தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடையம் ஒனறியத்தில் சிவசைலம் கிராமம் அமைந்திருக்கிறது. கருணை நதி என சொல்லக்கூடிய கடனாநதிகரையில் சிவசைலம் அமைந்துள்ளது. அதிரியானூர் பெத்தான்பிள்ளை குடியிருப்பு, இராமநாதபுரம், மற்றும் புதுக்குடியிருப்பு சிவசைலத்தின் துணை கிராமங்கள் ஆகும்.
சிவசைலம் கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 95 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. இந்தகிராமத்தை சுற்று கிராமங்களான ஆழ்வார்குறிச்சி, பூவன்குறிச்சி, செட்டிகுளம், பெத்தன்பிள்ளை குடியிருப்பு, இராமநாதபுரம், அதிரியானூர், சம்பங்குளம், மற்றும் புதுக்குடியிருப்பு கிராமங்கள் சூழ்ந்து இருக்கின்றன.
திருநெல்வேலி நகரத்தில் இருந்துசிவசைலம் கிராமம் 50 கி. மீ தொலைவில் மேற்கில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் இயற்கை சூழலோடு இவ்வூர் பருவ மழைத்தூறலுக்கும் பெயர் போனதாக அமைந்துள்ளது.
சாரல் மழை கொண்ட குளிர்ச்சியான கிராமமாகவும் திகழ்கிறது. தமிழ்நாட்டிலுள்ள சிவசைலம் கிராமத்தில் புகழ்பெற்ற திருத்தலமான சிவசைலநாதர் பரமகல்யாணி அம்மன் கோயில் (Sivasailanathar Paramakalyani Amman Kovil), அமைந்துள்ளது.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியிலிருந்து சுமார் 5 கிமீ தொலைவில் சிவசைலம் கோவில் அமைந்துள்ளது. சிவசைலம் ஸ்ரீ சிவலைபதி பரமகல்யாணி திருக்கோவில் ஒரு தேவாரஸ்தலமாகவும் திகழ்கிறது. கல்வெட்டுகளும், சிற்பங்களும் கொண்ட அழகிய பழமையான மிகப்பெரிய சிவன் கோயிலாகும். கடனாநதிக்கருகில் அமைந்துள்ள சிவசைலம் திருக்கோவிலானது வெள்ளி மலை, மேற்கு தொடர்ச்சி மலை, முள்ளி மலைகளால் சூழப்பட்டு சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக விளங்குகிறது.
இந்த திருத்தலத்தில் முதன்மை கடவுளான சிவபெருமான் சுயம்பு லிங்கமாக மூலஸ்தானத்தில் காட்சிதருகிறார். கோபுரம் சிற்ப வேலைப்பாடுகளுடன் ஐந்து அடுக்கு கொண்டது. தெற்குப் புறமாக விநாயகர் சிலைகள் வடக்குப் புறமாக முருகன் சிலையும் சன்னதிகள் அமைந்துள்ளது.சூரியன், சந்திரன், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி தெய்வங்களின் உருவச்சிலைகளும் இருக்கின்றன. மாமண்டபம், நர்த்த மண்டபம்,, அர்த்த மண்டபம், மற்றும் மணி மண்டபங்கள் பழமையான கோவிலின் அழகை பறைசாற்றுகின்றது. சிவசைலம் கோவிலில் கோவிலில் மணி மண்டபத்தில் நடராசர் சன்னிதி இருக்கிறது.
1916 ஆம் ஆண்டு பூவன்குறிச்சி ஏரியில் சிவசைலம் கோவில் கல்வெட்டு எண்.519 கண்டெடுக்கப்பட்டது. இந்த கல்வெட்டுகள் அனைத்திலும் கிருஷ்ணபுரம், ஆழ்வார்குறிச்சி, கடயம், பூவன்குறிச்சி, ஜமீன்தார்கள் மக்களிடம் வரிவசூல் கோயிலுக்காக செய்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.
கீழ ஆம்பூரில் 1916 ஆம் ஆண்டு மற்றொரு கல்வெட்டும்கிடைத்தது. கல்வெட்டு எண் 518 உடைய இக்கல்வெட்டில் அரசன் இரவிவர்மன் குலசேகரன் பற்றிய வரலாற்று குறிப்புகள் காணப்படுகின்றது.
ஆழ்வார்குறிச்சி:
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி வட்டத்தில் ஆழ்வார்குறிச்சி சிறந்த பேரூராட்சியாக திகழ்கிறது .
சிவசைலம் கோவில் இப்பேரூராட்சியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. சிவசைலம் தலத்தில் பங்குனி மாதம் கடைசி நாள் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதருக்குத் தேர் திருவிழா மிகவும் சிறப்பான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் தை பூசத்தன்று தெப்பத்திருவிழாவும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்தோடு நடைபெறுகிறது.
சிவசைலம் திருக்கோவில் தென்காசிக்கு தெற்கில் 23 கிமீ தொலைவிலும், திருநெல்வேலிக்கு மேற்கில் 58 கிமீ தொலைவிலும், கிழக்கில் விக்கிரமசிங்கபுரம் 10 கிமீ தொலைவிலும், வடக்கில் அம்பாசமுத்திரம் 12 கிமீ தொலைவிலும், அமைந்துள்ளது. அருகில் அமைந்த 2 கிமீ தொலைவில் உள்ள தொடருந்து நிலையம் ஆழ்வார்குறிச்சி ஆகும்.
Image Credit : blogspot.com
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடனாநதி தோன்றுகிறது. திருப்புடைமருதூர் அருகே தாமிரபரணியில் கருணை ஆறு என்னும் புகழோடு கலக்கிறது. மக்களுக்கு அவசியமான குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் கடநாநதி பயன்பட்டு வருகிறது. கடநாநதி சிவசைலம், பூவன்குறிச்சி, ஆம்பூர் வழியாக பாய்ந்து 43 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தாமிரபரணியை அடைகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள கடனாநதி நீர்த்தேக்கமும் ஒன்றாகும் .ஏராளமான சுற்றுலா பயணிகள் கடனா நதி அணை மற்றும் பூங்கா நோக்கி புரிகின்றனர். சுற்றுலா பயணிகள் குற்றாலம் சீசன் மற்றும் சபரிமலை செல்லக்கூடிய மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளை இங்கு காணலாம்.
அனைத்து ரிஷிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார் அத்திரி முனிவர். சிருஷ்டி படைக்கும் பிரம்ம தேவரின் மானச புத்திரராகிய அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா எனும் பதிவிரதையாக விளங்குகிறார். ராமாயணத்தில் அந்த தம்பதியரை பற்றி மிகவும் உயர்வாக குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆயுர்வேதம், ஜோதிடம், வைத்திய சாஸ்திரங்களில் புகழ்பெற்ற அத்திரி முனிவர் தன் மனைவி அனுசுயா தேவியுடன் பல ஆண்டுகளாக அத்திரி மலையில் தவம் செய்ததால் இன்றும் அந்த தம்பதிகள் அங்கு வாழ்வதாக ஐதீகம் நிலவுகிறது. மேலும் அத்திரி மகரிஷியின் சீடர்களான பதஞ்சலி, கொங்கணர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர்,கோரக்கர், கருவூரார், குதம்பைசித்தர் போன்றோரும் தவம் செய்த சிறப்பு தலமாக இந்த இடம் விளங்குகிறது.
சிவசைலம் திருத்தலத்தில் அத்திரி, மகரிஷி மற்றும் கோரக்கர் ஆகியோரின் சன்னதிகள் அமைந்த கோவில்களும் அமைந்துள்ளன. பார்வதி தேவி லிங்க வடிவில் சிவனோடு அமர்ந்து அருள் பாவிக்கும் அற்புதம் திருத்தலமாகும். கல்யாணி என்ற திருநாமத்தோடு உமாதேவி இந்த அத்திரி மலைக்கு வருகை புரிகின்றாள். சிவபெருமானின் உடம்பில் பாதி இடம் கேட்டு தவம் இருந்து வரம் பெற்ற அற்புதமான தலமாகவும் விளங்குகிறது.
சிவ சைலத்தில் அமைந்திருக்கும் சிறப்புகள் பெற்ற அத்திரி மலையில் சித்தர்கள் பலர் தெய்வீக அனுபவங்கள் பெற்றிருக்கின்றனர். பல நூற்றாண்டுகளாக ஆன்மீக விளக்கங்கள் பெறுவதற்கு சித்தர்கள் அத்திரி மலையை நோக்கி நாடி செல்கின்ற அருமையான தலமாகவும் திகழ்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார் குறிச்சியிலிருந்து 8 கி.மீ தொலைவில் சிவசைலம் தலத்தில் கடனாநதிக்கு அருகில் அத்திரி மலை கோவில் அமைந்துள்ளது. இந்த மலை கோயிலுக்கு வருபவர்கள் வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகு கோவிலை சுற்றிப் பார்த்து தரிசிக்க வேண்டும்.
உலக நல்வாழ்வு ஆசிரமம் தென்காசி மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் எனும் வனத்தில் அமைந்திருக்கிறது.முற்றிலும் இயற்கை உணவு மட்டுமே வழங்கக்கூடிய விதமாக இந்த நல்வாழ்வு ஆசிரமம் திகழ்கிறது. அனைத்து விதமான நோய்களுக்கு இயற்கை வாழ்வியல் சிகிச்சை அளிக்கக் கூடிய இந்த இடத்தில் உண்ணக்கூடிய உணவு முறை ஈடு இணை கிடையாது. அவ்வளவு சுவையான உணவு பரிமாறப்படுகிறது.
இயற்கை கொடுத்த கனிகளையும், காய்களையும் இயற்கையாக உண்பதும் துாய நீர், பஞ்ச பூத ஆற்றல்களோடு இயைந்து வாழ்தல் என்பதும் இயற்கை வாழ்வியல் ஆகும். உலக நல்வாழ்வு ஆசிரமத்தில் இத்தகையை எளிய வாழ்வியலுக்கு ஏற்ற வகையில் இயற்கை உணவுகளும் இயற்கை மருந்துகளும் கொடுப்பதால் நோய்கள் விரைவில் குணமாகின்றன.
ஆசிரம நிர்வாகி டாக்டர் ஆர் நல்வாழ்வு அவர்கள்: ‘இயற்கை மருத்துவம் என்பது நம்முடைய உடலில் உள்ள நோய்களை குணப்படுத்தக்கூடிய உயிராற்றலை ஏற்படுத்தும் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையால் ஏராளமானோர் நோய்கள் குணமாகி ஆரோக்கியமான வாழ்வு பெறுகின்றனர்’ என்கிறார்
1969 ஆம் ஆண்டு டாக்டர் ஆர் நல்வாழ்வு அவர்களின் தந்தையும், தமிழ் அறிஞரும் ஆகிய மூ.ராமகிருஷ்ணன் தனது குருவாகிய ம.கி.பாண்டுரங்கனார் வழிகாட்டுதல்படி ஆசிரமத்தை நிறுவினார். தந்தை கற்றுக் கொடுத்த இயற்கை மருத்துவ சேவையை தொடர்ந்து மகன் ஆர்.நல்வாழ்வு அவர்கள் நடத்திக் கொண்டு வருகிறார்.
உலக நல்வாழ்வு மையமானது ‘உடல் கழிவை நீக்கி ஆரோக்கிய வாழ்வு பெரும் இயற்கை மருத்துவம்’ எனும் தத்துவத்துக்கு ஏற்ப தன்னுடைய சேவையை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த ஆசிரமத்தில் இயற்கை உணவு மட்டுமல்லாது யோகா, தியானம் முறைகளும் முறையாக கற்பிக்கப்படுகின்றது. இதனால் வெளிநாட்டினரும் இங்கு தங்கி பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கிய வாழ்வு பெறுகின்றனர்.
தென்காசியிலிருந்து 25 கிமீ தொலைவிலும், திருநெல்வேலி நகருக்கு மேற்கே 55 கிமீ தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது.
திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் நோக்கிச் செல்லுங்கள். அம்பாசமுத்திரத்திலிருந்து தென்காசியை நோக்கிச் செல்லுங்கள் (SH-40). நீங்கள் கீழ ஆம்பூர் பேருந்து நிறுத்தத்தை அடையும் வரை தொடரவும். அம்பாசமுத்திரத்திலிருந்து கிழ ஆம்பூர் பேருந்து நிலையம் வரை கிட்டத்தட்ட 13 கி.மீ. ஆம்பூர்-பாபநாசம் சாலையில் இடதுபுறம் செல்லவும்.
கோவன்குளத்தில் உள்ள கிழ ஆம்பூர் ரயில்வே கிராசிங் வரை நேராக செல்லவும். கடந்து சென்ற பிறகு வலதுபுறம் திரும்பவும். நீங்கள் இரண்டு ஏரிகளைக் கடந்து செல்வீர்கள். அப்போது பூவாங்குறிச்சி பெயர் பலகையை பார்க்கலாம். நேராகப் பயணித்தால் கருத்தப்பிள்ளையூரை அடையலாம். பிறகு நேராகப் பயணம் செய்து சிவசைலம் கோயிலை அடையலாம்.
தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரம் நோக்கி (SH-40), ஆழ்வார்குறிச்சியை அடையவும். சிவசைலம் சாலையில் வலதுபுறம் செல்லுங்கள். நேராக ஓட்டினால் ஆழ்வார்குறிச்சி ரயில் பாதையைக் கடக்கலாம். நேராகப் பயணம் செய்தால் சிவசைலம் கிராமத்தை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் ஆழ்வார்குறிச்சி, சிவசைலத்திலிருந்து 3.5 கி.மீ. தினமும் 8 பயணிகள் ரயில்கள் செல்கின்றன: திருநெல்வேலியில் இருந்து செங்கட்டைக்கு 4 ரயில்கள் மற்றும் செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு 4 ரயில்கள் செல்கின்றன.