சுரைக்காய் அடை தோசை

சுரைக்காய் அடை தோசை காலை உணவிற்கு பொருத்தமாக இருக்கும் ஆரோக்கியமான உணவு ஆகும். இந்த சுரைக்காய் அடை தோசை கடலை பருப்பு, துவரம் பருப்பு, அரிசி மற்றும் சுரைக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த அடை தோசை வெறுமனே பருப்பை ஊற வைத்து, அவற்றை சுரைக்காய் துண்டுகளுடன் அரைத்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கீறிய தேங்காய் பற்கள் ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இந்த அடை தோசைக்கு அவியல், மல்லி துவையல் மற்றும் வெல்லப் பொடி தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும். இப்போது இந்த சுரைக்காய் அடை தோசை செய்யும் முறையை பற்றி இங்கு நாம் காணலாம்.

தேவையான பொருட்கள்:

 • இட்லி அரிசி – ஒரு உழக்கு.
 • துவரம் பருப்பு – கால் உழக்கு.
 • கடலை பருப்பு – கால் உழக்கு.
 • சுரைக்காய் – 1.
 • பல்லாரி – 5.
 • மிளகாய் வத்தல் – 10.
 • தேங்காய் – அரை மூடி.
 • மஞ்சள் பொடி – 2 ஸ்பூன்.
 • முருங்கை இலை – 2 கொத்து.
 • கறிவேப்பிலை – 2 கொத்து.
 • உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

 • நல்லெண்ணெய் – 1 கரண்டி.
 • கடுகு / குத்துப் பருப்பு – 2 ஸ்பூன்.
 • பெருங்காயம் – தேவையான அளவு.

செய்முறை:

 1. இட்லி அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு ஆகிய மூன்றையும் தண்ணீரில் கழுவி எடுத்து இரண்டு மணி நேரம் ஒன்றாக ஊற வைக்கவும்.
 2. சுரைக்காயை தோல் நீக்கி சுத்தம் செய்து புட்டு சலிப்பில் வைத்து துருவி வைத்துக் கொள்ளவும்.
 3. பல்லாரியை (பெரிய வெங்காயம்) தோலுரித்து நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
 4. மிளகாயை இரண்டாக வந்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
 5. முருங்கை இலை மற்றும் கறிவேப்பிலையை உருவி தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ளவும்.
 6. தேங்காயை கீறி சிறு சிறு பற்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இரண்டு மணி நேரத்துக்கு பிறகு ஊறிய அரிசி மற்றும் பருப்பை தேவையான தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். அரிசி, பருப்பு கலவை பாதி அரைத்து வரும் போது அதனுடன் துருவி வைத்துள்ள சுரைக்காய், மிளகாய் வத்தல், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் இருப்பு சட்டியை வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றி காய்ந்ததும் கடுகு குத்து பருப்பு போட்டு தாளித்து அதனுடன் உருவிய கருவேப்பிலை, முருங்கை இலை, நறுக்கிய பல்லாரி, மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர் வதக்கிய இந்த கலவையை அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி, அதனுடன் சிறு சிறு பற்களாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் பற்களையும் சேர்த்து நன்றாக கிளறி வைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சுரைக்காய் அடை தோசைக்குரிய மாவு தயார். அடுப்பில் தோசை கல்லை போட்டு, அது சூடானதும் அதில் மாவை தோசையாக ஊற்றவும். தோசை வெந்து கொண்டிருக்கும் போதே அதன் மேல் ஒரு ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி, தோசையை சட்டாப்பையால் திருப்பி போட்டு வேக விடவும். தோசை நன்றாக முறுகி பொன்னிறமாக வந்ததும் அதனை தட்டில் எடுத்து வைக்கவும். இதோ சூடான சுரைக்காய் அடை தோசை தயார். இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள மல்லி இலை துவையல், அவியல் ஏற்றதாக இருக்கும். சிலர் இந்த அடை தோசைக்கு வெல்லத்தை பொடி செய்து தொட்டுக் கொள்வதும் உண்டு.

குறிப்பு:

அடை தோசை மாவில் சுரைக்காய் சேர்க்கும் போது மாவு மிகவும் மிருதுவாக இருக்கும். எனவே தோசை சுடும் போது தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, தோசையை முறுகலாக சுட்டு எடுக்க வேண்டும்.

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.