சொதி குழம்பு

Sodhi Kuzhambu

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது சொதி குழம்பு.

சொதி குழம்பு சாதத்துக்கு, இடியாப்பத்துக்கு, ஆப்பத்துக்கு ஊத்தி சாப்பிட சுவையாக இருக்கும். திருநெல்வேலினாலே சொதி சாப்பாடு ரொம்ப பிரசித்தம். திருநெல்வேலில இருக்குற முக்கிய சைவ உணவகங்களில் பெரும்பாலும் வெள்ளிக்கிழமையானா மதியம் சொதி சாப்பாடு கிடைக்கும்.

சொதி வைச்சா அதுக்கு தொட்டுக்க கூடவே இஞ்சி பச்சடி, உருளைக்கிழங்கு காரக்கறி, உருளைக்கிழங்கு உப்பேறி இதெல்லாம் கண்டிப்பா இருக்கணுங்கிறது நாக்குருசி கண்டவர்களின் விதிமுறை.

திருநெல்வேலில சைவ பிள்ளைமார் கல்யாணங்களில் கல்யாணம் முடிந்த மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் சார்பாக அனைவருக்கும் சொதி விருந்து அளிக்கப்படும். சொதி சாப்பாடு முடிஞ்சாதான் கல்யாண மண்டபத்தையே காலி பண்ணுவாங்க.

அதேமாதிரி திருமணம் முடிந்து புதுமணத்தம்பதிகளை வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கும் உறவினர்கள் கூட அன்று சொதி சாப்பாடுதான் பரிமாறுவார்கள்.

சைவ உணவுகளை பிடிக்காத நம்ம ஆளுங்க கூட சொதி சாப்பாடுனா கிளம்பி வந்து வட்டச்சம்மணம் போட்டு இலைவிரிச்சு உக்காந்து ஒரு புடி புடிப்பாங்கனா பாத்துக்கோங்களேன்.

அந்த அளவுக்கு சொதியின் சுவை இங்கு பிரசித்தம். நம்ம தம்பி கோமதி சொதி சாப்பாடு சாப்பிடறதுக்காகவே மூனு கல்யாணம் பண்ணிக்கலாம்னு விளையாட்டாக சொல்லுவான்.

Sodhi Kuzhambu1

நான் சொதி வைக்கிறதுல கொஞ்சம் தேறின ஆளு. சென்னையில் என் நண்பர்கள் வீட்டுக்கு போனால் கூட என்னை சொதி சமைக்க கூறுவார்கள். நான் சென்னையில் பணியாற்றிய காலங்களில் ஞாயிற்றுக்கிழமையானா எங்க நண்பர் பட்டாளம் எல்லாம் ஒன்னு கூடி சொதி வைக்கச்சொல்வாங்க. ஒருத்தன் தேங்காயை திருவி பூ ஆக்க, இன்னொருத்தன் வெங்காயம், பூண்டு உறிக்க, ஒருத்தன் காய்வெட்ட, இன்னொருத்தன் தேங்காய்பூவை அரைத்து பால் எடுக்கனு உதவி செய்ய, சொதி குழம்பை நான் தயார் பண்ண எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்.

இப்போ கூட நம்ம குறிச்சி ராமசாமி எனக்கு எப்போ சொதி குழம்பு வைச்சு சாப்பாடு போடுவீங்கனு சண்டைக்கு நிக்குறாப்புல…

இப்போ சொதி குழம்பு செய்முறையை பார்ப்போமா..?

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 100 கிராம்,
சீரகம் – 10 கிராம்,
முருங்கைக்காய் – 1,
பீன்ஸ் – 4,
கேரட் – 1,
உருளைக்கிழங்கு – 1,
பச்சை மிளகாய் – 3,
பச்சை பட்டாணி – 50 கிராம்,
பூடுப்பற்கள் – 10 எண்ணம்,
பொடி வெங்காயம் – 10 எண்ணம்,
உப்பு – தேவையான அளவு,
தேங்காய் பெரியது – 1,
பொரிகடலை – 50 கிராம்,

தாளிக்க,
நல்லெண்ணெய் – தேவைக்கு,
கடுகு, குத்து பருப்பு – தேவைக்கு,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
எலுமிச்சம்பழம் – பாதி.

செய்முறை:

 • முதலில் தேங்காயை துருவி, அரைத்து பால் எடுக்க வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் முதலில் கெட்டி பால் எடுக்க வேண்டும்.
 • பின் அதை தேங்காய் சக்கையில் தண்ணீர் சேர்த்து அரைத்து இரண்டாம் பால் எடுக்க வேண்டும்.
 • பின் மூன்றாவதாகவும் தண்ணீர் சேர்த்து மூன்றாம் பால் எடுக்க வேண்டும்.
 • மூன்று பால்களையும் தனியாக வைத்துக்கொள்ளவும்.
 • பாசிபருப்பை லேசாக மணம் வரும்வரை வறுத்து வேகவைத்துக்கொள்ளுங்கள்.
 • பொரிகடலையை திரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
 • மூன்றாம் பாலில் மேலே குறிப்பிட்ட காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கியும், உரித்த சின்ன வெங்காயம், பூடு பற்களை லேசாக எண்ணெயில் வதக்கியும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
 • காய்கறிகள் வெந்துவரும் போது இரண்டாம் பாலை சேர்க்க வேண்டும். மிளகாய் மற்றும் சீரகத்தை அரைத்து அந்த கலவையையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
 • பின்னர் வேகவைத்த பாசிபருப்பை மசித்து சேர்த்தும், திரித்த பொரிகடலையை தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து அதனையும் குழம்பில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
 • இப்போது அடுப்பில் இருப்புச்சட்டியை வைத்து சூடேறியதும், நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, குத்துபருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி குழம்பில் கொட்டி மீண்டும் ஒரு கொதி வைத்து இறக்கவும்.
 • இறுதியாக முதலில் எடுத்து வைத்த கட்டி தேங்காய்பாலை சேர்த்து, அரைஅளவுள்ள எலுமிச்சம் பழத்தை பிளிந்த சாறு ஊற்றி குழம்பை ஒரு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.

இப்போது சொதி குழம்பு தயார்.

Sodhi Kuzhambu3

சமையல் குறிப்பு உபசாரம்: சங்கரநயினார்

எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் மேலும் படிக்க>>

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.