திருவில்லிபுத்தூர் பங்குனி உத்திரம் திருவிழா

“மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர்” என்று புகழப்படும் திருவில்லிபுத்தூரில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ ஆண்டாள் – ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கோவில். இங்கு வருடந்தோறும் பல திருவிழாக்கள் நடைபெற்று வந்தாலும், அவற்றுள் ஆடிப் பூரத்தை ஒட்டி நடைபெறும் பெரிய தேரோட்ட திருவிழாவும், பங்குனி உத்திரத்தை ஒட்டி நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்ற விழாக்களாகும். இந்த வருடம் பங்குனி உத்திர திருவிழா வரும் பங்குனி மாதம் 7 (20/03/2021) ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற உள்ளது. திருவில்லிபுத்தூரில் நடைபெற உள்ள பங்குனி திருவிழா நிகழ்ச்சிகள்பற்றிய விவரங்களை இங்குக் காணலாம்.

ஸ்ரீ ஆண்டாள் – ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கல்யாண வரலாறு:

முற்காலத்தில் திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் என்று போற்றப்படும் விஷ்ணு சித்தர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் திருவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் வடபத்ரசாயி மீது தீராத பக்தி கொண்டிருந்தார். அங்கு ஒரு நந்தவனத்தை உருவாக்கி அதில் துளசி மற்றும் நறுமணம் கமழும் பலவகை மலர்களை வளர்த்து வந்தார். தினமும் அந்த நந்தவனத்திற்கு வந்து அந்தச் செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றி, அங்குப் பூத்திருக்கும் மலர்களை எல்லாம் பறித்து, தனது வீட்டிற்கு கொண்டு வந்து மாலை தொடுத்து தான் வணங்கும் வடபத்ரசாயிக்கு சாற்றி மகிழ்ந்து வந்தார். தினமும் மாலையைத் தொடுத்து, அதனை வடபத்ரசாயி பெருமாளுக்கு சாற்றிய பின்னர் தான் தன் வீட்டுக்கு வந்து உணவு உட்கொள்வார். ஒருநாள் காலை வழக்கம்போல நந்தவனத்திற்கு சென்று பூக்களைப் பறிக்கும்போது அங்கு ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்கிறது. நந்தவனத்தில் சுற்றும் முற்றும் திரும்பி அழுகுரல் வந்த திசை நோக்கிச் சென்று பார்க்க அங்க ஒரு அழகிய பெண் குழந்தை கிடக்கிறது. நம் தோட்டத்திற்குள் எப்படி இந்தக் குழந்தை வந்தது என யோசித்தவாறே அந்தக் குழந்தையைத் தூக்கி எடுத்து அதன் பசி போக்கும் பொருட்டு உணவு அளிக்கிறார். யாருமே அந்தக் குழந்தைக்குச் சொந்தம் கொண்டாட வராத காரணத்தினால், பெரியாழ்வார் அந்தக் குழந்தையைத் தனது சொந்த மகளாகப் பாவித்துக் கோதை என்னும் பெயர் சூட்டி வளர்த்து வருகிறார். கோதை வளர்ந்து வருகையில் அவளுக்குக் கண்ணன் சம்மந்தப்பட்ட கதைகளைக் கூறி பெரியாழ்வார் வளர்த்து வந்ததால், சிறு வயது முதலே அந்தக் குழந்தை கோதைக்கு கண்ணனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிடுகிறது. கண்ணனை நினைத்தும் அவன் பெருமைகளைக் கேட்டும் தன்னையும் அறியாமல் கண்ணன் மீது காதல் கொள்கிறாள் கோதை. குமாரத்தி பருவத்தை எட்டிய கோதை கண்ணனை நினைத்து உருகி திருப்பாவை நோன்பை கடைபிடிக்கிறாள். தனது தந்தை பெரியாழ்வார் வணங்கும் ரங்கநாதரை, கண்ணனின் அம்சாமாகவே பாவித்து அவன்மீது காதல் கொண்ட கோதை, நந்தவனத்திலிருந்து பெரியாழ்வார் கொண்டு வரும் மலர்களை வாங்கி, அதனைப் பூமாலையாகத் தொடுத்து அரங்கனுக்காக அன்போடு அனுப்பி வைப்பாள். ஒருநாள் அதுபோல மாலை தொடுத்த ஆண்டாள், அது பெருமாளின் திருமேனிக்கு பொருத்தமாக இருக்குமா என ஐயம் கொண்டு, தான் கட்டிய மாலையைத் தானே சூடி கண்ணாடியில் அழகு பார்க்கிறாள். தனக்கே இந்த மாலை இவளவு அழகாக இருக்கும்போது தான் வணங்கும் ரங்கநாதனுக்கு எவ்வளவு அழகாக இருக்கும் என எண்ணி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் கோதை. இதனால் தினமும் கோதை சூடிக் களைந்த பூமாலை தான் திருக்கோவில் ரங்கநாதருக்கு சாத்தப்படும். இப்படி இருக்கையில் ஒருநாள் வழக்கம்போலத் தனது தந்தை கொண்டுவந்த மலர்களை மாலையாகத் தொடுத்து, சூடிக் களைந்து தனது தந்தை கொண்டு செல்லும் பூக்குடலையில் வைத்து விடுகிறாள். பெரியாழ்வாரும் வழக்கம்போல அந்த மாலையை எடுத்துக்கொண்டு திருக்கோவில் சென்று அரங்கனுக்கு சாத்தக்கொடுக்க, அதில் நீண்ட தலை முடி ஒன்று சிக்கியிருந்தது. இதனைக் கண்ட பெரியாழ்வார் மனம் பதைபதைக்கத் தான் ஆண்டவனுக்கு செய்யும் திருத்தொண்டில் களங்கம் நேர்ந்து விட்டதேயென வருந்தி, அந்த மாலையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து கோதையை அழைத்து வேறு மாலை ஒன்றை கட்டச் சொல்கிறார். ஆண்டாளும் உடனே தனது ரங்கனுக்காக வேகமாக மலையொன்றை தொடுத்து, அதனைத் தான் சூடி கண்ணாடியில் அழகு பார்க்க, அதனைப் பெரியாழ்வார் பார்த்து விடுகிறார். கோதை இதென்ன கொடுமை ஆண்டவனுக்கு சாத்தும் மாலையை நீ அணிந்து அழகு பார்ப்பதா? ஐயோ இதென்ன கொடுமை, இந்த மாலையையா இத்தனை நாட்கள் நான் பெருமாளுக்கு சூட்டியுள்ளேன் என நினைத்து மனம் பதைபதைத்தவாறே திருக்கோவிலுக்கு சென்று பெருமாள் சந்நிதியில் அழுது, புரண்டு புலம்புகிறார். அப்போது பெருமாள் அசரீரியாகத் தோன்றி, எனக்குக் கோதை சூடிக் களைந்த மாலை தான் வேண்டுமெனக் கூறி, மஹாலக்ஷ்மியின் அவதாரமாக விளங்கும் கோதை விரைவில் என்கைத்தலம் பற்றுவாள் எனக்கூறி அருள்கிறார். இதனைக் கேட்டு மகிழ்ந்த பெரியாழ்வார், தனது இல்லத்திற்கு சென்று தனது மகள் கோதையை அழைத்துத் தான் கேட்ட அசரீரி வாக்குபற்றிக் கூறி, உன்னை மணம்செய்ய ரங்கநாதரே வரப்போகிறாரெனக் கூறுகிறார். அன்று முதல் ஆண்டாள் சூடிக் களைந்த மாலையே ரங்கநாதருக்கு சாத்தப்பட்டது. தன் மீது காதல் கொண்ட கோதையின் அன்புக்கு மனமிரங்கிய பெருமாள், ஒரு பங்குனி உத்திர நன்னாளன்று திருவில்லிபுத்தூரில் கோதையின் கைத்தலம் பற்றித் திருமணம் புரிந்து கொள்கிறார். திருவரங்கத்து நம்பெருமாளே, பங்குனி உத்திர நாளன்று திருவில்லிபுத்தூர் எழுந்தருளிக் கோதையை கைப்பிடித்தார் என்று கூறப்படுவதும் உண்டு. பெருமாளின் மனதையே ஆண்டதால் கோதை அன்று முதல் ஆண்டாள் என்றே அழைக்கப்பட்டாள். இந்த வரலாற்று நிகழ்வை மையமாகக் கொண்டு பங்குனி உத்திர திருநாள் விமரிசையாக வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.

பங்குனி திருவிழா நிகழ்ச்சிகள்:

முதலாம் திருநாள்: பங்குனி – 7 (20/03/2021)

 • காலை 11.00 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் மிதுன லக்கினத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது.
 • இரவு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ ரங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் புறப்பட்டு வீதியுலா வருதல்.

இரண்டாம் திருநாள்: பங்குனி – 8 (21/03/2021)

 • காலைத் தந்த பல்லக்கில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ ரங்கமன்னார் எழுந்தருளி வீதியுலா வருதல்.
 • இரவு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்- சந்திர பிரபை வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் – சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.

மூன்றாம் திருநாள்: பங்குனி – 9 (22/03/2021)

 • காலைத் தோளுக்கினியானில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ ரங்கமன்னார் எழுந்தருளி வீதியுலா வருதல்.
 • இரவு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்- தங்க பரங்கி நாற்காலி வாகனத்திலும் , ஸ்ரீ ரங்கமன்னார் – அனுமார் வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.

நான்காம் திருநாள்: பங்குனி – 10 (23/03/2021)

 • காலைத் தோளுக்கினியானில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ ரங்கமன்னார் எழுந்தருளி வீதியுலா வருதல்.
 • இரவு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்- ஆதிசேஷ வாகனத்திலும் , ஸ்ரீ ரங்கமன்னார் – கோவர்த்தன பர்வத வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.

ஐந்தாம் திருநாள்: பங்குனி – 11 (24/03/2021)

 • காலைத் தோளுக்கினியானில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ ரங்கமன்னார் எழுந்தருளி வீதியுலா வருதல்.
 • இரவு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்- அன்ன வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் – கருட வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.

ஆறாம் திருநாள்: பங்குனி – 12 (25/03/2021)

 • காலை தோளுக்கினியானில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ ரங்கமன்னார் எழுந்தருளி வீதியுலா வருதல்.
 • இரவு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ ரங்கமன்னார் இரட்டை பரங்கி நாற்காலி வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல்.

ஏழாம் திருநாள்: பங்குனி – 13 (26/03/2021)

 • காலை தோளுக்கினியானில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ ரங்கமன்னார் எழுந்தருளி வீதியுலா வருதல்.
 • இரவு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்- ஸ்ரீ ரங்கமன்னார் கண்ணாடி சப்பரத்தில் எழுந்தருளி நெல் அளவை வைபவம் கண்டு வீதியுலா வருதல்.

எட்டாம் திருநாள்: பங்குனி – 14 (27/03/2021)

 • காலை தோளுக்கினியானில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ ரங்கமன்னார் எழுந்தருளி வீதியுலா வருதல்.
 • இரவு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் – பூம்பல்லக்கிலும், ஸ்ரீ ரங்கமன்னார் – குதிரை வாகனத்திலும் எழுந்தருளி இரவு 8.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் துலாம் லக்கினத்தில் திருத்தேர் கடாட்சம் செய்து வீதியுலா வருதல்.

ஒன்பதாம் திருநாள்: பங்குனி – 15 (28/03/2021)

 • காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் மீன லக்கினத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் – ஸ்ரீ ரங்கமன்னார் கோரதத்தில் எழுந்தருளல்.
 • காலை 7.20 மணிக்கு மேல் கோரதம் வடம் பிடிக்கப்பட்டு வீதியுலா வருதல்.

பங்குனி உத்திரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் – ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கல்யாண விழா: பங்குனி – 15 (28/03/2021)

 • பிற்பகல் 3.00 மணிக்கு மேல் 4.00 மணிக்குள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் – ஸ்ரீ ரங்கமன்னார் மாலை மாற்றிக்கொள்ளும் வைபவம் நடைபெறும்.
 • இரவு 7.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் துலா லக்கினத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் – ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கல்யாண விழா நடைபெறும்.
 • இரவு 9.௦௦ மணிக்கு மேல் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் – கனக தண்டியல் வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் – யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வருதல்.

பத்தாம் திருநாள்: பங்குனி – 16 (29/03/2021)

 • மாலை: ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வெளிப்பிரகாரம் எழுந்தருளி முத்துக்குறி கண்டருளும் வைபவம் நடைபெறும்.
 • இரவு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் – ஸ்ரீ ரங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருள, ஸ்தல புராணம் வாசிக்கும் நிகழ்வும், சப்தாவர்ண புறப்பாடும் நடைபெறும்.

பதினோராம் திருநாள்: பங்குனி – 17 (30/03/2021)

 • காலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் – ஸ்ரீ ரங்கமன்னார் வாழைக்குளத் தெரு தீர்த்தவாரி மண்டபம் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுதல்.
 • மாலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் – ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கோவில் திரும்பி ஆஸ்தானம் சேர்ந்தருளுதல்.

திருவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் – ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவைத் தரிசித்து வேண்டிக்கொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடி வரும்.

About Lakshmi Priyanka

Check Also

வரலட்சுமி நோன்பு

ஆடி மாதம் பிறந்துவிட்டாலே பல்வேறு விசேஷங்கள் மற்றும் திருவிழாக்கள் களைகட்டத் துவங்கி விடும். ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு, ஆடி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!