திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-1ல்.,
ஆகியவற்றை பற்றி காணலாம்.
1. நைமிசாரணியச் சருக்கம்:
உலகங்கள் ஏழினையும், பல லட்சம் வகையான உயிர்களையும் ஆதியில் படைத்த பரம்பொருளால் தந்தருளப்பட்ட வேதங்களை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருப்பவரும், திருமாலின் உந்திக் கமலத்தில் உதித்தவரும், கல்விக்கதிபதியான கலைவாணியின் மணாளருமாகிய நான்முகன் சத்தியலோகத்தில் வீற்றிருக்கிறார். அப்போது முற்றும் உணர்ந்த முனிவர்கள் அனைவரும் வந்து பிரம்ம தேவரின் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்கள். வணங்கிய முனிவர்களை வாழ்த்திய பிரம்மதேவர், முனிவர்களை நோக்கி நீங்கள் எல்லோரும் ஒன்று கூடி என்னைக் காண வந்த காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு முனிவர்கள், பிரம்மதேவரே நாங்கள் இந்நாள் வரை பூலோகம் முழுவதும் சுற்றி வந்து, பல தவங்களையும், அறிவுதானம், ஞானதானம், போன்ற பலவகையான தானங்களையும், பல வேள்விகளையும் செய்திருக்கிறோம். இருந்தாலும் நாங்கள் நிலையாக இருந்து தவம் செய்வதற்கு ஏற்ற ஒரு இடம் கிடைக்கவில்லை. எனவே தாங்கள் தான் ஒரு பொருத்தமான இடத்தைப் பரிந்துரைக்க வேண்டும் என வேண்டி நின்றார்கள்.
அதனைக் கேட்ட பிரம்மதேவர், ஒரு தர்ப்பையை எடுத்து வளைத்துச் சக்கரம் போல் செய்து தரையில் உருட்டி விடுகிறார். பின்னர் தன்னை வணங்கி நின்ற முனிவர்களை நோக்கி, நீங்கள் அனைவரும் இந்தச் சக்கரத்தின் பின்னால் செல்லுங்கள்., அது எந்த இடத்தில் நிற்கிறதோ அந்த இடமே நீங்கள் தவம் செய்வதற்கு ஏற்ற இடம் என்று கூறுகிறார். அதனைக் கேட்ட முனிவர்களும் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கி விடைபெற்று அந்தத் தர்ப்பை சக்கரத்தின் பின்னால் செல்கிறார்கள்.
அந்தத் தர்ப்பை சக்கரம் தருமச் சக்கரம் போல உருண்டோடி வந்து பூலோகத்தில் உள்ள ஒரு வனத்தில் வந்து நின்றது. அந்த வனத்தின் வனப்பை கண்ட முனிவர்கள் அனைவரும் உள்ளம் மகிழ்ந்து பிரம்மதேவருக்கு மனதால் நன்றி தெரிவிக்கிறார்கள். தர்ப்பை சக்கரம் வந்து அடையாளம் காட்டியதால் அந்த வனம் தர்ப்பை வனம் என்றும் நைமிசாரணியம் என்றும் பெயர் பெற்றது. அந்த வனத்தில் ஏற்கனவே பல முனிவர்கள் தவம் இயற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் பஞ்சமா பாதகங்களை மனதால் கூட நினைக்காதவர்கள். பக்குவப்பட்ட தெளிந்த மனத்தை உடையவர்கள். அந்த வனத்தில் பல வேள்விச் சாலைகளும், வேத பாட சாலைகளும், யோக சாலைகளும் நிரம்பி இருந்தன. வேதியர்களும், முனிவர்களும், ஞானிகளும், யோகிகளும் நிறைந்து இருந்தனர். எனவே அங்கு எப்போதும் வேத ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. வேள்வி புகை சூழ்ந்து கொண்டே இருந்தது. தூய தவசீலர்கள் சூழ்ந்திருப்பதாலும், அவர்கள் தங்கள் மேனியில் அணிந்திருக்கின்ற வெண்ணீற்றின் ஒளியாலும், மிக உயரமான மரங்கள் அடர்ந்திருக்கின்ற சோலைகளாலும், வேத, ஆகம ஒலிகளாலும் அந்த நைமிசாரணியம், கயிலை மலையைப் போன்றே காட்சியளித்தது. ஆதிசேஷனால் சுமக்கப்படுவதாலும், பச்சை நிறமாய் இருப்பதாலும், உலகத்து உயிர்களை பேணுவதாலும், பெருந்தவத்தோர் சார்ந்திருப்பதாலும், பூமணம் பொருந்தி இருப்பதாலும், அந்தத் தருப்பை வனம் தாமோதரனை போன்றும் காட்சியளித்தது. இத்தகைய பெருமைக்குரிய அந்தத் தர்ப்பை வனத்துக்குப் புராணங்களை எல்லாம் விளக்கம் சொல்லுகின்ற சூதமா முனிவர், பல முனிவர்கள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வருகிறார். அவரை அங்கு இருந்த முனிவர்கள் அனைவரும் வணங்கி வரவேற்றார்கள். அவர்கள் அனைவரும் முனிவருக்குச் செய்ய வேண்டிய பதினாறு வகை உபச்சாரங்களையும் செய்தார்கள். இதனால் உள்ளம் மகிழ்ந்த சூதமா முனிவர் அவர்களை உளமார வாழ்த்தினார்.
அப்போது தர்ப்பை வனத்தில் இருந்த முனிவர்கள் அனைவரும் சூதமா முனிவரை நோக்கி, பெரிய தவங்களை எல்லாம் செய்து, ஞானமயமான வேதங்களை ஓதி உணர்ந்த வேதக்கடலே, நாங்கள் செய்த புண்ணியத்தின் பயனாக இன்று தங்களை தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். இதற்கு முன்னர் தங்களிடம் பல புராணங்களை கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறோம். அது போன்று இன்றும் ஒரு புராணத்தைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம். தாங்கள் தயை கூர்ந்து அந்தப் புராணத்தை எங்களுக்குக் கூறியருள வேண்டும் என்று நைமிசாரணிய முனிவர்கள் அனைவரும் வேண்டி நிற்கிறார்கள். அதனை கேட்ட சூதமா முனிவர் தாங்கள் அனைவரும் கேட்டறிய விரும்பும் புராணம் எது என்று கூறினால் அதனை பற்றிச் சொல்கிறேன் என்று கூறுகிறார். அதனை கேட்டு மனம் மகிழ்ந்த நைமிசாரணிய முனிவர்கள், சூதமா முனிவரைப் பணிவாக வணங்கி, முனிவர் பெருமானே, ருத்திரர்களின் புரங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்தது போன்ற தன்மை கொண்டதும், வேணுவனம் என்ற பெயர் கொண்டதும், இறைவன் ஆடல் புரியும் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபை அமைந்திருப்பதும், நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர் உறையும் திருநெல்வேலி தல புராணம் பற்றிச் சொல்லியருள வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அதனைக் கேட்ட சூதமா முனிவர், தவசீலர்களே திருநெல்வேலியின் பெருமையைச் சொல்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. நெற்றிக்கண் படைத்த நீலகண்டரால் தான் முடியும். இருப்பினும் வேதங்களை வகுத்த வேத வியாச முனிவர் தம்முடைய மகனான சுகப்பிரம்ம முனிவருக்குச் சொன்ன திருநெல்வேலி தல புராணத்தை, சுகப்பிரம்ம முனிவர் மூலம் கேட்டறிந்த நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று தனது மனம், மொழி, மெய்களால் இறைவனை வணங்கித் திருநெல்வேலித் தல புராணத்தைச் சொல்லத் தொடங்கினார்.
2. நாட்டுச் சருக்கம்:
இந்த உலகில் உள்ள நாடுகளில் எல்லாம் உயர்ந்த நாடு, கார் வளமும், கனி வளமும், நீர் வளமும், நில வளமும் நிறைந்த நாடு. அங்கே ஓடுகின்ற கால்வாய்களில் மீன்கள் துள்ளி விளையாடும். சோலைகளில் மேகங்கள் தவழ்ந்து செல்லும். குளங்களில் சங்குகள் பாயும். தாமரை மலர்களில் வழியும் தேன் தண்ணீருடன் கலந்து வயல்களில் பாயும். வற்றாத ஜீவ நதியான வண்டமிழ் பொருநை, எந்நாளும் பொங்கி பெரு வெள்ளமாய்ப் பாய்ந்து பூமியை செழிக்கச் செய்யும். பொதியை மலையிலிருந்து புறப்பட்டு வரும் போது, தனது அலைக்கரத்தால் அகிலையும் , சந்தனத்தையும், கொன்றை, பாதிரி, கூவிளம் ஆகிய மலர்களையும் அள்ளிக்கொண்டு வருகிறது. இத்தகைய பொருநையால் நால்வகை நிலத்து மாந்தரும், நலமும் வளமும் பெற்று வாழ்ந்து வருகின்றனர். செந்தேன், கருத்தினை ஆகியவற்றைக் குறிஞ்சி நிலம் கொடுத்தது. நெல், கரும்பு ஆகியவற்றை மருத நிலம் கொடுத்தது, பால், வெண்ணெய், நெய் ஆகியவற்றை முல்லை நிலம் கொடுத்தது, முத்து, பவளம் ஆகியவற்றை நெய்தல் நிலம் கொடுத்தது.
ஐவகை நிலங்களில் ஒன்றான குறிஞ்சி நிலத்து மக்கள் தேனும் - தினையும், கொடுத்து மருத நிலத்து மக்களிடம் நெல், கரும்பு பெற்றுக்கொள்வர். நெய்தல் நிலத்து மக்கள் முத்து, பவளம் கொடுத்து முல்லை நிலத்து மக்களிடம் பால், நெய் பெற்றுக்கொள்வர். இவ்வாறு ஒவ்வொரு நிலத்து மக்களும் தங்கள் நிலத்துப் பண்டங்களைக் கொடுத்துத் தமக்கு தேவையான பண்டங்களை பெற்றுக் கொள்வர். இது பாண்டிய நாட்டுக்கே உள்ள பெருமை, என்று நாட்டு பெருமை சொன்ன சூதமா முனிவர் அடுத்து நகரப் பெருமை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
3. நகரச் சருக்கம்:
ஈரேழு உலகங்களையும் ஈன்றெடுத்த அன்னை காந்திமதி முப்பத்தியிரண்டு அறங்களையும் முழுமையாக வளர்த்த நகரம். பிரளய காலத்திலும் பின்னமாகாத நகரம். திருமாலும், திசைமுகனும் வந்து சிவபெருமானை வழிபட்ட நகரம். இந்திரனும், இந்திராணியும், அரம்பையரும் வந்து வணங்கிய நகரம். தேவர்களும், முனிவர்களும், எண் திசை காவலர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும் தினந்தோறும் வந்து வணங்கிய நகரம். சிவபெருமான் அனவரத தான நாயகராக அமர்ந்து ஆட்சி செய்யும் நகரம். அது தான் திசை அனைத்தும் புகழ்கொண்ட திருநெல்வேலி நகரம்.
இந்தத் திருநெல்வேலி நகரத்துக்குக் காவல் அரணாக வானைத் தொடும் அளவுக்குக் கோட்டைச் சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கோட்டைச் சுவரில் பலவகையான பொறிகள் (யந்திர பதுமைகள்) பொருத்தப்பட்டிருக்கின்றன. போர்க் காலங்களில் அந்தப் பதுமைகளை இயங்க வைத்தால் ஒரு பதுமை வேலை எடுத்து வீசும். ஒரு பதுமை அன்பு மழை பொழியும். ஒரு பதுமை கல் மழை பொழியும். ஒரு பதுமை முரசு கொட்டும். ஒரு பதுமை சங்கம் முழங்கும். இவ்வாறு பல பதுமைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அந்தப் பதுமைகள் பொருத்தப்பட்ட கோட்டை சுவரை சுற்றி நீர் அகழிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நீர் அகழிகளில் எண்ணற்ற முதலைகள் விடப்பட்டிருக்கின்றன. இதனால் எதிரிகள் பயம் இல்லாத நகரமாக விளங்கியது.
அந்த நகரில் மண்டபங்கள் கோடி, மாளிகைகள் கோடி, மேகங்கள் தொட்டுச் செல்லும் மாடங்கள் கோடி, மேடைகள் கோடி, மேடைகள் தோறும் திகழும் பதாகைகள் கோடி, கோபுரங்கள் கோடி, கொடிகள் கோடி, வேதம் ஓதுபவர் வீதிகள் கோடி, வேள்வி செய்வோர் வீதிகள் கோடி, அறச்சாலைகள் கோடி, ஆபரண சாலைகள் கோடி, கல்விச் சாலைகள் கோடி, ஆயுத சாலைகள் கோடி, சத்திரங்கள் கோடி, சாவடிகள் கோடி, ஆணை கட்டும் கூடங்கள் கோடி, குதிரை கட்டும் லாயங்கள் கோடி என்று எல்லாமே கோடி கோடியாக அமைந்திருந்தன.
விண்ணும், மண்ணும் போற்றும் விந்தைமிகு நகரமாகவும், அகிலம் போற்றும் அழகு மிகு நகரமாகவும், ஈரேழு பதினான்கு உலகமும் போற்றும் எழில்மிகு நகரமாகவும் திகழ்ந்தது. தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், யோகியரும், தானவரும், விஞ்ஞையரும் அங்கே வந்து குழுமுவர். வானுயர்ந்த மாளிகைகளில், வனப்புமிக்க வனிதையர் நடனம் ஆடிக்கொண்டிருப்பர். தேவர்களும், தேவலோக நடன பெண்களும் அந்தக் காட்சியைக் கண்டு திகைத்து நிற்பர். அத்தகைய அருமையான நகரம் இது. பிரளய காலத்திலும் அழியாமல் இருப்பதால் "பிரளய சித்து" என்ற ஒரு பெயரும் உண்டு. இந்திரனின் பட்டத்து யானை ஐராவதம் வந்து தவம் செய்ததால் இபபுரி என்ற பெயரும் உண்டு. தரும தேவதை காளையாக வந்து பூஜை செய்ததால் தரும ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. கங்கையும் வேறு பல நதிகளும் இங்கு வந்து வரம் பெற்றுச் செல்வதால் சர்வதீர்த்தபுரம் என்ற பெயரும் உண்டு. தேவர்கள் வந்து தருக்களாக முளைத்திருப்பதால் தேவதாரு வானம் என்ற பெயரும் உண்டு, கன்னியான பிட்டாபுரத்தி அம்மை காவல் செய்து வருவதால் கன்னி காப்பு என்ற ஒரு பெயரும் உள்ளது.
சும்ப, நிசும்பர்களையும், சண்டனையும், முண்டனையும் அழித்து வடக்கே கோவில் கொண்டிருக்கும் தவம் செய்வோர் அனைவருக்கும் சகல சித்திகளும் கிடைப்பதால் சகல சித்தி என்ற பெயரும் உண்டு. இந்த நகரத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் இந்தத் தல நாயகனின் பெயரைச் சொன்னவுடன் நீங்கி விடும். ஆனால் இங்கே செய்யும் தர்மம் கோடான கோடியாகப் பெருகும். பிரம்மன், திருமால் ஆகியோரின் ஆயுள் முடியும் போது கூட இந்த நகரம் அழியாது. ஆகையால் இது பிரம்மனால் படைக்கப்பட்டதல்ல என்றும் பரம்பொருளால் படைக்கப்பட்டது என்பதையும் உணரலாம். இங்கே கேட்கும் ஒலியெல்லாம் தமிழ் ஒலி, கிடைக்கும் கல் எல்லாம் சிவலிங்கம். மரங்கள் எல்லாம் கற்பக மரங்கள். மனிதர்கள் எல்லோரும் தேவர்கள், வேள்வி செய்தல், பூஜை செய்தல், தியானம் செய்தல், ஆராய்ச்சி செய்தல் இவையே அவர்களுடைய தொழில்கள் என்று கூறி சூதமா முனிவர் வேணுவனத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். கேளுங்கள் நைமிசாரணிய முனிவர்களே, இதுகாறும் எனக்குத் தெரிந்தவரைத் திருநெல்வேலி நகரத்துச் சிறப்பைச் சொன்னேன். இனி இந்த வேணுவனத்தை பற்றிச் சொல்கிறேன் என்று கூறி சொல்லத் தொடங்குகிறார்.
மேலும் படிக்க: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 2