூடியிருக்கும் போது அடியேனுக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லாமல் போய் விட்டதே என கலங்கியபடி கூறுகிறார். அகத்தியரின் தயக்கத்தை புரிந்து கொண்ட சர்வேஸ்வரன், அகத்தியா..! நீ எனக்கு இணையானவன், அதனால் தான் உன்னை தென்திசைக்கு அனுப்புகிறோம், இங்கு நீ காண முடியாத திருமணக் காட்சியை நாம் மூலமஹாலிங்கமாக அமர்ந்திருக்கும் வேணுவனத்தில் வைத்து உனக்கு காட்டியருள்வோம் எனக் கூறுகிறார். மேலும் அகத்தியரிடம், அந்த வேணுவனப் பதி மிகவும் சிறந்த பதி. தன்னைப் பற்றியிருந்த கலி நீங்கியவுடன் நளன் தன்னுடைய மனைவி மக்களோடு அங்கே சென்று திருமூலமஹாலிங்கத்தை வணங்கி வழிபாடு செய்து பேறு பெற்றான். ராவணனை அழித்து விட்டு வந்த ராமனும் அங்கே சென்று, மூலமஹாலிங்கத்தை வணங்கி வழிபாடு செய்து சென்றிருக்கிறான். தருமனும் தம்முடைய தம்பியாருடன் சென்று திருமூலமகாலிங்கத்தை வணங்கி வழிபாடு செய்துள்ளான். ஆகையால் அது ஒரு புண்ணிய பூமி. அது போல ஒரு புண்ணிய பூமி எங்கும் இல்லை. அந்த புண்ணிய பூமியில் எமது திருமணக்கோலத்தை உனக்கு காட்டுவோம், அதனால் நீ உடனே புறப்படு என கூறி அருள்கிறார்.

இதனை கேட்ட அகத்தியர் மனம் மகிழ்ந்து இறைவனை பணிந்து, இறைவா..! உமது ஆணையை ஏற்று நான் புறப்படுகிறேன். ஆனால் அங்கே அபிஷேகம் ஆராதனை செய்வதற்கு புனிதமான நீரைத் தருகின்ற புண்ணிய நதி ஒன்று வேண்டும் என கேட்கிறார். உடனே இறைவன் உமையவள் கரத்தில் தோன்றி, கயிலையில் ஓடிக் கொண்டிருக்கும் “தாம்பிரபன்னி” நதியை நினைத்தார். மறுகணமே அங்கு “தாம்பிரபன்னி” தம்பிரான் திருமுன்னர் வந்து நின்றாள். அவளிடம் இறைவன், நமது அகத்தியன் தென் திசையில் உள்ள பொதிகை மலைக்கு செல்கிறான். அவனுடன் நீயும் செல். அங்கே சென்று தாமிரபரணி என்ற பெயரில் பொதிகை மலையில் இருந்து ஆறாகப் பெருக்கெடுத்து பாய்ந்து சென்று, மண்டலத்தை வளப்படுத்தி மாந்தர்களை சுகப்படுத்து என்று கூறுகிறார். பின்னர் தாமிரபரணி தேவிக்கு வேண்டிய பல வரங்களையும் கொடுத்து, அகத்தியரின் கமண்டலத்துக்குள் நிரப்பி அவளை அகத்தியருடன் தென் திசைக்கு அனுப்பி வைக்கிறார். சிவபெருமான். இறைவனின் ஆணைப்படி அகத்தியர் தென்திசை நோக்கி வரவரப் பூமியின் ஏற்றத்தாழ்வு சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. அவர் பொதிகை மலைக்கு சென்றதும் பூமி சமநிலைக்கு வந்து விட்டது என்று சொல்லிச் சூதமா முனிவர், அடுத்ததாக இறைவனின் திருக்கல்யாணம் பற்றி சொன்னார்.

16. கிரௌஞ்சகிரி சருக்கம்:

தேவர்கள், முனிவர்கள், கணங்கள் ஆகியோர் இருமருங்கும் நிற்க, சிவபெருமான் மணமேடையில் வீற்றிருந்தார். மணமகளாகிய மலைமகளை அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். கங்கை கவரி வீச, காளிகள் கவிகை தாங்க, சசி தேவி தாம்பூலம் ஏந்தி வர, ஐயை பொற்பிரம்பு எடுத்து வர, அரம்பையர் ஆடி வர, கலைமகள் பாடி வர, அலைமகள் கைப்பிடித்து அழைத்து வந்து மணமேடையில் அமர வைக்கிறாள். மறையவன் மறைகள் ஓத மங்கள மங்கையர் குலவையிட, மங்கள வாத்தியங்கள் இசைக்க, அந்தர துந்துபி முழங்க இமயவரம்பன் தாரை வார்த்துத் தர, இறைவன் பார்வதியின் கரம் பற்றினார்.

அப்போது இமயவரம்பன் ஒரு தங்கத் தாம்பாளத்தில் காராம்பசுவின் பாலும், கனி வகைகளும் வைத்து எடுத்துக் கொண்டு வந்து இறைவன் முன்னே வைத்து, பெருமானே..! இவற்றை அருந்தியருள வேண்டும் என வேண்டினான். இறைவனும் அவனது வேண்டுகோளை ஏற்று அதனை ஏற்றுக்கொண்டார். மற்ற திருமணங்களில் எல்லாம், திருமணம் காண வந்தவர்கள் மணமக்களை வாழ்த்துவார்கள். ஆனால் இந்த திருமணத்தில் திருமணம் காண வந்தவர்களை மணமக்கள் வாழ்த்தினார்கள். வந்தவர்கள் அனைவரும் மணமக்களை வணங்கி ஆசி பெற்றார்கள். அதன் பின்னர் அம்மையும், அப்பனும் ஆசனத்தில் அமர்ந்து அனைவருக்கும் வாழ்த்தும், வரமும் வழங்கி கொண்டிருந்தார்கள். அப்போது ரதி தேவி வந்து, பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி நிற்கிறாள். அவளை கண்ட மாத்திரத்தில் அவளது மனக்குமுறலை உணர்ந்த பெருமான் திருவுளம் இறங்கி, எல்லாம் நன்மைக்கே என்று ரதியிடம் கூறி, மன்மதனை உயிர்ப்பித்து தருகிறார். மேலும் உயிர் பெற்று எழுந்த மன்மதன் அன்று முதல் ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்றும், மற்றவர் கண்களுக்கு தெரியாத நீ, அருவுருவமாக இருந்து உனது கடமைகளை செய்து வா எனக் கூறி மன்மதனுக்கு ஆசி வழங்குகிறார். அதனை கேட்டு மகிழ்ந்த ரதியும், மன்மதனும் மீண்டும் இறைவனை வணங்கிச் சென்றனர்.

திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் அம்மையப்பனிடம் ஆசிகள் பெற்று விடைபெற்றுச் சென்றனர். அதன் பின்னர் இறைவனும், அம்மை பார்வதியுடன் தனது இருப்பிடமான திருக்கயிலை மலைக்கு சென்றுவிடுகிறார் என்று சூதமா முனிவர் நைமிசாரணிய முனிவர்களுக்கு திருமண சருக்கத்தை கூறி முடிக்கிறார். அதனை கேட்ட நைமிசாரணிய முனிவர்கள், முனிவரே.! அகத்திய முனிவர் பொதிகை மலைக்கு சென்று சேர்ந்ததும், இறைவன் திருமணம் இனிதே நிறைவேறியதும் கேட்டு மகிழ்ந்தோம். அகத்திய முனிவர் தாமிரபரணி நதியுடன் இமயத்தில் இருந்து பொதிகை மலைக்கு சென்ற போது, இடையில் நடந்த சில நிகழ்வுகள் பற்றி சில தவ சீலர்கள் மூலம் சுருக்கமாக சொல்லக் கேட்டிருக்கிறோம், அவற்றை தாங்கள் எங்களுக்கு விளக்கமாக கூறியருள வேண்டும் என்று விரும்புகிறோம் என சூதமா முனிவரிடம் விண்ணப்பம் செய்கிறார்கள். அதனை கேட்ட சூதமா முனிவரும், அவ்வாறே கூறுவதாக சொல்லி மேற்கொண்டு தொடர்கிறார்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 33.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-33ல்., 113. தாமிரசபையில் அம்மைக்கு நடனம் காட்டிய சருக்கம். 114. தேவர்களுக்கு அகோர தாண்டவம் ஆடிக் காட்டிய …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!