Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 18

வாசிப்பு நேரம்: 16 mins
No Comments
Stone statue of a hindu god with a bow and arrow on one hand and a sword on the other hand.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-18ல்.,
57. தாருகாவனச் சருக்கம்.
பற்றி காணலாம்.

57. தாருகாவனச் சருக்கம்:

கயிலாயத்தில் உள்ள திருவோலக்க மண்டபத்தில் அம்மையும் அப்பனும் வீற்றிருக்கிறார்கள். அப்போது அங்கே திருமால் வந்து இறைவனை வணங்கி, இறைவா.! தாங்கள் முன்பு எடுத்த கங்காள நாதர் வடிவத்தைக் காண வேண்டும் என விரும்புகிறேன். தயை கூர்ந்து தாங்கள் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார். அதனைக் கேட்ட பெருமான்., திருமாலே.! பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி என்று ஒரு ஸ்தலம் இருக்கிறது. அத்தலத்திற்கு வேணுவனம் என்றும், தாருகாவனம் என்றும் பெயர்கள் உண்டு. அந்தத் தாருகவனத்தின் கண் நீ விரும்பிய கங்காளநாதர் வடிவத்தைக் காட்டியருள்வோம் என்று கூறுகிறார். அதனைக் கேட்ட திருமால் விடைபெற்று சென்றார்.திருமால் சென்றவுடன் நாரதர் வந்தார். வானம்பாடியான நாரதர் கானம் பாடி வணங்கினார். இறைவா.! ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன் என்றார். அதனைக் கேட்ட பெருமான் சிரித்துக் கொண்டே கூறும்படி கேட்கிறார். இறைவா.! தாருகாவனத்து முனிவர்கள் அனைவரும் மந்திரம், வேள்வி, நீதி, நேர்மை, தருமம் ஆகியவையே அனைத்துக்கும் ஆதாரம்.! இவற்றை மிஞ்சி எதுவும் இல்லை என்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள்.! விதிக்கு நாயகன் உண்டு என்பதையும், அந்த நாயகன் நீங்கள் தான் என்பதையும் அவர்கள் நினைக்கவே இல்லை. ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்வதும் இல்லை. அவர்கள் அவர்களையும் அறியாமல் பாவத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்படி என்றால், அவர்களுடைய மனைவிமார்கள், தங்களைப் போன்ற அழகானவர்களோ, கற்பில் சிறந்தவர்களோ இந்தப் பூமியில் எங்கும் இல்லை.! என்றவொரு இறுமாப்பில் இருக்கிறார்கள். ஆனாலும் நல்லவர்கள், இந்த நல்லவர்களுக்கும், அவர்களுடைய கணவன்மார்களுக்கும் நல்லறிவு புகட்டி நல்வழியைக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினார் நாரதர்.

நாரதா.! நீ விரும்பும் நல்ல செயல் விரைவில் நடக்கும் என்று கூறி நாரதரை அனுப்பிவிட்டு, நமச்சிவாயம் நாராயணனை நினைத்தார். மறுகணமே மாயவன் மகாதேவர் முன் வந்தார். திருமாலே.! நீ காண விரும்பிய கங்காள வேடம் கொள்ளக் காலம் வந்து விட்டது. வா.! தாருகாவனத்திற்குச் செல்வோம் என்று கூறிச் சிவபெருமான் திருமாலுடன் தாருகாவனத்திற்குப் புறப்பட்டார். புறப்பட்டு வரும் வழியில் சிந்துபூந்துறையில் வைத்து, திருமால் மோகினி வடிவம் கொள்ளச் சொல்லி, இறைவன் கங்காள நாதர் வடிவம் கொண்டார். ஆயிரம் கோடிச் சூரியன்கள் ஒன்று சேர்ந்தது போல பேரொளிப் பிழம்பாகவும், ஆயிரம் கோடி மன்மதன்கள் ஒன்று சேர்ந்தது போல பேரழகு கொண்டவராகவும், செவிகளில் குண்டலங்கள் ஒளி வீசவும், மூன்று சுடர்களும் மூன்று கண்களாக விளங்கவும், பொன்மாலைகளைப் போல் திருத்தோள்கள் விளங்கவும், அபயமளிக்கும் திருக்கரங்கள் துலங்கவும், திருக்கழுத்தில் கொன்றை மாலை அசையவும், திருமேனி திருநீறு துலங்கவும், திருக்கரங்களில், சூலம், மான், மழு, துடி விளங்கவும், இடையிலே புலித் தோல் அணிந்து, மார்பிலே யானைத் தோல் போர்த்தி, திருவடிகளில் பொற் பாதுகை அணிந்து, உலகமெல்லாம் நன்மணம் கமழ இறைவன் கங்காளநாதர் வடிவம் கொண்டார்.! அந்த வடிவம் கண்டு திருமால் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டார்.

ஓராயிரம் நிலவுகள் ஒன்று சேர்ந்தது போன்று ஒளி வீசும் முகம் கருக்கொண்ட மேகம் போல் கரிய கூந்தல்.! பிறை போன்ற நெற்றி.! வில் போன்ற புருவம், நீல மலர் போன்ற விழி.! முத்துப் போன்ற பற்கள் சங்கு போன்ற கழுத்து.! மூங்கில் போன்ற தோள்கள்.! பவளம் போன்ற விரல்கள், சிற்றுடுக்கை போன்ற இடை.! அம்பறாத்துணி போன்ற கணுக்கால்கள்.! தாமரை போன்ற பாதங்கள் விளங்க முகுந்தன் மோகினி வடிவம் கொண்டார். முனிவர்கள் தவம் செய்து கொண்டிருக்கும் வனத்திற்குள் மோகினி நுழைந்தாள்.! சிறிது நேரத்தில் அவர்கள் மனதிற்குள்ளும் நுழைந்தாள். மோகினியைக் கண்ட முனிவர்களுக்கு கண்கள் கூசின.! பேச நாவும் கூசின.! ஆனால் மனம் கூசவில்லை.! அவளுடைய அழகை அள்ளி அள்ளிப் பருகினர். வேள்வித் தீ அணைந்தது.! காமத் தீ மூண்டது.! தவம் சென்றது.! தவிப்பு வந்தது.! மோனம் கலைந்தது.! மோகம் வென்றது.! மேனி எழுந்தது.! மெல்ல நடந்தது.! மோகினி தன்னை மொய்த்துக் கொண்டது.! கருமம் மறந்தது.! காமம் மிகுந்தது.! நடந்தாள் மோகினி.! தொடர்ந்தனர் முனிகள்.! நின்றாள் மோகினி.! நின்றனர் முனிகள்.! இப்படி அழகியை இதுவரை காணோம்.! எப்படி வந்தனள் என்று திகைத்தனர்.! இவ்வாறு முனிவர்கள் எல்லோரும் தம்மை மறந்து, செய்த தவத்தை மறந்து மோகம் கொண்டு மோகினியின் பின்னே வந்தனர்.

இங்கே இவ்வாறிருக்க கங்காளர் வேடம் கொண்ட கறைக்கண்டர், முனிவர் தம் மனைவியர் இருக்கும் வீதிக்கு வந்தார். பண்ணோடு இசை பாடிக் கொண்டும், பாவத்தோடு ஆடல் ஆடிக் கொண்டும், தனி நாடகம் நடித்துக் கொண்டும் வந்தார். இனிமையான இசையைக் கேட்டுக் குடிலுக்குள் இருந்த முனி பத்தினிகள் அனைவரும் முற்றத்திற்கு வந்தனர். இறைவனின் ஆடலையும், பாடலையும், நடிப்பையும் கண்டும் கேட்டும் அதிசயித்த அவர்கள் அவருடைய அழகிலே அதிசயித்த அவர்கள் அவருடைய அழகிலே மயங்கினர். சபலத்துக்கு ஆட்பட்டுத் தங்களின் தனித்தன்மையை இழந்தனர்.! பிச்சை போட வந்தவர்கள் அவர் மீது இச்சை கொண்டனர்.! ஆசைக் காற்றில் அறிவுத் தீ அணைந்து போயிற்று. தங்களின் பெருமையை மறந்து சாதாரணப் பெண்கள் போல் நடந்து கொண்டனர். நம்மை அன்போடு பார்க்க மாட்டாரா? அகத்தைத் தழுவ மாட்டாரா? என்று மோகத்தால் புலம்பினர். இதனால் இவர்களின் மேனி மெலிந்து கைவளை கழன்றது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் சிவபெருமான் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் அவர் போக்கில் போய்க் கொண்டே இருந்தார்.! சில பெண்கள் அவர் முன்னே சென்று நிம்மதியாக இருந்த எங்களின் நிம்மதியைக் குலைந்து விட்டுப் போகிறீரே.! இது நியாயமா? எங்கள் இல்லத்துக்கு வாரும்.! எங்களுக்கு இன்பம் தாரும்.! என்றனர். அந்தப் பெண்களை கண்டும் காணாமலும், அவர்கள் புலம்பலைக் கேட்டும் கேட்காமலும், இறைவன் தனது போக்கில் போய்க் கொண்டிருந்தார். வேறு சில பெண்கள் அவர் முன்னே வந்து, கணவனே கண் கண்ட தெய்வம் என்றிருந்த எங்கள் மனத்தைக் கெடுத்து விட்டு, காமக் கனலைக் கொளுத்தி விட்டுக் கண்டும் காணாமல் போகிறீரே? இது தருமமா? நில்லும்.! அல்லது எங்கள் மூச்சை நிறுத்தி விட்டு செல்லும் என்று அந்தப் பெண்கள் கூறினர்.

முனிவர் தம் மனைவியர் அனைவரும் விரக தாபத்தால் வெம்புவதை அறிந்த விமலன், அவர்கள் மீது கருணை கொண்டு கடைக் கண்ணால் நோக்கினார். அந்த அருள் நோக்கு அவர்களின் காமத்தைப் போக்கிக் கர்ப்பத்தை ஆக்கியது.! அக்கணமே அவர்கள் அனைவரும் நாற்பத்து எண்ணாயிரம் பிள்ளைகளைப் பெற்றனர். பிறந்த பிள்ளைகள் அனைவரும் பெருமானின் திருவடியில் வீழ்ந்து வணங்கினர். வணங்கிய பிள்ளைகளை வாழ்த்தி, ஞானமுள்ள மக்களே.! நீங்கள் அனைவரும், எம்மை நினைந்து இந்த வனத்திலேயே தவம் இருங்கள். பின்னர் உங்களுக்கு வேண்டும் வரம் தருவோம் என்று சொன்னார். முனிவர்களின் மனைவியர் முக்கண்ணரின் பெருமையை உணர்ந்து, தங்களின் கர்வத்தைப் போக்கியதை நினைந்து இறைவனை வணங்கினர். அந்தப் பெண்கள் தம்மைப் புரிந்து கொண்டு, கர்வத்தைக் கைவிட்டதால் அவர்களுக்கு ஆசியருளி, முன்பு போல் கற்புடைய பெண்கள் ஆக்கினார்.அப்போது மோகினி அங்கே வந்தாள். மோகம் கொண்ட முனிவர்களும் அவள் பின்னாலேயே வந்தனர். அங்கே கங்காள நாதர் நிற்பதையும் அவரைச் சூழ்ந்து தங்கள் மனைவியர் நிற்பதையும் கண்ட பின்பு தான் அவர்களுக்கு உண்மை புரிந்தது. மோகம் தெளிந்தது. தங்களை மோக நிலையில் சிக்க வைத்த மோகினி முகுந்தன் என்றும், தங்கள் மனைவியரின் கற்பைப் பங்கப் படுத்தியது கங்காள வேடத்தில் இருக்கும் கறைக் கண்டர் என்றும் அறிந்தனர். முகுந்தன் இந்த வேலை செய்திருக்க மாட்டார். இந்த முக்கண்ணர் ஏவித்தான் இப்படிச் செய்திருக்கிறார் என்று எண்ணி முழுக் கோபத்தையும் முக்கண்ணர் மீது காட்டினர். முக்கண்ணரை மோசமான முறையில் பேசினர், பின்னர் தங்கள் மனைவியரைப் பார்த்து, எவன் பின்னாலேயோ வந்து இழக்கக் கூடாத கற்பை இழந்து விட்டு, இன்னும் நிற்கிறீர்களே? போய்விடுங்கள் என்று விரட்டினர். நாங்கள் மட்டுமா கற்பை இழந்தோம்? நீங்களும் தான் மோக வலையில் வீழ்ந்து மோசம் போய் இழக்கக் கூடாத பண்பை இழந்து விட்டீர்கள்.! இவரை யார் என்று நினைத்து இப்படிப் பேசுகிறீர்கள்? இவர் என்றும் அழிவில்லா ஆதிமூர்த்தி எல்லாம் வல்ல பரம்பொருள்.! இவரால் நாங்கள் இழந்த கற்பை மீண்டும் பெற்று விட்டோம்.! இவரை வணங்குங்கள் நீங்கள் மீண்டும் புனிதர் ஆவீர்கள் என்று அந்தப் பெண்கள் கூறினர். இதனால் சினம் கொண்ட முனிவர்கள், எமக்கு எல்லாம் தெரியும், நீங்கள் செல்லுங்கள் இங்கிருந்து என்று கத்தினர். இதனால் அவர்கள் எல்லோரும் சென்று விட்டனர்.

முனிவர்கள் கோபம் கொண்டு சிவபெருமானுக்குச் சாபம் கொடுத்தனர். அந்தச் சாபம் அவரை ஒன்றுமே செய்யவில்லை. அப்போது சில ஞான முனிவர்கள் அங்கே வந்தனர். அவர்கள் தாருகாவன முனிவர்களைப் பார்த்துச் சொன்னார்கள். முனிவர்களே.! உங்கள் சாபம் அவரை ஒன்றும் செய்யாது. அவர்தான் ஆதி அந்தம் இல்லா அய்யன். பிறப்பு இறப்பு இல்லாப் பெருமான்.! அவரை எவராலும் சபிக்க முடியாது, அழிக்கவும் முடியாது என்று அந்த ஞான முனிவர்கள் உறுதியோடு சொன்னார்கள். ஞான முனிவர்கள் சொன்னது ஊன முனிவர்களின் செவிகளில் ஏறவில்லை. நீங்கள் சொல்வது போல இவன் சிவனாகவே இருக்கட்டும்.! எங்கள் மனைவியரின் கற்பை அழித்தது நியாயமா என்று கேட்டனர். முனிவர்களே.! சற்று சிந்தித்துப் பாருங்கள், வேத நாயகனை மறந்து விட்டு நீங்கள் வேதம் ஓதியது நியாயமா? வேள்வி நாயகனை மறந்து விட்டு நீங்கள் வேள்வி செய்தது நியாயமா? சிவத்தை மறந்துவிட்டுத் தவத்தைச் செய்தது நியாயமா? இவ்வாறு பல நியாயமற்ற செயல்களைச் செய்த நீங்கள் நியாயம் கேட்பது நியாயமா? உயிர்கள் செய்யும் வினைகளுக்குத் தக்கவாறு பயன்தருவது சிவன் அல்லவா? அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதை நீங்கள் அறிய வில்லையா? என்று ஞான முனிவர்கள் கேட்டனர். ஆயினும் அதை ஊன முனிவர்கள் கேட்கவில்லை. முதலில் "முக்கண்ணர் தாம்" என்று முடிவு செய்த முனிவர்களுக்கு இப்போது சிறிது சந்தேகம் வந்து விட்டது. விமலனைப் பார்த்தே வினாவைத் தொடுத்தனர். யார் நீ? உன் ஊர் என்ன? பெயர் என்ன? எல்லாவற்றையும் சொல் என்று கேட்டனர். அதற்கு இறைவன் சொன்னார், நான் ஒரு அனாதை.! எனக்கு அம்மாவும், அப்பாவும் இல்லை. ஆனாலும் என்னை அம்மையப்பன் என்பார்கள். எனக்கு இன்பமும் இல்லை. துன்பமும் இல்லை. இரவும் இல்லை. பகலும் இல்லை. பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை. விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. அண்ணனும் இல்லை. தம்பியும் இல்லை. தமக்கையும் இல்லை. தங்கையும் இல்லை. உருவமும் இல்லை. அருவமும் இல்லை என்று சொன்னார். இறைவன் இவ்வாறு சொல்லியும் புரிந்து கொள்ள முடியாத ஊன முனிவர்கள், இவன் எவனோ பித்தன்.! பித்துப் பிடித்தவன் போல் பிதற்றுகிறான். சரி இவன் சிவனாக இருந்தால் என்ன? எவனாக இருந்தால் என்ன? இவனை அழித்தே ஆக வேண்டும் என்று எண்ணி அபிசார வேள்வி தொடங்கினர்.

அந்த வேள்வியில் இருந்து பிளந்த வாயுடனும், பெருத்த உருமலுடனும், முறுக்கிய வாலுடனும் வேங்கை ஒன்று வெளிப்பட்டது. அந்த வேங்கையை வேத நாயகன் மீது ஏவினார். வெடிவால் முறுக்கிய அந்த வேம்புலி பரமனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அந்தப் புலியைப் பரம் பிடித்து அதன் தோலை உரித்துத் தமது இடையில் அணிந்து கொண்டார். இதைக் கண்டும் அஞ்சாத அஞ்ஞான முனிவர்கள் மீண்டும் வேள்வி செய்தனர். அப்போது அந்த வேள்வியில் இருந்து மழு தோன்றியது. இறைவன் அதனை தம் கரத்தில் தாங்கி கொண்டார். பின்னர் ஒரு மான் தோன்றியது, அதனையும் பெருமான் மீது ஏவிட, அதனையும் பிடித்து தனது மற்ற ஒரு கரத்தில் ஏந்திக் கொண்டார். அடுத்து யானை ஒன்று தோன்ற அதனையும் பெருமான் மீது ஏவினார்கள். அதை இறைவன் தும்பிக்கையைப் பற்றிக் கரகரவென்று சுழற்றி, அதன் தோலை உரித்து மார்பில் போர்த்திக் கொண்டார். அடுத்து வந்த அரவங்களைப் பற்றித் தமக்கு அணிகலன்களாக ஆக்கிக் கொண்டார். பூத கணங்கள் வந்தன. அவற்றைப் படைகளாக்கிக் கொண்டார். இவற்றை எல்லாம் கண்டும் சிறிதும் சிந்திக்காத அந்த முனிவர்கள், இந்த வகையில் இவனை அழிக்க முடியாது. ஒருங்கிணைந்த மந்திரங்களால் தான் ஒழிக்க முடியும் என்று எண்ணி மந்திரங்களை ஓதினர். அந்த மந்திரங்கள் அனைத்தும் இணைந்து ஒரு உடுக்கையாக உருவானது. அந்த உடுக்கையை ஏவினர். அவ்வுடுக்கை இவ்வுலகமே நடுங்கும் வண்ணம் ஓங்கார ஒலி எழுப்பிக் கொண்டு வந்தது. இறைவன் அந்த உடுக்கையைப் பற்றி, இந்த இனிய நாதம் எமக்கு மிகவும் விருப்பமான நாதம். எப்போதும் எம் செவிகளில் ஒழித்து கொண்டே இருக்கட்டும் எனக் கூறி தம் திருக்கரத்தில் வைத்துக் கொண்டார். இறைவனின் திருச் செயல்களை எல்லாம் கண்டும் திருந்தாத முனிவர்கள் மீண்டும் வேள்வி வளர்த்தனர். அதில் முயலகன் என்று ஒரு முரடன் வெளிப்பட்டான். அவனைக் கண்ட முனிவர்கள், இவன் அவனை முடிப்பான் என்று முழுமையாக நம்பி முடிவாக அந்த முயலகனை முக்கண்ணர் மீது முடுக்கினர். அந்த முயலகன் மூர்க்கமாக முக்கண்ணர் மீது பாய்ந்து வந்தான். அவனை இறைவன் தம் திருவடியின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டார். அத்தனை முயற்சிகளிலும் தோல்வி கண்டும் திருந்தாத அந்த முனிவர்கள், எவ்வாறேனும் இறைவனை அழிக்க வேண்டும் என்று எண்ணத்திலேயே இருந்தனர். அதனால் தங்களின் சாபம் அவரை ஒன்றும் செய்யாது என்பது முன்பே தெரிந்திருந்தும் மீண்டும் அவருக்குச் சாபம் கொடுத்தனர். முன்பு முப்புரத்தைச் சிரிப்பால் எரித்த முக்கண்ணர், இப்போது லேசாகக் குறுஞ்சிரிப்பால் முனிவர்களை பார்க்க, முனிவர்களின் சாபங்கள் மட்டும் சாம்பலாகவில்லை. அவர்களின் அறியாமையும் சாம்பலாயிற்று. குறுஞ்சிரிப்பே இவ்வாறு இருந்தால் பெருஞ்சிரிப்பும் எவ்வாறு இருக்குமோ, என்று எண்ணிக் கலங்கி, இறைவனின் ஆற்றலை உணர்ந்து, இறைவா.! நாங்கள் அறியாமல் செய்த பிழைகளையும், அறிந்து செய்த பிழைகளையும் பொறுத்தருள வேண்டும் என்று கூறி இறைவனின் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்கள். முனிவர்களே.! உங்கள் தவத்தையும் அறிவோம்.! மெச்சத் தகுந்த தவம் தான், ஆயினும் ஒன்றை மறந்து விட்டீர்கள். மறந்ததை நினைவூட்டவே யாம் வந்தோம் இனி நீங்கள், இங்கேயே இருந்து வேணுவனநாதரையும், வடிவுடைநாயகியையும் வணங்கி வழிபாடு செய்து தவம் இயற்றி வாருங்கள் என்று இறைவன் அருளிச் செய்தார்.

இறைவன் இவ்வாறு அருளிச் சென்றாலும், முனிவர்களால் அவர்கள் செய்த தவறுகளை மறக்க முடியவில்லை. உள்ளம் உறுத்திக் கொண்டே இருந்தது. சரியான பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இதை யாரிடம் கேட்கலாம் என்றும் புரியவில்லை. இறுதியாக குழப்பத்திற்கு பின் ஒரு விடிவு கிடைத்தது. சிவபெருமானுக்கு அணுக்கமானவரும், ஒரு வகையில் இணையானவருமான அகத்திய முனிவரை அணுகிக் கேட்கலாம் என்று முடிவு செய்தனர். அம்முடிவின் படி தமிழ் முனியைக் கண்டு தங்களின் எண்ணத்தைக் கூறினர். அகத்திய முனிவர் அவர்களுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்டு, அவர்கள் பிராயச்சித்தம் செய்வதற்குத் தக்க வழியைக் காட்டினார். முனிவர்களே.! இறைவன் உங்கள் தவறுகளை மன்னித்து விட்டாலும் உங்கள் மனம் கேட்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். மகிழ்ச்சி.! வேணுவனத்திலேயே இருந்து தவம் செய்யுமாறு இறைவன் சொல்லியிருப்பதால், நீங்கள் அங்கேயே சென்று ஆளுக்கொரு லிங்கம் அமைத்து அதற்கு வேண்டிய பூஜைகள் எல்லாம் செய்து அந்த லிங்கத்தின் முன் அமர்ந்தே தவம் செய்யுங்கள். மாசி மகத்தன்று மகாதேவர் உங்களுக்கு காட்சித்தருவார் என்று அகத்திய முனிவர் சொன்னார். "இதுவே தக்க வழி" என்று சொல்லி முனிவர்கள் அனைவரும், அகத்திய முனிவரை வணங்கி, நன்றியுடன் விடைபெற்றனர்.

வேணுவனம் வந்த முனிவர்கள் அகத்திய முனிவர் சொன்னபடி தாமிரத்தாலும், தங்கத்தாலும் ஆளுக்கொரு லிங்கம் அமைத்து, வேளை தவறாமல் பூஜை செய்து சிவலிங்கத்தின் முன் அமர்ந்து சிவன் பெயரையே சொல்லிக் கொண்டு தவம் இருந்தனர். இவ்வாறு ஓராண்டு காலம் தங்கள் தவத்தை தொடர்ந்தனர். மாசி மாதம் வந்தது, மகம் நட்சத்திரமும் வந்தது, மகாதேவரும் வந்தார். அகத்திய முனிவர் சொன்னபடி பெருமான் அந்த முனிவர்களுக்கு காட்சித் தந்தார். இறைவனைக் கண்ட அந்த முனிவர்கள் அனைவரும், இறைவனின் திருவடியில் விழுந்து எழுந்து கரங்களைத் தலைக்கு மேலே உயர்த்திக் கொண்டு இறைவனை போற்றி வணங்கினர். அவர்களின் போற்றியில் மகிழ்ந்த சிவபெருமான், அம்முனிவர்களுக்கு ஞானத்தை அருளி, பேரொளி வடிவமாக காட்சியளித்தார். அவ்வடிவத்தைக் கண்டு அஞ்சிய முனிவர்கள், இறைவா.! இவ்வடிவத்தைக் காண அச்சமாக இருக்கிறது, தயை கூர்ந்து கயிலையில் வீற்றிருக்கும் காட்சியைக் காட்டியருள வேண்டுகிறோம் என்றனர். இறைவனும் அவ்வாறே, அம்மை உமாதேவியுடன் காளை வாகனத்தில் அமர்ந்து காட்சித் தந்தருளினார். அக்காட்சியைக் கண்ட முனிவர்கள் இறைவனைச் சரணடைந்து துதித்தனர். அவரை பரிபூரணமாக சரணடைந்தனர். முனிவர்களே.! முன்பு நீங்கள் தவறு செய்திருந்தாலும், இன்று நல்ல ஞானத்தைப் பெற்று விட்டீர்கள். ஆகையால் வேண்டும் வரம் என்னவென்று கேளுங்கள் என்று கூறினார் இறைவன். இறைவா.! கங்காளநாதர் வடிவத்தில் காந்திமதி அம்மையுடன் காட்சித் தர வேண்டும் என்று கேட்டனர் முனிவர்கள். இறைவனும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, திருமூலநாதருக்கு மேல்புறத்தில், கங்காளநாதர் வடிவத்தில் அம்மையுடன் காட்சி தந்தார். இறைவன் முனிவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பியதும், மோகினி வடிவம் கொண்ட முகுந்தன்., அந்த மோகினி வடிவத்தை களைந்துவிட்டு, முகுந்தனாக வந்து பெருமானை வணங்கி பணிந்து, எனக்கு ஒரு வரம் வேண்டும் என்று கேட்டார். என்ன வரம் வேண்டும் கேள் என்று முகுந்தனிடம் பெருமான் கேட்க, இறைவா.! தாருகாவனத்தில் மோகினி வடிவம் கொண்டிருந்த போது கங்காளர் வடிவில் இருந்த உங்கள் மீது மோகம் கொண்டேன். அந்த மோகம் தீர ஒரு வழி காட்டும் படி கேட்கிறார். திருமாலே.! திருப்பாற்கடலில் தோன்றிய அமுதத்தைக் தேவர்கட்கு மட்டும் கொடுப்பதற்காக நீ மோகினி வடிவம் எடுப்பாய். அப்போது நாம் உன்னைத் தழுவுவோம், அப்போது ஹரிஹர புத்திரன் தோன்றுவான், உன் மோகமும் தீரும் என்று சொன்னார் சிவபெருமான்.

அதனைக் கேட்ட திருமால் தனக்கு மேலும் ஒரு வரம் வேண்டும் என கேட்கிறார். அதனையும் கேட்கும்படி பெருமான் கூற, இறைவா.! கங்காளநாதர் வடிவில் காந்திமதி அம்மையுடன் திருநடனம் புரிய வேண்டும். அதை நாங்கள் கண் குளிர காண வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறியருள்கிறார். அம்மை காந்திமதியுடன் அப்பர் கங்காளர் வடிவில் திருநடனம் ஆடினார். அந்த அற்புதக் காட்சியைத் திருமாலும், தேவர்களும், முனிவர்களும் கண்டு களித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் அலறினர். உயிருக்கு பயந்து ஓலமிட்டனர். கூச்சலிட்டனர். ஏன்? அரங்கத்தில் அம்மையும் அப்பனும் மட்டும் ஆடவில்லை. அண்டங்கள் அனைத்தும் ஆடின. இறைவா.! போதும் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுத்தனர். இறைவன் தாண்டவத்தை நிறுத்தினார். அண்டங்களும் ஆடாமல் நின்றன. எல்லோரும் இயல்பு நிலைக்கு வந்தனர். பெருமான் அருளால் பிழைத்தோம் என்று எண்ணி எல்லோரும் சென்றனர். கங்காளநாதர் இருக்கும் இடத்திற்கு பின்புறமாக ஒரு வன்னி மரம் உண்டு. அம்மரம் சிவனுடைய அம்சமானது. அம்மரத்தின் அடியில் அமர்ந்து அயன் சிலகாலம் படைப்புத் தொழிலைச் செய்திருக்கிறான். அந்த மரத்திற்கு நீர் ஊற்றுவோர் நீண்ட ஆயுளைப் பெறுவர். அந்த மரத்திற்கு தினமும் பூஜை செய்ய வேண்டும். அம்மரம் செழிப்பாக இருக்கும் வரை உலகமும் செழிப்பாக இருக்கும். வாடத் தொடங்கினால் வையகமும் பல துன்பங்களை அடையும். ஆகையால் அம்மரத்தை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் அந்த கோவிலின் உள்ளே சில அருமையான தீர்த்தங்கள் இருக்கின்றன. கங்காள தீர்த்தம், கூவத்தீர்த்தம், வைரவத் தீர்த்தம் என்று சில தீர்த்தங்கள் இருக்கின்றன. அந்தத் தீர்த்தங்களில் நீராடினால், பேய், பிசாசு, பில்லி, சூனியம் எல்லாம் ஓடி விடும். இந்த கோவிலில் ஐந்து நாள்கள், ஏழு நாள்கள் என்று தலைவாசம் இருப்பவர்கள் நற்கதி அடைவார்கள் என்று சொல்லிச் சூதமா முனிவர் சப்த முனிவர்கள் நெல்லை வந்தது பற்றிச் சொன்னார்.

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 19

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2023 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram