திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-15ல்.,
51. கயிலாயச் சிறப்புச் சருக்கம்.
52. அறம் வளர்த்த சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
51. கயிலாயச் சிறப்புச் சருக்கம்:
வேதநாயகன் வீற்றிருக்கும் வெள்ளி மலையாம் கயிலை மலையின் சிறப்பை எவராலும் சொல்ல முடியாது. வேத முழக்கம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், தன்னை வந்து சேர்ந்தவரையும், சேர்ந்தவற்றையும் தன்னைப் போல் வெண்மையாக ஆக்கி விடும். ஒருமுறை கயிலைக்குச் சென்ற தேவேந்திரன் தன்னுடைய ஐராவதம் என்ற வெள்ளை யானை எங்கே நிற்கிறது என்று தெரியாமல் திகைத்துப் போனான். இதே போன்று வெள்ளைக் கலை உடுத்திய தன் மனைவி கலைவாணி எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் பிரம்மன் திகைத்துப் போனான். அங்கே மேலும் ஒரு அதிசயம் என்னவென்றால், யானை முதலிய மிருகங்கள் எல்லாம் மற்ற மிருகங்களின் கன்றுகளுக்குப் "பால் கொடுக்கும்" இத்தகைய "மிருத நேயம்" அங்கே மிகுதியாக உண்டு.
ஒருநாள் மாலை வேளையில், எந்த வனத்தையும் இணை சொல்ல இயலாத கயிலைநாதனின் சொந்த வனமான நந்தவனத்தில் அம்மை உமையவள் மலர்களின் அழகைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு வந்த சிவபெருமான் அம்மையின் பின்னால் நின்று தம் இரு கைகளால் அம்மையின் கண்களைப் பொத்தி விட்டார். சிவபெருமான் தான் தன் கண்களைப் பொத்தினார் என்று அம்மை புரிந்து கொண்டாள். ஆயினும் விளையாட்டாக யார்? விஜயையா? ஆதியா? என்று தன் தோழிப் பெண்களின் பெயர்களைச் சொல்லிக் கேட்டான். ஆமாம்.! ஆதி தான்.! என்று சிரித்துக் கொண்டே இறைவன் தனது கைகளை எடுத்தார்.! அம்மைக்கு நாணத்தால் முகம் சிவந்து விட்டது. ஒருநாள் அம்மை பார்வதி பரமனின் கண்களை பொத்தி விட்டாள். உடனே கைலாயம் இருண்டு விட்டது. எல்லா உலகங்களும் இருண்டு விட்டன. திருமால், பிரம்மன், இந்திரன், தேவர்கள் முனிவர்கள் முதலிய எல்லோரும் கண்கள் தெரியாமல் திகைத்தனர். எண்பத்து நான்கு லட்சம் வகையான உயிர்களும் கண்கள் தெரியாமல் பரிதவித்தன. இறைவன் சற்றுக் கோபத்துடன், பார்வதி கைகளை எடு.! என்றார். அம்மை உடனே கைகளை எடுத்து விட்டாள். இதற்குள் திருமாலுடன் எல்லோரும் கயிலைக்கு வந்து விட்டனர். பார்வதி பார்த்தாயா.! நீ செய்த செயலால் எவ்வளவு பெரிய தொல்லை ஏற்பட்டு விட்டது என்று சொன்னார் இறைவன்.
இறைவா விளையாட்டாகத் தானே செய்தேன்.! என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினாள் பார்வதி. விளையாட்டாகச் செய்தாலும், வேண்டுமென்றே செய்தாலும், குற்றம் குற்றமே என்றார் இறைவன். இறைவனின் கண்டிப்பான பேச்சைக் கேட்ட பார்வதி, வேறு எந்தப் பேச்சும் பேசாமல், இறைவா.! இந்தக் குற்றம் நீங்க வேண்டும் என்றால், நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் என்று பணிவுடன் வேண்டினாள். அதற்கு சிவபெருமான் நீ பூலோகம் சென்று சிவப்பணி செய்.! என்றார் இறைவன். இறைவா.! பூலோகம் என்று பொதுவாகச் சொன்னால் எப்படி? இந்தத் தலம் என்று கூறுங்கள் என்று கேட்கிறாள் அம்மை. பார்வதி.! பூவுலகத் தலங்களில் எமக்கு மிகவும் விருப்பமான தலம் வேணுவனப்புரமான திருநெல்வேலி தான்.! ஆகையால் நீ அங்கே சென்று, பாதலங் கம்பை நதியின் கரையில் அமர்ந்து, எமக்கு ஆகம விதிப்படி அபிஷேக அர்ச்சனை எல்லாம் செய்து வா, நாம் அங்கே லிங்க வடிவில் ஆகாய மயமாய் இருப்போம்.! விரைவில் உனக்குக் காட்சித் தருவோம் என்றார் இறைவன். இதைக் கேட்ட இறைவி மனம் மகிழ்ந்து, இறைவா.! விரைவில் காட்சி தருவதுடன் மட்டும் அன்றி, பங்குனி மாதம் இமயத்தில் என்னை மணந்தது போல், ஐப்பசியில் திருநெல்வேலிப்பதியில் என்னை திருமணம் புரிய வேண்டும் என்று கேட்கிறாள். அதற்கு அப்படியே ஆகட்டும் என்று கூறி இறைவன் விடை கொடுக்க, அம்மையும் புறப்பட்டாள்.
அம்மை புறப்பட்டவுடன் நந்தி தேவர், மிக வேகமாகச் செல்லும் ஒரு வானுர்தியைக் கொண்டு வந்து நிறுத்தினர். அம்மை அந்த வானுர்தியில் அமர்ந்து வேணுவனபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றாள். ஓராயிரம் நிலவுகள் ஒன்று கூடி ஒளி வீசுவது போல் அம்மை ஒளி வீச தேவர், முனிவர், சித்தர் முதலியோர் போற்றிப் புகழ்ந்து வணங்க, அரம்பையர் ஆடிப்பாடி வர, தோழியர்கள் அம்மையைச் சூழ்ந்து வர, மங்கலை, சுமங்கலை என்னும் இரு தேவ மாதர் சாமரம் வீசி வர, சுமாலி, மாலினி இருவரும் முத்துக் குடை பிடித்து வர, சிரேட்டை, அங்கிசை இருவரும் ஆலவட்டம் ஏந்தி வர, குசை, அபிராமி இருவரும் வட்ட விசிறிகள் வீசி வர, அணிந்ததை, சுசீலை இருவரும் மலர்கள் தூவி வர, சுகேசி பொற் பாதுகைகளை தாங்கி வர, துர்கை, காளி இருவரும் வாசனைப் பொருட்களைக் கொண்டு வர, சுனவளை என்பவள் காளாஞ்சி ஏந்தி வர, பத்ரகாளி பத்ரதீபம் தாங்கி வர, யோகர்கள் பந்தங்கள் பிடித்து வர, உருத்திர கன்னியர் கவிகை தாங்கி வர, தேவமாதர்கள் சிம்மக் கொடிகளை ஏந்தி வர, மேகங்கள் வேணுவனம் வரை பந்தலிட, அம்மை கோலாகலமாக வருகிறாள். அம்மையின் வருகையக் கண்ட அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.
வேணுவனத்திற்குச் செல்லும் உமையவள் இமயத்தின் வழியாகத் தான் செல்கிறாள் என்பதை அறிந்து இமவானும் அவன் மனைவியும் தங்கள் மகளைக் காண வேண்டும் என்று விரும்பி வந்தனர். உலக உயிர்கள் எல்லாம் வணங்கும் தாயான உமையவள் தனக்குத் தாயாகவும் தந்தையாகவும் விளங்கும் மேனையையும், இமவானையும் வணங்கினாள். அப்போது மேனை, அம்மா.! பார்வதி இன்று ஒருநாள் எங்கள் இல்லத்தில் தங்கி எங்களைப் பெருமைப்படுத்திச் செல்ல வேண்டும் என்று வேண்டினாள். இமயத்தாயின் விருப்பத்திற்குத் தடை சொல்ல விரும்பாத உலகத்தாய், மானசீகமாகச் சிவபெருமானிடம் உத்தரவு பெற்று, தாய் தந்தையருடன் இமயம் வந்தாள். இமயத்திற்கு வந்த உமையவள், முன்பு தான் ஆடிப்பாடி ஓடி விளையாடிய இடங்களையும், அமர்ந்து தவம் செய்த இடத்தையும், சிவபெருமான் தனக்குத் தரிசனம் தந்த இடத்தையும், பின் திருமணம் நடந்த இடத்தையும் கண்டு களித்தாள். அவற்றை பார்த்து பார்த்து பரவசம் அடைந்தாள். தாய் தந்தையரின் விருப்பப்படி அன்றைய பொழுது அங்கே தங்கிவிட்டு, மறுநாள் தென்திசை நோக்கிப் பயணமானான். காஞ்சிபுரத்தைக் கண்ட அன்னை அய்யன் ஏகாம்பரநாதரை வணங்கி வழிபாடு செய்து கொண்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சிந்துபூந்துறையில் வந்து தங்கினாள். அன்னை வந்து விட்டதை அறிந்த அகத்தியர், வசிஷ்டர், பராசரர், உரோமசர் ஆகிய முனிவர்கள் அனைவரும் வந்து அன்னையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். அப்போது அம்மை அகத்திய முனிவரைப் பார்த்து, அகத்தியா.! உனக்கு வேண்டும் வரம் எதுவாயினும் கேள் என்கிறாள். அதற்கு அகத்தியர் தாயே.! இன்று தைப்பூசத் திருநாள்.! இந்த திருநாளில் நீ இங்கு வந்தமையால், இந்நாளில் இந்தத் தீர்த்தத்தில் நீராடி உன்னை வணங்குவோர்க்கு எல்லாம், ஞானமும் புகழும் நல்க வேண்டும். இன்று முதல் இந்த தீர்த்தம் "ஞான தீர்த்தம்" என்றும் "சிவ தீர்த்தம்" என்றும் "சிவஞான தீர்த்தம்" என்றும் பெயர் பெற வேண்டும் தாயே.! என்று வேண்டினார் அகத்திய முனிவர். அந்த தீர்த்தம் சிந்துபூந்துறை தீர்த்தத்துடன் கம்பை ஆறு சென்று கூடும் இடத்தில் உள்ளது. அந்த தீர்த்தத்தில் அம்மையும் நீராடியதால், "பாத தீர்த்தம்" என்று பெயர் பெற்று விளங்குகிறது. சிந்துபூந்துறைத் தீர்த்தம், ஞான தீர்த்தம், சிவ தீர்த்தம், சிவஞான தீர்த்தம், பாத தீர்த்தம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது.
தேவி சிவஞான தீர்த்தத்தில் நீராடி அமர்ந்திருந்த போது அகத்திய முனிவரின் துணைவியார், மற்ற முனிவர்களின் துணைவியர் சூழ வந்து, அம்மையின் பாதங்களை வணங்கி, தாயே.! உலக உயிர்களுக்கெல்லாம் உயிர்ச் சோறு வழங்கும் உனக்கு அடியாள் தயிர்ச் சோறு கொண்டு வந்திருக்கிறேன்.! அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினார். அம்மா.! உன் அன்பையும், படையலையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் உண்ண இயலாது.! இன்று தைப்பூசத் திருநாள், இன்றிலிருந்து சிவபூஜை செய்வதற்காக விரதம் மேற்கொண்டிருக்கிறேன். ஆகையால் இந்த உணவை இங்குள்ள எல்லோருக்கும் கொடு அவர்கள் உண்டால் நான் உண்டதாகும் என்று கூறுகிறாள். மற்றத் தலங்களில் ஆயிரம் அந்தணர்களுக்கு வழங்கும் அன்னதானத்தால் ஏற்படும் பலன், இந்த தலத்தில் ஒரு அந்தணருக்கு வழங்குவதால் ஏற்படும் என்று அம்மை கூறுகிறாள். லோபாமுத்திரை அம்மை தான் கொண்டு வந்திருந்த தயிர்ச் சோற்றை அங்கிருந்த அனைவருக்கும் வழங்கினார்.! என்று சூத மாமுனிவர் அம்மை அறம் வளர்த்த பெருமை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
52. அறம் வளர்த்த சருக்கம்:
அன்னை வடிவுடை நாயகி, மூலமகாலிங்கரையும், அனவரத தான நாதரையும் வணங்கி வழிபாடு செய்து, அறச்சாலை அமைப்பதற்காக விஸ்வகர்மாவை அழைக்கிறாள். விஸ்வகர்மா வந்து வணங்கி நின்றான். அன்னை ஆனந்த பைரவி விஸ்வகர்மாவிடம், இந்நகரை அலங்காரம் செய்து, அறச்சாலை ஒன்று அமை என்று ஆணையிடுகிறாள். அன்னையின் ஆணைப்படி அமரலோகத் தச்சனான விஸ்வகர்மா நகரம் முழுவதும் அலங்காரம் செய்து ஆகம விதிப்படி கோவில் அமைத்து அறச்சாலையும் உருவாக்கினான். தனக்கு இட்ட பணியை நிறைவேற்றி விட்டு, அம்மையைக் கண்டு தாயே.! எனக்கு இட்ட பணியை நிறைவேற்றிவிட்டேன் வந்து பாருங்கள் என்றான் விஸ்வகர்மா. அன்னை சென்று பார்த்தாள்.! அருமையாகச் செய்திருந்தான் விஸ்வகர்மா.! அன்னை மனமகிழ்ந்து அவனைப் பாராட்டி , "உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள் என்றாள். தாயே.! கயிலையில் வாழ்வோர் அடையும் நற்கதியை இங்கு வாழ்வோரும் அடைய வேண்டும். இன்று முதல் இத்தலம் சிறந்த சித்தித் தலமாக விளங்க வேண்டும் என்று கேட்டான் தன்னலம் இல்லாத தச்சனான விஸ்வகர்மா. அன்னையும் அவன் வேண்டியபடியே வரம் தந்தாள். விஸ்வகர்மா மகிழ்ச்சியுடன் சென்றான்.
அம்மை திருமஞ்சனம் ஆடி, மணமிக்க பொருட்கள் கூட்டி, பூ மாலைகளும், சுவர்ண நகைகளும் பூட்டி, இறைவனுக்குத் தூப தீபம் காட்டி, அமுது படைத்து ஆகம விதிப்படி பூஜை புரிந்து, இறைவா.! தாங்கள் அன்று கயிலையில் வைத்துச் சொல்லிய வண்ணம், முப்பத்தியிரண்டு அறங்களும் செய்ய முயல்கின்றேன்.! தாங்கள் அருள் புரிய வேண்டும் என்று வேண்டினாள். உடனே இறைவன் திருவுளம் மகிழ்ந்து, இரு நாழி நெல் கொடுத்து அறங்களை தொடங்க சொல்கிறார்.
(இரு நாழி என்பது இரண்டு படி அன்று, "இரு" என்ற சொல் இங்கு இரண்டு என்ற எண்ணைக் குறிக்கவில்லை.! "இரு" என்பது இருமை, அதாவது இம்மை, மறுமை என்பதைக் குறிக்கிறது. ஆக இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படும் அறங்கள் செய்ய இறைவன் நாழி நெல் கொடுத்தார் என்ற பொருள்படும், இன்னும் ஒன்று "இரு" என்ற சொல்லுக்கு "பெரிய" என்றவொரு பொருளும் உண்டு.! ஆக பெரிய நாழி அதாவது பெரிய அளவு கலம்.! பெரிய அளவுக் கலத்தில் கொடுத்தார் என்ற பொருள் கொண்டாலும் தவறில்லை)
இறைவனின் திருவுளப்படி அம்மை அறச்சாலையில் அமர்ந்து அறங்கள் செய்யத் தொடங்கினாள். அம்மை செய்த முப்பத்திரண்டு அறங்கள்.,
1. அடியவர்கள் தங்குவதற்கு மடம் அமைத்தல்.
2. மகப்பேற்றுக்கு உதவி செய்தல்.
3. தண்ணீர் பந்தல் அமைத்தல்.
4.ஏழை மற்றும் எளிய மக்கள் உண்டு உறையும் விடுதி அமைத்துக் கொடுத்தல்.
5. பிள்ளைகளை தத்து எடுத்து வளர்த்தல்.
6. குழந்தைக்கும், முதியவர்களுக்கும் தின்பண்டங்கள் கொடுத்தல்.
7. ஓதுவோர்க்கு உணவளித்தல்.
8. உணவு சமைத்து வழங்குதல்.
9. கல்யாண மண்டபம் அமைத்தல்.
10. கண்ணுக்கு மருந்து தருதல்.
11. எண்வகை மங்கள பொருட்களில் ஒன்றான கண்ணாடி வழங்குதல்.
12. தலைக்கு தேய்க்க எண்ணெய் வழங்குதல்.
13. ஆதரவற்றவர்களுக்கு அன்னம் வழங்குதல்.
14. தாயில்லாத பிள்ளைகளுக்கு பால் வழங்குதல்.
15. சிறைச் சோறு வழங்குதல்.
16. காதோலை தருதல்.
17. ஆறு வகை சமயத்தினருக்கும் அன்னம் அளித்தல்.
18. மந்தைக் கல் நாட்டல்.
19. சோலை அமைத்தல்.
20. திருக்குளம் ஏற்படுத்துதல்.
21. பிறர் துன்பம் துடைத்தல்.
22. ஏழைகளுக்கு ஆடை வழங்குதல்.
23. விலங்குகளுக்கு தீனி போடுதல்.
24. அனாதை பிணங்களை அடக்கம் செய்தல்.
25. பிச்சை இடுதல்.
26. நாவிதரை ஏற்பாடு செய்தல்.
27. வண்ணாரை ஏற்பாடு செய்தல்.
28. நோய்க்கு மருந்து தருதல்.
29. மருத்துவரை ஏற்பாடு செய்தல்.
30. துன்பப்படும் காளையை பொருள் கொடுத்து விடுவித்தல்.
31. விலை கொடுத்து உயிர் காத்தல்.
32. பசுவிற்கு தீனி கொடுத்தல்.
இவ்வாறு அம்மை முப்பத்தியிரண்டு வகையான அறங்களையும் செய்து அறம் வளர்த்த நாயகி ஆனாள். அம்மை அறம் வளர்த்த நாயகி தம்முடைய தோழியர் புடை சூழப் பாதலங்கம்பை நதிக்கு வந்தாள். அங்கு வந்து, கம்பா நதியில் நீராடித் தம் தோழியரைக் குகை வாயிலில் காவலாக இருக்கச் சொல்லிவிட்டு, அம்மை குகையினில் சென்று தியானத்தில் அமர்ந்து விட்டாள். இவை கேட்டு மகிழ்ச்சியடைந்த நைமிசாரணிய முனிவர்கள்," முனிவர் பெருமானே அம்மை அறம் வளர்த்துத் தியானத்தில் அமர்ந்து இருப்பதைக் கேட்டோம். இனி அம்மை மாகாளி வடிவம் கொண்டு மகிடனை வதைத்ததைக் கேட்க விரும்புகிறோம் என்று சொல்லச் சரி என்று கூறிச் சூதமா முனிவர் சொல்லத் தொடங்கினார்.