இன்று வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் சோமாசிமாற நாயனார் குருபூஜை நடைபெற இருக்கிறது.
திருவாரூரை அடுத்துள்ள அம்பர் மாகாளம் என்ற ஊரில் சோமாசி நாயனார் என்னும் அந்தணர் தன் மனைவி சுசீலை உடன் வாழ்ந்து வந்தார். தினந்தோறும் சோமன் ஆகிய சிவனை குறித்து சோம யாகம் நடத்தி வழிபட்டு வந்தார். ஒருநாள் ஈசனின் தோழரான சுந்தரரிடம் சோமாசி மாற நாயனார், தான் நடத்தும் சோம யாகத்திற்கு சிவபெருமான் நேரில் வந்து அவிர்பாகம் பெற வேண்டும் என விண்ணப்பம் செய்தார். அதை ஏற்ற சுந்தரரும் திருவாரூர் தியாகேசனிடம் சோமாசி நாயனாரின் ஆசை பற்றி முறையிட்டார்.
தியாகேசன் சுந்தரரிடம் நாளை நாம் யாகத்திற்கு எழுந்தருள்வோம். ஆனால் எந்த உருவத்தில் என்று கூற முடியாது, சோமாசி நாயனார் எம்மை சரியாக அடையாளம் கண்டு அவிர்பாகம் அளிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதை சுந்தரர் சோமாசி நாயனாரிடம் கூற மிக சிறப்பாக நடைபெற தொடங்கியது யாகம். தியாகேசப் பெருமான் தாழ்ந்த குலம் என்று கூறப்படும் புலையராக வேடங்கொண்டு, வேதம் நான்கையும் நாயாக மாற்றி, நந்தியை இறந்த கன்றாக மாற்றி தோளில் இட்டு, முண்டாசு கட்டிக்கொண்டு, கொட்டு ஏந்தி வர, உமையாகிய கமலாம்பிகையோ புலைச்சி வேடம் கொண்டு, கள் குடத்தினை தலையில் சுமந்து, விநாயகர் முருகன் ஆகியோரை சிறுவர்களாக்கி அழைத்து வருகிறாள்.
இவர்களை கண்ட அந்தணர்கள் எல்லாம் பயந்து ஓட, சோமாசி நாயனாரும் அவர் மனைவியும் சரியாக இவர்களை அடையாளம் கண்டு வரவேற்று அவிர்பாகம் அளிக்க, தியாகராஜன் கமலாம்பாளோடு காட்சி தந்து சோமாசி நாயனாரை ஆட்கொண்டார். இந்த விழா இன்று அம்பர் மாகாளத்தில் சிறப்பாக நடைபெறும். இதனை முன்னிட்டு நெல்லை பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் இன்று சோமாசிமாற நாயனார் குரு பூஜை விழா நடைபெறும்.