திருக்குறுங்குடி அழகியநம்பி பங்குனி திருவிழா

வைணவ திவ்ய தேச ஸ்தலங்கள் நூற்றியெட்டினுள் ஒன்றாகத் திகழ்வது திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோவில் ஆகும். இங்குப் பஞ்சகேத விமானத்தின் கீழ் மூலவர் ஸ்ரீ நம்பிராயர் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். நம்பியாற்றின் கரையில் அமையப்பெற்றிருக்கும் இந்தத் திருக்கோவிலில் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை மேல் நம்பி, திருப்பாற்கடல் நம்பியென ஐந்து நிலைகளில் பெருமாள் சேவை சாதிக்கிறார். முன்னர் மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்தபோது மிகப் பெரிய வடிவத்தில் இருந்த தமது வடிவை இங்கு வந்து குறுக செய்து அமர்ந்ததால் குறுங்குடி என்று இத்திருத்தலம் பெயர் பெற்றது. இங்குப் பெருமாள் தனது பக்தன் நம்பாடுவான் என்பவனுக்காகக் கொடிமரத்தை விலகியிருக்க செய்து காட்சியளித்துள்ளார். இதனால் இன்றும் இத்தலத்தில் கொடிமரம் விலகி இருப்பதை காண முடியும். வைஷ்ணவ திருக்கோவிலான இங்கு மஹேந்திரகிரி நாதர் என்ற பெயரில் சைவ கடவுளான சிவபெருமானும் தனி சன்னிதியில் காட்சித் தருகிறார். மேலும் இங்குப் பக்கம் நின்ற பிரான் என்று போற்றப்படும் பைரவர் சந்நிதியும் அமையப்பெற்றுள்ளது. பைரவரின் மூச்சுக்காற்றில் சன்னிதி தீபம் அசையும் அதிசய நிகழ்வை இங்குத் தரிசிக்கலாம். இத்தனை சிறப்புகள் பெற்ற இந்தத் திருக்கோவிலில் பல உற்சவங்கள் நடைபெற்றாலும், பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவமும், கார்த்திகை மாதம் நடைபெறும் கைசிக ஏகாதசி விழாவும் பிரசித்தி பெற்றதாகும். தற்போது இந்தத் திருக்கோவிலில் வரும் பங்குனி மாதம் ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பங்குனி பிரம்மோற்சவம் தொடங்கி சிறப்பாக நடைபெற உள்ளது.

அக்கும் புலியின் அதளும் உடையார் அவர் ஒருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பர்ஊர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினைஏறி, தாய்வாயில்
கொக்கின் பிள்ளை வெள்இறவு உண்ணும் குறுங்குடியே.
திருக்குறுங்குடி பாசுரம்.

பங்குனி திருவிழா நிகழ்ச்சிகள்:

முதலாம் திருநாள்: பங்குனி – 16 (29/03/2021).

 • காலை: பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
 • இரவு: ஸ்ரீ அழகிய நம்பிராயர் பரங்கி நாற்காலி வாகனத்தில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.

இரண்டாம் திருநாள்: பங்குனி – 17 (30/03/2021).

 • காலை: ஸ்ரீ அழகிய நம்பிராயர் வெள்ளி தோளுக்கினியானில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.
 • இரவு: ஸ்ரீ அழகிய நம்பிராயர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.

மூன்றாம் திருநாள்: பங்குனி – 18 (31/03/2021).

 • காலை: ஸ்ரீ அழகிய நம்பிராயர் வெள்ளி தோளுக்கினியானில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.
 • இரவு: ஸ்ரீ அழகிய நம்பிராயர் அனுமார் வாகனத்தில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.

நான்காம் திருநாள்: பங்குனி – 19 (01/04/2021).

 • காலை: ஸ்ரீ அழகிய நம்பிராயர் வெள்ளி தோளுக்கினியானில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.
 • இரவு: ஸ்ரீ அழகிய நம்பிராயர் ஆதிசேஷ வாகனத்தில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.

ஐந்தாம் திருநாள்: பங்குனி – 20 (02/04/2021).

 • காலை: ஸ்ரீ அழகிய நம்பிராயர் வெள்ளி தோளுக்கினியானில் எழுந்தருளித் திருவீதியுலா வந்து திருத்தேரில் கால்நட்டுதல்.
 • இரவு: ஐந்து கருட சேவை உற்சவம்.
  ஸ்ரீ அழகிய நம்பிராயர், ஸ்ரீ திருமலைமேல் நம்பி, ஸ்ரீ திருப்பாற்கடல் நம்பி உள்ளிட்ட திருக்குறுங்குடி உறையும் ஐந்து நம்பி பெருமாள்களும் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.

ஆறாம் திருநாள்: பங்குனி – 21 (03/04/2021).

 • மாலை: ஸ்ரீ அழகிய நம்பிராயர் தண்டியல் சேவை.
 • இரவு: ஸ்ரீ அழகிய நம்பிராயர் யானை வாகனத்தில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.

ஏழாம் திருநாள்: பங்குனி – 22 (04/04/2021).

 • காலை : ஸ்ரீ அழகிய நம்பிராயர் வெள்ளி தோளுக்கினியானில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.
 • மாலை: சூர்ணோத்சவம் கண்டருளல்.
  ஸ்ரீ அழகிய நம்பிராயர் இந்திர விமானத்தில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.
 • இரவு: ஸ்ரீ அழகிய நம்பிராயர் பூம்பல்லக்கில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.

எட்டாம் திருநாள்: பங்குனி – 23 (05/04/2021).

 • காலை : ஸ்ரீ அழகிய நம்பிராயர் வெள்ளி தோளுக்கினியானில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.
 • இரவு: ஸ்ரீ அழகிய நம்பிராயர் வெட்டுங்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேடுபறி உற்சவம் கண்டருளி திருவீதியுலா வருதல்.

ஒன்பதாம் திருநாள்: பங்குனி – 24 (06/04/2021).

 • காலை : ஸ்ரீ அழகிய நம்பிராயர் வெள்ளி தோளுக்கினியானில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.
 • இரவு: ஸ்ரீ அழகிய நம்பிராயர் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளித் திருத்தேர் கடாட்சம் செய்து திருவீதியுலா வருதல்.

பத்தாம் திருநாள்: பங்குனி – 25 (07/04/2021).

 • அதிகாலை : ரத ரோஹணம்.
  ஸ்ரீ அழகிய நம்பிராயர் வெள்ளி தோளுக்கினியானில் திருத்தேருக்கு எழுந்தருளல்.
 • காலை: திருத்தேர் வடம் பிடித்தல்.
  ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருத்தேரில் ரத வீதிகளில் உலா வருதல்.

பதினோராம் திருநாள்: பங்குனி – 26 (08/04/2021).

 • காலை: ஸ்ரீ அழகிய நம்பிராயர் மாட வீதிகளில் உலா வந்து தீர்த்தவாரி கண்டருளல்.
 • மாலை: ஸ்ரீ அழகிய நம்பிராயர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளித் திருவீதியுலா வருதல்.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோவில் பங்குனி திருவிழாவில் பங்கு பெற்று ஐந்து பெருமாள்களையும் ஒரே இடத்தில் தரிசித்து பிறவிப்பயன் எய்துவோமாக…..!!

About Lakshmi Priyanka

Check Also

வரலட்சுமி நோன்பு

ஆடி மாதம் பிறந்துவிட்டாலே பல்வேறு விசேஷங்கள் மற்றும் திருவிழாக்கள் களைகட்டத் துவங்கி விடும். ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு, ஆடி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!