Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 30

வாசிப்பு நேரம்: 10 mins
No Comments
A kodimaram placed in the centre of a hindu temple extending beyond the roof.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-30ல்.,

101. அயோத்தி ராமன் அர்ச்சனை செய்த சருக்கம்.
102. தல மகிமை கேட்ட கண்ணனுக்குப் பிள்ளைப்பேறு அருளிய சருக்கம்.
103. பொற்றாமரையில் நீராடிய பெண்களுக்குப் புடவை கொடுத்த சருக்கம்.
104. காமுகனுக்கும் கருணை கட்டிய சருக்கம்.
105. ஆசானாக வந்து அருளிய சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

101. அயோத்தி ராமன் அர்ச்சனை செய்த சருக்கம்:

திரேதா யுகத்தில் அயோத்தியில் திருமால் தசரதன் மகன் ராமனாக அவதாரம் செய்து, தாயின் சொல் கேட்டு தவ வேடம் பூண்டு, தாரத்தோடும், தம்பியோடும் காட்டுக்குச் சென்று வாழ்ந்து வரும் போது, மனைவி சொல் கேட்டு, மாரீச மானை கொன்று, குடிலுக்குத் திரும்பி வந்து, குலமகளைக் காணாமல் கும்ப முனியிடம் சென்று கூற, அவர் ராமனை நெல்லைக்கு அழைத்து, "பாசுபதாஸ்திரம்" பெற்றுத்தர, சேதுவில் பாலம் அமைத்து இலங்கை சென்று, ராவணனை கொன்று சீதையை மீட்டுச் சேதுவில் வந்து இறங்கினார்.

அரக்கர்களை கொன்ற பாவத்தைப் போக்க வேண்டும் என்று எண்ணி, அங்கே லிங்கப் பிரதிஷ்டை செய்து, அபிஷேக ஆராதனை எல்லாம் செய்து வழிபட்டார். பின் பல வரங்களை பெற்று அயோத்தி சென்றார். அவர் வழிபாடு செய்த இடம் "ராமேஸ்வரம்" என்றும் அவர் வழிபட்ட லிங்கம் "ராமலிங்கம்" என்னும் பெயர்கள் பெற்றன என்று கூறிச் சூதமா முனிவர் மேலும் சொன்னார்.

102. தல மகிமை கேட்ட கண்ணனுக்குப் பிள்ளைப்பேறு அருளிய சருக்கம்.

கேளுங்கள் நைமிசாரணிய முனிவர்களே, கண்ணன் என்ற ஒருவன், திருமணம் ஆகிப் பல வருடங்களாக பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தான். அல்லும் பகலும் அறுபது நாழிகையும், பிள்ளையைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்து வந்தான். பல தலங்களுக்கும் சென்று வந்தான். பலன் இல்லை. ஒருநாள் சில தவசீலர்களைக் கண்டான், அவர்களுக்குப் பணிவிடைகள் செய்தான். அவனுடைய அகம் தெளிவாகவும், முகம் கவலை தோய்ந்தும் இருப்பதைக் கண்ட சீலர்கள், அவனிடம் கேட்டனர். அதற்கு அவன் சொன்னான்.

தவமுனிகளே.! எனக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இது வரை எனக்கு பிள்ளை பேறு கிடைக்கவில்லை. அந்தக் கவலை தான் மிகவும் வாட்டுகிறது என்று சொன்னான். இது தான் உன் கவலையா? நாங்கள் வேறு ஏதோ பெரிதாக இருக்குமோ? என்று நினைத்து விட்டோம். சரி.! இனிமேல் இந்தக் கவலை உனக்கு வேண்டாம். நீ திருநெல்வேலித் தலபுராணம் கேள். நிச்சயம் உனக்குப் பிள்ளை பேறு கிடைக்கும் என்று சொன்னார்கள். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த கண்ணன், முனிவர் பெருமக்களே.! அப்புராணத்தை இப்போதே எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டான். கண்ணா.! நீ மிகவும் அவசரப்படுகிறாய். அந்தப் புண்ணியமான தலப்புராணத்தை, நாங்கள் சொல்வதை விட அகத்திய முனிவர் சொல்வதே சிறப்பு. ஆகையால் நீ அகத்திய முனிவரிடம் சென்று கேள் என்று கூறித் தவசீலர்கள் சென்று விட்டனர்.

கண்ணன் அகத்திய முனிவரைக் கண்டு வணங்கி, தன கவலையையும், அக்கவலை தீரத் தவசீலர்கள் சொன்ன கருத்தையும் சொன்னான். அகத்திய முனிவர் அவனுக்கு ஆசி வழங்கி இறைவனை நினைத்து திருநெல்வேலி தலப்புராணத்தை சொல்ல தொடங்கினார். அதைக் கேட்டு கண்ணன் மிகவும் மகிழ்ந்தான். சில இடங்களில் நெஞ்சம் நெகிழ்ந்தான். அகத்திய முனிவர் புராணத்தை நிறைவு செய்த உடன், அவருடைய அறிவுரைப்படி, கண்ணன் பொற்றாமரைக் குளத்தில் நீராடி, நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கினான். அழகான ஒரு ஆண் மகவை பெற்று, நீண்ட காலம் வாழ்ந்து இறைவன் திருவடியில் இணைந்தான் என்று சொல்லிச் சூதமா முனிவர் மேலும் சொன்னார்.

103. பொற்றாமரையில் நீராடிய பெண்களுக்குப் புடவை கொடுத்த சருக்கம்.

முன்பு ஒரு கோடை காலத்தில், பொற்றாமரைக் குளத்தில் நீராடச் சென்ற சில பெண்கள், தங்கள் ஆடைகளைக் களைந்து கரையிலே வைத்துவிட்டு, ஆடை இல்லாமல் குளத்தில் இறங்கி நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது எம்பெருமான் கங்காளநாதர் போன்ற திருக்கோலத்தில் அங்கே வந்தார். அவரைக் கண்ட பெண்கள் எல்லோரும், இங்கே வராதீர்கள்.! இங்கே வராதீர்கள்.! என்று கூச்சலிட்டனர். அப்போது இறைவன் ஏவலால் வாயு பகவான் வந்து, கரையில் இருந்த ஆடைகளை எல்லாம் வாரிக்கொண்டு போனான்.! இறைவன் அங்கேயே நின்றிருந்தார்.

தங்கள் ஆடைகள் காற்றில் பறந்து போனதைக் கண்ட பெண்கள் கத்தி கலங்கி போனார்கள். அதனால் கரையில் நின்று கொண்டிருந்த இறைவனிடம் கெஞ்சினர். பெரியவரே.! நாங்கள் ஆடையின்றி நீராடுவது பாவம். அதுவும் ஆலயக் குளத்தில் நீராடுவது பெரும் பாவம். அதனை உணர்த்துவதற்காக தான், வாயு உங்கள் ஆடைகளைக் கவர்ந்து சென்றான். இனிமேல் நீங்கள் எந்த நீர் நிலையிலும் ஆடையின்றி குளிக்க மாட்டோம் என்று உறுதிமொழி தந்தால் உங்களுக்கு ஆடை கொண்டு வந்து தருகிறேன் என்று சொன்னார் இறைவன்.

அய்யா பெரியவரே.! நீர் சொன்னது போலவே நடந்து கொள்கிறோம். ஆடையின்றி நீராடுவது இன்றே இறுதி. இனிமேல் ஆடையின்றி நீராட மாட்டோம். இது உறுதி என்று சொன்னார்கள் அந்த பெண்கள். தங்கள் தவறை அந்த பெண்கள் உணர்ந்து விட்டார்கள் என்பதால், இறைவன் வாயு பகவானை அழைத்தார். வாயு பகவான், முன்பு வாரிக்கொண்டு போன அந்தப் பெண்களின் ஆடைகளை கொண்டு வந்து போட்டார். இறைவனும் அங்கிருந்து ஆலயத்தின் உள்ளே சென்று வீற்றிருந்தார் என்று சொல்லிச் சூதமா முனிவர், காமுகனுக்கும் கருணை காட்டியது பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

104. காமுகனுக்கும் கருணை கட்டிய சருக்கம்.

திருநெல்வேலியில் வாழ்ந்து வந்த, எண்ணற்ற வேதியர்களில் ஒருவன், மிகுந்த ஆசாரக் கேடாக இருந்தான். அவன் கோவிலில் விளக்குப் பார்க்கும் வேலை பார்த்து வந்தான். கோவில் பணியாக இருந்தும், அறப்பணிகளை மறந்து பல அவ பணிகளை செய்து வந்தான். ஆனாலும் தினம் தோறும் நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் தவறாமல் வணங்கி வந்தான். ஆயினும் பேரின்பம் தன்னை மறந்து பெண்ணின்பத்தில் மூழ்கி கிடந்தான். சிற்றின்பமே உலகில் சிறந்த இன்பம். இதற்கு இணையான இன்பம் ஏதுமில்லை என்று நினைத்து வாழ்ந்து வந்தான். இதற்காக கைப்பொருளை எல்லாம் இழந்தான். கடனும் வாங்கினான். கடைசியில் களவாடவும் துணிந்து விட்டான்.

ஒருநாள் கையில் காசில்லாமல், ஒரு கணிகையின் வீட்டுக்குப் போனான். இவன் கையில் காசில்லை என்பதைத் தெரிந்து கொண்ட அந்தக் கணிகை, இவனை வெளியே தள்ளி கதவை சாத்தி விட்டாள். "கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்தடி" என்பது அவர்களின் குல வழக்கம். அந்தக் குல வழக்கத்தின்படி, கையில் காசில்லாத அவனை வெளியே தள்ளிக் கதவைச் சாத்தி விட்டாள்.

இவன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். அவள் கொஞ்சமும் நெஞ்சம் இரங்கவில்லை. இவன் காம வேதனையால் துடித்தான். வேறு வழி ஒன்றும் தெரியாமல் கோவிலின் முன் வந்தான். இறைவா.! என் வேதனையைத் தீர்க்க வழி காட்டு. இல்லையேல் உன் கோவில் முன்பே என் உயிரை விட்டுவிடுவேன் என்று கத்தினான். அவன் மீது மனம் இறங்கிய கறைக்கண்டர் அந்தக் காமுகன் தன காமத்தை போக்கிக் கொள்ளும் பொருட்டு, ஒரு சிறு பொன் மூட்டையை அவன் முன்னே போட்டார். அதை அவன் எடுத்துக் கொண்டு, அந்த கணிகை வீட்டிற்கு சென்றான்.

அவன் கையில் பொன்முடிப்பை கண்ட அவள், அவனை வரவேற்று அழைத்து அனைத்துக் கொண்டாள். இவ்வாறு ஒரு காமுகனுக்கும் கருணை காட்டியவர் தான் நெல்லையப்பர் என்று கூறிச் சூதமா முனிவர் மேலும் சொன்னார்.

105. ஆசானாக வந்து அருளிய சருக்கம்.

முனிவர்களே.! நெல்லையப்பர் ஓர் ஆசானாக வந்து பிள்ளைகளுக்கு வேதம் கற்பித்ததை பற்றி சொல்கிறேன். கேளுங்கள்.! வேதியர்கள் மீது இரக்கம் கொண்ட வேணுவனநாதர் தாம் ஓர் ஆசானாக வந்தார். அவரைக் கண்ட வேதியர்கள் அவருடைய தோற்றத்தைக் கண்டு வணங்கி அவரைப் பற்றி விசாரித்தனர். தமக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் என்றும், தாம் ஓர் ஆசிரியர் என்றும் சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்ட வேதியர்கள் அனைவரும் மனம் மகிழ்ந்து, தமது கவலையை போக்க, இவரை நெல்லையப்பரே அனுப்பி வைத்திருக்கிறார் என்று எண்ணி அவரிடம் கேட்டனர். அய்யா தாங்கள் இங்கே இருந்து, எங்கள் குழந்தைகளுக்கு வேத முறைப்படி கல்வி கற்றுத் தர இயலுமா? உங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தருகிறோம். அவை போக, மாதம் தோறும் போதுமான அளவுக்கு பொன்னும் தருகிறோம் என்று கேட்டனர். அதற்கு அந்த ஆசான், அய்யா! வேதியர்களே எனக்கு எந்த வசதியும் செய்து தர வேண்டாம். மாதம் தோறும் பொன்னும் வேண்டாம். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டும் தந்தால் போதும் என்றார் ஆசான் வடிவில் இருக்கும் அம்மையப்பர்.

வேதியர்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, தங்கள் பிள்ளைகள் எல்லோரையும் அவரிடம் அனுப்பி வைத்தனர். ஆசானும் நல்ல முறையில் கல்வி கற்பித்து வந்தார். ஆசானாக வந்த அம்மையப்பர், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டும் தந்தால் போதும் என்று சொல்லியிருந்தார். அதன்படி தினமும் ஒரு வேளை மட்டுமே உண்டு வந்தார். அதுவும் நாள்தோறும் ஒரே வீட்டில் உண்ணாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் உணவு அருந்தி வந்தார். ஒருநாள் இறைவன் ஒரு திருவிளையாடலைச் செய்ய நினைத்து, ஒரு ஏழையின் வீட்டுக்கு உண்ண சென்றார். அந்த ஏழை வேதியன் வீட்டில் இல்லை. அவன் மனைவி மட்டும் இருந்தாள். அம்மையப்பர் சென்று, அம்மா.! பசிக்கிறது சோறு போடு என்றார். அவரை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவரைக் கண்டதும் அசந்து போனாள். சுவாமி இன்னும் சமையல் ஆகவில்லை. சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரத்தில் தயார் செய்து விடுகிறேன் என்றாள். அதற்கு வேதியரோ, என்னால் பொறுக்க இயலாது. கடுமையான பசி! இருப்பதைக் கொண்டு வா என்றார் இறைவன்.

சுவாமி! பழையது தான் இருக்கிறது என்று அவள் சொன்னாள். ஏதுவாக இருந்தாலும் சரி உடனே கொண்டு வா என்றார் இறைவன். அவள் அவருக்கு இல்லை விரித்து பதறி பழைய சோற்றை கொண்டு வந்து இலையில் இட்டாள். இறைவன் அதை உண்டு விட்டு "இன்னும் இருந்தால் கொண்டு வா" என்றார். அவள் சென்று, மிச்சம் மீதி இருந்த பழையதையும் கொண்டு வந்து இலையில் இட்டாள். அதையும் உண்டு முடித்த வேதியர் சோறு இல்லையா? வேறு என்ன இருக்கிறது? என்று கேட்டார் இறைவன். சுவாமி.! அரிசியும், பருப்பும் தான் இருக்கிறது என்று தயக்கத்துடன் சொன்னாள். அதற்கு வேதியர் வடிவில் இருந்த இறைவன், அதையும் கொண்டு வா என்றார். அவள் கொண்டு வந்து வைத்தாள். அதனையும் உண்டு முடித்த வேதியர், இன்னும் என் பசி அடங்கவில்லை.! வேறு ஏதாவது கொண்டு வா.! என்றார்.

அவளும் பக்கத்து வீடுகளுக்கு சென்று கிடைத்ததை எல்லாம் வாங்கி வந்து வைத்தாள். அவற்றையும் உண்டுவிட்டு பசி அடங்கவில்லை என்றார். இன்னும் நான் எங்கே போவேன்? என்ன செய்வேன்? என்று வேறு வழி தெரியாமல் அவள் அழுதே விட்டாள். அவளுடைய அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டு ஆட்கள் எல்லோரும் ஓடி வந்து விட்டனர். அப்போது வேதியர் வடிவில் இருந்த இறைவன், இலையில் பொற்காசுகளை குவித்து வைத்து விட்டு மாயமாய் மறைந்து விட்டார். அந்தக் காட்சியைக் கண்ட அனைவரும், இது நெல்லையப்பரின் திருவிளையாடல் தான் என்று சொன்னார்கள். என்ன செய்வதென்று அறியாமல் அழுத வேதியனின் மனைவி, இலையில் பொற்குவியலை கண்டு, இறைவனின் கருணையை நினைத்து மனம் உருகி வணங்கி நின்றாள்.

ஆசானாக வந்து பிள்ளைகளுக்கு கல்வி போதித்ததோடு மட்டும் அன்றி, ஏழை வேதியனுக்கு பொருளையும், அருளையும் வழங்கிச் சென்றார் நெல்லையப்பர் என்று சொல்லிச் சூதமா முனிவர் பாடகரின் மகன் துயர் துடைத்ததை பற்றி சொன்னார்.

தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 31

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram