Thenkasi Ulagammai Udanurai Kasi, Viswanathar Thirukkovil

வடக்கே உள்ள காசிக்கு நிகரான சிறப்பையும், வானளாவிய ராஜ கோபுரத்தையும் பெற்றது தென்காசி உலகாம்பிகை உடனுறை காசி விசுவநாதர் திருக்கோவில்

சுவாமி பெயர்: காசி விசுவநாத சுவாமி.

அம்மை பெயர்: உலகாம்பிகை .

திருக்கோவில் விருட்சம்: செண்பக மரம்.

தீர்த்தம்: சிவகங்கை தீர்த்தம், சித்ரா நதி.

சிறப்பு சன்னதி: பராசக்தி பீடம்

திருக்கோவில் வரலாறு:

முற்காலத்தில் செண்பக வனமாக இருந்த இந்த தென்காசி பகுதியை பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் சிவபெருமான் மீது தீவிர பக்தி செலுத்தி வந்தான். ஒருமுறை அவனுக்கு காசி மாநகர் சென்று கங்கையில் நீராடி சிவபெருமானை வழிபட வேண்டும் என்ற எண்ணம் உண்டானது.

உடனே மன்னன் தன் குல தெய்வமான முருகப் பெருமானை வேண்டி நிற்க, முருகப் பெருமானோ மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றைக் கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்து அருளினார். மன்னனும் அவ்வாறே காசி சென்று விசுவநாதரை தரிசித்து ஊர் திரும்பினான்.

பின்னர் பராக்கிரம பாண்டியன் தினமும் காசி சென்று விசுவநாதரை வழிபட இயலாததை எண்ணி, மனம் வருந்தினான். ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய ஈசன், மன்னா கவலைப் படாதே.. வடக்கே உள்ள காசிக்கு நீ வருவதற்கு பதிலாக, தட்சிண காசியாகிய இவ் விடத்திலேயே நான் சுயம்புவாக புதையுண்டு இருக்கிறேன் என்றும், இங்கு ஒரு கோவில் அமைத்து என்னை நீ தினமும் வழிபடலாம் என்றும்,
நான் இருக்கும் இடத்தை நீ கண்டறிய உனக்கு எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார்.

கனவில் கண்ட காட்சியை உண்மை தானா? என்று நினைத்தவாறே மறுநாள் பராக்கிரம பாண்டியன் நகர் வலம் புறப்பட, எறும்புகள் சாரை சாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு, அதனை பின் தொடர்ந்து சென்று குறிப்பிட்ட இடத்தை அடைந்து, மண்ணை தோண்டிட அங்கு சுயம்புவாக சிவலிங்கம் கிடைக்கப் பெற்றது. அது கண்டு பரவசம் அடைந்த மன்னன் பராக்கிரம பாண்டியன் அந்த இடத்திலேயே சுயம்பு லிங்கத்தை முறைப்படி பிரதிஷ்டை செய்து, கோவில் கட்டி, கோபுரமும் கட்டி, சிவகங்கை தீர்த்தக் கிணற்றை வெட்டி, காசியிலிருந்து கங்கை தீர்த்தத்தை வரவழைத்து சிவகங்கையில் சேர்த்து, தென்காசி நகரையும் நிர்மாணித்ததாக வரலாறு கூறுகிறது.

சுவாமி காசி விசுவநாதர்:

கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் லிங்கத் திருமேனியராய் காட்சியளிக்கிறார் காசி விசுவநாத சுவாமி. இவர் சுயம்புவாக தோன்றிய மூர்த்தி என்றாலும் சற்றே பிரம்மாண்ட தோற்றம் உடையவர். இவருக்கு நாகாபரணம் அணிவித்து விசேஷ அலங்காரம் செய்யப்படும்.

அம்மை உலகாம்பிகை:

கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவாரபாலகிகள் காவல்புரிய, உள்ளே கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை கீழே தொங்க விட்டபடியும், சற்றே இடைநெளித்து, புன்முறுவல் பூத்த திருமுகத்தவளாய், நின்ற கோலத்தில், ஆனந்த காட்சியளிக்கிறாள் உலகாம்பிகை.

பராசக்தி பீடம்:

கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் அகத்தியரால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ சக்கர பீடமே பராசக்தி பீடமாக விளங்கி வருகிறது. இந்த பீடத்திற்கு நேர் எதிரில் லிங்க சொரூபத்தில் சிவனும் எழுந்தருளி உள்ளார்.

திருக்கோவில் அமைப்பு:

கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கும் இக்கோவில் நுழைவாயிலில் மிக பிரம்மாண்ட வானளாவிய ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது.

இந்த ராஜ கோபுரம் வழியே உள்ளே நுழையும் போதே மேற்கு தொடர்ச்சி மலையின் தென்றல் காற்று நம்மை எதிர் கொண்டு அழைக்கும். உள்ளே நுழைந்தவுடன் அழகிய புல்வெளி உடன் கூடிய மைதானமும், அதனை தாண்டி சுவாமி கோவில், முருகன் கோவில், அம்மை கோவில் என்ற மூன்று பிரிவுளாக கோவில்களும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளது.

சுவாமி சன்னதி நுழைவாயில் மண்டபத்தில் காளி, ஊர்த்துவ தாண்டவர் உட்பட பல சிற்பங்கள் கம்பீரமாக காட்சித் தருகின்றன. இம் மண்டபத்தில் இருக்கும் பலி பீடத்தை தாண்டி, விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் துவார பாலகர்கள் காட்சித் தரும் சிறு வாயில் வழியாக உள்ளே சென்றால் அதிகார நந்தி, சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம். அதற்கு அடுத்து இத் தலத்தின் விருட்சமாகிய செண்பக மரம் இருக்கிறது. அதனை வணங்கி முன்னே நடந்தால் கொடி மரமும், நந்தியும் இருக்கிறது.

நந்தியை வணங்கி படியேறி உள்ளே சென்றால் அழகிய முன் மண்டபம். அந்த மண்டபத்தின் வடக்கே தெற்கு திசை நோக்கி சிவகாமி அம்மை உடனுறை நடராஜர் காட்சித் தருகிறார். முன் மண்டபத்தின் தெற்கே கிழக்கு திசை நோக்கி உற்சவ மூர்த்திகளாகிய சோமாஸ்கந்தரும் அவர்களுக்கு எதிராக பராக்கிரம பாண்டிய மன்னரும் காட்சித் தருகின்றனர். அடுத்து அர்த்த மண்டபம் தாண்டி கருவறையில் விசுவநாதர் காட்சித் தருகிறார்.

சுற்றுப் பிரகாரத்தில் முறையே நால்வர், சுர தேவர், அறுபத்து மூவர், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, விநாயகர், லிங்க நாதர், சாஸ்தா, மகாலட்சுமி, சரஸ்வதி, சுப்பிரமணியர், சனீஸ்வரர், நடராஜர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகிய சன்னதிகளும் சிவகங்கை தீர்த்தக் கிணறும், பலா மரத்தடி சன்னதியும் அமையப் பெற்றுள்ளது.

வெளியே முன் மண்டபத்தில் நவக்கிரக சன்னதியும், அடுத்து குழந்தை வேலாயுதர் சன்னதியும், உலகாம்பிகை சன்னதியும் அமையப் பெற்றுள்ளது.

வெளி சுற்றுப் பிரகாரத்தில் நந்தவனமும், கோசாலையும் அதனை தாண்டி விந்தயனார் சித்தர் பீடம், சகஸ்ர லிங்கம், பராசக்தி பீடம், மீனாட்சி – சொக்கநாதர் மற்றும் பைரவர் ஆகியோர்களின் சன்னதியும் அமையப் பெற்றுள்ளது.

திருக்கோவில் சிறப்புக்கள்:

இங்கு வழிபடுவது காசி மாநகரில் வழிபட்ட பலன்களை தரும்.

இங்குள்ள சிவ கங்கை தீர்த்த்தில் நீராடினால், காசியிலுள்ள கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிட்டும்.

இங்கு காசி விசுவநாதரை நாரதர், அகத்தியர், இந்திரன், மிருகண்டு மகரிஷி, வாலி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள்.

இங்குள்ள பழைய ராஜ கோபுரம் இடி விழுந்ததால் இரண்டாக பிளந்து சிதிலமடைந்து விட்டது. பின்னர் 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது வரை காட்சியளிக்கிறது

இந்த ராஜ கோபுரத்தின் ஒன்பது நிலைகளில் இருந்தும் தென்காசியின் இயற்கை அழகை பார்க்க அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இக் கோயிலில் உள்ள சிற்பங்களான வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, இரண்டு தமிழணங்குகள், ரதி, திருமால், காளிதேவி ஆகியவை உலக பிரசித்தி பெற்றவை ஆகும்.

முக்கிய திருவிழாக்கள் :

இங்கு மாசி மாதம் சுவாமி சன்னதியில் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். திருவிழாவின் ஒன்பதாம் நாள் தேர் ஓடும். பத்தாம் நாளான மாசி மகம் அன்று தீர்த்தவாரி நடைபெறும்.

ஆடி மாதம் ஆடிப்பூரத்தன்று இத்தல அம்மைக்கு வளைகாப்பு வைபவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

ஐப்பசி மாதம் அம்மன் சன்னதியில் கொடியேற்றமாகி திருக்கல்யாண திருவிழா விமரிசையாக நடைபெறும்.

ஐப்பசி மாதம் இத்தல சுப்பிரமணியருக்கு கந்த சஷ்டி திருவிழா இனிதே நடைபெறும்.

கார்த்திகை மாதம் சோமவார வழிபாடும், திருக்கார்த்திகை சொக்கப்பனை ஏற்றுதலும் சிறப்பாக நடைபெறும்.

மார்கழி மாதம் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி வழிபாடும், திருவாதிரை திருநாளை ஓட்டி திருவெம்பாவை வழிபாடும் விமரிசையாக நடைபெறும்.

இது தவிர மாசி சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை வருஷ பிறப்பு, நடராஜருக்குரிய ஆறு அபிஷேகங்கள், மாதாந்திர பிரதோஷ மற்றும் பெளர்ணமி பூஜைகளும் சிறப்பாக நடைபெறும்.

அமைவிடம் :

திருநெல்வேலி மாநகருக்கு மேற்கே சுமார் 56 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது தென்காசி நகரம்.

-திருநெல்வேலிக்காரன்.

About

Avatar

Check Also

Kodaganallur Kailasanathar Thirukovil

கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோயில் கார்க்கோடகன் வழிபட்ட கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர், அம்மை: சிவகாமி அம்மை, சிறப்பு சன்னதி: …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.