Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 6

வாசிப்பு நேரம்: 8 mins
No Comments

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-6ல்.,

17. கிரவுஞ்சமலை - விந்தியமலை சருக்கம்.

18. வில்லவன் வாதாபிச் சருக்கம்.

19. திருக்குற்றாலச் சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

17. கிரவுஞ்சமலை - விந்தியமலை சருக்கம்:

அகத்திய முனிவர் தாமிரபரணி நதியோடு தெற்கே பொதிகையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒருமலை, அகத்தியரைப் போக விடாமல் வழி மறித்துக் கொண்டிருந்தது. அகத்தியர் அந்த மலையை பார்த்தார். என்ன இது.! ஆச்சரியமாக இருக்கிறது, இதற்கு முன் இந்த இடத்தில் மலை இல்லையே, இப்பொழுது எப்படித் திடீரென்று வந்தது என்று சிந்தித்தார். அப்போதுதான் தெரிந்தது அது இயற்கையான மலை இல்லை என்றும், கிரவுஞ்சன் என்னும் அரக்கன் மலை வடிவம் கொண்டு இப்படி மறைந்து நிற்கின்றான் என்பதையும் அறிந்து கொள்கிறார்.

கிரவுஞ்சன் எல்லா மாயைகளிலும் வல்லவன், நிலத்தைக் கடலாக்குவான், கடலை நிலமாக்குவான், மலையை அணுவாக்குவான், அணுவை மலையாக்குவான், ஒரு துளியை ஏழு மேகங்கள் ஆக்குவான், ஏழு மேகங்களையும் ஒரு துளியாக்குவான், நினைத்த நேரத்தில் நினைத்த வடிவம் கொள்வான், அந்தப் பொல்லாதவன் தான் நல்ல புத்தி இல்லாதவனாக, மலையாக உருவெடுத்து வழி மறைத்து நிற்கிறான். இதனை அறிந்து கொண்ட அகத்தியர், அவனை ஒன்றும் செய்யவில்லை. பொதிகைக்கு விரைவாக போக வேண்டும் என்று எண்ணி, அந்த மலையை சுற்றி போனார். அங்கும் சென்று அவன் மீண்டும் மறித்தான். அப்போதும் அகத்தியர் அவனை ஒன்றும் செய்யாமல் இடப்பக்கமாக சுற்றி போனார். ஆனால் அவன் அங்கும் வழியை மறித்தான். இப்படி செல்லும் வழியெல்லாம் வந்து வந்து மறித்ததால் குறு முனிவர் கோபம் கொண்டு தம் கையில் இருந்த தண்டத்தால் மலையின் உச்சியில் ஓங்கி அடிக்கிறார். மலையாக நின்ற கிரவுஞ்சன் இந்த அடியை தாங்க முடியாமல் சிறு குன்றாக குறுகி போனான். இன்றோடு உன் வல்லமை எல்லாம் அழிந்து இப்படியே குன்றாக கிடப்பாயாக எனவும், சூரபத்மனை அழிக்க வரும் சுப்பிரமணியக் கடவுளால் வதை செய்யப்படுவாய் எனவும் சாபம் கொடுத்துவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார் அகத்தியர்.

அங்கிருந்து ஐநூறு காத தூரம் கடந்து சென்ற அகத்தியரை வழியில் மற்றும் ஒரு மலை வழி மறித்து நிற்கிறது. விந்தன் என்பவன் ஒரு சாபத்தின் பயனாக மலையாக மாறி அங்கு கிடந்தான். அவன் நாரத மகரிஷியின் சொல்லை கேட்டு அகத்திய முனிவரை வழி மறித்து நின்றான். அகத்தியர் பொதிகை மலை செல்வதற்காக இந்த வழியாக வருவார், அப்போது நீ அவரை வழி மறித்து நின்றால், உனது சாபம் நீங்கி விமோசனம் கிட்டும் என நாரதர் விந்தனிடம் கூறியிருந்தார். அதனை கேட்டு தான் விந்தன் மலையாக மாறிக் கிடந்தான். அங்கு வந்த அகத்தியர் அவனை வழி விடுமாறு கேட்டார். ஆனால் விந்தியன் வழிவிடவில்லை. சூரியனும், சந்திரனும் சுற்றிப் போகும் போது, நீ என்ன வந்து வழி கேட்பது? நான் இங்கே வழியில் இருக்கிறேன் எனத் தெரிந்தும் எதற்காக இந்த வழியாக வந்தாய் என அகத்தியரை பார்த்து விந்தியன் ஆணவமாக கேட்கிறான். இதனால் கோபம் கொண்ட அகத்திய முனிவர், விந்தியமலை எந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறதோ, அந்த அளவுக்கு தனது வலக்கையை நீளச் செய்து , விந்திய மலையின் உச்சியில் கையை வைத்து அழுத்தினார். அவ்வளவுதான், அடுத்த கணமே வானுயர வளர்ந்து நின்ற விந்தியமலை பாதாளத்துக்குள் போய் விட்டது. அன்று முதல் சந்திரனும், சூரியனும் தங்களுக்குரிய வழியிலே நிம்மதியாக பயணத்தை தொடர்ந்தார்கள். தவ முனிவர்கள் தடையின்றி அந்த வழியாக நடமாடினார்கள். அகத்திய முனிவரைப் பாராட்டி வணங்கினர். சாபம் நீங்க பெற்ற விந்தனும் வந்து அகத்திய முனிவரை பணிந்து வணங்கி ஆசி பெற்றான். அவர்களுக்கு அருளாசி வழங்கிய அகத்தியர் தனது தென் திசை பயணத்தை மீண்டும் தாமிரபரணியோடு தொடர்ந்தார் என சூதமா முனிவர் கூறிமுடித்து, அடுத்ததாக வில்லவன், வாதாபியைப் பற்றிச் சொன்னார்.

18. வில்லவன் வாதாபிச் சருக்கம்:

கேளுங்கள் நைமிசாரணிய முனிவர்களே, எழுத்து, சொல், யாப்பு, அணி என்று தமிழக்கு ஐந்து இலக்கணமும் செய்தருளிய தமிழ்முனி அகத்தியர் அங்கிருந்து பொதிகை மலையை நோக்கிச் சென்றார். சில காத தூரம் தான் சென்றிருப்பார், அதற்குள் அங்கே வில்லவன், வாதாபி என்னும் சகோதரர்கள் எதிர்பட்டார்கள். அவர்களுக்கு முனிவர்களைக் கண்டால் பிடிக்காது. எந்த முனிவரைக் கண்டாலும் அவரைக் கொன்று தின்று விடுவார்கள். இந்தக் கொலையை அவர்கள் ஒரு கலையாகவே செய்து வந்தனர். எவராவது ஒரு முனிவரைக் கண்டுவிட்டால், வில்லவன் ஒரு பக்தனை போல மாறி, அந்த முனிவரிடம் சென்று, முனிவர் பெருமானே.! இன்று தாங்கள் எங்கள் குடிலுக்கு வந்து அமுதுண்டு செல்ல வேண்டும் என்று சொல்லி அழைத்து வந்து, தனது இடத்தில் அமரச் சொல்லிவிட்டு, தனது தம்பி வாதாபியை அழைத்து ஆடாக மாற சொல்லுவான். அவனும் ஆடாக மாறுவான், வில்லவன் அந்த ஆட்டை வெட்டி கறியாக சமைத்து முனிவருக்குப் படைப்பான். முனிவர்கள் உண்டு முடித்த பின்னர், வாதாபி வெளியே வா என்று வில்லவன் அழைக்க, உடனே வாதாபி அவர்களின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியே வருவான். இதனால் முனிவர்கள் இறந்துவிட, அந்த முனிவரின் உடம்பை வில்லவனும், வாதாபியும் பகிர்ந்து உண்பார்கள்.

இந்த வழக்கத்தின் படியே, அகத்திய முனிவரையும் கொன்று தின்ன வேண்டும் என்ற எண்ணத்தில் வில்லவன் அகத்தியரிடம் சென்று, சுவாமி.! எங்கள் குடிலுக்கு வந்து விருந்துண்டு செல்ல வேண்டும் என்று வேண்டினான். நடப்பதை தனது ஞான திருஷ்டியில் உணர்ந்த அகத்திய பெருமான், மறுப்பேதும் சொல்லாமல், " விருந்து அருந்த வருத்தி அழைக்கிறாய், இருந்து அருந்த யாம் வருகிறோம்" எனக்கூறி அவனுடன் அவனது குடிலுக்கு செல்கிறார். அகத்திய முனிவரை குடிலில் அமரச் செய்துவிட்டு வழக்கம் போல, தனது தம்பி வாதாபியை ஆடாக மாற்றி உணவு சமைத்து, அகத்திய முனிவரை அழைத்து வந்து அமரச் செய்து இலை விரித்து சோறும், கறியும் படைத்தான். அகத்திய முனிவரும் திருப்தியாக அனைத்தையும் விரும்பி உண்டார். வழக்கம் போல வில்லவன் முனிவர் சாப்பிட்டு முடித்த உடன், வாதாபி வெளியே வா என அழைக்க, வாதாபி வெளியே வரவில்லை. அகத்தியரோ சிரித்துக் கொண்டே தனது வயிற்றை தடவியவாறு வாதாபி ஜீரணம் ஆகி விட்டான், இனி வரவே மாட்டான் என்று கூறுகிறார். இதனால் கோபம் கொண்ட வில்லவன் தனது மூர்க்க வடிவத்திற்கு மாறி, முனிவரை நோக்கி ஆவேசமாக பாய்ந்தான்.

அப்போது அகத்திய முனிவர் ஒரு தர்ப்பையை எடுத்து இறைவனை நினைத்து, மந்திரத்தை ஓதி வில்லவன் மீது வீசினார். அந்த கணமே அவன் வெந்து சாம்பலானான். அன்று முதல் முனிவர்கள் அச்சமின்றி வாழ்ந்து வந்தனர் என்று சூதமா முனிவர் கூறி முடித்து மேற்கொண்டு திருக்குற்றாலத்தை பற்றி கூறத் தொடங்குகிறார்.

19. திருக்குற்றாலச் சருக்கம்:

கேளுங்கள்..! முனிவர்களே..! செல்லும் வழியில் உள்ள சிவாலயங்களில் எல்லாம் வழிபாடு செய்து வணங்கிக் கொண்டே திருக்குற்றாலம் ஸ்தலத்திற்கு வருகிறார் அகத்திய முனிவர். திருக்குற்றாலம் வந்து திருக்குற்றாலநாதரையும், குழல்வாய்மொழி அம்மையையும் வணங்கிக் கொண்டு சித்திர சபைக்கு சென்று, பின் திருமுற்றம் என்னும் தலத்துக்குச் சென்றார். அங்கே ஒரு விஷ்ணு கோவில் இருந்தது. அந்த கோவிலைச் சார்ந்த வைணவர்கள் யாரும் சிவனடியார்களை கண்டால் மதிக்க மாட்டார்கள். சிவனடியார்களை கண்டால் முகம் சுழித்து எரிந்து விழுவார்கள். முகம் கொடுத்து பேச கூட மாட்டார்கள். இந்த உலகிலேயே தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற ஒரு தவறான எண்ணம் அவர்களிடம் இருந்தது. அவர்கள் நெற்றியில் விபூதி பட்டை தரித்து அங்கு வந்த அகத்தியப் பெருமானை கண்டவுடன், அங்கு வரவிடாமல் விரட்டி விட்டார்கள். அகத்தியரும் அவர்களுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறுவது போல பாசாங்கு செய்து வெளியே வந்துவிடுகிறார். பின்னர் சிவபெருமானை வேண்டிக் கொண்டு திருமாலின் அடியவர் போல வேடம் தரித்து, நெற்றியில் திருநாமம் அணிந்து மீண்டும் திருமுற்றம் ஸ்தலத்திற்கு செல்கிறார்.

வைணவ சின்னங்களுடன் அங்கு வந்த அகத்தியரை கண்ட வைணவர்கள், சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு செய்தார்கள். அகத்தியரோ அவர்களிடம் தான் இதுவரை திருமலையில் இருந்தோம், இன்று தான் இங்கு வந்தோம், இங்கு ஒரு திருமால் கோவில் இருப்பதாக கேள்வியுற்று வந்தோம், அந்த கோவில் எங்கு இருக்கிறது என ஒன்றும் அறியாதவாறு கேட்கிறார். அதோ இருக்கிறது என்று அங்கிருந்த வைணவர்கள் கூறி அவரை புடை சூழ்ந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அகத்தியரும் அவர்களோடு திருமால் கோவிலுக்குள் நுழைந்து விடுகிறார். பின்னர் அவர் வெளியில் நின்ற வைணவர்களை பார்த்துப், பெருமாளுக்கு கைங்கரியம் செய்ய வேண்டும் எனவும், அதற்குரிய சாதனங்களைக் கொண்டு வரும்படி கூறுகிறார். அதன்படியே அவர்களும் சாதனங்களை எடுக்க செல்ல, அந்த வேளையில் அகத்தியர் உள்ளே சென்று கருவறை கதவுகளை சாற்றிக்கொள்கிறார். அங்கு அமர்ந்து சிவபெருமானை குறித்து தவம் செய்து, திருமாலையும் வேண்டிப் பணிந்து, அங்கிருந்த பெருமாள் திருமேனியின் மீது கை வைத்து மந்திரங்களை உச்சாடனம் செய்து, மேன்மைமிகு திருமாலே மேனி குருகுக என கூற, அக்கணமே நெடிதுயர்ந்த திருமாலின் மேனி குறுகி சிவலிங்கமாக மாறி விடுகிறது. சிறிது நேரம் கழித்து அகத்தியர், திருக்கோவில் நடைக்கதவுகளை திறந்து வெளியே வர, அப்போது கைங்கரியத்துக்கு சாதனங்கள் எடுக்க வெளியே சென்ற வைணவர்கள் அங்கு வருகிறார்கள், அவர்கள் கருவறையில் சிவபெருமான் இருப்பதைக் கண்டு கடும் சினம் கொண்டு, அகத்தியரை தாக்க முயல்கிறார்கள். அப்போது இறைவன் தமது நெற்றிக்கண்ணை திறப்பது போல, அகத்தியரும் தமது முகவிழியை அகலவிரித்து பார்க்க, அதிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்க முடியாமல் அனைவரும் சிதறி ஓடிவிட்டார்கள்.அதன்பின்னர் அகத்தியர், அந்த லிங்கத்துக்கு சிவ ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற வழிவகை செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு தனது பயணத்தை தொடர்ந்தார் என்று சூதமா முனிவர் கூறி முடித்து அடுத்த சருக்கத்தை பற்றி கூறத் தொடங்குகிறார்.

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 7

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram