திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-3ல்.,
7. பருப்பதச் சருக்கம்.
8. காமதகன சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
7. பருப்பதச் சருக்கம்:
தக்கன் வேள்வி சருக்கம் பற்றி சூதமா முனிவர், நைமிசாரணிய முனிவர்களுக்கு எடுத்து கூறிய பின்னர், தொடர்ந்து பருப்பதச் சருக்கம் பற்றி கூறுகிறார். திருக்கயிலாயத்தில் பார்வதியும், பரமேஸ்வரனும் வீற்றிருக்கிறார்கள். அப்போது அம்மை, சிவபெருமானிடம், சுவாமி..! எனக்கு ஒரு மனக்குறை இருக்கிறது, அதனைப் போக்க தாங்கள் ஒரு வழி சொல்ல வேண்டும் என கேட்கிறாள். அதற்கு சுவாமி, அப்படி என்ன மனக்குறை உள்ளது என கூறும் படி கேட்க, இறைவா, தக்கனின் மகளாக அவன் வளர்த்த உடலோடும், அவன் வைத்த பெயரோடும் இருக்கிறேன். இது எனக்குப் பெரிய குறையாகவும் மன வருத்தமாகவும் இருக்கிறது. இந்த குறை போக எனக்கு ஒரு தீர்வு கூற வேண்டும் என அம்மை கூறுகிறாள். அதனை கேட்ட பெருமான், முகமலர்ச்சியுடன், தேவி இந்த குறை தீர விரைவில் வழி பிறக்கப் போகிறது. இமயத்தின் மன்னன் இமயவர்மன் உன்னையே மகளாக அடைய வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு நீ மகளாகத் தோன்று, அவன் உனக்கு நல்லதொரு பெயர் சூட்டி வளர்த்து வருவான், உரிய பருவம் வரும் போது நாம் அங்கு வந்து உன்னை திருமணம் செய்து இங்கு அழைத்து வருவேன், அதன் மூலம் உனது இந்த குறை நீங்கும் எனக் கூறுகிறார்.
இதனை கேட்ட அம்மையும் மனமகிழ்ந்து, இறைவனை வணங்கி, விடைபெற்று இமயமலைக்கு வந்து, சின்னஞ்சிறு குழந்தையாக வடிவம் கொண்டு, அங்குள்ள தடாகத்தின் கரையில் கிடந்தாள். அங்கு தவத்தை நிறைவு செய்து விட்டுத் தடாகத்துக்கு வந்த இமயவரம்பன், பேரொளி வீச ஒரு குழந்தை கிடப்பதை காண்கிறான். அதனை கண்டவன் தனக்கு இறைவனே கொடுத்த குழந்தையாக கருதி, அந்த குழந்தையை அள்ளி எடுத்து, உச்சி முகர்ந்து, கொஞ்சி மகிழ்ந்து தனது அரண்மனைக்கு எடுத்து வந்து பார்வதி என்னும் பெயர் சூட்டி, அன்னம் ஊட்டி, நடை பழக்கி, சீரோடும் சிறப்போடும் வளர்த்து வருகிறான். பார்வதிக்கு ஐந்து வயது ஆகியது. ஐந்து வயது என்பது குழந்தைகளுக்கு கல்வி கண் திறக்கும் பருவம் ஆகும். இது மற்ற குழந்தைகளுக்கு பொருந்தும். ஆனால் பார்வதி அம்மைக்கு பொருந்தாதல்லவா. அவள் கல்லாமலேயே கல்வி எல்லாம் கைவரப்பெற்றவள் ஆயிற்றே, அதனால் தனது ஐந்தாம் வயதிலேயே சிவஞானத்தின் அருளால் மெய்ஞ்ஞானம் தோன்ற, தனது தந்தையான இமயவரம்பனை கண்டு, தந்தையே.! நான் தவம் செய்ய விரும்புகிறேன், ஆகையால் எனக்கொரு தவச்சாலை அமைத்துத் தர வேண்டும் என்று கேட்கிறாள். பார்வதி கூறியதை கேட்டு இமயவரம்பன் ஆச்சரியப்பட்டான். மகளே., இந்த சின்னஞ்சிறு பருவத்திலா தவம் இருப்பது? வேண்டாம் தாயே.! இன்னும் சிறிது காலம் ஆகட்டும் என்று கூறுகிறான்.
அதற்கு சரியான காரணம் சொல்லித் தனது தந்தையின் எண்ணத்தை மாற்றிவிடுகிறாள் பார்வதி. தந்தையே.! தவம் இருப்பதற்கு பருவம் எதற்கு? மனம் பக்குவமானால் போதும். இந்தப் பருவத்திலும் தவம் இருக்கலாம். ஆகையால் தவம் செய்ய என்னை அனுமதியுங்கள். என்று பணிவோடு சொன்னாள் பார்வதி. பேதைப் பருவக் குழந்தை மேதை போல் பேசுவதைக் கேட்ட இமயவரம்பன், மறுப்பேதும் சொல்லாமல், மகிழ்ச்சியோடு தவச்சாலை அமைத்துக் கொடுக்கிறான். அதன் அருகிலேயே ஒரு மலர்த் தோட்டத்தை உருவாக்கி தனது மகளுக்கு உதவி செய்ய பல மாதர்களையும் ஏற்பாடு செய்கிறான். அம்மை பார்வதி அந்தத் தவச்சாலைக்கு சென்று, சிவபெருமானை மனதில் எண்ணி, அவரையே மணக்க விரும்பி, தனது தவத்தை தொடங்கி விட்டாள். தங்கள் மகளது தவத்தின் நோக்கத்தை அறிந்த இமயவரம்பன் மற்றும் அவனது மனைவி மேனையும் மகிழ்ச்சி அடைந்தனர். தினந்தோறும் தவச் சாலைக்கு வந்து தனது மகளை பார்த்துச் சென்றனர். அங்கே கயிலை மலையில் இறைவன் தனியாக இருக்கின்றார். அப்போது சனகாதி முனிவர்கள் நால்வரும் வந்து, இறைவனை வணங்கித் தங்களுக்கு ஞான உபதேசம் செய்ய வேண்டும் என்று வேண்டினார்கள். இறைவனும், சரி என்று சம்மதித்து, பின் நந்தி தேவரை அழைத்து, உபதேசம் முடியும் வரை யாரையும் உள்ளே விடாதே, மன்மதன் வந்தால் அவனை மட்டும் விடு என்று ஆணையிட்டு விட்டு, தக்ஷிணாமூர்த்தி வடிவம் கொண்டு ஆலமரத்தின் அடியில் தெற்கு நோக்கி அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்யத் தொடங்குகிறார். மெளனமாக இருந்து கை முத்திரைகள் மூலம் உபதேசம் செய்தார் பெருமான்.
சூரபத்மன் பல்லாயிரம் ஆண்டுகள் பரமனை நோக்கித் தவம் செய்து பல வரங்களை வாங்கினான். தனக்குச் சாவு வந்தால் சிவனிடம் இருந்து தோன்றும் ஒரு குமாரனால் தான் வர வேண்டும், வேறு எவராலும் வரக்கூடாது என்ற ஒரு வரத்தையும் பெற்று விடுகிறான். தான் பெற்ற வாரத்தின் பலத்தினால், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, வானவர்களை வாட்டி வதைத்தான். அவனுடைய கொடுமையைத் தாங்க முடியாமல் அமரர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். ஒருநாள், இந்த கொடுமைகளை எல்லாம் தாங்க முடியாமல் தேவேந்திரன் தேவர்களை அழைத்துக் கொண்டு, பிரம்மனிடம் சென்று முறையிட்டான். பிரம்மனோ அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு திருமாலிடம் வருகிறார். அங்கு வந்து அவர்கள் திருமாலிடம் சூரபத்மன் செய்யும் கொடுமைகளையும், அவன் பெற்றுள்ள வரத்தையும் பற்றி தேவர்கள் திருமாலிடம் எடுத்துக் கூறுகிறார்கள். அதனைக் கேட்ட திருமால், எல்லாம் சிறிது காலம் தான், சிவபெருமானிடம் இருந்து ஒரு குமரன் தோன்றினால் எல்லாம் சரியாகி விடும் என்றும், தற்போது சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். உமையவளோ, குழந்தையாக பிறந்து இமயத்தில் தவம் இயற்றிக்கொண்டிருக்கிறாள், ஆகவே இருவரும் தனித் தனியாக இருக்கும் போது, கொடியவனைக் கொல்ல குமரன் எப்படித் தோன்றுவான் என்று கூறுகிறார்.
இதனை கேட்ட தேவர்கள், அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று தேவர்கள் திருமாலிடம் கேட்க, அதற்கு அந்த சிவகுமாரன் தோன்ற வேண்டும் என்றால், சிவபெருமான் திருவுளத்தில் தேவி உமையவளை பற்றிய எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். இதனை கேட்ட தேவர்கள் அதனை செய்ய யாரால் முடியும் என்று தயங்கி விழி பிதுங்கி நின்றனர். அப்போது திருமால், இதனை மன்மதன் நினைத்தால் செய்ய முடியும், எனவே அவனை உடனே இங்கே அழைத்து வாருங்கள் என கூறுகிறார். உடனே தேவர்களும் மன்மதனை அழைத்துக் கொண்டு, திருமாலிடம் வருகிறார்கள் என்று கூறி முடித்த சூதமா முனிவர் காமனை எரித்த சறுக்கத்தை பற்றி கூறத் தொடங்குகிறார்.
8. காமதகன சருக்கம்:
திருமால் கூறியபடி மன்மதனை அழைத்துக் கொண்டு வந்த தேவர்கள், திருமால் முன்னர் கூடி நிற்கின்றனர். அப்போது பிரம்மதேவர், மன்மதா உன்னால் ஆக வேண்டிய காரியம் ஒன்று உள்ளது, அதனை நீ மட்டுமே செய்ய முடியும், என்று மன்மதனிடம் கூறுகிறார். இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த மன்மதன், அப்படியா அது என்ன காரியம் எனக் கேட்கிறான். அதற்கு பிரம்மதேவர், வசந்தா.. கயிலையில் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் சிவபெருமான். அது பல தேவ வருடங்களாக தொடர்கிறது. எனவே நீ அவர் மீது மலர்க்கணை தொடுத்து அவரை நிஷ்டையில் இருந்து எழுப்ப வேண்டும் என கூறுகிறார். அதனை கேட்ட மன்மதன், பதறி போய் விட்டான். பிரம்மதேவா.! இது என்ன விபரீதம், நிஷ்டையில் இருக்கும் முக்கண்ணன் மீது மலர்க்கணை தொடுப்பதா? இதனை செய்தால் பெருமானின் கோபத்திற்கு ஆளாக அல்லவா நேரிடும் எனக்கூறி மன்மதன் மறுக்கிறான்.
உடனே தேவர்கள் அனைவரும் சேர்ந்து, மன்மதா.! எப்படியாவது இந்த நல்ல காரியத்தை நீ செய்ய வேண்டும், உன்னைத் தவிர வேறு எவராலும் இதனை செய்ய முடியாது, உன்னால் தான் தேவர்கள் சூரபத்மன் தொல்லையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ முடியும் என கூறுகிறார்கள். இருந்தும் மன்மதன் தயங்கி நிற்கிறான். அவன் பிரம்மதேவரை நோக்கி, என் தந்தையான திருமால் மீது கணை தடுத்திருக்கிறேன், அதனால் தான் அவர் மஹாலக்ஷ்மி இருக்க பூ தேவியையும் நாடினார், என் தமையனான உம் மீதும் கணை தொடுத்திருக்கிறேன், அதனால் தான் நீர் சரஸ்வதி இருக்க காயத்ரி தேவியையும் நாடினீர், சூரியன் மீது கணை தொடுத்திருக்கிறேன், அதனால் தான் அவன் சாயாதேவியை மணந்தான். சந்திரன் மீது கணை தொடுத்திருக்கிறேன், அதனால் தான் அவன் இருபத்தி ஏழு மனைவியர் இருக்க, குருவின் மனைவி மீதும் ஆசை கொண்டான், இந்திரன் மீது கணை தொடுத்திருக்கிறேன், அவன் ஆயிரம் கண்கள் பெற்றான், காசிபர், வசிஷ்டர், அத்திரி, ததீசி, கௌதமர், விசுவாமித்திரர் ஆகிய முனிவர்கள் மீதும், எண்ணற்ற ஞானிகள் மீதும் கணை தொடுத்திருக்கிறேன். இவர்களில் யார் மீதாவது மீண்டும் கணைத் தொடுக்க வேண்டும் என்றால் கூறுங்கள், இப்போதே செய்கிறேன். ஆனால் என்னையும், உங்களையும், நம் அனைவரையும் படைத்த பரமேஸ்வரன் மீது கணை தொடுக்கச் சொல்கிறீர்களே இது எந்த வகையில் நியாயம் என மன்மதன் கூறுகிறான்.
அதற்கு பிரம்மதேவர், சரி அதெல்லாம் இருக்கட்டும், இப்போது இறைவன் மீது நான் கணை தொடுக்கச் சொல்வது எனக்காக மட்டும் அல்ல, நம் தேவர்கள் அனைவரின் நலனுக்காகவும் தான் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும், இந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்ய உன்னை விட்டால் யாரும் இல்லை, எனவே நீ மறுக்காமல் இந்த காரியத்தை செய்தே ஆக வேண்டும் என கூறுகிறார். அப்போதும் மன்மதன், பிரம்மதேவரே நீர் ஆயிரம் முறை சொன்னாலும் சரி, என் பதில் இந்த விஷயத்தில் ஒன்று தான் என்னால் இந்த காரியத்தை நிச்சயமாக செய்ய முடியாது, நான் அவர் முன் நின்று கணை தொடுத்தால், என் வில்லுடன் சேர்ந்து எரிந்து சாம்பலாகி போவேன், எனவே நான் நிச்சயம் இந்த செயலை செய்ய மாட்டேன் என உறுதியாக கூறுகிறான். இதற்கு பின்னரும் பிரம்மதேவர் மற்றும் தேவர்கள் மன்மதனிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவன் சம்மதிக்கவில்லை. இறுதியாக பிரம்மதேவர், மன்மதனை அழைத்து நீ நான் கூறியபடி ஈசன் மீது மலர்கணை தொடுக்க வில்லை என்றால் எனது சாபத்துக்கு ஆளாக நேரிடும் என கோபமாக கூறுகிறார். அதனை கேட்டு பயந்து போன மன்மதன், இவருடைய சாபத்தை பெற்று சாவதை விட, சிவபெருமானின் கோபத்தால் சாவது மேல் என வேறு வழியில்லாமல் பரமன் மீது மலர்க்கணை தொடுக்க சம்மதிக்கிறான்.
மன்மதன் சம்மதித்ததால் தேவர்களும், நான்முகனும் மகிழ்ச்சி அடைந்து, அவனை கயிலைக்கு வழி அனுப்பி வைக்கிறார்கள். மன்மதன் தனது கரும்பு வில்லை எடுத்துக் கொண்டு, தாமரை, முல்லை, மா, நீலம், அசோகம் ஆகிய ஐந்து வகை மலர் கணைகளையும் எடுத்துக் கொண்டு, கயிலாயத்தை நோக்கி வருகிறான். அங்கோ வாசலில் நந்தி தேவர் காவல் காத்துக் கொண்டிருக்கிறார் . மன்மதனை அங்கு கண்ட நந்திதேவர் அவனை வாசலில் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி கிடையாது எனக் கூறுகிறார். அதற்கு நான் மகாதேவரை இப்போதே பார்க்க வேண்டும் என மன்மதன் கூறுகிறான். நந்தி தேவர் முன்னர் பரமன், மன்மதன் வந்தால் மட்டும் உள்ளே அனுப்பு எனக்கூறியது நியாபகம் வர, அவனே உள்ளே அனுப்பி வைக்கிறார். உள்ளே சென்ற மன்மதன், அங்கிருந்த ஆலமரக்கிளைகளில் இருந்த பறவைகள் மீது கணைகளை தொடுக்கிறான். ஆனால் பறவைகள் அதனை பொருட்படுத்தவில்லை. அடுத்து அங்கே இருந்த மான்கள் மீது தனது கணைகளை தொடுக்க, அவைகளும் அவற்றை பொருட்படுத்தாமல் இயல்பாகவே இருந்தன. இதனைக் கண்ட மன்மதன், இந்த பறவைகளையும், மரங்களையும் நமது கணை எதுவும் செய்யவில்லையே, என்றால் இது இறைவனை என்ன செய்து விடும், என்று மனதை தேற்றிக் கொண்டு, பிரம்மன் கூறியபடி பரமேஸ்வரன் மீது தான் கொண்டு சென்ற ஐந்து வகை மலர்க்கணைகளை ஏவினான். அந்த கணைகள் முக்கண்ணை தீண்டிய அடுத்த கணமே, கண்மூடி யோகத்தில் ஆழ்ந்திருந்த பரமேஸ்வரன், கோபாவேசத்தில் தனது கண்களை திறக்க, எதிரே மன்மதன் நிற்பதைக் கண்டார். கோபத்தில் தனது நெற்றிக்கண்ணை திறக்க, எதிரே நின்ற மன்மதன் பொசுங்கி போனான்.
மன்மதன் எரிந்து சாம்பலாகி போனதை அறிந்த அவன் மனைவி ரதிதேவி ஓடி வந்து, இறைவனின் திருவடிகளில் வீழ்ந்து கதறினாள். துடித்தாள். கண்ணீர் வடித்தாள். தனது கணவர் செய்த தவற்றை மன்னிக்கும்படி மன்றாடி கேட்கிறாள். ரதியின் வேண்டுதலை கேட்ட இறைவன், மனம் இறங்கி, சிறிது காலத்தில் எனக்கும் உமையம்மைக்கு இமயத்தில் திருமணம் நடக்கும். அப்போது அங்கு வந்தால், மன்மதனை மீண்டும் பெறலாம் என கூறுகிறார். இவ்வாறு சூதமா முனிவர், நைமிசாரணிய முனிவர்களிடம் காமதகன சருக்கம் பற்றி எடுத்துக் கூறுகிறார்.
மேலும் படிக்க: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 4