Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 17

வாசிப்பு நேரம்: 10 mins
No Comments
A stone statue of a god on a pillar with a bow and arrow in one hand and a dagger in the other.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-17ல்.,

53. காட்சிக்கொடுத்த சருக்கம்.
54. திருக்கல்யாணச் சருக்கம்.
55. பட்டாபிஷேகச் சருக்கம்.
56. திருமால் திருவிழா நடத்திய சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

53. காட்சிக்கொடுத்த சருக்கம்:

முனிவர்களே.! ஓராண்டு காலமாக யோக நிலையில் இருந்து எழுந்து குகையின் வாயிலுக்கு வருகிறாள். அப்போது அம்மையின் திருமேனியில் இருந்து, ஆயிரம் சூரியன்கள் ஒன்றாய் உதித்தது போலவும், பிரளய காலத்து அக்கினி கொழுந்து எழுந்தது போலவும், பத்துத் திக்குகளிலும் ஒளி வீசியது. கடல் பொங்கி எழுந்தது போலவும், மலைகள் குலுங்கியது போலவும், தோன்ற விண்ணும் மண்ணும் நடுங்க, அதனைக் கண்டு அஞ்சி, அம்மைக்கு பணிவிடை செய்தவர்களும், அங்கே இருந்த தவசீலர்களும் ஓடினார்கள். அஞ்சி ஓடியவர்கள், அம்மையைக் காண வந்து கொண்டு இருக்கும் சிவபெருமானை கண்டு முறையிட்டார்கள். இறைவா.! அம்மை செய்த யோகத்தால் ஏற்பட்ட பேரொளியை எங்களால் தாங்க முடியவில்லை. அஞ்சி ஓடி வந்து விட்டோம்.! தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினர். அஞ்ச வேண்டாம்.! முப்பத்தியிரண்டு அறங்களையும் செய்து யோக நிலையில் இருந்ததால் தேவி அந்த மகா சக்தியைப் பெற்றிருக்கிறாள். நாம் சென்று தேவியை இயல்பு நிலையைக் கொண்டு வருவோம்.! அஞ்சாமல் வாருங்கள்.! என்று அவர்களையும் அழைத்துக் கொண்டு வந்தார் இறைவன்.

இறைவன் வந்து அம்மையைக் கண்டார். அம்மை யோகா நிலையில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. அன்னையின் திருமேனி தீண்டித் தடவிக் கொடுத்தார். இயல்பான நிலையில் அன்னையின் திருமேனி இல்லை. இறைவன் ஆச்சரியப்பட்டார். தேவி உன்னை போல யோகம் செய்தவர் எவரும் இல்லை. உனக்கு ஒப்பாரும் இல்லை.! மிக்காரும் இல்லை.! எல்லாச் சக்திகளிலும் மகா சக்தி நீதான்.! உன் யோகம் அருமையிலும் அருமை என்று இறைவன் புகழ்ந்தார். அப்பொழுதும் அம்மை இயல்பு நிலைமைக்கு வரவில்லை. திருமேனியில் இருந்து வெளிப்பட்ட ஒளிப்பிழம்பால் ஏற்பட்ட வெப்பம் இன்னும் தணியவில்லை. இறைவன் பாதலங்கம்பையை அழைத்து, பெண்ணே.! நீ ஆகாய கங்கையாக மாறி, அம்மையின் மேனியைக் குளிர்விப்பாய் என்றார். இறைவனின் ஆணைப்படியே பாதலங்கம்பை, ஆகாய கங்கையாக மாறி, பனிபோலும் மெல்லிய நீர்த்தாரைகளால் அம்மையின் மேனியைக் குளிர்வித்தாள். மேனியின் வெப்பம் குறைந்ததும் அம்மை இயல்பு நிலைக்கு வந்தாள். எதிரே.! இறைவன் நிற்பதைக் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டு, இறைவனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள்.

அப்போது இறைவன்., உமையே.! உன்னைப் போல தவம் செய்தவர் எவருமில்லை. உன் தவ நிலை கண்டு உளம் மகிழ்ந்தோம்.! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்றார். இறைவா.! அன்று இமயத்தில் என்னை திருமணம் செய்து கொண்டது போல, இன்று இந்த திருநெல்வேலிப்பதியில் வைத்து என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.! தாங்கள் இங்கேயே இருந்து அனவரததானராக இந்த அகிலத்தைக் காக்க வேண்டும்.! நான் மாதந்தோறும் உங்களுக்கு திருவிழா எடுத்து மகிழ வேண்டும்.! மேலும் பாதலங்கம்பையும், பாதாள வாகினியும் என்றும் இந்த ஸ்தலத்தில் பாய்ந்து கருமாரி தீர்த்தம், பொற்றாமரைத் தீர்த்தம் ஆகியவற்றில் கலந்து, சிந்துபூந்துறையில் கூட வேண்டும்.! அது முக்கூடலாகத் திகழ வேண்டும். ஆண்டுதோறும் இந்தக் கம்பா நதிக்கரையில் அன்பர்களுக்குக் காட்சித் தர வேண்டும். இந்தத் திருநெல்வேலித் ஸ்தலம், தென்கயிலை என்றும், தென்காஞ்சி என்றும், தென்காசி என்றும் போற்றப்பட வேண்டும். இந்த வரங்களை எல்லாம் எனக்கு அருள வேண்டும் என்று கேட்கிறாள் அம்மை. இறைவனும் அம்மையின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு அவ்வாறே அருளுகிறார்.

54. திருக்கல்யாணச் சருக்கம்:

அம்மையும் அப்பனும் கோவிலில் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே திருமால் வருகிறார். அவர்கள் அமர்ந்திருக்கும் கண் கொள்ளாக் காட்சியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைகிறார். சாதாரணமாகக் காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது என்றால், இவர்களை திருமணக்கோலத்தில் கண்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தார். நேரே சிவபெருமானிடம் சென்றார், தம் எண்ணத்தைச் சொன்னார். ஏற்கனவே அம்மை, இந்த ஸ்தலத்தில் என்னை திருமணம் புரிய வேண்டும் என்று வரம் வாங்கி உள்ளதால், மாலின் ஆசைக்கு மறுப்புச் சொல்லாமல் மகாதேவர் சம்மத்தித்தார். திருமணத்துக்கான ஏற்பாட்டைச் செய்யும் பொறுப்பையும் திருமாலிடமே கொடுத்தார். திருமணத்துக்குச் சம்மதம் தந்ததுடன் மட்டும் அன்றி, திருமண ஏற்பாட்டையும் தம்மையே செய்யச் சொன்னதால் திருமாலுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. திருமால் உடனே விஸ்வகர்மாவை அழைத்து, திருநெல்வேலி நகரை அழகுபடுத்தித் திருமண மண்டபம் ஒன்று அமைக்கச் சொன்னார். விஸ்வகர்மா தனது வேலையைத் தொடங்கி விட்டான். தேவலோகமே கண்டு வியக்கும் வண்ணம் திருநெல்வேலியை அழகுபடுத்தினான். ஆயிரம் வைரமணித் தூண்கள் நிறுத்தி, தங்கத் தகடுகளை பொருத்தித் திருமண மண்டபம் உருவாக்கினான். அதிலே நவமணிகள் இழைத்து மணமேடை அமைத்தான்.

நகரம் முழுவதும் வாழை, கமுகு மரங்களை நட்டி, பழக்குலைகளைக் கட்டித் தொங்க விட்டுத் தெருவெங்கும் குறுமணல் பரப்பி, தெருவின் இருமருங்கும் சந்தனத்தைக் கரைத்துத் தெளித்து நகரத்தை மணக்கச் செய்தான். விஸ்வகர்மாவின் கைவண்ணத்தைக் கண்டு பரந்தாமன் பாராட்டினார். இவ்வாறு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டுத் திருமால் சிவபெருமானிடம் தெரிவித்தார். சிவபெருமான் திருவுளம் மகிழ்ந்து திருமணக்கோலத்தில் மணமேடைக்கு வந்தார். திருமாலும், பிரம்மனும் மாப்பிள்ளை தோழர்களாக வந்தனர். அம்மை உமையவளும் மணக்கோலத்தில் மணமேடைக்கு வந்தாள். திருமகளும், கலைமகளும் மணப்பெண்ணின் தோழிகளாக வந்தனர். வியாழ பகவான் மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத ஒலி விண்ணைமுட்ட, அம்மை காந்திமதியின் திருக்கரம் பற்றினார் நெல்லையப்பர். அப்போது அன்ன வாகனன் அனைவருக்கும் அன்னம் வழங்கினான். தாமோதரன் தாம்பூலம் வழங்கினார். திருமணக்கோலத்தில் காட்சித் தந்த இறைவனிடம் எல்லோரும் ஆசி பெற்றுச் சென்றனர் என்று சூதமா முனிவர் மேலும் சொன்னார்.

55. பட்டாபிஷேகச் சருக்கம்:

நைமிசாரணிய முனிவர்களே.! சிவபெருமான் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்ததைச் சொல்கிறேன் கேளுங்கள் என்று கூறத் தொடங்கினார் சூதமா முனிவர். திருமால் தேவர்களுடன் வந்து, சிவபெருமானைக் கண்டு வணங்கி, இறைவா.! எங்கள் வேண்டுகோளை ஏற்று திருமணம் செய்து கொண்டீர்கள். அதுபோன்று இன்று ஒரு வேண்டுகோள். அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினர். இறைவன், சொல்லுங்கள் என்றார். இறைவா.! தாங்கள் முடிசூடி செங்கோல் ஏந்தி மூவுலகையும் ஆட்சி செய்ய வேண்டும் என்று வேண்டினார். இறைவன் "சரி" என்று சொல்லி, மணிமுடி புனைந்து, செங்கோல் ஏந்தி, ஆட்சியைத் தொடங்கினார். அப்போது திருமால் வந்து, இறைவா.! இந்தக் கண்கொள்ளாக் காட்சியை எல்லோரும் கண்டுகளிக்க வேண்டும். அதனால் இந்த கோலத்திலேயே வீதி வலம் வர வேண்டும் என்று வேண்டினார். இறைவன் இதற்கும் சம்மதித்து பக்கத்தில் நின்று கொண்டிருந்த நந்தி தேவரைக் கடைக் கண்ணால் நோக்கினார். அந்த நோக்கின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட நந்திதேவர், உடனே கயிலையில் உள்ள இரண்டாயிரம் தந்தங்கள் கொண்ட "ஐராவதம்" என்னும் யானையையும், வைரங்கள் இழைக்கப் பெற்ற முத்துச் சிவிகையையும் அலங்கரித்துக் கொண்டு வந்தார்.

வெள்ளை யானையின் மீது நெல்லையப்பர் அமர்ந்து கொண்டார். முத்துச் சிவிகையில் காந்திமதியம்மை அமர்ந்து கொண்டாள். வாயு தேவன் வெண்சாமரம் வீச, வருணதேவன் பன்னீர் தெளிக்க, அக்கினி தேவன் பந்தம் ஏந்தி வர, ரம்பை - ஊர்வசி ஆடி வர, வித்தியாதரப் பெண்கள் பாடி வர, பூதகணங்கங்கள் வாத்தியம் இசைத்து வர வீதிவலம் வெகு சிறப்பாகத் தொடங்கியது. திருமால், திசைமுகன், விநாயகன், வேலவன் ஆகியோர் தத்தமது வாகனங்களில் அமர்ந்து வர, நந்தி தேவர் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு முன்னே செல்ல, வீதி வலம் வெகு கோலாகலமாக வந்தது. வீதியில் உள்ள வீடுகளில் எல்லாம் பெண்கள் விளக்கு ஏற்றி, மாலைகள் சாத்தி அம்மையையும் அப்பனையும் வணங்கி ஆசி பெற்றனர். இறைவனும், இறைவியும் வீதி வலம் நிறைவு பெற்று திருக்கோவில் வந்து சேர்ந்தனர். சிவனுடைய ஆட்சி வேறு எவனுடைய ஆட்சியையும் போல இல்லாமல் உயர்ந்தவனுடைய ஆட்சிபோல் நல்லாட்சியாக நடந்தது. பத்து நாட்களுக்கு ஒருமுறை மழை பெய்தது. பயிர்கள் எல்லாம் செழித்து வளர்ந்தன. நல்ல பலனும் தந்தது. "நாடு என்ப நாடா வளத்தன" என்பது போன்று வளம் மிகுந்த நாடாக விளங்கியது.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராத செம்மையான நாடாக விளங்கியது.! அங்கே பசுவும் - புலியும், பாம்பும் - கருடனும் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தன. தருமம் நான்கு கால்களுடன் நன்றாக நடந்தது. இவ்வாறு இறைவனின் ஆட்சி அறுபதினாயிரம் ஆண்டுகள் நடந்தது. பின்னர் இறைவன் தம் மகன் ஆறுமுகனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார். ஆறுமுகனும், விண்ணும் மண்ணும் போற்ற அநேக காலம் ஆட்சி செய்தார் என்று சூதமா முனிவர் கூறி, அடுத்துத் திருமால் நடத்திய திருவிழா பற்றிச் சொன்னார்.

56. திருமால் திருவிழா நடத்திய சருக்கம்:

மணிமுடி சூடி மண்டலம் ஆண்ட மகாதேவருக்கு விழா எடுக்க வேண்டும் என்று எண்ணிய திருமால், காந்திமதியம்மையைக் கண்டு, தனது எண்ணத்தைச் சொல்லி விழா எடுப்பதற்காகச் சம்மதம் வாங்கி விட்டார். விழா எடுப்பதற்கு அனுமதி கிடைத்து விட்டதால் அளவற்ற மகிழ்ச்சி கொண்ட அச்சுதன், அருந்தமிழ் வளர்க்கும் அகத்திய முனிவரைக் கண்டு, முனிவரே.! முக்கண்ணரான நமது நெல்லையப்பருக்குத் திருவிழா நடத்த வேண்டும். ஆகையால் அதற்குரிய ஆகம விதிகளை சொல்லுங்கள் என்று கேட்டார். அகத்திய முனிவர், சிவபெருமானை வணங்கி ஆகம விதிகள் அனைத்தையும் சொன்னார். ஆகம விதிகளை அறிந்து கொண்ட அச்சுதன், தேவர்கள், முனிவர்கள், புலவர்கள், மன்னர்கள் ஆகியோரை அழைத்து விழாக்குழு போன்று அமைத்துக் கொண்டு, முறையாகத் திருவிழாக்களை நடத்தத் தொடங்கினார்.

நித்திய கடமை, பட்சத் திருவிழா, மாதத் திருவிழா, வருடத் திருவிழா என்று வருடம் முழுவதும் திருவிழா நடத்தினார். நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்மைக்கும் மட்டும் அன்றி, விநாயகர், முருகன், வைரவர், கங்காளர், நந்தி, காளி, சந்திரசூடர், மாவீரர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்குமாக நடத்தினார். திருவிழாக்காலங்களில் நகரமே கோலாகலமாக இருந்தது. கோவில்களிலும், வீதிகளிலும், தெருக்களிலும், மனைகளிலும், மாடங்களிலும், கூடங்களிலும், தினமும் அலங்காரம் செய்து நவமணித் தூண்கள் நாட்டி மணி மாலைகளும், பூ மாலைகளும் வரிசை வரிசையாகத் தொங்க விட்டு, பொன்னாலும், மணிகளாலும், பாவைகள் செய்து வைத்து, சுவர்களில் எல்லாம் சித்திரங்கள் தீட்டி, யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும், சப்பரங்களையும் அலங்கரித்து வீதிகள், மனைகள், மாடங்கள், மேடைகள், செய் மேடைகள், குன்றுகள், செய்குன்றுகள் ஆகிய இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றி வைத்து பூதம், சிங்கம், யாளி, மயில், குதிரை ஆகிய பாவைகள் வீதியின் இருமருங்கும் அணிவகுக்கச் செய்தனர். பட்டால வட்டம், வெண்குடை, பவளக் குடை, சந்திரவட்டக் குடை, சூரிய வட்டக் குடை, முதலியன நெருங்கி வந்தன.

பேரிகை, முரசு, மத்தளம், சங்கு, கொம்பு, வாங்கா, சல்லரி ஆகிய வாத்தியங்கள் முழங்கின. வேதியர்கள் வேதங்கள் ஓதினர். வீதிகள், மனைகள் தோறும் பந்தலிட்டு எண் வகை மங்கலப் பொருட்கள் வைத்துத் தூப தீபம் கொடுத்தனர். இவ்வாறு திருவிழாக் காலங்களில் திருநெல்வேலி, திருக்கயிலாயம் போன்று விளங்கியது. ஆனி மாதத்தில் மக நட்சத்திரத்தில் கொடியேற்றிப் பத்து நாட்கள் திருவிழாவும், ஒன்பதாம் நாள் கேட்டை நட்சத்திரத்தில் தேர்த் திருவிழாவும் நடத்தினார் திருமால். திருமாலும், திசைமுகனும், தேவேந்திரனும் முன் பகுதியில் வடம் பிடிக்க, தேவர்களும், முனிவர்களும், பூத கணங்களும் நடுப்பகுதியில் வடம் பிடிக்க, மக்கள் எல்லாம் பின்பகுதியில் வடம் பிடிக்க, நான்கு வீதிகளிலும் வலம் வந்து, தேர் நிலையம் வந்து சேர்ந்தது. பத்தாம் நாள் சிந்துபூந்துறையில் நீராடி, திருக்கோவில் சேர்ந்து ஐங்கரனோடும், ஆறுமுகனோடும் அமர்ந்திருந்தார்.பின் மறுநாள் தேவ பூஜையும், பூத பூஜையும் செய்து, பலிகளும் கொடுத்து வேதியர்கள் முறையாக வேதம் ஓதிக் கொடியை இறக்கினர். திருமால் நடத்திய திருவிழாவால் திருவுளம் மகிழ்ந்த நெல்லையப்பர், திருமாலை அழைத்துப் பாராட்டி, உனக்கு வேண்டிய வரம் கேள் தருகிறோம் என்று சொன்னார். இறைவா.! இது போன்ற விழாக்களை எவர் நடத்தினாலும் அவருக்குச் சகல நலன்களையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும். எனக்கென்று பல கோவில்கள் இருந்தாலும், இங்கு உங்கள் பக்கத்தில் இருக்கும் பாக்கியத்தையும் தந்தருள வேண்டும் என்று திருமால் கேட்கிறார். இறைவனும் அவ்வாறே கேட்ட வரங்களை கொடுத்து அருள்புரிகிறார். வரம் பெற்ற கோவிந்தன், நெல்லை கோவிந்தன் என்னும் பெயரில் நெல்லையப்பரின் அருகிலேயே இருக்கிறார். பெருமாள் நடத்தியது போலவே பிரம்மனும் பெருமானுக்கு பெரிய அளவில் விழாக்கள் நடத்தி, வரமும் அருளும் பெற்று நெல்லையப்பரின் வலப்பக்கத்தில் இருக்கிறார். இதே போன்று இந்திரனும் விழா நடத்தி வரம் பெற்றுச் சென்றான். சூரிய குல மன்னர்கள் பலரும், சந்திர குல மன்னர்கள் பலரும், பாண்டிய மன்னர்கள் அனைவரும் திருவிழாக்கள் நடத்தி வரமும், உரமும், நலமும், பலமும் பெற்று நற்கதி அடைந்தார்கள் என்று சொன்ன சூதமா முனிவர் அடுத்துக் கங்காளநாதர் வடிவம் பற்றிச் சொன்னார்.

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 18

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram