Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 10

வாசிப்பு நேரம்: 9 mins
No Comments
A street in tirunelveli with the temple dome seen at the background.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-10ல்.,

28. சோம தீர்த்தச் சருக்கம்.

29. உரோமேஸ்வரர் தீர்த்தச் சருக்கம்.

30. துருவாசர் தீர்த்தச் சருக்கம்.

31. மந்திரேஸ்வரர் தீர்த்தச் சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

28. சோம தீர்த்தச் சருக்கம்:

பிரம்மதேவனின் மகனான அத்திரி முனிவர் அனுசுயா தேவியை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். வெகுகாலமாக அவர்களுக்குப் பிள்ளைபேறு கிடைக்கவில்லை. எனவே மும்மூர்த்திகளை நோக்கித் தவம் இருந்தார் அத்திரி முனிவர். சிவபெருமான் அருளால் அவருக்கு துர்வாசர் மகனாக பிறக்கிறார். திருமால் அருளால் தத்தாத்ரேயர் மகனாக பிறக்கிறார். பிரம்மன் அருளால் சோமன் (சந்திரன்) மகனாக பிறந்தான். இவர்களில் சந்திரன் இரவில் உலகுக்கு எல்லாம் ஒளி வழங்கி கொண்டிருந்தான். சந்திரனின் தன்மையை கண்ட தக்கன் தன்னுடைய பெண் மக்கள் முப்பது பேரில் இருபத்தேழு பேர்களை சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறான். சந்திரன் அந்த இருபத்தேழு மனைவியர்களுள் ரோகிணி என்பவளிடம் மட்டும் மிகுந்த அன்புடையவனாக இருக்கிறான். இதனை கண்ட மற்ற மனைவிகள் தனது தந்தையான தக்கனிடம் சென்று முறையிடுகிறார்கள். அதனை கேட்ட தக்கன், சந்திரனை சந்தித்து எல்லாப் பெண்களிடமும் அன்பாக நடந்து கொள்வாயாக.! ஒருத்தியை மட்டும் விரும்பி மற்றவர்களை வெறுக்காதே என்று கூறுகிறான்.

ஆனால் சந்திரன் அதனை எல்லாம் கேட்பதாக இல்லை. தனது நடவடிக்கையையும் மாற்றிக்கொள்ளவில்லை. மீண்டும் தக்கன் சந்திரனை கண்டு எச்சரித்தான். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத சந்திரன் ரோகிணி மட்டுமே அன்பாக இருந்தான். இதனால் சினம் கொண்ட தக்கன், சந்திரனை பார்த்து சயரோகம் பிடித்துச் சஞ்சலப்படுவாய் என்று சாபம் இட்டு விடுகிறான். அடுத்த கணமே சந்திரன் சயரோகம் பிடித்துத் துன்பப்பட்டான். எங்கெல்லாமோ சென்று பார்த்தான். துன்பம் தொலையவில்லை. இறுதியாக தாமிரபரணி நதிக்கரைக்கு வந்து, நதியில் இறங்கி நீராடி தென்கரைக்கு வந்து சேருகிறான். இயற்கை அழகும், வளமும் நிறைந்த அந்த இடத்தில் பல முனிவர்களும், ஞானிகளும் வேள்வி செய்து கொண்டிருப்பதைக் கண்டான். அது ஒரு புண்ணியமான இடம் என்பதை புரிந்து கொண்டு தானும் அங்கேயே அமர்ந்து தாமோதரனை நோக்கித் தவம் செய்யத் தொடங்கினான். அவனது தவம் பலகாலம் தொடர்ந்தது. இறுதியாக பலனும் தந்தது. தாமோதரன் அருளால் சயரோகம் நீங்கப் பெற்று விண்ணுலகம் சென்று, நுண் போல தண்ணொளியைப் பரப்பி வந்தான். சோமன் நீராடி சாபம் நீங்கப் பெற்றதால் "சோம தீர்த்தம்" என்று பெயர் பெற்றது. இந்த தீர்த்தத்தில் தான் மார்க்கண்டேயன் நீராடி வரம் பெற்றான் என்று சொல்லிச் சூதமா முனிவர் உரோமேஸ்வர தீர்த்தம் பற்றி கூறுகிறார்.

29. உரோமேஸ்வரர் தீர்த்தச் சருக்கம்:

ஆலகால நஞ்சை உண்டு அமரர்களைக் காத்த ஆலவாய் அழகன் அமர்ந்திருக்கும் அழகிய கயிலைக்கு அருந்தவ முனிவர் உரோமசர் சென்றார். இறைவனின் திருவடியில் வீழ்ந்து வணங்கிப் போற்றித் துதித்தார். வணங்கிய முனிவரை வாழ்த்திய பெருமான், அவருக்கு வேண்டும் வரம் யாதென கேட்கிறார். அதற்கு உரோமசர் எனக்கு நித்திய பதவி வரம் வேண்டும் என்று கேட்கிறார். அதனைக்கேட்ட பெருமான், முனிவரே.! நீர் பூலோகம் சென்று அங்குள்ள புண்ணிய நதியான தாமிரபரணியில் நீராடி எம்மை வழிபாட்டு வருக. விரைவில் உமக்கு நித்திய பதவி கிட்டும் என்று கூறி அருள்புரிகிறார்.

இறைவன் கூறியபடியே உரோமச முனிவர் நேராக பூலோகம் வந்து, தாமிரபரணியில் நீராடித் தென்கரைக்கு வந்து, சோம தீர்த்தத்தின் கிழக்கே ஓர் ஆலமரத்தின் அடியில் சென்று அமர்ந்தார். பின்னர் அங்கேயே ஆகம விதிப்படி ஓர் கோவிலை உருவாக்கி, அதில் அம்மையையும், அப்பனையும் பிரதிஷ்டை செய்து, கோவிலைச் சுற்றி வீதிகள் அமைத்து, அங்கே மக்களை குடியமர்த்தி, நித்திய பூஜைகளும், திருவிழாக்களும் நடத்தி வைக்கிறார். இதனால் இறைவன் மகிழ்ந்து, இறைவியோடும் வந்து அவருக்கு காட்சி தந்து, அவர் வேண்டிய நித்திய பதவியையும் அருளிச் செய்தார். உரோமச முனிவர் நீராடிய தீர்த்தம் உரோமச தீர்த்தம் என்றும், அவர் உருவாக்கிய நகரம் உரோமச நகரம் என்றும் பெயர்கள் பெற்றன. திருமால், நான்முகன், தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மார்கண்டேயன் ஆகியோர் இங்கு வந்து நீராடி நிமலனை வழிபட்டுள்ளனர். இந்தத் தீர்த்தத்தில் கிடந்த இரண்டு மீன்கள் இறைவனை வழிபாடு செய்து முக்தியடைந்தன என்று சொன்ன சூதமா முனிவர் அடுத்துத் துர்வாச தீர்த்தத்தை பற்றி சொல்லத் தொடங்குகிறார்.

30. துருவாசர் தீர்த்தச் சருக்கம்:

வேதங்களையும் , சாத்திரங்களையும் துல்லியமாகக் கற்றுணர்ந்த துருவாச முனிவர், ஒருநாள் கயிலாயம் சென்று சிவபெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, இறைவா.! அடியேன் இங்கேயே இருந்து காலமெல்லாம் தங்களுக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன், எளியேனின் விருப்பத்தை நிறைவேற்றியருள வேண்டும் என்று வேண்டினார். துருவாச முனியே..! நீ இப்போது வாழ்ந்து வரும் தாமிரபரணி கரையில் உள்ள காளத்தி நகரம் கயிலைக்கு இணையானது.நாமும் அங்கே இருக்கிறோம். ஆகையால் நீ அங்கே சென்று எம்மை வழிபாடு செய்து வா, பின்னர் வரம் தருவோம் என்று இறைவன் அருளிச் சென்றார்.

இறைவனின் கட்டளையை கேட்ட துருவாச முனிவர், பூலோகம் வந்து தம்முடைய சீடர்கள் பதினாயிரம் பேர்களோடும் காளத்தி மாநகரம் சென்று, வேத முழக்கத்தோடு இறைவனை வணங்கி வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் இறைவன் இறைவியோடு இடப வாகனத்தில் காட்சி தந்தார். அக்கண்கொள்ளாக் காட்சியை கண்ட துருவாச முனிவர், எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டு இறைவனைத் துதித்தார். அப்போது இறைவன், துருவாச முனியே..! உன் வழிபாட்டில் யாம் உள்ளம் மகிழ்ந்தோம். இதே போன்று நீ தாமிரபரணி கரைக்கு வந்து, தாமிரபரணி நீரால் எம்மை நீராட்டி வழிபாடு செய்வாயாக என்று கூறுகிறார். இறைவனின் திருவுளப்படி துருவாச முனிவரும், தமது சீடர்களோடு தாமிரபரணி கரைக்கு வந்து, அங்கே ஓர் கோவில் உருவாக்கி, அதிலே இறைவனை எழுந்தருளச் செய்து, அவருக்கு காளத்திநாதர் என்ற பெயர் சூட்டி, தாமிரபரணியின் நீரால் அபிஷேகம் செய்து, நறுமணம் மிக்க மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாட்டு வந்தார். இவ்வாறு பலகாலம் வழிபாட்டு வந்த துருவாசர், பின்னர் கரிசூழ்ந்தபதி என்னும் கரிசூழ்ந்தமங்கலம் சென்று பொன்னம்பல நாதரின் பொன்னடி போற்றித் தொழுது வணங்கினார். பின்னர் காளத்தி நாதரின் கோவில் வந்து, முன்பு போலவே வணங்கி வழிபாடு செய்து வந்தார். அப்போது இறைவனின் அழைப்பை ஏற்றுக் கைலாயம் சென்று, முன்னர் தாம் விரும்பியது போலவே சிவபெருமானுக்கு பணிவிடைகள் செய்து வந்தார். துருவாச முனிவர் நீராடிய தீர்த்தம் என்பதால் இந்த தீர்த்தம் துருவாச தீர்த்தம் என்றும் இந்த பகுதி துருவாச நகரம் என்றும் அழைக்கப்பட்டது என்று சொல்லி முடித்த சூதமா முனிவர், தொடர்ந்து மந்திரேஸ்வர தீர்த்தச் சருக்கம் பற்றிச் சொல்ல தொடங்கினார்.

31. மந்திரேஸ்வரர் தீர்த்தச் சருக்கம்:

பச்சையாறு வந்து தாமிரபரணியில் கலக்கும் இடத்திற்கு தெற்கே, பிலத்தின் நடுவே ஒரு லிங்கம் தோன்றியிருக்கிறது. அது பிரணவ லிங்கம் என்று சொல்லப்படுகிறது. அந்த லிங்கம் இருக்கும் இடம் மந்திரேஸ்வரம் என்றும், ஓமநல்லூர் என்றும் விளங்குகிறது. இந்தத் ஸ்தலத்திற்குத் தெற்கே கந்தர்வ நகரம் என்று ஒரு நகரம் இருக்கிறது. அந்த நகரில் பல தவ சீலர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் மிகவும் சிறந்தவர், ரேணுமுனி என்பவர் . அவர் கங்கையைத் தம் மகளாக பெற வேண்டும் என்று விரும்பித் தவம் செய்தார் . அந்தச் சமயத்தில் கங்காதேவி கங்காளநாதரை விரும்பி, உமாதேவி இல்லாத நேரம் பார்த்து கயிலைக்கு வருகிறாள். கங்காள நாதரும் நோக்கினார், கங்கையும் நோக்குகிறாள். அப்போது அங்கு உமாதேவி வந்து விடுகிறாள். கங்கையின் தவறான எண்ணத்தை அறிந்த உமையவள், அவளை கண்டிக்கிறாள். பின்னர் நீ மண்ணுலகில் மானிட பெண்ணாக பிறப்பெடுப்பாய் என சாபமும் கொடுக்கிறாள். உமையவள் சாபத்தை பெற்ற கங்கை, பூலோகம் வந்து தன்னை மகளாக பெற வேண்டும் என தவம் இருக்கும் ரேணு முனிவரின் தவச் சாலையின் முன்னே குழந்தையாக கிடந்து அழுது கொண்டிருக்கிறாள். குழந்தையின் அழு குரல் கேட்டு எழுந்து ஓடி வந்த முனிவர், அழகான பெண் குழந்தை கிடைப்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு, வாரி எடுத்து உச்சி மோந்து முத்தமிட்டு தனது மனைவியிடம் கொண்டு போய் கொடுத்தார். அவளும் அந்தக் குழந்தையை ஆசையோடு வாங்கி அன்போடு முத்தமிட்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தாள். அதுவரை அனுபவித்த குழந்தை இல்லாத் துன்பமும் தீர்ந்தது.

இறையருளால் அவளுக்கு பால் சுரக்க, அப்பாலை குழந்தைக்கு ஊட்டினாள். இவ்வாறு பாலுட்டித் தாலாட்டிப் பாராட்டி சீராட்டி "ஆதிரை" என்று பெயர் சூட்டி அன்போடு வளர்த்து வந்தனர். ஆதிரைக்கு எட்டு வயது ஆனது. ஒருநாள் களக்காடு நகர அரசன் கந்தர்வ மலைக்கு வந்தான். ரேணு முனிவரைக் கண்டு வணங்கினான். அங்கே ஆதிரையைப் பார்த்த அவன், அவளைத் தனக்கு தத்து பிள்ளையாகக் கொடுக்க வேண்டும் என்று வேண்டினான். ரேணு முனிவரும் மறுப்பேதும் சொல்லாமல், ஆதிரையை அவனுக்குத் தத்து பிள்ளையாகத் தாரை வார்த்து கொடுத்து விட்டார். ஆதிரையை அழைத்துச் சென்ற அரசன் அவளை அன்போடும் பாசத்தோடும் வளர்த்து வந்தான். ஆதிரை சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டு, அல்லும் பகலும் அவரையே வணங்கி வருகிறாள். நாள்தோறும் நல்ல நல்ல மலர் பறித்து மாலையாக்கி அவருக்குச் சூட்டி மகிழ்ந்தாள். தான் அவருக்கு மலர் மாலை சூட்டுவது போல அவர் தனக்கு மணமாலை சூட்ட வேண்டும் என்று நினைத்தாள். ஒருநாள் சிவபெருமான் ஆதிரைக்கு கட்சித் தந்து, அவளைத் தம்முடன் அழைத்துக் கொண்டு ஓமநல்லூர் கோவிலுக்குச் சென்று விட்டார்.

தனது மகளைக் காணாத மன்னன் மனம் நொந்து போனான். எங்கெல்லாமோ தேடித் பார்த்தான். ஆனால் அவனது மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இறைவன் தான் தனது மகளைக் கடத்திச் சென்று விட்டார் என்பதை அறிந்த மன்னன், இறைவன் மீது வருத்தப்பட்டான். இறைவனே இப்படிச் செய்யலாமா? இது முறையா? இது நியாயமா? என் சம்மதத்துடன் திருமணம் செய்து அழைத்துச் சென்றிருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேனே அப்படி இல்லாமல் இப்படி செய்து விட்டாரே என்று எண்ணி வருத்தம் கொண்டவன் தன்னைத் தானே மாய்த்து கொள்ள நினைத்து அக்னியை வளர்க்கிறான். தீயில் பாய்ந்து மாள்வதற்காக மன்னன் தீயை வலம் வந்தான். அப்போது, மன்னா.! தீயில் பாய்ந்து மாள வேண்டாம். . உன் மகள் ஆதிரையை இறைவனுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு சம்மதம் என்றால், தாமிரபரணிக்குத் தெற்கே உள்ள மந்திரேஸ்வரத்துச் செல் என்று வானிலிருந்து அசரரி வாக்கு ஒலித்தது. இந்த வானொலி மன்னனுக்குத் தேனொலியாய் இருந்தது. உடனே தனது பரிவாரங்களோடு மந்திரேஸ்வரத்துக்குச் சென்றான். அங்கே ஆதிசிவன் ஆதிரையோடு இடப வாகனத்தில் காட்சி தந்தார். இறைவனோடு தனது மகளை கண்ட மன்னன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான். இறைவனின் இணையடியில் வீழ்ந்து வணங்கினான். அவனிடம் வேண்டும் வரம் என்ன என்று இறைவன் கேட்க, அதற்கு மன்னன் எனது மகளை முறைப்படி மணந்து கொள்ள வேண்டும் என கேட்கிறான். மன்னனின் விருப்பப்படியே இறைவன் ஆதிரையை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

சிவபெருமான் ஆதிரையை இரு பாதியாக ஆக்கி, ஒரு பாதியைத் தம் தலையில் சூடிக் கொண்டார். மறு பாதியை மன்னனிடம் கொடுத்து, இதனை இந்த மலையில் இருந்து ஆறாகப் பாயவிடு, அது பச்சையாறு என்ற பெயரில் இந்த மலையில் இருந்து பெருகிப் பாய்ந்து தாமிரபரணியோடு கலந்து விடும் என்று கூறியருளுகிறார். அந்த பச்சையாறு, தாமிரபரணியோடு கலக்கும் இடத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் கங்கையில் இரண்டாயிரம் முறை நீராடிய பலன் கிடைக்கும் என்றும் அந்த ஆறு ஆதிரை நாளில் ஆதிரையால் தோன்றியதால் ஆதிரா நதி என்றும் அழைக்கப்படுகிறது என சூதமா முனிவர் கூறி முடித்து அடுத்ததாக அக்கினி தீர்த்தம் பற்றி சொல்லத் தொடங்கினார்.

தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 11

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram