திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-16ல்.,
மகிஷாசூரனை வதைத்த வரலாறு பற்றி காணலாம்.
மகிஷாசூரனை வதைத்த வரலாறு:
முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் எண்ணற்ற அசுரர்கள் கொல்லப்பட்டனர். இதனைக் கண்ட திதி என்பவள், நம் குலத்தில் ஒரு வீரன் இல்லாததால் தானே தேவர்கள் நம் குலத்தாரைக் கொன்று குவித்து விட்டனர். சரியான ஒரு வீரன் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காதல்லவா? என்று நினைத்து, இனி நம் குலத்துக்கு ஒரு பலமிக்க வீரனை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுத் தனது மகள் தானேஸ்வரியை அழைத்து அவளிடம் தனது திட்டத்தை சொல்லி, மகளே.! நீ இப்போதே சென்று, பிரம்மனை நோக்கித் தவம் செய்து, தேவர்களை வெல்லும் பலமுடைய ஒரு பிள்ளை வேண்டும் என்று வரம் வாங்கி வா என்று சொன்னாள். தனது தாயின் சொல்லைக் கேட்டுத் தானேஸ்வரி பிரம்மனை நோக்கித் தவம் செய்து செய்தாள். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவம் கொண்டு தவம் இருந்தாள். ஓராண்டு எருமை வடிவம் கொண்டு தவம் இருந்தாள். அப்போது பிரம்மன் அவள் முன்னர் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்கிறார். அதற்கு பிரம்ம தேவா.! தேவர்களை வெல்லும் வல்லமை கொண்ட ஒரு பிள்ளை வரமாக வேண்டும் என கேட்கிறாள். அதற்கு பிரம்ம தேவனும் அப்படியே தந்தோம்.! ஆனால் ஒன்று நீ எருமை வடிவத்தில் இருந்து வரம் கேட்டதால் உனக்கு பிறக்கும் பிள்ளையும் எருமைத் தலையுடன் பிறக்கும் என்று சொல்லிச் சென்றார் பிரம்ம தேவர். வரம் பெற்ற தானேஸ்வரி, தனது தாயிடம் வந்து விபரத்தைச் சொல்கிறாள்.
பின்னர் கருவுற்று உரிய காலத்தில் ஒரு மகனைப் பெற்றாள். பிரம்மன் சொன்னது போலவே அந்த மகன், எருமைத் தலையுடனும், மனித உடலோடும் பிறந்தான். அவனுக்கு மகிடன் என்ற பெயர் சூட்டப்பெற்றது. அரக்கர்கள் பிறப்பில் ஒரு அதிசயம் நடக்கும்.! அரக்கர் குலப் பெண் எந்த வயதில் குழந்தை பெறுகிறாளோ? அந்தப் பிள்ளை பிறந்த உடனே தனது தாயின் வயதை அடைந்து விடும். இந்த சிறப்புத் தன்மையால் மகிடன் பிறந்தவுடன் தனது தாயின் வயதை அடைந்து வாலிபனாகி விட்டான். அவன் பல கலைகளையும் படித்து படைக்கல பயிற்சியையும் பெற்றான். தேவர்களிடம் இருந்து தப்பி ஓடிப் பதுங்கியிருந்த அரக்கர்கள் எல்லோரும் மகிடனுடைய வீரதீரத்தைக் கேள்விப்பட்டு அவனுடன் வந்து சேர்ந்து கொண்டனர். தன்னிடம் வந்து சேர்ந்த அரக்கர்களை அழைத்துக் கொண்டு மகிடன் திக்கு விஜயம் செய்யப் புறப்பட்டான். எல்லா திசைகளுக்கும் சென்றான், தேவர்களை வென்று அடிமைப்படுத்தினான். ஆதிசேடனின் தலையையும், வாளையும் சேர்த்துக் கட்டிக் கவண் போல் ஆக்கி விட்டான். அக்கினி தேவனின் வாகனமான ஆட்டைப் பிடுங்கித் தனது பிள்ளைகளுக்கு விளையாடக் கொடுத்து விட்டான்.
இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையைத் தனக்கு வாகனமாக வைத்துக் கொண்டான். எமன் தன்னுடைய வாகனமான எருமையில் ஏறுவதையே விட்டு விட்டான். சூரியன் தனது வெப்பத்தைக் குறைத்துக் கொண்டான். வாயு கவரி வீசினான்.! வருணன் நீர் இறைத்தான்.! அக்கினி சமையல் செய்தான்.! சிவபெருமானிடம் வாங்கிய வரத்தால் இவ்வாறு தேவர்களை வேலை வாங்கினான். மற்ற தேவர்களைத் தனது மாளிகையில் குற்றேவல் செய்ய வைத்தான். அவன் செய்யும் கொடுமைகளை தேவர்களால் தாங்க முடியவில்லை. மகிடனிடம் அகப்படாத சில தேவர்களை அழைத்துக் கொண்டு, இந்திரன் பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டான். பிரம்மன் திருமாலிடம் போகச் சொன்னார். திருமால் சிவனிடம் போகச் சொன்னார். சிவபெருமான் திருநெல்வேலியம்பதிக்கு போகச் சொன்னார். இந்திரா.! இது என்னால் ஆகக் கூடிய செயல் அன்று, நீ வேணுவனத்திற்கு போ.! அங்குதான் மகிடனை சம்ஹாரம் செய்யும் சக்தி இருக்கிறாள் என்று சொன்னார் சிவபெருமான். சிவபெருமான் சொன்னதைக் கேட்ட இந்திரன் தேவர்களுடன் வேணுவனத்திற்கு வந்து, தேவியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, தாயே.! மகிடாசூரனிடம் இருந்து எங்களைக் காக்க வேண்டும்.! என்று வேண்டினான்.
அன்னை அவனுக்கு ஆறுதல் கூறி, விரைவில் அந்த மகிடனை அழித்து உங்கள் துன்பத்தைப் போக்குகிறேன்.! என்று உறுதி சொல்லி அனுப்பி விட்டு, அம்மை இறைவனின் கோவிலுக்குள் சென்று, இறைவன் முன் நின்று, இறைவா.! மகிடனை அழித்துத் தேவர்களின் துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்று வேண்டினான். இறைவன் மூலலிங்கத்தினின்று தோன்றி, அப்படியே செய் தேவி என்று கூறி மறைந்து விட்டார். அம்மை உடனே மாகாளி வேடம் கொண்டு, அட்ட வயிரவர்களுடனும், சாமுண்டி, விந்தை, கூளி, கொற்றவை, அணங்கு, தாக்கணங்கு, வெம்படைக் கோடியர் ஆகியவருடன் புறப்பட்டு, மகிடனுடைய கோட்டைக்கு அருகே சென்று பாசறை அமைத்து வீற்றிருந்தாள். போர் தொடங்கும் முன்பு எதிரியிடம் தூது அனுப்பி எதிரியின் எண்ணத்தைத் தெரிந்து கொள்வது ஒரு மரபு. அந்த மரபின் படி அம்மை மாகாளி விந்தை என்பவளை மகிடனிடம் தூது அனுப்பினாள். தேவர்களை விடுவிப்பதற்காக தேவி வந்திருக்கிறாள்.! நல்ல முறையில் தேவர்களை விட்டு விட்டால் உயிர் பிழைப்பாய்.! இல்லை உன்னைக் கொன்று தேவர்களை விடுவிப்பாள் தேவி. இதில் உனக்கு எது சம்மதம் என்று கேட்டு வா.! என்று அம்மை விந்தையைத் தூதாக அனுப்பி வைத்தான்.
மாகாளியால் தூது அனுப்பப்பட்ட விந்தை மகிடனின் கோட்டைக்குள் சென்று, மகிடனைக் கண்டு மாகாளி சொன்னதை சொல்கிறாள். அவன் செவிகளில் விந்தை சொன்ன செய்தி ஏறவே இல்லை. விந்தையைக் கண்டு சிந்தையைப் பறி கொடுத்தான். மாது மீது மையல் கொண்டான். அவன் சிந்தை மாறியதைத் தெரிந்து கொண்ட விந்தை மீண்டும் எச்சரிக்கை செய்கிறாள். இந்த அண்டத்தை எல்லாம் ஆள்பவளும் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்பவளுமான அன்னை ஆதிபராசக்தி மாகாளி வடிவத்தில் வந்திருக்கிறாள். உன்னை அளித்துத் தேவர்களின் துன்பத்தைத் துடைப்பதற்காக இங்கே வந்து அமர்ந்திருக்கிறாள். நீ தேவர்களை விடுவித்து அவளைச் சரணடைந்தால் வாழ்வாய் அல்லது மாண்டு போவாய் என்று விந்தை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளை பிடித்து வாருங்கள் என்றான். தன்னை நோக்கி பாய்ந்து வந்த தடியர்களை, விந்தை தனது விழி நெருப்பால் நீராக்கி விட்டாள். பின் மகிடனே அவளை பிடிக்க ஓடி வந்தான். விந்தை விரைந்து ஓடி மாகாளி இருக்கும் பாசறைக்குச் சென்று விட்டாள். அவனைத் தொடர்ந்து ஓடி வந்த மகிடன் மாகாளியைப் பார்த்து விட்டான். ஓஹோ.! இவள்தான் நம்மைக் கொல்வதற்கு வந்த பெண் மகளோ? என்று ஏளனமாக எண்ணி, அவளை அழித்து வாருங்கள் என்று தன் படைகளுக்கு ஆணையிட்டான்.
மகிடனின் ஆணை கேட்டு, அவனது படைகள் மாகாளி மீது பாய்ந்தன. அன்னையின் சூலாயுததால் அத்தனையும் மாய்ந்தன. படைகள் எல்லாம் மாண்ட பின்னர் மகிடன் தனி ஆளாக வந்து அன்னையுடன் சண்டை செய்தான். அன்னை ஏவிய பல வகையான ஆயுதங்களுக்கெல்லாம் தப்பிப்பதற்காகப் பல வடிவங்கள் கொண்டு சண்டையிட்டான். ஓராயிரம் தலைகளும், ஈராயிரம் கைகளும் கொண்ட ஒரு வடிவம் கொண்டு வந்தான். அந்த வடிவத்தை அன்னை அழித்தாள். இவ்வாறு பல்வேறு வடிவம் கொண்டு வந்தான். அத்தனை வடிவங்களையும் அன்னை அழித்தாள். இறுதியாக இயல்பான வடிவத்தில் வந்தான். மாகாளி மந்திர வாளால் அவனுடைய தலையை அறுத்தாள். கீழே விழுந்த தலை அவனுடைய உடலில் போய் ஒட்டிக் கொண்டது. ஆச்சரியப்பட்ட அன்னை மீண்டும் அவன் தலையை அறுத்தாள். தலை மீண்டும் ஒட்டிக் கொண்டது . பல முறை அவன் தலையை அறுத்தும், பல முறையும் தலை ஒட்டிக் கொண்டே இருந்தது. அம்மை திகைத்தாள், இறைவா.! இது என்ன சோதனை? என்றாள். அப்போது வானில் இருந்து ஒரு ஒலி எழுந்தது. தேவி.! முன்னர் அவன் பெற்ற வரத்தால் இவ்வாறு நடக்கிறது இனி அவன் தலை கீழே விழாமல் வாளால் குத்தி மேலே தூக்கி பின் கீழே போட்டு காலால் மிதித்து விடு. அவன் மாண்டு போவான்.! என்றது வானொலி. இது அம்மைக்குத் தேனொலியாய் இருந்தது. வானொலி சொன்னவாறே மகிடன் தலையை அறுத்து அது தரையில் விழுவதற்கு முன் வாளால் குத்தி எடுத்து பின் தரையில் போட்டுக் காலால் மிதித்தாள். மகிடன் மாண்டான். மகிடனை அழித்து தேவர்கள் பட்ட துன்பத்தைத் தீர்த்து வைத்தாள் என்று சொல்லிச் சூதமா முனிவர், நைமிசாரணிய முனிவர்களே.! அம்மை கம்பா நதிக் குகைக்குள் தியானம் செய்ய செல்லும் முன்பே இந்த மகிடன் வதை நடந்தது. நீங்கள் விரும்பி கேட்டதால் சொன்னேன். இப்போது அம்மை குகைக்குள் இருந்து தியானம் செய்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு காட்சி தர கயிலைநாதர் வருகிறார். அது பற்றி சொல்கிறேன் என்று சொல்லிச் சொன்னார்.