ஆழ்வார்குறிச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி, கடனா நதிக்கரையில் அமையப்பெற்றுள்ள ஸ்தலம் சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மை உடனுறை ஸ்ரீ சிவசைலப்பர் திருக்கோவில். இந்தத் திருக்கோவில் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளதால் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இந்தக் கோவிலில் வருடந்தோறும் பல விழாக்கள் நடைபெற்றாலும் பங்குனி மாதம் நடைபெறும் தேரோட்ட திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சார்ந்த பக்தர்கள் அனைவரும் இந்தத் தேரோட்டத்தில் பங்குபெற்றுத் திருத்தேர்களை இழுப்பார்கள். இந்தக் கோவிலில் சுவாமி சிவசைலப்பருக்கு ஒரு பெரிய தேரும், பரமகல்யாணி அம்மைக்கு ஒரு தேரும் என மொத்தம் இரண்டு தேர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவசைலம் பங்குனி திருவிழா சிறப்புகள்:
சிவசைலம் திருக்கோவிலானது தென்காசி - அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள ஆழ்வார்குறிச்சி என்னும் ஊரிலிருந்து மேற்கே சுமார் 7 கி.மீத்தொலைவில் அமையப்பெற்றுள்ளது. இந்தக் கோவிலின் வருடாந்திர பெரிய உற்சவமான பங்குனி திருவிழாவானது இந்தச் சிவசைலம் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கி, அன்று முதல் பன்னிரண்டு நாட்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறும். சிவசைலம் கோவிலில் கொடியேற்றம் ஆன அன்று மாலையே இத்திருக்கோவிலிலிருந்து விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், பிட்சாடனர் மற்றும் பரிவார மூர்த்திகள் சப்பரங்களில் எழுந்தருளி ஆழ்வார்குறிச்சியில் உள்ள திருவிழா கோவிலைச் சென்று அடைந்து விடுவார்கள். அன்றிலிருந்து ஆழ்வார்குறிச்சியில் வைத்தே சித்திரை முதல் நாள்வரை பன்னிரண்டு நாட்கள் திருவிழா வைபவங்கள் நடைபெறும். இந்தச் சிவசைலம் கோவிலின் பங்குனி திருவிழா நடைபெறுவதற்காக ஆழ்வார்குறிச்சியில் நான்கு ரத வீதிகளுடன் கூடிய தனிக்கோவில் உள்ளது.
இந்தச் சிவசைலம் திருக்கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் பழைய காலம் தொட்டு இன்று வரை சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடைபெறும்போது கட்டியம் கூறும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இங்கு நடைபெறும் பங்குனி திருவிழாவின் நான்காம் நாள் அம்மையப்பர் இடப வாகனங்களில் புறப்பட்டு உலா வரும்போது, அவர்களுக்கு முன்னதாகக் காவல் தெய்வமாக ஸ்ரீ தர்ம சாஸ்தா யானை வாகனத்தில் எழுந்தருளி உலா வருவார்.
இங்கு நான்காம் திருநாளன்று இடப வாகனத்தில் எழுந்தருளிய அம்மையப்பர் வீதிகளில் உலா வந்து மண்டபம் சேர்ந்த பின்னர், இரண்டு சிவாச்சாரியார்கள் வைதீக கோலத்துடன் வந்து அம்மைக்கும் அப்பனுக்கும் ஒரே நேரத்தில் இரட்டை சோடச தீபாராதனை நிகழ்த்துவார்கள்.
அதே போலத் தேரோட்டம் நடைபெற்று முடிந்த பின்னரும் சுவாமி, அம்பாள் மண்டபத்தில் எழுந்தருளியிருக்க ஒரே நேரத்தில் இரட்டை சோடச தீபாராதனை நடைபெறும்.
இந்தப் பங்குனி திருவிழாவின் ஏழாம் திருநாள் அன்று இரவு சிவசைலத்திலிருந்து வெள்ளி சப்பரத்தில் சிவப்பு சாத்தி திருக்கோலத்தில் புறப்பாடாகி வரும் நடராஜரை, ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஸ்ரீ சிவசைலப்பர் , ஸ்ரீ பரமகல்யாணி அம்மை பூம்பல்லக்குகளில் எழுந்தருளி எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்வு வெகுகோலாகலமாக நடைபெறும்.
பின்னர் மறுநாள் இரவு பச்சை சாத்தி கோலம் பூண்டு எழுந்தருளும் நடராஜரை, சுவாமி ஸ்ரீ சிவசைலப்பர் - ஸ்ரீ பரமகல்யாணி அம்மை ரத வீதிகளில் எழுந்தருளிச் சிவசைலம் கோவிலுக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெறும்.
பங்குனி திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான சித்திரை முதல் நாள் (தமிழ் வருடப்பிறப்பு) அதிகாலை ஸ்ரீ பரமகல்யாணி அம்மை, சுவாமி ஸ்ரீ சிவசைலப்பரின் மடியில் தலைவைத்து சயனித்திருக்கும் கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளுவது சிறப்பம்சம் ஆகும்.
இத்தனை சிறப்புகள் மிக்க சிவசைலம் திருக்கோவிலின் பங்குனி திருவிழா நிகழ்வுகளைப் பற்றி இங்குக் காண்போம்.
பங்குனி திருவிழா நிகழ்வுகள்:
முதலாம் திருநாள்: பங்குனி - 21 (03/04/2021)
இரண்டாம் திருநாள்: பங்குனி - 22 (04/04/2021)
மூன்றாம் திருநாள்: பங்குனி - 23 (05/04/2021)
நான்காம் திருநாள்: பங்குனி - 24 (06/04/2021)
ஐந்தாம் திருநாள்: பங்குனி - 25 (07/04/2021)
ஆறாம் திருநாள்: பங்குனி - 26 (08/04/2021)
ஏழாம் திருநாள்: பங்குனி - 27 (09/04/2021)
எட்டாம் திருநாள்: பங்குனி - 28 (10/04/2021)
ஒன்பதாம் திருநாள்: பங்குனி - 29 (11/04/2021)
பத்தாம் திருநாள்: பங்குனி - 30 (12/04/2021)
பதினோராம் திருநாள்: பங்குனி - 31 (13/04/2021)
பன்னிரெண்டாம் திருநாள்: சித்திரை - 1 (14/04/2021)
சுமார் பன்னிரெண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெறும் இந்தப் பங்குனி திருவிழாவில் பங்குபெற்று ஸ்ரீ சிவசைலநாதரையும், ஸ்ரீ பரமகல்யாணி அம்மையையும் வணங்கினால் சகல வளங்களும் பெற்று இன்புற்று வாழலாம்.