திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-29ல்.,
98. வெள்ளை யானையின் சாபம் விலகிய சருக்கம்.
99. ஆமை அர்ச்சனை செய்த சருக்கம்.
100. பிரமவிருத்திபுரச் சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
98. வெள்ளை யானையின் சாபம் விலகிய சருக்கம்:
தேவேந்திரனின் பட்டத்து யானையான ஐராவதம் என்னும் வெள்ளை யானை மதம் பிடித்து, வெறிகொண்டு மரங்களைப் பிடுங்கியும், மலைகளைப் புரட்டியும், அட்டகாசம் செய்து, மேருமலையை வீட்டுக் கீழே இறங்கி, ஒரு சோலைக்குள் புகுந்தது. அங்கே இருந்த ஒரு பெண் யானையைக் கண்டு அதனுடன் கூடியது. அதன் பின் பொன்னுலகை மறந்து பூவுலகே போதும் என்று இருந்து விட்டது. இந்நிலையில் தேவேந்திரன் பவனி வருவதற்காக பட்டத்து யானையை கொண்டு வரச் சொன்னான். யானையை கொண்டு வரச் சென்றவர்கள் திரும்பி வந்து, யானை அங்கே இல்லை என்று கூறினார்கள். திடுக்கிட்ட தேவேந்திரன் யானை எங்கே போயிருக்கும் என்று எண்ணித் தனது ஞானக் கண்ணால் தேடினார். பூலோகத்தில் ஒரு பெண் யானையுடன் இருப்பதைக் கண்டான். கடுமையான கோபம் கொண்டு, யானைக்கு சாபம் கொடுத்தான். அந்த சாபத்தால் ஐராவதம் களையிழந்து, கம்பீரம் இழந்து, மெலிந்து, எலும்பும் தோலுமாக ஆகி ஒரு பூனைக்கு உள்ள பலம் கூட இல்லாமல் போயிற்று. ஐராவதம் தனது தவறை உணர்ந்து, வருந்தித் திருந்தி தனது சாபம் நீங்க விமோசனம் தேடி அலைந்தது.
ஒருநாள் நாரதரைக் கண்டது. தான் செய்த தவறையும், அதனால் இந்திரன் தந்த சாபத்தையும் அவரிடம் சொல்லி, சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டது. அதற்கு நாரதர், உலகில் உள்ள சிறந்த தலங்கள் எண்ணூறு.! அவற்றில் முக்தியைத் தருவது ஐந்து. பிறந்தால் முக்தி தருவது திருவாரூர். தரிசித்தால் முக்தி தருவது தில்லை. நினைத்தால் முக்தி தருவது திருவண்ணாமலை. இறந்தால் முக்தி தருவது காசி. பிறந்தாலும், தரிசித்தாலும், நினைத்தாலும், இறந்தாலும் முக்தியைத் தருகின்ற ஒரு தலம் உண்டு. அதுதான் நெல்லையம்பதி. ஆகையால் நீ அங்கே சென்று நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கி வேண்டினால் உன் சாபம் நீங்கும் என்று நாரதர் சொன்னார். அதனைக் கேட்ட ஐராவதம் நெல்லைக்கு வந்தது. பொற்றாமரைக் குளத்தில் நீராடி, அதன் நீரைத் தந்து துதிக்கையால் நெல்லையப்பருக்கு அபிஷேகம் செய்து அம்மையையும், அப்பரையும் வணங்கி, தான் பெற்ற சாபத்தையும், அச் சாபத்தால் படும் தொல்லையையும் சொல்லி, கருணைகொண்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்தது. வேணுவன நாதர், அந்த வெள்ளை யானையின் வேண்டுகோளை நிறைவேற்றினார். சாபம் நீங்கப் பெற்ற ஐராவதம் வெள்ளை யானையாக கம்பீர தோற்றம் பெற்று மீண்டும் இந்திர லோகம் சென்றது என்று சொல்லிச் சூதமா முனிவர் ஆமை அர்ச்சனை செய்ததை பற்றி கூறினார்.
99. ஆமை அர்ச்சனை செய்த சருக்கம்:
முனிவர்களே.! திருமால் ஆமை வடிவில் சிவ பூஜை செய்ததை பற்றி சொல்கிறேன் கேளுங்கள் என்று கூறி சூதமா முனிவர் கூறத் தொடங்கினார். இந்திரன் தேவலோகத்தில் வெள்ளை யானை மீது பவனி வந்து கொண்டிருந்தான். அப்போது, அவ்வழியாக வந்த துருவாச முனிவர் , சிவபெருமான் தமக்குத் தந்த ஒரு தெய்வீக மாலையை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அந்த மாலையை அங்குசத்தால் வாங்கி, யானையிடம் கொடுத்தான். யானை அந்த மாலையை வாங்கி கீழே போட்டுக் காலால் மிதித்துக் கசக்கி விட்டது. இதனைக் கண்ட துர்வாச முனிவர் சினம் கொண்டு, மனிதரை போல் மமதையுடன் நடந்து கொண்டதால், இனி உனக்கு மனிதருக்கு உண்டாகும் நரை, திரை, மூப்பு என்ற முப்பிணிகளும் உண்டாகும். இதனுடன் உன் ஆணவத்திற்குக் காரணமாய் இருந்த உன் செல்வங்கள் எல்லாம் கடலுக்கும் மூழ்கும் என்று சாபம் கொடுத்து விட்டார்.
துருவாசரின் சாபத்தைக் கேட்டு துடி துடித்துப் போனான் இந்திரன். முனிவரின் சாபம் அக்கணமே பற்றியது. இந்திரனுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், தலை நரைத்து விட்டது. உடல் திரைத்து விட்டது. மூப்பும் வந்துவிட்டது. தேவலோகத்து செல்வங்களான காமதேனு, கற்பக மரம், சிந்தாமணி, ஐராவதம், இந்திராசனம், வஜ்ஜிராயுதம் ஆகிய அனைத்தும் கடலுக்குள் மூழ்கி விட்டது என்று சூதமா முனிவர் சொல்லிக் கொண்டு வந்த போது நைமிசாரணிய முனிவர்கள், ஒரு சந்தேகம் கேட்டார்கள். முனிவர் பெருமானே.! தவறு செய்த இந்திரனுக்கு முனிவர் சாபம் கொடுத்தார். பற்றிக் கொண்டது சரி.! ஒரு தவறும் செய்யாத தேவர்களையும் பற்றிக் கொண்டது ஏன் என்று கேட்டனர். முனிவர்களே.! குடும்பத் தலைவன் செய்யும் தவறு குடும்பத்தைச் சேரும். தலைவன் செய்யும் தவறு தொண்டனைச் சேரும் என்பதை போல, இந்திரன் செய்த தவறு தேவர்களையும் பற்றிக் கொண்டது. என்று சொல்லிய சூதமா முனிவர் மேலும் தொடர்கிறார். சாபத்துக்கு உள்ளான இந்திரன், தேவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு, திருமாலைக் கண்டு முறையிட்டான்.
திருப்பாற்கடலைக் கடை.! அதில் அமுதம் கிடைக்கும். அந்த அமுதத்தை உண்டால் இந்த சாபம் நீங்கி விடும் என்று சொன்னார் திருமால். திருமால் சொன்னபடி, இந்திராதி தேவர்கள், மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பெரும் பாம்பைக் கடையும் கயிறாக்கி, திருப்பாற்கடலைக் கடைய முயன்றார்கள். தேவர்களால் முடியவில்லை. மந்திர மலை ஒரு பக்கமாகச் சாய்ந்தது. தேவர்கள் நிலை குலைந்து, பதறிப் பரந்தாமனிடம் சென்று சொன்னார்கள். பரந்தாமன் வந்து ஒரு பெரிய ஆமையாக வடிவெடுத்துக் கடலுக்குள் பாய்ந்து சென்று, சாய்ந்த மந்திர மலையைத் தம் முதுகிலே தாங்கிச் சரி செய்தார். தேவர்களும், அரக்கர்களும் தொடர்ந்து கடலைக் கடைந்தார்கள். ஆலகாலம் என்னும் விஷம் வந்தது. தேவர்களுக்கு போதாத காலமோ, ஆகாத காலமோ தெரியவில்லை. முதலில் அவர்கள் கடலைக் கடைய முயன்றார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் அரக்கர்களை சேர்த்துக் கொண்டு கடைந்தார்கள். அப்போது மந்திர மலை சாய்ந்தது. மாயவன் வந்து அதனை சரி செய்தார். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. ஆலகால விஷத்தை கண்ட தேவர்கள், அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். ஓடியவர்கள் சிவபெருமானைக் கண்டு காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினார்கள்.
சிவபெருமான் அம்மை பார்வதி அம்மையுடன் சுந்தரர் பெருமானையும் அழைத்துக் கொண்டு பாற்கடலுக்கு வந்தார். ஆலகால விஷத்தால் அங்கே ஒரே புகை மூட்டமாக இருந்தது. சிவபெருமான் சுந்தரரை அனுப்பி ஆலகால விஷத்தை எடுத்துவரச் சொன்னார். சுந்தரர் சென்று ஆலகாலத்தை ஒரு நெல்லிக்கனி அளவில் திரட்டி எடுத்து வந்து சிவபெருமானிடம் கொடுத்தார். சிவபெருமான் அதை வாங்கித் தமது திருவாயில் போட்டார். அதைக் கண்டு பதறிப்போன அம்மை பார்வதி, கணப்பொழுதில் இறைவனின் குரல்வளையைப் பிடித்து தடவி விட்டாள். நஞ்சு கண்டத்திலேயே தங்கி விட்டது. நீலம் என்னும் நஞ்சு கண்டத்திலேயே தங்கிவிட்டதால், இறைவனும் நீலகண்டர் என்று ஒரு பெயர் ஏற்பட்டது. மேலும் அந்த நஞ்சின் வெப்பத்தால் இறைவனின் கண்டம் கருத்து விட்டது. பாற்கடல் கடைவதைப் பார்க்க வந்திருந்த அண்ட பகிரண்டம் எல்லாம் இந்த காட்சியை கண்டு திகைத்தது. தேவர்கள் சிவபெருமானை வணங்கி மீண்டும் கடலைக் கடைந்தார்கள். தேவலோகத்துச் செல்வங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டன. இறுதியாக அமுதம் வந்தது. எங்களுக்கும் அமுதம் வேண்டும் என்று அரக்கர்களும், தேவர்களுடன் சண்டையிட்டனர். தேவர்களுக்கு மட்டுமே அமுதம் கொடுக்க வேண்டும் என்று நினைத்த திருமால், அரக்கர்களை ஏமாற்றுவதற்காக, மோகினிப் பெண் வடிவம் கொண்டார்.
அந்த மோகினிப் பெண், அரக்கர்களின் முன்னே வந்து ஆடிப்பாடினாள். அரக்கர்களும் மோகினியின் ஆடல் பாடல்களிலும், அவளுடைய அழகிலும் மயங்கி மோகம் கொண்டார்கள். மோக மயக்கத்தில் இருந்த அரக்கர்களை, அந்த மோகினிப் பெண் அப்படியே வேறு பக்கம் அழைத்து போய் விட்டாள். அங்கே அனைவரும் மயங்கி வீழ்ந்து விட்டனர். மோகத்தால் மோசம் போயினர். மோகினியான திருமால் இங்கே வந்து தாம் திட்டமிட்ட வண்ணம் தேவர்களுக்கு மட்டும் அமுதத்தைக் கொடுத்தார். அப்போது ஓர் அரக்கன், தேவர் போன்று வேடமிட்டு வந்து, அமுதம் வாங்குவதற்காகக் கையை நீட்டினான். இதைக்கண்ட சூரியனும், சந்திரனும், அவன் அரக்கன் என்பதை சைகை மூலம் திருமாலுக்குச் சொன்னார்கள். திருமால் தம் கையில் இருந்த சாட்டுவத்தால் அவன் தலையில் ஓங்கி அடித்தார். அவன் தலை துண்டாகி கீழே விழுந்தது. தலை வேறு, உடல் வேறு இரு கூறுகள் ஆகிப் போயின. ஒரு கூறு ராகுவாகவும், மற்றொரு கூறு கேதுவாகவும் ஆனது. இருவரும் சூரியனையும், சந்திரனையும் பார்த்து, என்றாவது ஒரு நாள் நாங்கள் இருவரும் உங்கள் இருவரையும் விழுங்குவோம் என்று சொல்லி விட்டுச் சென்றனர். அது தான் சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் என்று சொல்லப்படுகிறது.
அமுதத்தை உண்ட உண்ட இந்திரனும், தேவர்களும் சாபம் நீங்கப் பெற்று, தங்கள் செல்வங்களுடன் வானுலகம் சென்று சேர்ந்தனர். தம்மால் தாம், அமுதம் உண்டு தேவர்கள் சாபம் நீங்கப் பெற்றார்கள் என்று எண்ணிக் கர்வம் கொண்ட திருமால், முன்பை விட மிகப்பெரிய ஆமை வடிவம் கொண்டு கடலையும் கலக்கி, உலகத்தையும் கலக்கி, அனைவரையும் கலங்க வைத்தார். கதி கலங்கிய அனைவரும், சிவபெருமானைக் கண்டு முறையிட்டனர். சிவபெருமானை ஐங்கரனை அழைத்து, விநாயகா.! நீ விரைவாகச் சென்று அகிலத்தை கலங்க வைத்துக் கொண்டிருக்கும் அந்த ஆமையை அடக்கி வா என்று ஆணையிட்டார். தந்தையின் ஆணையைக் கேட்ட தனயன் வேகமாகக் கடலுக்கு வந்தார். ஆமையைத் தேடினார், தெரியவில்லை. கடலுக்குள் தான் இருக்கும் என்று எண்ணிக் கடல்நீரை எல்லாம் கணப்பொழுதில் குடித்தார், ஆமை அங்கே தென்பட்டது. தந்திமுகன் தம் தந்தங்களால் ஆமையைத் தாக்கினார். ஆமை சோர்வடைந்து தனது வடிவைச் சுருக்கிக் கொண்டது. விநாயகர் சென்று விட்டார். பின் திருமால், ஆமை வடிவுடனேயே, சிவபெருமானைக் கண்டு துதித்தார். தம் செயலுக்கு வருந்தி இதற்கு பரிகாரம் என்ன? என்று கேட்டார். அதற்க்கு சிவபெருமான்., திருமாலே.! நீ திருநெல்வேலி சென்று, இதே வடிவில் எம்மை பூஜித்து வா என்று கூறினார்.
திருமால் இறைவனிடம் விடைபெற்று நெல்லையம்பதி வந்து, லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அவருக்குப் பரிகாரம் செய்த திருப்தி கிடைத்தது. பின்னர் விஷ்ணு தனது ஒவ்வொரு அவதாரத்திலும் இங்கே வந்து நெல்லைநாதனை வணங்கிச் செல்வார். இவ்வாறு வணங்கிச் செல்வதால் நெல்லைக்கு "விஷ்ணு புரம்" என்று ஒரு பெயரும், கச்சப வடிவில், அதாவது ஆமை வடிவில் பூஜை செய்ததால் "கச்சபாலயம்" என்று ஒரு பெயரும் ஏற்பட்டது என்று சொல்லிச் சூதமா முனிவர் அடுத்து, பிரம்மன் வரம் பெற்றதைப் பற்றிச் சொன்னார்.
100. பிரமவிருத்திபுரச் சருக்கம்:
சுவாமி நெல்லையப்பர், அம்மை காந்திமதியுடன் கோவில் கொண்டிருக்கிற இந்த நெல்லையம்பதி, எத்தனையோ ஊழிக் காலத்திலும் உளுந்து அளவும் குலையாத உறுதியான பதியாகும். அதனால் பிரமன் இங்கே வந்து, திருமூலலிங்கத்தை வணங்கித் தவம் செய்து வரம் வாங்கித் தனது படைப்புத் தொழிலுக்கான ஞானத்தையும், ஆற்றலையும் விருத்தி செய்து கொண்டு செல்வான். ஆகையால் நெல்லைக்குப் "பிரமவிருத்திபுரம்" என்று ஒரு பெயரும் ஏற்பட்டது என்று சொல்லிச் சூதமா முனிவர் மேலும் சொன்னார்.
தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 30