திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-11ல்.,
32. அக்கினீஸ்வர தீர்த்தச் சருக்கம்.
33. துர்க்கா தீர்த்தச் சருக்கம்.
34. சிந்துபூந்துறைத் தீர்த்தச் சருக்கம்.
35. ஏழு இருடிகள் தீர்த்தச் சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
32. அக்கினீஸ்வர தீர்த்தச் சருக்கம்:
சிவபெருமானை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தக்கன் ஒரு வேள்வி செய்தான். அந்த வேள்விக்கு அக்கினி தேவன் உள்ளிட்ட பல தேவர்களும் சென்றிருந்தனர். அப்பொழுது தக்கனின் வேள்வியையும் அவனையும் அழிப்பதற்காகவே தோன்றிய வீரபுத்திர தேவன் சென்று, வேள்வியில் கலந்து கொண்ட தேவர்களை அடித்து நொறுக்கினான். அக்கினி தேவனின் நாக்கை அறுத்து எறிந்தான். அக்கினி வீரப்புத்திரனைக் கெஞ்சிக் கேட்டு தனது நாக்கை பெறுகிறான். பின்னர் தக்கனின் வேள்வியில் கலந்து கொண்ட பாவத்தைப் போக்குவதற்காக தாமிரபரணிக்கு வந்து, சிந்துபூந்துறைக்குக் கிழக்கே உள்ள ஒரு சோலையில் அமர்ந்து, சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தான். ஒருநாள் பரம்பொருளான பரமசிவன் அக்கினிக்கு காட்சித் தந்தார். தவம் செய்த நோக்கம் என்ன ? என்று கேட்டார்.
இறைவா.! தங்களை மதிக்காமல் அந்தச் சிறுவிதி தக்கன் செய்த வேள்வியில் கலந்து கொண்டேன். அந்தப் பாவத்தைப் போக்கியருள வேண்டும். அடியேன் இந்தத் தீர்த்தத்தில் நீராடித் தவம் செய்து அருள் பெற்றதால் இந்த ஸ்தலம் "அக்கினீஸ்வரம்" என்றும், இந்த தீர்த்தம் அக்கினி தீர்த்தம் என்றும் விளங்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு இறைவனும் "அவ்வாறே தந்தோம்" என்று அருளிச் சென்றார், அதன் பின்னர் அக்கினி பகவானும் மகிழ்ச்சியுடன் விண்ணுலகம் சென்றுவிட்டான் என சூதமா முனிவர் கூறிமுடித்து தொடர்ந்து துர்க்கா தீர்த்தம் பற்றிச் சொன்னார்.
33. துர்க்கா தீர்த்தச் சருக்கம்:
கேளுங்கள் நைமிசாரணிய முனிவர்களே.! இந்த துர்க்கா தீர்த்தம் என்பது கொற்றவையான துர்க்கையின் திருப்பெயரால் அமைந்த தீர்த்தம், இதுவும் ஒரு புண்ணியமான தீர்த்தம். தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், தினம்தோறும் இங்கு வந்து இந்த தீர்த்தத்தில் நீராடி துர்க்கா தேவியை வணங்கிச் சகல நலன்களையும் பெற்றுச் செல்கிறார்கள் என்று சொல்லித் தொடர்ந்து சிந்துபூந்துறையின் சிறப்பை பற்றிச் சொல்கிறார்.
34. சிந்துபூந்துறைத் தீர்த்தச் சருக்கம்:
திருநெல்வேலி நகரின் கிழக்கே பல சிறப்புகள் கொண்ட சிந்துபூந்துறை என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. வெகுகாலத்திற்கு முன் தமிழ்முனியான அகத்தியர் இங்கே வந்து நீராடித் திருமூலலிங்கத்தை வணங்கி இறைவனின் திருமணக்கோலம் கண்டு மகிழ்ந்தார். அம்மை உமையவள் இந்த துறையில் நீராட விரும்பியதால் தேவர்களும், முனிவர்களும், சில புண்ணிய நதிகளும் இங்கே வந்து பொன் போன்ற மலர்களை சொரிந்தனர். அதனால் இந்த தீர்த்தம் சிந்துபூந்துறை என்று வழங்கப் பெற்றது. உலகில் உள்ள மூன்றரைக் கோடித் தீர்த்தங்களிலும் பலமுறை நீராடுவதால் கிடைக்கும் பலன், இந்தச் சிந்துபூந்துறைத் தீர்த்தத்தில் ஒரு முறை நீராடினாலே கிடைக்கும். இந்தச் சிந்துபூந்துறைத் தீர்த்தத்தின் கரையில் பிறந்தாலும் புண்ணியம், இறந்தாலும் புண்ணியம், இறந்தவருக்குக் கருமம் செய்தவரும், பிறக்க நினைத்தவரும் ஆகிய அனைவரும் சிவ வடிவம் பெறுவர். ஆதிரை, சங்கராந்தி, அமாவாசை, சோமவாரம், கிரகண காலம், பிரதோஷம் ஆகிய முக்கிய நாட்களில் நீராடுவோர் பேரின்பப் பெரு வாழ்வு பெறுவர் என்று சொன்ன சூதமா முனிவர், கேளுங்கள் நைமிசாரணிய முனிவர்களே.! இந்த சிந்துபூந்துறைத் தீர்த்தத்தின் பெருமை பற்றி இன்னும் ஒன்று சொல்லுகிறேன் என்று தொடர்கிறார்.
களக்காடு நகரத்தை சேர்ந்த ஒரு வேதியன் ஒருவன் இறந்து போன தனது தந்தையின் அங்கங்களைக் காசியில் கரைக்க வேண்டும் என்று விரும்பி, அந்த அங்கங்களை ஒரு கலசத்தில் இட்டு, துணியால் மூட்டைக் கட்டி ஒரு கூலியாளிடம் கொடுத்து அவனையும் அழைத்துக் கொண்டு காசிக்கு புறப்பட்டான். வரும் வழியில் சிந்துபூந்துறையில் நீராட விரும்பி அங்கே சென்று, கலசத்துடன் கூலியாளைக் கரையில் இருக்கச் சொல்லி விட்டு, வேதியன் இறங்கி நீராடினான். கடுமையான பசியுடன் இருந்த அந்த கூலியாள், கலசத்தில் ஏதாவது பண்டம் இருக்கிறதா பார்ப்போம் என்று எண்ணிக் கலசத்தைத் திறந்து பார்த்தான். அதிலே பசி தீர்க்கும் பண்டம் எதுவும் இல்லை. அப்பொழுது தான் பறித்தது போன்ற புத்தம் புது மலர்கள் நிறைந்து இருந்தன. அதனை கண்ட அவன் ஏமாற்றத்தோடு கலசத்தை முன் போலவே மூடி வைத்து விட்டான். நீராடிவிட்டு வந்த வேதியன், கூலியாளைக் கலசத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லி அவனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுக் காசி போய் சேர்ந்தான். அங்கு வைத்துக் கூலியாள், வேதியன் அறியாத வண்ணம் கலசத்தைத் திறந்து பார்த்தான். அதிர்ச்சியடைந்தான். கலசத்தில் அத்தனையும் எலும்புகளாக இருந்தன. இது பற்றி வேதியரிடம் கேட்டான்.
அய்யா.! வேதியரே இது என்னய்யா ஆச்சரியமாக இருக்கிறது? முன்பு ஒரு தீர்த்த துறையில் வைத்து இந்தக் கலசத்தைத் திறந்து பார்த்தேன். உள்ளே புத்தம் புதிய பூக்களாக இருந்தன. இப்போது திறந்து பார்த்தால் எலும்புகளாக இருக்கின்றன. என்னய்யா இது மாயம்? உள்ளே என்ன தான் இருக்கின்றது? என்று கேட்டான். இதில் இருப்பவை அனைத்தும் இறந்து போன எனது தந்தையின் அங்கங்கள், கங்கையில் கரைப்பதற்காக கொண்டு வந்தேன். அங்கங்கள் என்று சொன்னால் நீ வருவாயோ மாட்டாயோ என்று நினைத்துத் தான் உன்னிடம் சொல்லாமல் விட்டு விட்டேன், என்னை மன்னித்து விடு என்று சொல்லி பின்னர் அவனிடம், முன்பு ஒரு தீர்த்த கட்டத்தில் வைத்து திறந்து பார்த்த போது பூக்களாக இருந்தன என்று சொன்னாயே அது எந்த இடம் என்று கேட்கிறான் வேதியன். அதற்கு அது சிந்துபூந்துறை தீர்த்தம் என்று கூலியாள் கூறுகிறான். இதைக்கேட்ட வேதியன் இது அங்கேயே தெரிந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டாமே.! என்று நினைத்து கொண்டே, கலசத்தோடும் கூலியாளோடும் சிந்துபூந்துறைக்கு மீண்டும் வந்து சேர்ந்தான்.
இங்கே வந்ததும் மீண்டும் கலசத்தை திறந்து பார்த்தான். என்னே ஆச்சரியம்.! கங்கைக் கரையில் எலும்புகளாக தெரிந்தவை, பூந்துறையில் பூக்களாக தெரிந்தன. எனவே கங்கையிலும் சிறந்த துறை இந்த சிந்துபூந்துறையே என்று சொல்லி கலசத்தில் இருந்த அங்கமலர்களை ஆற்றில் விட்டான். பின் அவனும் அங்கு நீராடி தனது கடமைகளை முடித்து விட்டு களக்காடு போய்ச் சேர்ந்தான் என்று கூறிச் சூதமா முனிவர் இருடிகள் தீர்த்தம் பற்றி சொல்ல தொடங்கினார்.
35. ஏழு இருடிகள் தீர்த்தச் சருக்கம்:
அத்திரி, கௌதமர், காசிபர், ஜமதக்கினி, பரத்துவாஜர், வசிஷ்டர், ஆங்கிரஸர் ஆகிய ஏழு பெரும் முனிவர்களும், சிந்துபூந்துறைத் தீர்த்தத்தின் பெருமையை அறிந்து அங்கு வந்து நீராடி வேணுவன நாதரையும், திருமூலமகாலிங்கத்தையும் வணங்கி வழிபாடு செய்து சில காலம் அங்கேயே தங்கி இருந்தனர். அப்போது ஒரு நாள் ஓர் அதிசயம் நடக்கிறது. பஞ்சமா பாதகங்களையும் செய்யும் ஒரு பாவி நெல்லை மாநகரில் வாழ்ந்து வந்தான் அவனுடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு செல்வர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான். தமது செல்வ செழிப்பிற்கு ஏற்ப, அளவுக்கு அதிகமாக அவனுக்கு நகைகளை பூட்டி அழகு பார்த்தார். ஒருநாள் அந்தப் பாவி செல்வரின் மகன் போட்டிருந்த நகைகளுக்கு ஆசைப்பட்டு, அவனை ஏமாற்றி அழைத்துச் சென்று நகைகளை எல்லாம் கழற்றிக் கொண்டு அவனைக் கொலை செய்ய முயன்றான். அந்தப் பையன் பதறிக் கதறி அழுதான்., இதனைக் கண்ட ஏழு முனிவர்களும், இந்தக் கோரக் காட்சியைக் காண்பதே மகா பாவம் என்று எண்ணிக் கண்களை மூடிக் கொண்டனர். அந்தப்பாவி சிறுவனைக் கொன்று முனி தீர்த்தத்தில் வீசி விட்டு வீட்டிற்குச் சென்று விட்டான்.
குழந்தை வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால், செல்வர் தம் செல்வனைத் தேடினார். குழந்தையை கொன்ற அந்தப் படுபாவியும் அவருடன் சேர்ந்து ஒன்றும் நடக்காதது போல தேடினான். குழந்தையை அந்த பாவி அழைத்துக் கொண்டு போனதை கண்ட சிலர் அப்போது அங்கே வந்தனர். வந்த அவர்கள் அவனைப் பிடித்து அடித்து உதைத்து குழந்தை எங்கே சொல்.! என்ன செய்தாய் என்று கோபமாக கேட்கிறார்கள். அவன் தனக்கு எதுவும் தெரியாது, நான் குழந்தையை பார்க்கவில்லை என்று சாதித்து விட்டான். இது குழந்தையை அவன் அழைத்துக் கொண்டு போனதைக் கண்ட சிலருக்கும் குழந்தையை அவன் கொலை செய்யும் போது பார்த்துக் கொண்டிருந்த ஏழு முனிவர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் குழந்தையை அழைத்துக் கொண்டு போனதைக் கண்டவர்கள் நீ சொல்வது உண்மையாக இருந்தால் நெல்லையப்பர் முன் வந்து சத்தியம் செய்து சொல் என்று கூறுகின்றனர். அந்தப்பாவியும் உடனே சரி அப்படியே செய்கிறேன் என்று சொல்லி, நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்று பொற்றாமரைத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, நெல்லையப்பரின் முன்னே வந்து , எனக்கு அந்தக் குழந்தையை பற்றி எதுவும் தெரியாது என்று சத்தியம் செய்து விடுகிறான். இதனால் அவனை விட்டுவிடுகிறார்கள்.
ஆனால் குழந்தையைக் கொன்றதை நேரில் பார்த்த அந்த ஏழு முனிவர்களும் வேறு ஒரு முடிவை எடுக்கிறார்கள். குழந்தையை கொன்ற அந்தப்பாவி நெல்லையப்பரின் முன்னே சென்று பொய் சத்தியம் செய்திருக்கிறான் ஆனாலும் அவனை நெல்லையப்பர் ஒன்றும் செய்யவில்லை, இப்படி தகாத செயலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வரும் இவனை நெல்லையப்பரும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் இங்கு நெல்லையப்பர் இல்லை என்று நினைத்து அதற்கு மேல் அங்கு இருக்க வேண்டாம் என ஏழு முனிவர்களும் முடிவெடுத்து அந்த ஊரை விட்டு வெளியேறி விட்டனர்.முனிவர்கள் ஊரை விட்டு வெளியேறுவதை அறிந்த நெல்லையப்பர் வைரவரை அழைத்து, உண்மையை உணர இயலாமல் ஊரை விட்டுச் சென்று கொண்டிருக்கும் முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தி அழைத்து வருமாறு சொன்னார். அதனை ஏற்ற வைரவரும் முனிவர்கள் எதிரே சென்று, எதற்காக ஊரை விட்டு செல்கிறீர்கள் என முனிவர்களிடம் கேட்கிறார். அதற்கு முனிவர்கள் குழந்தையை கொன்ற கொடும் பாவி கோவிலுக்குள் சென்று, நெல்லையப்பரின் முன்னே நின்று எள்ளளவும் அச்சம் இன்றிப் பொய் சத்தியம் செய்திருக்கிறான். ஆனால் அவன் தண்டிக்கப்படவில்லை, ஆகையால் நெல்லையப்பர் இங்கே இல்லை என்று முடிவு செய்து விட்டு வெளியேறி விட்டோம் எனக் கூறுகிறார்கள். அதனைக் கேட்ட வைரவர் வாய்விட்டு சிரித்து, முனிவர்களே.! எல்லா உண்மைகளையும் உணர்ந்த நீங்கள் இறைவன் எதுவும் செய்ய இயலாமல் இருந்ததன் உண்மையை உணராமல் போய்விட்டர்களே, இறைவன் எதுவும் செய்யாமல் இருந்ததன் காரணத்தை எண்ணிப் பார்க்க வேண்டாமா, எப்படிப்பட்ட பாவத்தை செய்த பாவியாக இருந்தாலும், பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்தால் அந்த பாவம் அனைத்தும் நீங்கி விடும் என்பது உங்களுக்கு தெரியாதா என கேட்கிறார்.
அந்த பாவி சத்தியம் செய்ய நெல்லையப்பரின் முன்னே வரும் போது என்ன செய்து விட்டு வந்தான் என பார்த்தீர்கள் அல்லவா, அவன் பொற்றாமரை திருக்குளத்தில் நீராடிய அந்த கணமே அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விட்டது. பாவம் நீங்கப்பெற்ற ஒருவனை எப்படி இறைவனால் தண்டிக்க இயலும்? அதனால் தான் இறைவன் அவனை எதுவும் செய்யவில்லை என வைரவர் எடுத்துக் கூறுகிறார். இத்தகைய சக்தி வாய்ந்த தீர்த்தம் இருக்கும் இந்த கோவிலிலா இறைவன் இல்லை என கூறிக்கொண்டு நீங்கள் வெளியேறுகிறீர்கள் என்றும் வைரவர் கேட்கிறார். மேலும் இந்த இடத்தில் இறைவன் இல்லை என்று கூறினால், அவர் வேறு எங்குமே இல்லை என்று தான் அர்த்தம் எனவும் கூறுகிறார். அதனைக் கேட்ட அந்த ஏழு முனிவர்களும் நீங்கள் கூறுவதை பார்த்தால், எல்லா பாவங்களையும் போக்க வல்ல பொற்றாமரை குளத்தில் மூழ்கி எழுந்தால் அந்தப்பாவம் முற்றிலும் நீங்கி விடும் என்றல்லவா தெரிகிறது, இது தவறல்லவா என்று கேட்கின்றனர். அதற்கு வைரவரும் நீங்கள் கேட்பது சரி தான் முனிவர்களே.! ஆனால் ஒருவன் பாவம் செய்யும் எல்லா நேரமும் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழுவது சாத்தியமில்லை. எந்நேரமும் நன் நேரமாக இருக்க முடியாது, ஏதாவது ஒரு நேரத்தில் பொற்றாமரை குளத்தில் மூழ்க விட முடியாமல் அவனுடைய விதி மதியை மாற்றி விடும், அந்த நேரம் அவனுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும், ஆக எவனும் என்றைக்கும் இறைவனின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது, ஆகையால் தங்களின் தவறான முடிவை கைவிட்டு விட்டு ஊருக்கு திரும்புங்கள் என கூறிவிட்டு பைரவர் மறைந்து விடுகிறார்.
இது இறைவனின் வேலைதான் என்று உணர்ந்த முனிவர்கள் உடனே திரும்பி வந்து , நெல்லையப்பரின் திருவடியில் வீழ்ந்து வணங்கி தங்களை மன்னித்தருளும்படி மன்றாடி கேட்டுக்கொண்டனர். இறைவனும் அவர்களை மன்னித்து அருள்புரிய, அந்த முனிவர்கள் ஏழு பேரும் மீண்டும் சிந்துபூந்துறை வந்து தங்கி தங்கள் நித்திய கடமைகளை செய்து வந்தார்கள். சிறிது காலம் கழித்து அந்த பாவி, மீண்டும் ஒரு குழந்தையைக் கொன்ற போது, விதி அவன் மதியை மறைத்தது. மமதையில் அலைந்தவன், அக்கணமே மாண்டு போனான். இதுதான் தெய்வ நீதி என்று சூதமா முனிவர் நைமிசாரணிய முனிவர்களிடம் கூறிமுடித்து, பின் குட்டத்துறை தீர்த்தத்தின் பெருமையை பற்றி கூறுகிறார்.
தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 12