சுசியம் என்பது தென்தமிழகத்தில் பண்டிகை காலத்தில் பிரபலமாக தயார் செய்யப்படும் ஒரு இனிப்பு வகை ஆகும். இது வழக்கமாக கொழுக்கட்டை மற்றும் போலிக்கு பயன்படுத்தப்படும் கடலை பருப்பு பூரணத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சுசியத்தின் மிருதுவான வெளிப்புற அடுக்கு மைதா மாவு கலவையின் மூலம் தயாரிக்கப்படுகிறது. சில இடங்களில் இட்லி மாவு கலவையும் சுசியத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதே சுசியத்தை கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசி பயிறு பயன்படுத்தி செய்யும் வழக்கமும் இருக்கிறது. எது எப்படியோ இங்கு திருநெல்வேலி பாரம்பரிய முறைப்படி சுசியம் தயார் செய்யும் முறை பற்றி காணலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
கடலைப் பருப்பை நன்றாக தண்ணீரில் கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் குழைய வேக வைத்து, கரண்டியால் மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அதில் வெல்லத்தை தட்டி போட்டு கரைய விடவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அதில் மசித்து வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து நன்றாக கிளறி அதில் எள்ளை வறுத்தும், ஏலக்காயை நுணுக்கியும் போட்டுக்கொள்ளவும். இந்த கலவை ஒன்றிணைந்து கட்டியாக சுருண்டு வரும் வரை அடுப்பில் வைத்து கிளறி விடவும். பின்னர் இதனை அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற வைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது மைதா மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் இருப்புச்சட்டியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய விடவும். உருட்டி வைத்துள்ள கடலை பருப்பு உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து கரைத்து வைத்துள்ள மைதா மாவு கலவையில் முக்கி எடுத்து, சூடேறிய எண்ணெயில் போட்டு பக்குவமாக பொரித்து எடுக்கவும். இதோ சூடான சுசியம் தயார்.
குறிப்பு:
சுசியத்தை தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுத்தால் கூடுதல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.