Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 19

வாசிப்பு நேரம்: 15 mins
No Comments
Statue of a Hindu god with a serpent on one hand and a bow and arrow on the other.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-19ல்.,

58. சப்தமுனிவர்கள் கலியுகத்திற்கு அஞ்சி திருநெல்வேலி வந்த சருக்கம்.
59. திருமூலலிங்கச் சருக்கம்.
60. வேண்ட வளர்ந்த மா லிங்கச் சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

58. சப்தமுனிவர்கள் கலியுகத்திற்கு அஞ்சி திருநெல்வேலி வந்த சருக்கம்:

கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களில் முதல் மூன்று யுகங்கள் முடிந்து கலியுகம் பிறந்தது. கலி என்றால் துன்பம் என்று ஒரு அர்த்தமும் உண்டு. அதற்கேற்ப அந்த யுகமும் துன்பமாகவே தோன்றியது. கலியுகத்தில் எல்லாமே தலைகீழாக மாறி விட்டன. மரபுகள் மீறப்பட்டன, தருமங்கள் தடம் புரண்டன, உண்மைகள் ஒதுக்கப்பட்டன, பொய்மைகள் ஆட்டம் போட்டன, நிஜம் மறைக்கப்பட்டது, நிழல் மகுடம் சூடியது. நாணயம் கெட்டுப் போனது. நம்பிக்கை நாசமாயிற்று. நாடு காடானது. நகரம் நரகம் ஆனது. இவை கண்டு மனம் வெதும்பிய இருவகைச் சப்த ரிஷிகளான அத்திரி, வசிஷ்டர், காசிபர், பரத்துவாஜர், கௌதமர், ஜமதக்கினி, ஆங்கீரசு ஆகிய ஒரு ஏழு வகை முனிவர்களும், பிருகு, புலத்தியர், கௌசிகன், அகத்தியர், கண்ணுவர், புலகர், கிருது ஆகிய இன்னொரு ஏழு வகை முனிவர்களும், சனகாதி முனிவர்கள் நால்வரும் ஆகப் பதினெட்டு முனிவர்களும், சத்திய லோகம் சென்று, பிரம்மனைக் கண்டு வணங்கி, கலியுகத்தின் கொடுமையை எல்லாம் கூறினர். பின் தாங்கள் நிம்மதியாகத் தவம் செய்வதற்கு உரிய ஒரு தலத்தைச் சொல்லுமாறு கேட்டனர். எதற்காக இவ்வாறு கேட்கிறீர்கள் என்று பிரம்மன் கேட்கிறார். அதற்கு முனிவர்கள் பிரம்ம தேவா.! கலியுகத்தின் ஆட்டத்தை எங்களால் தாங்க முடியவில்லை. தருமங்கள் அழிந்து விட்டன. பாவங்கள் பெருகி விட்டன. நன்மை செத்து விட்டது. தீமை பரவி விட்டது. கோவில்களில் அதர்மம் தலை தூக்கி விட்டது. ஆகமம் அறியாதோர் அர்ச்சகர் ஆகி விட்டனர். கோவிலுக்குச் செல்ல நினைக்காதவர்கள் எல்லாம் அறங்காவலர்கள் ஆகிவிட்டனர். காசு இருந்தால்தான் கடவுளைக் காண முடியும். பணம் கொடுத்தால் தான் பக்கத்தில் போய் பார்க்க முடியும். பணத்திற்காகப் பாவம் செய்ய துணிந்து விட்டார்கள். கூலிக்காக கொலை செய்ய துணிந்து விட்டார்கள். புனிதமான பதவிகளில் பொல்லாதோர் அமர்ந்து விட்டனர். கோவில் சொத்தைக் குடும்ப சொத்தாக ஆக்கி விட்டனர். இறைவன் பெயரைச் சொல்லி ஏமாற்றத் துணிந்து விட்டனர். கல்விக் கூடங்கள் காட்டுக்குள் சென்று விட்டன. கள்ளுக் கடைகள் ஊருக்குள் வந்து விட்டன. கல்வியை ஆசிரியர் மதிப்பதில்லை. ஆசிரியரை மாணவன் மதிப்பதில்லை. பெற்றோரை பிள்ளைகள் மதிப்பதில்லை. பிள்ளைகளை பெற்றோர் மதிப்பதில்லை. கல்வி காசைப் பொறுத்து என்றாகி விட்டது. நீதி நிதியைப் பொறுத்தே என்று ஆகிவிட்டது. இந்தப் பாவச் செயல்களை எல்லாம் எங்களால் பார்க்க முடியவில்லை. அதனால் தான் ஒரு நல்ல தலமாகக் கேட்கிறோம் என்றனர் முனிவர்கள். முனிவர்கள் சொன்னவற்றைக் கேட்டு பிரம்மன் ஆச்சரியப்பட்டான். சிறிது நேர சிந்தனைக்கு பின்னர் சொன்னான். முனிவர்களே.! இந்தப் பூ மண்டலத்தில் இருக்கின்ற ஒரே ஒரு புண்ணிய பூமி.! அம்மையும் அப்பனும் அமர்ந்திருக்கின்ற பூமி.! வேதங்களே வேணுவாக முளைத்திருக்கின்ற பூமி.! விமலன் வேணுவனநாதராக தோன்றிய பூமி.! இருநாழி நெல் கொண்டு இறைவி அறங்கள் செய்த பூமி.! பூலோகத்தில் அகத்திய முனிவருக்கு இறைவன் மணக்கோலம் காட்டிய பூமி.! தரணி போற்றும் தாமிரபரணி பாயும், தமிழ்ப்பரணி பாடும் பூமி.! அது தான் திக்கெல்லாம் புகழ் கொண்ட திருநெல்வேலி பூமி.!

தரணி போற்றும் தாமிரபரணியின் தண்ணீர் பயிர்களை வளர்ப்பதுடன் மட்டும் அன்றித் தமிழைப் போற்றும் பல உயிர்களையும் வளர்க்கின்றது. தமிழ் வளர்க்கும் சில அமைப்புகளும் அங்கே தழைத்தோங்கி சாதனை படைத்துள்ளன. பல தமிழ்க்கோவில்களும் இருக்கின்றன. முனிவர்களே.! தம்பிரான் கோவிலுக்குச் செல்வது போல் இந்தத் தமிழ்க் கோவில்களுக்கும் செல்லுங்கள். கலியின் பாதிப்புக் கடுமையாகத் தெரியாது. ஆன்மீக மணம் கமழும் அந்தக் கற்கோவிலுக்குச் செல்வது போல், தமிழ் மணம் கமழும் இந்தச் சொற்கோவில்களுக்கும் செல்லுங்கள். கலியின் வேகம் கட்டுப்படும் மனக்கலக்கம் மட்டுப்படும். அந்தத் தலத்திற்கு இன்னும் சில பெருமைகள் இருக்கின்றன. இறைவன் வடிவுடைநாயகி அம்மையை மணந்து, அனவரததான நாயகராகி அங்கிருந்து தான் உலகமெல்லாம் செங்கோல் செலுத்தி வருகிறார். அசுர குருவான சுக்கிராச்சாரியார் அங்கு சென்று தான் இறைவனை வணங்கி வழிபாடு செய்து, சஞ்சீவினி மந்திரத்தை பெற்றுச் சென்றார். ஆகையால் அத்தலம் போல் சிறந்த ஸ்தலம் உலகில் வேறு எங்கும் இல்லை. அந்தத் தலத்தை நினைத்தாலும், அதன் பெயரை சொன்னாலும், அங்கு ஒரு நாள் இருந்தாலும், இறந்தாலும், பிறந்தாலும் கயிலைவாசி ஆவர், ஆகவே நீங்கள் அங்கு செல்லுங்கள் என்று நான்முகன் நவின்றான்.

நான்முகன் சொன்னதைக் கேட்ட முனிவர்கள் பதினெட்டுப் பேரும், வேணுவனம் வந்து, அகத்திய முனிவரைக் கண்டு வணங்கித் தாங்கள் வந்த நோக்கத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டு மகிழ்ந்த அகத்திய முனிவர் அவர்கள் அனைவரையும், சிந்துபூந்துறைத் தீர்த்தத்திற்கு அழைத்துச் சென்று நீராடச் செய்து, நெல்லையப்பர் கோவிலுக்கு அழைத்து வந்தார். பதினெட்டு முனிவர்களும், திருமூலமகா லிங்கத்தையும், வேணுவனநாதரையும் வடிவுடைநாயகியையும் கண்டு, உள்ளம் உருக, ஆனந்தக் கண்ணீர் பெறுக வணங்கி வழிபாடு செய்தனர். பின்னர் தாமிரபரணிக் கரைக்கு வந்து, ஒரு ஆசிரமம் அமைத்து, ஆளுக்கொரு லிங்கம் வைத்து வழிபாடு செய்து வந்தனர். சிந்தனையும், செயலும் இறை வழிபாட்டில் சென்றதால் அவர்களுக்கு கலியின் துன்பம் கடுமையாகத் தெரியவில்லை. இறைவனின் அருளால் அவர்கள் எல்லோரும் இன்பமாக வாழ்ந்து வருகின்றனர் என்று கூறிச் சூதமா முனிவர் திருமூலமகாலிங்கம் பற்றிச் சொன்னார்.

59. திருமூலலிங்கச் சருக்கம்:

ஜோதி நாயகன், சுந்தர நாயகன், ஆதி நாயகன், அழிவிலா நாயகன் என்ற பெருமைக்குரிய இறைவன், மூல லிங்கத்தில் விருப்பம் கொண்டார். அதனால் பிரளய காலத்தும் அழிவில்லாத பெரும்பதியான நெல்லையம்பதியில் நவசக்தியாம் ஆவுடையாளோடும் தோன்றினார். நவலிங்கங்கள் என்று ஒன்பது லிங்கங்கள் உள்ளன. அவற்றில் நெல்லையம்பதியில் உள்ளது முதல் லிங்கம். இரண்டாம் லிங்கம் கயிலையிலும், மூன்றாம் லிங்கம் காசியிலும், நான்காம் லிங்கம் கேதாரத்திலும், ஐந்தாம் லிங்கம் லட்சுமி மலையிலும், ஆறாம் லிங்கம் காளத்தியிலும், ஏழாம் லிங்கம் சிதம்பரத்திலும், எட்டாம் லிங்கம் காஞ்சியிலும், ஒன்பதாம் லிங்கம் மதுரையிலும் உள்ளன. முதல் லிங்கமான மூலலிங்கத்தை வணங்கினால், மற்ற அனைத்து லிங்கங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். ஆதிப் பிரளய காலத்தில், வேதங்கள் எல்லாம் மூலலிங்கத்தை வணங்கி நிலையாக இருக்கும் பேற்றைப் பெற்றன. தரும தேவதையும் இடபத்தை வடிவமாகப் பிரதோஷ காலத்தில் முறையான பூஜை செய்து, நிலையாக அங்கேயே இருக்கும் பேற்றைப் பெற்றது. இந்த லிங்கத்திற்கு வேறு சில பெயர்களும் உண்டு.

ஆதிலிங்கம், வேதலிங்கம், விஷ்ணு லிங்கம், திரிகண்டலிங்கம், தருமலிங்கம், தானலிங்கம், கற்பகலிங்கம், கௌரிலிங்கம், பரமலிங்கம், பராபரலிங்கம், நிர்க்குண லிங்கம், சற்குணலிங்கம் என்னும் பல பெயர்கள் உள்ளன என்று சூதமா முனிவர் சொன்னார். இவை கேட்டு மகிழ்ந்த நைமிசாரணிய முனிவர்கள், முனிவர் பெருமானே.! தாருகாவன முனிவர்களை மூல லிங்கத்துக்கு பூஜை செய்யச் சொன்னது பற்றியும், இருபத்தைந்து மூர்த்திப் பூஜை பற்றியும் சொல்ல வேண்டும் என்று கேட்க சூதமா முனிவர் சொன்னார்.

முனிவர்களே.! காசி முதலிய எல்லாத் ஸ்தலங்களிலும் உள்ள சிவ லிங்கங்கள் யாவும் நெல்லையில் உள்ள மூல லிங்கத்தில் இருந்து தோன்றியவை தான். இந்த லிங்கத்திற்கும் கயிலையில் உள்ள லிங்கத்திற்கும் தான் திருமூலலிங்கம் என்றே பெயர். அம்மைக்கும் காந்திமதி என்றே பெயர். உலகிற்கு நன்மை செய்ய இறைவன் தோன்றும் போதெல்லாம் லிங்க வடிவில் தான் தோன்றுவார். அந்த லிங்கங்கள் எல்லாம் திரிமூர்த்தி வடிவமாகும். நெல்லையில் ஆவுடையோடு தோன்றியதால், அந்த நெல்லை கயிலைக்கு இணையாகும். ஆவுடையோடு தோன்றியதால் அது சக்தித் ஸ்தலமாகும். மேலும் சில ஸ்தலங்களில் ஆவுடையோடு தோன்றிய லிங்கங்கள் உள்ளன. அவற்றைச் சொல்கிறேன் கேளுங்கள் என்று சொல்லிச் சூதமா முனிவர் சொன்னார். திருமால் வணங்குவதற்காக காசியில் தோன்றியது விஸ்வநாத லிங்கம். திருமால் காக்கும் தொழில் செய்ய உதவுவதற்காக காஞ்சியில் தோன்றியது ஏகாம்பர லிங்கம். படைப்புத் தொழிலை மறந்த பிரமனுக்கு உதவ முதுகுன்றத்தில் தோன்றியது பூரணலிங்கம். திருமால், அசுரர்களை அழிக்க உதவும் பொருட்டு வேண்ட, சிதம்பரத்தில் தோன்றியது கருணை லிங்கம். திருமகளுக்கு வரம் கொடுக்கத் திருவாரூரில் தோன்றியது தியாக லிங்கம். பதினான்கு உலக உயிர்களுக்கும் நற்கதி நல்க மதுரையில் தோன்றியது சொக்கலிங்கம். முனிவர்களே.! இவைதான் அகத்திய முனிவர், தாருகாவன முனிவர்களுக்குச் சொன்ன திருமூல லிங்கப் பெருமை என்று சொல்லிச் சூதமா முனிவர் வேண்ட வளர்ந்த லிங்கம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

60. வேண்ட வளர்ந்த மா லிங்கச் சருக்கம்:

பல வளங்களும் பொருந்திய பாண்டி நாட்டில், திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலிப் பதியின் கீழ்த்திசையில், மணிகளையும், முத்துக்களையும் சிந்திக் கொண்டு பாய்ந்து செல்லும் தாமிரபரணியின் கீழக்கரையில் மணவை என்ற ஒரு மாநகரம் உண்டு. அந்நகரம் நீர்வளம், நிலவளம், கார்வளம், கனிவலம், ஏர்வளம் ஆகிய எல்லா வளங்களும் பெற்று, ஒரு தலைநகருக்குரிய அனைத்துத் தகுதிகளும் கொண்ட நகரமாக விளங்கியது. அந்த நகரை தலைநகரமாக கொண்டு முழுதும் கண்ட ராமன் என்னும் பாண்டிய மன்னன் நீதி நெறி தவறாமல் ஆண்டு வந்தான். அவனுடைய அரண்மனைப் பசுக்களை எல்லாம் கவனிக்க ஒரு யாதவனை நியமித்திருந்தான். அவன் பெயரும் மன்னனின் பெயர் தான். முழுதும் கண்ட ராமக்கோன். அரண்மனைப் பசுக்களின் பால் தவிர இராமக்கோனும் தினம் தோறும் பால் கொண்டு வருவார். இராமக்கோன் வேணுவனத்தின் வழியாகத்தான் தினம்தோறும் அரண்மனைக்கு பால் கொண்டு செல்வான். ஒரு நாள் அவர் பால் கொண்டு செல்லும் பொழுது, வழியில் இருந்த ஒரு மூங்கில் தூர் அவருடைய காலைத் தட்டி விட, இராமக்கோன் தலையில் இருந்த பால் குடம் கீழே விழுந்து பால் கொட்டி விட்டது. ஆனால் குடம் உடையவில்லை. ஆயன் குடத்தை எடுத்தான். குடத்தில் சிறிதளவு பால் இருந்தது. அந்தப் பாலைக் கொண்டு போய் அரண்மனையில் கொடுத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டான்.

மறுநாள் பால் கொண்டு வந்தான். அன்றும் அந்த மூங்கில் தூர் இடறிவிடப் பால்குடம் கீழே விழுந்து, பால் கொட்டியது. ஆயன் திகைத்தான். நாம் கவனமாக ஒதுங்கித் தானே வந்தோம். அப்படி இருந்தும் எப்படி இடறி விட்டது? ஆச்சரியமாக இருக்கிறதே? தூர் வேண்டும் என்றே செய்வது போலல்லவா இருக்கிறது? சரி.! இருக்கட்டும் நாளையும் இது போல் நடந்தால், தூரை வெட்டி விட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டே, பால் குடத்தை எடுத்தான். நேற்றுப் போலவே சிறிதளவு பால் இருந்தது. நேற்றும் பால் குறைந்து விட்டது, இன்றும் பால் குறைந்து விட்டது அரண்மனையில் சத்தம் போடுவார்கள் என்று பலவாறு எண்ணிக் கொண்டே அரண்மனைக்கு வந்து பாலைக் கொடுத்தான் அவன் நினைத்தது போலவே, பால் ஏன் குறைகிறது? என்று கேட்டனர். மன்னித்துக் கொள்ளுங்கள் நாளை சரியாகக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டான். இன்றும் அத்தூர் இடறிவிட்டால் வெட்டி எரிந்து விட வேண்டும் என்ற முடிவோடு பால் குடத்தை எடுத்துக் கொண்டு வரும்போதே ஒரு கோடாரியையும் எடுத்துக் கொண்டு வந்தான். அந்த இடத்திற்கு வந்ததும் மிகவும் கவனமாக விலகியே வந்தான். ஆனாலும் அத்தூர் இன்றும் இடறிவிட்டது. பால்குடம் தரையில் விழுந்து விட்டது. கோபம் கொண்ட ஆயன், கோடரியை எடுத்து அந்த மூங்கில் மூட்டை வெட்டினான். என்னே ஆச்சரியம்.! வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. அதைக் கண்ட இராமக்கோன் பயந்து, அரண்மனைக்கு ஓடோடிச் சென்று மன்னனிடம் உதிரம் பொங்கி வரும் இடத்தில் ஒரு சிவ லிங்கமும் ஒளிர்கிறது. தாங்கள் நேரில் வந்து பாருங்கள், தெளிவாகும் என்று தெரிவித்தான். இதைக் கேட்ட மன்னனும் ஆச்சரியப்பட்டு, மந்திரி பிரதானிகளுடன் வேணுவனம் வந்து பார்த்தான். அவன் இதைச் சாதாரணச் செயல் என்று நினைக்க வில்லை. தெய்வீகச் செயல் என்றே நினைத்தான்.

வேணுவனத்தின் அழகையும் அமைப்பையும் பார்த்தான். அங்கே உள்ள விலங்குகளும், பறவைகளும் ஒற்றுமையாக வாழ்வதை பார்த்தான். இந்த இடம் ஒரு தெய்வீகமான இடம் என்று நினைத்தான். மந்திரி.! இந்த இடம் ஒரு புனிதமான இடமாகவும், தெய்வீகமான இடமாகவும் தெரிகிறது. இந்து வந்ததும் மனத்தில் ஒரு புத்துணர்ச்சி. அமைதி சாந்தம் எல்லாமே தெரிகிறது என்று சொல்லிக் கொண்டே மெல்ல நடந்தான். மூல லிங்கத்திற்குத் தென்மேற்கே வந்தான். அங்கே ஒரு லிங்கம் வெட்டுப்பட்டு இரத்தம் வழிந்து கொண்டிருப்பதைக் கண்டான். இறைவா.! இது என்ன சோதனை? என்று ஓடோடிச் சென்றான். இரத்தம் வழிந்து கொண்டே இருந்தது. மன்னன் கையால் துடைத்தான் இரத்தம் வழிவது நின்று விட்டது. இறைவா இது உன் திருவிளையாடலா? எளியேனிடம் திருவிளையாடல் காட்டியருளினாய். இனி உன் திருவுருவையும் காட்டியருள வேண்டும் என்று மனம் உருக வேண்டினான். மன்னனின் வேண்டுதலைக் கேட்ட மகாதேவர், ஒளிமயமான லிங்கமாகத் தோன்றினார். அவ்வடிவத்தைக் கண்ட மன்னன், இறைவா.! உனக்கு நான் அபிஷேக ஆராதனை செய்து திருவிழா நடத்துவதற்கு இந்தச் சிறுவடிவம் போதாது. ஓங்கி வளர்ந்த உருவாகக் காட்சி தர வேண்டும் என்று வேண்டினான். மன்னன் வேண்டியது போலவே இறைவன் வானுயர ஓங்கி வளர்ந்து நின்றார். வேணுவனநாதர் தோன்றினார். திங்களைச் சூடிய சிரசின் வலது பக்கத்தில் வெட்டுண்ட காயத்தோடும், குருதி மாறிய மேனியோடும், விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரே வடிவம் எடுத்து நின்றார். அந்தர துந்துபி முழங்க, வானவர் பூ மழை பொழிய, மன்னனும் மட்டிலா மகிழ்ச்சி கொண்டு இறைவனின் மலரடிகளில் வீழ்ந்து வணங்கினான். பலவாறு துதித்தான். இறைவா.! இப்பேருருவம் விட்டு முந்தைய வடிவமாகவே மாற வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் கருணை கொண்டு அவ்வாறே மாறினார்.

மகிழ்ச்சி கொண்ட மன்னன் லிங்கத்திற்கு ஆவுடை சாத்த வேண்டும் என்று எண்ணி, ஆகம விதிகளை நன்கு அறிந்த சிற்பக் கலைஞர்களை கொண்டு, ஆவுடை செய்து சாத்தினான். உடனே இறைவன் நிமிர்ந்து வளர்ந்தார். அதனைக் கண்ட மன்னன் வேறு ஒரு பீடம் போட்டான். அதிலிருந்தும் பெருமான் வளர்ந்தார். இவ்வாறு இருபத்தொரு பீடங்கள் போட்டும் இறைவன் வளர்ந்து கொண்டே இருந்தார். இறைவன் நம்மைச் சோதிக்கிறார் என்பதை உணர்ந்த மன்னன், இறைவனிடம் மனமுருக வேண்டினான். இறைவா.! சோதனை போதும். இவ்வாறு வளர்ந்து கொண்டே போனால் எவ்வாறு அபிஷேக ஆரத்தை செய்வேன்? அடியேன் முன்பு வேண்டியதைக் கொண்டு வளர வேண்டாம். அடியேன் மீது கருணை கொண்டு ஆதி வடிவமாக குறுக வேண்டும் என்று வேண்டினான். ஆனால் இறைவன் குறுகவில்லை. மீண்டும் மீண்டும் மனம் வருந்த வேண்டினான். கண்ணீர் வடித்தான் அப்போதும் குறுக வில்லை. இறைவா.! என் வேண்டுதல் உன் செவிகளில் விழ வில்லையா? என் மீது கருணை இல்லையா? உனக்கு அபிஷேகம் ஆராதனை செய்யும் அளவிற்குக் குறுகி விடு அல்லது என் உயிரை எடு என்று சொல்லித் தனது உடை வாளை உருவி ஓங்கினான். அப்போது லிங்கத்தில் இருந்து ஒரு திருக்கரம் நீண்டு மன்னனின் கரத்தை பற்றியது. உடனே மன்னம் உடை வாளை கீழே போட்டு விட்டுக் கரங்களைத் தலைக்கு மேல் உயர்த்தி, இறைவனின் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். அப்போது இறைவன் இறைவியுடன் இடப வாகனத்தில் அமர்ந்து காட்சித் தந்தார். பிறவி பயனைப் பெற்று விட்டதாக மன்னன் பெரு மகிழ்வு கொண்டான். மன்னா.! முன்பு பிரமன் இருபத்தொரு பீடங்கள் இட்டுத் தவம் இயற்றி வரம் பெற்றான். அதனால் இத்தலம் "பிரமவிருத்தபுரம்" என்னும் பெயரை பெற்றது. அதே போன்று நீயும் இன்று இருபத்தொரு பீடங்கள் போட்டு எம்மை மகிழ வைத்தாய். நீ எம் மீது கொண்டிருக்கும் பக்தியை இவ்வுலகத்திற்கு காட்டவே நாம் இன்று வேணுவில் இருந்து வெளிப்பட்டோம். நீ இவ்விடத்தில் எமக்கு ஒரு கோவிலை உருவாக்கு. அதில் எமக்குச் செய்கின்ற பல வகையான அபிஷேகங்களில் பாலபிஷேகம் நிச்சயம் இருக்க வேண்டும். அது எமக்கு மிகவும் விருப்பமானது. உன் பெயருக்கு ஏற்றவாறு நீ எம்மை முழுதும் கண்டாய். ஆகையால் முழுதும் கண்ட ராம மன்னா.! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்று கூறுகிறார் இறைவன்.

அவன் மன்னனாக இருந்தும், எதிரிகளை வெல்லும் சக்தியைக் கொடு என்று கேட்கவில்லை. இறந்த பின்னர் மீண்டும் பிறக்காத முக்தியைக் கொடு என்று கேட்கவில்லை. பக்தியைக் கொடு என்று கேட்டான். இறைவா.! கருணைமிக்க அம்மை காந்திமதி அம்மையின் துணைவா.! என்றென்றைக்கும் உன் மீது மாறாத பக்தியைக் கொடு. இங்கு வந்து உன்னை வணங்கும் அனைவருக்கும் மதியையும், நிதியையும், நல்ல கதியையும் கொடு என்று கேட்டான். தன்னலம் துளியும் இல்லாத தரணி மன்னன். மன்னன் கேட்ட வரங்களைத் தந்து " நீடு வாழ்வாய்" என்று ஆசியருளி லிங்கத்தில் கலந்தார் இறைவன். இறைவன் ஆணையிட்ட வாறு மன்னன் முழுதும் கண்ட ராமன், திருமூல லிங்கத்திற்கும், வேய்நாதருக்கும், மற்றும் உள்ள மூர்த்திகளுக்கும் கோவில் அமைத்தான். பொற்றாமரைத் தீர்த்தம் முதலிய தீர்த்தங்களையும் ஏற்படுத்தினான். நகரத்தையும் அழகு செய்தான். காலம் தவறாது பூஜைகள் நடத்தி வந்தான். மாதம் தவறாது திருவிழாக்கள் நடத்தி வந்தான். கோவில் பூஜைகளுக்காக இறையிலியாக நிலங்களைக் கொடுத்தான். இவ்வாறு கோவில் பணியையும், ஆட்சிப் பொறுப்பையும் செம்மையாகச் செய்து, நீண்ட காலம் வாழ்ந்து, பிறவா வரம் பெற்ற மன்னன் பெருமான் திருவடி சேர்ந்தான். தமக்கு குடம் குடமாக பாலபிஷேகம் செய்த ஆயன் முழுதும் கண்ட ராமகோனுக்கும் இறைவன் தம் இணையடியில் இடம் கொடுத்தார். மன்னன் முழுவதும் கண்ட ராமனின் மகன் ஆட்சிக்கு வந்து, நல்லாட்சி புரிந்தும், நெல்லையப்பர் காந்திமதி அம்மைக்கு பல பணி விடைகள் செய்தும் வந்தான். அவனுக்குப்பின் அவனுடைய வழித் தோன்றல்களும் நெல்லையப்பர் காந்திமதி அம்மையின் அருளை பெற்று நல்லாட்சி செய்து வந்தனர். மனு, தசரதச் சக்கரவர்த்தி, இராமபிரான், நளச்சக்கரவர்த்தி ஆகியோரும் திருமூல லிங்கத்தை வணங்கி வழிபாடு செய்து சென்றிருக்கின்றனர் என்று சொல்லிச் சூதமா முனிவர் நெல்லுக்கு வேலியிட்ட பெருமையைச் சொல்லத் தொடங்கினார்.

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 20

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram