Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 4

வாசிப்பு நேரம்: 9.5 mins
No Comments
A huge stone pillar engraved with a figure of a goddess holding a child on one side and a man with a bow and arrow on the other side.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-4ல்.,

9. மோனம் நீங்கு சருக்கம்.

10. தவம் காண் சருக்கம்.

11. திருமணம் பேசு சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

9. மோனம் நீங்கு சருக்கம்:

சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கும் ஞான உபதேசத்தை நிறைவு செய்து, அருளாசி வழங்கி அனுப்பிவிட்டு, கயிலைக்கு வெளியே இருந்து ஓலமிட்டுக் கொண்டிருக்கும் பிரம்மனையும், இந்திராதி தேவர்களையும் அழைத்து வரும்படி பரமேஸ்வரன் நந்திதேவருக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். உடனே நந்தி தேவரும் வெளியே சென்று அனைவரையும் அழைத்து வந்து இறைவன் முன்னர் நிறுத்தினார். இறைவனை கண்ட இந்திராதி தேவர்கள், இறைவனின் திருவடியில் வீழ்ந்து வணங்கி, நாங்கள் செய்த பிழையை பொருத்தருளி, எங்களது துன்பத்தினை போக்கியருள வேண்டும் என கேட்கிறார்கள். அவர்களின் துன்பத்தை உணர்ந்த சிவபெருமான், கூடிய விரைவில் அதற்கான காலம் கனிந்து வரும் எனக்கூறி ஆசியளித்து அனுப்பிவைக்கிறார். பின்னர் சிவபெருமான், இமயத்தில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருக்கும் பார்வதி தேவியை பற்றி நினைக்கிறார்.இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நைமிசாரணிய முனிவர்கள், அம்மை தவத்தை பற்றிச் சொல்ல வேண்டும் என சூதமா முனிவரிடம் விண்ணப்பம் செய்கின்றனர். அதனை ஏற்று சூதமா முனிவரும் தவம் காண் சருக்கம் பற்றி கூறுகிறார்.

10. தவம் காண் சருக்கம்:

இமயத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் உமையவளை நினைத்து சிவபெருமான், அம்மையைக் காண்பதற்காக இமயத்துக்குப் புறப்பட்டார். முதிய வேதியர் வடிவம் கொண்டு, காவி உடை உடுத்திக் கழுத்தில் ருத்திராக்க மாலை அணிந்து, மேனி முழுவதும் திருநீறு அணிந்து, ஒரு கையில் தண்டும், ஒரு கையில் கமண்டலமும் ஏந்தி, அம்மை தவம் புரியும் தவச்சாலைக்கு வருகிறார். அவரைக்கண்ட தவச்சாலையில் உள்ள பணிப்பெண்கள், முதியவரே நீர் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்? என்று கேட்கிறார்கள். அதற்கு முதியவர் வேடத்தில் இருந்த சிவபெருமான், பெண்களே.! இமயவரம்பனின் மகள் பார்வதி இங்கு தவம் செய்கிறாளாமே, அவளை காணவே வந்தேன் என கூறுகிறார். இதனைக் கேட்ட பணிப்பெண்கள் பார்வதி தேவியிடம் சென்று விஷயத்தை கூற, அவள் அந்த முதியவரை அழைத்து வர சொல்கிறாள். பணிப்பெண்களும் அவ்வாறே வந்து முதியவரை அழைத்துச் செல்ல, சிவனடியார் போல காட்சித் தந்த அந்த முதியவரை வணங்கி அவருக்கு தகுந்த ஆசனம் அளித்து அமரச் செய்கிறாள் பார்வதி. அப்போது அந்த முதியவர், அம்மா பார்வதி இந்த சின்னஞ்சிறு வயதில் தவம் செய்கிறாயே, அதற்கான காரணம் என்ன என்று கேட்கிறார். பார்வதி இதற்கு பதில் சொல்லவில்லை. தனது பக்கத்தில் இருந்த தோழியைப் பார்க்கிறாள். அந்தப் பார்வையின் பொருளை புரிந்து கொண்ட அந்த பெண், மஹாதேவரை தனது மணாளராக பெரும் பொருட்டு பார்வதி இந்த தவத்தை மேற்கொள்கிறாள் எனக் கூறுகிறாள்.

அந்தப் பெண் கூறியதை கேட்ட முதியவர் பலமாகச் சிரித்தார். என்னம்மா இது? சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது? சிவனாவது இவளை வந்து திருமணம் செய்து கொள்வதாவது? எனக்கூறி ஏளனம் செய்கிறார். நீங்கள் சிறு வீடுகட்டி விளையாடும் வயதில் இருந்து கொண்டு அந்த சிவபெருமானை திருமணம் செய்ய தவம் இருப்பதாக கூறும் விஷயம் எல்லாம் மிகவும் வேடிக்கையானது என்று கூறுகிறார். அதனைக் கேட்ட பார்வதி கோபம் கொண்டு முனிவரை நோக்கி, போதும் நிறுத்துங்கள் உங்கள் பேச்சை, சிவனடியார் போல இருப்பதால் தான் உம்மை அழைத்து வர சொன்னேன், ஆனால் உமது பேச்சை கேட்டால் நீர் சிவனடியார் போல் தெரியவில்லை, முதிர்ந்த அறிவுடைய பேச்சாகவும் இல்லை, ஏதோ பித்தனை போல பிதற்றுகிறீர், உமக்கென்ன தெரியும் கயிலைமலையானை பற்றி? நினைத்ததை நிறைவேற்றி வைப்பார், கேட்டதை தருவார், தவம் செய்தால் நேரில் வந்து வரம் தருவார், அன்பால் மட்டுமே அவரை அடைய முடியும், அவரை பற்றி உமக்கென்ன தெரியும் என ஆவேசமாக கூறி, முதியவரை அங்கிருந்து செல்லும்படி கூறிவிடுகிறாள் பார்வதி. அதற்கு முனிவர் அம்மா பார்வதி குழந்தை, அந்தச் சிவனை பற்றி உனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிவிட்டாய், எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன் நீ கேள், எனக்கூறிவிட்டு, அவன் காளை மாட்டில் திரிபவன், கண்டத்தில் நஞ்சை கொண்டவன், திருவோடு ஏந்தித் தெருவில் பிச்சை எடுப்பவன், புலித்தோலை இடையில் அணிந்திருப்பவன், யானைத் தோலை போர்த்தி இருப்பவன், சுடுகாட்டில் ஆடுபவன், எலும்பு மாலைகளை அணிபவன், மணம் இல்லாத ஊமத்தம் மலரையும், அழகில்லாத கொக்கிறகையும் விரும்பி அணிபவன், அவனுக்கென்று அம்மையும் இல்லை, அப்பனும் இல்லை, தமயனும் இல்லை, தங்கையும் இல்லை, அவனை திருமணம் செய்து கொண்டு நீ என்ன செய்ய போகிறாய், பாவம் அம்மா நீ என்று சிவபெருமானை பற்றி கூறி முடிக்கிறார்.

அதனை கேட்ட பார்வதி, முதியவரே நீர் சொல்வதெல்லாம் என் சிந்தை நிறைந்த சிவனுக்குச் சிறுமையல்ல, பெருமையே.! அவரைப் போன்று தியாக உள்ளம் கொண்டவர் எவரும் இல்லை, தம் அன்பர்களுக்கு மாட மாளிகையை கொடுத்துவிட்டு, அவர் சுடுகாட்டை கொண்டார். தங்கத்தையும், வைரத்தையும் அன்பர்களுக்கு கொடுத்துவிட்டு அவர் பாம்பையும், எலும்பையும் அணிந்து கொண்டார். பட்டையும், பீதாம்பரத்தையும் அன்பர்களுக்கு கொடுத்து விட்டு, அவர் புலித்தோலையும், யானைத் தோலையும் வைத்துக் கொண்டார். சந்தனம், பன்னீர் போன்ற வாசனை பொருட்களை அன்பர்களுக்கு கொடுத்துவிட்டு அவர் சாம்பலை பூசிக் கொண்டார். மல்லிகை, முல்லை போன்ற மணமிக்க மலர்களை அன்பர்களுக்கு கொடுத்து விட்டு, மணமில்லாத ஊமத்தம் மலர்களை அவர் சூடிக்கொண்டார், என்று சொல்கிறாள்.

மேலும் தொடர்ந்த பார்வதி, ஐம்பூதங்களில் சிறந்தது - அக்கினி, மந்திரங்களில் சிறந்தது - காயத்திரி, விலங்குகளில் சிறந்தது - பசு, பறவைகளில் சிறந்தது - கருடன், யுகங்களில் சிறந்தது - கிரேதா, யாகங்களில் பலமானது - ராஜசூயம், உண்ணும் பொருளில் சிறந்தது - அன்னம், பருகும் பொருளில் சிறந்தது - நீர், மலைகளில் சிறந்தது - கயிலை, மரங்களில் சிறந்தது - ஆல மரம், நதிகளில் சிறந்தது - பொருநை, நீர்நிலைகளில் சிறந்தது - கடல், திசைகளில் சிறந்தது - கிழக்கு, தேவர்களில் சிறந்தவர் - பிரம்மன், பிரம்மனிலும் சிறந்தவர் - திருமால், அனைவரிலும் சிறந்தவர் - சிவன், ஆகையால் அவரை விஞ்சியவர் இந்த மண்ணிலும் இல்லை, விண்ணிலும் இல்லை என கூறுகிறாள். என் தவத்தின் நோக்கமே, அவரை மணப்பது தான், அதனால் இங்கிருந்து போய் விடும் என சற்று கடுமையாக கூறிவிடுகிறாள் அம்மை. அதற்கு முதியவர், அம்மா குழந்தை, போய்விடு.. போய்விடு.. எனக் கூறுகிறாயே, நான் சும்மா போவதற்காக வரவில்லை, உன்னை திருமணம் செய்து கொண்டு போவதற்காக தான் வந்திருக்கிறேன் என கூறுகிறார். இதனை கேட்ட அம்மை., சிவசிவ என்ன பேச்சு பேசுகிறார் இந்த போலி சிவனடியார்? இவரிடம் வயதிற்கு ஏற்ற பேச்சும் இல்லை, வயதுக்கு ஏற்ற நினைப்பும் இல்லை, இனி ஒரு கணம் கூட இவர் இங்கே இருக்க கூடாது, பெண்களே இவரை இங்கிருந்து விரட்டுங்கள் என கோபமாக கூறுகிறாள். அப்போது முதியவர் வேடத்தில் வந்த பரமேஸ்வரன் அங்கிருந்து அக்கணமே மறைந்துவிடுகிறார். இதனை கண்டு அங்கிருந்த பணிப்பெண்களும், பார்வதி அம்மையும் என்ன இது திடீரென்று இந்த கிழவன் மறைந்துவிட்டான் என அதிர்ச்சியடைந்து சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள்.

அப்போது சர்வேஸ்வரன் திரிசூலமும், சித்துடுக்கையும் ஏந்தியவாறு இடப வாகனத்தில் காட்சித் தந்தார். அதனை கண்ட பார்வதி அம்மை ஈஸ்வரனை பணிந்து வணங்கி நின்றாள். இறைவா.! உம்மை அறிந்த நான் உண்மை அறியாதவளாகி வாயில் வந்தபடி எல்லாம் பேசி விட்டேன், தயை கூர்ந்து என்னை மன்னிக்க வேண்டும் என்று வேண்டி நின்றாள். அதனை கேட்ட பெருமான், பார்வதி உன்னை சோதிக்கவே யாம் முதியவர் வேடத்தில் வந்தோம், நீ தூற்றியதை யாம் போற்றியாக ஏற்றுக்கொண்டோம், உன் வசைமொழி எமக்கு இசை மொழியாக இருந்தது. வருந்தாதே விரைவில் வந்து உன்னை முறைப்படி திருமணம் செய்து திருக்கயிலாய மலைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி மறைந்து விடுகிறார். நடந்த விஷயங்களை தோழிகள் மூலம் அறிந்த இமயவரம்பனும், அவன் மனைவி மேனையும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து தவச்சாலைக்குச் சென்று தனது மகளை பாராட்டி, அரண்மனைக்கு அழைத்து வந்தனர் என்று சொன்ன சூதமா முனிவர் அடுத்துத் திருமணம் பேசு சருக்கம் பற்றி கூறத் தொடங்குகிறார்.

11. திருமணம் பேசு சருக்கம்:

தருப்பை வனத்து முனிவர்களே, தம்பிரான் கயிலை சென்றதும், அகத்தியர் உள்ளிட்ட ஏழு முனிவர்களை நினைத்தார். அவர் அப்படி நினைத்த மறுகணமே அந்த ஏழு முனிவர்களும் அங்கு நேரில் வந்தனர். அவர்கள் ஏழு பேர்களும் பெருமானை வணங்கி பணிந்து நின்றனர். அப்போது சிவபெருமான், அவர்களிடம் முனிவர்களே.! இமயவரம்பனுக்கு மகளாக வளர்ந்து, என்னையே மணக்க வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருக்கும் பார்வதி தேவியை, நான் மணம் முடிக்க நீங்கள் சென்று என் சார்பாக பெண் கேட்டு பேசி முடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இறைவன் சொன்னதை கேட்ட ஏழு முனிவர்களும் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டு, இறைவனின் கருணையை எண்ணி உள்ளம் பூரித்தார்கள். தாங்கள் பிறவி எடுத்த பலனை பெற்றுவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார்கள். இறைவா..! திருமாலும், பிரமனும் இருக்கும் போது தங்களுக்கு திருமணம் பேசி முடிக்க, எளியோர்களான எங்களை அனுப்புவது என்றால், நாங்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க அவரை வணங்கி விடைபெற்று, இமயவரம்பனை சந்திக்க புறப்பட்டு சென்றனர். இமயமலைக்கு வந்த ஏழு முனிவர்களும், இமயவரம்பனின் அரண்மனைக்குச் சென்று, அவனைச் சந்தித்தார்கள். ஏழு முனிவர்களும் தனது அரண்மனைக்கு ஒன்றாக வந்திருப்பதை கண்ட, இமயவரம்பன் அவர்களை வணங்கி வரவேற்று உபசரித்தான்.அவர்களுக்கு தக்க ஆசனம் அளித்து அமர வைத்தான். பின் அவர்கள் வந்த நோக்கம் பற்றி கேட்கிறான். அதற்கு முனிவர்கள்., இமயவரம்பா.! உனது மகளான பார்வதி தேவியை, சர்வேஸ்வரனான சிவபெருமான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அதற்காக பெண் கேட்டு எங்களை உன்னிடம் அனுப்பி வைத்துள்ளார் என கூறுகிறார்கள். அதனை கேட்ட இமயவரம்பன் ஆனந்த கூத்தாடினான். அந்த பரமேஸ்வரனே பெண் கேட்கச் சொல்லி உங்களை அனுப்பி வைத்தாரா? என்று கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான். சர்வேஸ்வரனுக்கு பெண் கொடுக்க நான் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும், என்று கூறி தனது சம்மதத்தை தெரிவிக்கிறான். தந்தையின் சம்மதத்தை பெற்ற முனிவர்கள், அடுத்து தாயின் சம்மதத்தை பெற மேனையை அழைத்து பேசுகிறார்கள். அவளோ தயங்கியபடியே நிற்க, முனிவர்கள் என்னமா தயக்கம் என கேட்கிறார்கள். அதற்கு மேனை முன்பு தனக்கு பெண் கொடுத்த தக்கனின் தலையை வாங்கியவர் ஆயிற்றே அந்த சிவபெருமான் அதனால் தான் தயங்குகிறேன் என கூறுகிறாள்.

அதனை கேட்ட முனிவர்கள், அம்மா..! நீ கூறுவது சரிதான் நீ நினைப்பது ஒரு வகையில் நியாயமாக இருந்தாலும், உன் கணவன் இமயவரம்பனைப் பொறுத்த வரையில் அவ்வாறு எதுவும் நடக்காது. ஏனெனில், தக்கன் அரனாரின் பெருமை அறியாத அற்பன். உன் கணவனோ அரனாரின் அன்பன். அதனால் நீ அஞ்ச வேண்டியது இல்லை என்று கூறுகிறார்கள். முனிவர்களின் விளக்கத்தை கேட்ட மேனையும் அதனை ஏற்றுக்கொண்டு தனது மகளை சிவபெருமானுக்கு திருமணம் முடித்து கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறாள். இதனால் முனிவர்கள் மகிழ்ச்சி கொண்டு, அவர்கள் இருவரையும் வாழ்த்தி விட்டு கயிலைக்கு சென்று, சிவபெருமானை சந்தித்து நடந்த விஷயங்களை கூறுகிறார்கள். அதனை கேட்ட பெருமான் மகிழ்ச்சி கொண்டு முனிவர்களை வாழ்த்தி விடை கொடுத்து அனுப்பி வைத்தார் என்று சூதமா முனிவர் சொல்லி, அடுத்து இமயமலையை திருமணத்திற்காக அழகு படுத்தியதை பற்றி நைமிசாரணிய முனிவர்களுக்கு கூறத் தொடங்குகிறார்.

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 5

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram