Sivasailam Kovil

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் இயற்கை வளம் கொழிக்கும் சோலைகளின் மத்தியில் அமையப் பெற்றுள்ளது சிவசைலம் பரமகல்யாணி அம்மை உடனுறை சிவசைலநாதர் திருக்கோவில்.

தேவாரத்தில் வைப்புத் தலமாக வைத்து பாடப்பட்டுள்ள இக்கோவிலின் புராணப் பெயர் “அத்தீச்சுவரம்” ஆகும்.

சுவாமி பெயர்: சிவசைலநாதர்.
அம்மை பெயர்: பரமகல்யாணி அம்மை.
திருக்கோவில் விருட்சம்: கடம்ப மரம்.
தீர்த்தங்கள்: கடனை ஆறு (கடனா நதி).
சிறப்பு சன்னதி: நந்தி, திருவிழா கோவில் சிவந்தியப்பர் சன்னதி.

திருக்கோவில் வரலாறு:
முற்காலத்தில் கடம்ப வனமாக இருந்த இந்த பகுதியில் அத்திரி முனிவர், அகத்தியரின் வழிகாட்டுதல் படி, இங்கு ஆசிரமம் அமைத்து தன் மனைவி மற்றும் சீடர்களோடு தங்கி இருந்து தவம் இயற்றி வந்தார். அப்போது ஒரு நாள் அவரின் சீடர்கள் பூஜைக்கு தேவையான மலர்களை சேகரிக்க சென்ற வேளையில், ஓர் இடத்தில் பசுவொன்று தாமாக வந்து பால் சொறிவதை கண்டு அதிசயித்து நிற்கின்றனர். உடனே அந்த இடத்தை தோண்டி பார்க்க அங்கு சுயம்பு உருவில் ஓர் லிங்கம் காட்சியளித்தது. உடனே அதனை தங்கள் குருவாகிய அத்திரி முனிவரிடம் தெரிவிக்க, அவரும் அங்கு வந்து அந்த லிங்கத்தை எடுத்து பூஜித்து வந்தார். அவருடைய பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் அத்திரி மகிரிஷிக்கு காட்சியளிக்கிறார். அவரை போற்றி வணங்கிய அத்திரி மகரிஷி அகத்தியருக்கு திருமண கோலம் காட்டியதை போல தனக்கும் திருமண கோலம் காட்டியருள வேண்டுகிறார். அவரின் வேண்டுதலை ஏற்று அத்திரி மகரிஷிக்கு மேற்கு நோக்கி இடப வாகனத்தில் பார்வதியோடு அமர்ந்தபடி திருமண கோலம் காட்டியருளினார்.

பிற்காலத்தில் அத்திரி முனிவர் வணங்கிய அந்த சுயம்பு லிங்கம் புற்று சூழ்ந்து மறைந்து விட்டது.

இதற்கு பின் வந்த காலத்தில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய இந்த பகுதியை சுதர்சன பாண்டியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு மக்கள் செல்வம் இல்லாத காரணத்தினால் அந்த வரம் வேண்டி முனிவர்களை வைத்து அசுவ மேத யாகம் நடத்துகிறான். சீரும் சிறப்புமாக நடைபெற்ற இந்த யாகத்தின் முடிவில் எந்த திசைக்கும் சென்று திரும்பக் கூடிய தனது அரசாங்க குதிரை ஒன்றை அலங்கரித்து அதனுடன் தன் சகோதரன் ஒருவனையும் அனுப்பி வைக்கிறான். அந்த குதிரை முதலில் தெற்கு திசையிலும், இரண்டாவதாக கிழக்கு திசையிலும் சென்று வெற்றி வாகை சூடி திரும்பியது. அடுத்ததாக அந்த குதிரையை மேற்கு திசை நோக்கி செலுத்த, அந்த குதிரை இந்த சிவசைலம் பகுதிக்குள் வரும்போது, சிவபெருமானின் ஆணைக்கு இணங்கி முருகப்பெருமான் அந்தணச் சிறுவனாக சென்று அந்த குதிரையை அடக்கி ஓர் மரத்தில் கட்டுகிறார். இதனால் வெகுண்ட மன்னனின் சகோதரன் அந்த சிறுவனிடம் சண்டையிட்டு தோற்கிறார். இந்த விஷயம் அறிந்த சுதர்சன பாண்டியனும் கோபம் கொண்டு அவ்விடத்திற்கு வர, சிறுவனுக்கும் மன்னனுக்கும் இடையே சண்டை நீள்கிறது. இறுதியில் மன்னனின் மணி முடி கீழே விழ சிறுவனால் மன்னன் வீழ்த்தப்படுகிறார். அப்போது முருகப்பெருமான் தன் சுய உருவம் காட்டி அங்கு புற்றுக்குள் சுயம்பு லிங்கம் இருப்பதையும் சுட்டிக் காட்டி மறைந்து விடுகிறார்.

அந்த நேரத்தில் மன்னன் தான் என்ற அகப் பற்றும், தான் நடத்திய வேள்வி குதிரை இது என்ற புறப் பற்றும் நீங்கி தெளிவு பெறுகிறான். உடனே சுயம்பு லிங்கத்தை வெளியே எடுத்து வழிபட, அவன் செய்த வேள்வியின் பலனாக அவனுக்கு முருக பெருமானே மகனாகத் தோன்றினார். அந்த மகனுக்கு குமார பாண்டியன் எனப் பெயர் வைத்து மகிழுந்த மன்னன், தனக்கு அருள்புரிந்த சிவசைலநாதருக்கு கோவில் எழுப்பினான் என்பது இத்தல வரலாறாக கூறப்படுகிறது.

பரமகல்யாணி அம்மை வரலாறு:

இத்தலத்தில் அம்பாளுக்கு தனி சன்னதி கட்ட ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில், சிவசைலத்திற்கு அருகே உள்ள சிநேகபுரி (தற்போதைய ஆம்பூர்) என்னும் ஊரில் வாழ்ந்த அந்தணர் ஒருவரின் கனவில் தோன்றி அந்த ஊரில் உள்ள கிணறு ஒன்றில் அம்மையின் திருமேனி ஒன்று நான்கு கரங்களுடன் ஜலவாசமாக இருந்து வருவதாகவும், அந்த அம்பாள் திருமேனியை எடுத்து சிவசைலத்தில் கட்டப்படும் கோவிலுக்குள் பரமகல்யாணி என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டிக்கும் படி கூறியருள்கிறார் சிவபெருமான். அந்த அந்தணரும் தான் கண்ட கனவை ஊர் மக்களுக்கும், மன்னனுக்கும் தெரியப்படுத்தி, அந்த குறிப்பிட்ட கிணற்றில் தேடிட சிவபெருமான் கூறியது போலவே ஒரு நான்கு கரங்கள் கொண்ட அழகிய அம்மையின் திருவுருவ சிலை கிடைக்க பெற்றது. அந்த அம்மையின் திருவுருவை மங்கள வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து எடுத்து வந்து சிவசைலம் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.

சிவசைலநாதர் சடைமுடி காட்டிய வரலாறு:
சிவசைலம் திருக்கோவிலை கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்து வைத்த சுதர்சன பாண்டிய மன்னன் பிற்காலத்தில் ஒர் நாள் சிவசைலநாதரை தரிசிக்க அழகிய மாலை பொழுதில் கோவிலுக்கு வர, அப்போது கடனை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது. இதனால் மன்னன் ஆற்றை கடந்து கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அதற்குள் இருட்டி விடவே அர்த்தசாம வழிபாடு முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. எனவே மன்னனுக்கு, சுவாமிக்கு சாற்றிய பூ மாலை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர் கொண்டு வந்து தருகிறார். அதனை பெற்று மகிழ்ந்த மன்னன் மாலையை கண்களில் ஒற்றிக் கொள்ள முற்பட்ட போது அதில் பெண்ணின் நீள தலை முடி ஒன்று இருப்பதை கண்டு சினம் கொள்கிறார். சுவாமிக்கு சாற்றிய மாலையில் கூந்தல் முடி எப்படி வந்தது என ஆவேசமாக கேட்க, செய்வதறியாத அர்ச்சகர் அது சிவசைலநாதரின் தலையில் உள்ள சடைமுடியே என கூறிவிடுகிறார். என்ன சுவாமியின் தலையில் சடைமுடியா? அந்த அதிசயத்தை நாளை எனக்கும் காட்ட வேண்டும் எனக் கூறி சென்று விடுகிறார். மறுநாள் கோவில் திறக்கப்பட மீண்டும் மன்னன் தன் படைகளுடன் திருக்கோவிலுக்கு வருகிறார். தான் கூறிய பொய்யை நினைத்து பயந்து சிவசைலநாதரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை காத்து அருளும் படி அர்ச்சகர் மனதினுள் வேண்டிக் கொண்டே, மன்னன் முன்னிலையில் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த நாகாபரணத்தை விலக்கி காட்டிட, என்ன அதிசயம் சிவசைலநாத லிங்கத் திருமேனி சடை முடியோடு காட்சியளித்ததாம். இதனைக் கண்டு அதிசயித்த மன்னன் சிவபெருமானை போற்றி துதித்து, அர்ச்சகருக்கும் வெகுமதி வழங்கி சிறப்பு செய்தான் என்ற ஒரு வரலாறும் இங்கு கூறப்படுகிறது.

சுவாமி சிவசைலநாதர்:
இங்குள்ள இறைவன் சிவசைலநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் சற்றே சாய்ந்த லிங்கத் திருமேனியாய் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவர் அர்ச்சகரை காக்க சடைமுடியோடு காட்சியளித்ததால், இன்றும் இந்த லிங்கத் திருமேனியின் பின்புறம் சடைமுடிகளின் ரேகைகள் உள்ளன. இதனை நாம் பிரகார சுற்றுச்சுவரில் உள்ள சாளரம் வழியாக தரிசிக்கலாம்.

அம்மை பரமகல்யாணி:
இங்குள்ள அம்மை பரமகல்யாணி கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட சுயம்பு திருமேனி ஆகும். இந்த அம்மை நான்கு கரங்கள் கொண்டு அழகே உறுவாக புன்முறுவல் பூத்த முகத்தவளாய் அளவில் சற்றே பெரிய உருவில் மேற்கு திசை நோக்கி காட்சித் தருகிறாள். இவளுக்கு மூக்கில் சாத்தப்படும் புல்லாக்கு மற்றும் மூக்குத்தி அழகுக்கே அழகு சேர்க்கும் வண்ணம் காட்சிதரும்.

உயிர் பெற்ற நந்தி:
முற்காலத்தில் தேவலோகத்தை ஆட்சிபுரிந்த தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டு விடுகிறது, அதற்கு விமோசனமாக இறைவன் மேற்கு திசை நோக்கி சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் இந்த கடம்ப வனத்தில் சுயம்பு லிங்கத்துக்கு எதிராக நான்கு வேதங்களின் முழக்கம் கேட்கும்படி ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்ரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறுகிறான் இந்திரன். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி, சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று எழ, மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியதாம். இந்த உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது நாம் பார்க்க முடியும். இந்த நந்தி தற்போதும் எழுந்திருக்க தயாராகும் கோலத்திலேயே அற்புதமாக காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும்.

திருவிழாக்கோவில் சிறப்பு:
இந்த சிவசைலநாதர் பரமகல்யாணிக்கு பங்குனி மாதம் நடைபெறும் பன்னிரெண்டு நாட்கள் திருவிழாவிற்காக இக்கோவிலில் இருந்து சுமார் 7கி.மீ தொலைவில் ஆழ்வார்குறிச்சி ஊர் முகப்பில் தனியாக ஒரு கோவில் அமையப்பெற்றுள்ளது. இங்கு தான் பங்குனி திருவிழாவின் போது சிவசைலத்தில் கொடியேற்றம் ஆகி, சுவாமி சிவசைலப்பர் மற்றும் பரமகல்யாணி அம்பாள் சப்பரத்தில் புறப்பட்டு திருவிழாக் கோவில் சேர, பன்னிரெண்டு நாட்கள் திருவிழாவும் இந்த திருவிழாக் கோவிலில் தான் நடைபெறும். இந்த கோவிலில் உள்ள மூலவரின் பெயர் சிவந்தியப்பர் ஆகும்.

பங்குனி திருவிழாவின் பதினொராம் நாள் இங்கு தேரோட்டம் வெகு விமரிசையாய் நடைபெறும். இங்குள்ள சிவசைலநாதர் தேர் இப்பகுதி தேர்களிலேயே மிகவும் பெரிய தேர் என்று சிறப்பித்து கூறப்படுகிறது. இங்கு பரமகல்யாணி அம்மைக்கும் தனித்தேர் உள்ளது. இந்த கோவிலின் தேரடி மண்டபத்தின் கீழ் தான் குளத்தூர் ஐயன் சாஸ்தா கோவிலும் அமையப்பெற்றுள்ளது.

திருக்கோவில் அமைப்பு:
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்கு மிக அருகாமையில் பச்சை பசேல் வயல் வெளிக்கு நடுவே இயற்கை சூழலில், கடனை நதியின் தென்கரையில், ஐந்து நிலை ராஜ கோபுரத்தோடு மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது சிவசைலம் திருக்கோவில்.

ராஜ கோபுரத்தின் குடவருவாயில் வழியாக உள்ளே சென்றால் குடவறையின் கீழ்பகுதியில் இத்தல விநாயகரும், அதிகார நந்தியும் காட்சித் தருகின்றனர். அவர்களை வணங்கி உள்ளே சென்றால் நேராக சுவாமி சன்னதியும், தென்புறம் அம்மை சன்னதியும் கொண்டு இரண்டு பகுதிகளாக காட்சித்தருகிறது.

உள்ளே நுழைந்ததும் முன் மண்டபத்தில், பலிபீடம், நந்தி மற்றும் கொடிமரம் ஆகியவை அமையப்பெற்றுள்ளது. அவற்றை கடந்து சுவாமி சன்னதிக்கு படியேறி உள்ளே சென்றால் நேராக அர்த்தமண்டபம் அதை தாண்டி கருவறை. கருவறையில் சிவசைலநாதர் காட்சியளிக்கிறார். முன் மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி வெள்ளி அம்பல மேடையில் சிவகாமி அம்மையோடு நடராஜர் திருநடன காட்சித் தருகிறார். அவருக்கு எதிரே மேற்கு திசை நோக்கி தனி சன்னதியில் இத்தல உற்சவ மூர்த்தி சிவசைலநாதர் மற்றும் பரமகல்யாணி அம்மை காட்சித் தருகிறார்கள்.

சுவாமி சன்னதிக்கு தென்புறம் தனி சன்னதியில் அம்மை பரமகல்யாணி காட்சித் தருகிறாள். அம்மை சன்னதியின் முன்புறம் தெற்கு நோக்கிய பள்ளியறை காணப்படுகிறது. அவளின் முன் மண்டபம் முழுவதும் சலவை கற்கள் பதித்து அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் பிரகார திருச்சுற்றில் முறையே விநாயகர், சுப்பிரமணியர், சனீஸ்வரர், சண்டிகேசுவரர், துர்க்கை, அன்னபூரணி, பைரவர், சந்திரன், சூரியன், தட்சிணாமூர்த்தி, அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுரதேவர், நெல்லையப்பர், காந்திமதியம்மை ஆகியோர் பரிவார மூர்த்திகளாக தனி சன்னதியில் காட்சித் தருகிறார்கள்.

இத்திருக்கோவிலுக்கு எதிரே நந்தவனம் அமைக்கப்பட்டு அதில் 27 நட்சத்திரத்திற்குரிய 27 விருட்சங்களும், 12 ராசிகளுக்குரிய 12 விருட்சங்களும் வளர்க்கப்படுகின்றன.

கோவிலுக்கு வெளியே வடப்புறம் கடனை ஆற்றின் கரையில் அழகிய தீர்த்தவாரி மண்டபமும் அமையப்பெற்றுள்ளது.

திருக்கோவில் சிறப்புக்கள்:
இந்த கோவில் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது.

இங்குள்ள சுவாமி சிவசைலநாதர், பரமகல்யாணி அம்மை இருவருமே சுயம்பு திருமேனி ஆகும்.

இங்கு கங்கை நதியே கடனை நதியாக பாய்வதாக சிறப்பித்து கூறப்படுகிறது.

இத்தலத்தில் உறையும் மூலவர் சிவசைலநாதரை நான்கு திசைகளில் இருந்தும் வழிபடலாம். மேற்கு திசையில் கருவறை வாயில் வழியாகவும், மற்ற மூன்று திசைகளில் சுற்றுச்சுவரில் உள்ள சாளரங்களின் வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம்.

இங்குள்ள சிவசைலநாதரின் பின்பக்கம் சடைமுடி ரேகைகள் காணப்படுகின்றன.

பாண்டிய நாட்டில் பிரசித்தி பெற்ற அநேக கோவிலின் அம்மைகள் இருகரம் கொண்டவர்களாக காட்சியளிக்க, இங்கு அம்மை பரமகல்யாணி நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிப்பது சிறப்பம்சம்.

இங்குள்ள உற்சவர் பரமகல்யாணி அம்மையும் நான்கு கரங்கள் கொண்டு, கோபுரம் அமைப்புடைய திருவாச்சி கொண்டு காட்சியளிக்கிறாள்.

இங்குள்ள உற்சவர் பரமகல்யாணி அம்மைக்கு தங்கக் கை கடிகாரம் ஆபரணமாக அணிவிக்கப்படுவது சிறப்பம்சம்.

இந்த கோவிலின் பங்குனி திருவிழா இங்கு நடைபெறாமல், இங்கிருந்து சுமார் 7கி.மீ தொலைவில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் நடைபெறுவது சிறப்பம்சம். இந்த திருவிழாவுக்காக தனியாக ஒரு கோவில் உள்ளதும் சிறப்பம்சம்.

பங்குனி திருவிழா நடைபெறும் ஊரான ஆழ்வார்குறிச்சி சுவாமி சிவசைலநாதரின் ஊர் என்பதால் இவ்வூர் மக்கள் மாப்பிள்ளை வீட்டார் எனவும், அருகில் உள்ள ஆம்பூர் கிணற்றில் இருந்து பரமகல்யாணி கண்டெடுக்கப்பட்டதால் ஆம்பூர் மக்கள் பெண் வீட்டார் எனவும் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

மேலும் இங்கு பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு சைலப்பன், சைலு என்றும் பெண் குழந்தைகளுக்கு பரமகல்யாணி, கல்யாணி என்றே பெரும்பாலும் பெயர் சூட்டுகிறார்கள்.

இங்கு வயல்களில் அறுவடையாகி வரும் நெல்லை கூட முதல் அளவையாக லாபம் என்று கூறாமல் கல்யாணி என்று கூறியே அளக்கிறார்கள்.

முக்கிய திருவிழாக்கள்:
பங்குனி மாதம் சிவசைலத்தில் கொடியேற்றமாகி பன்னிரெண்டு நாள் திருவிழா நடைபெறும். கொடியேற்றம் முடிந்து விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆழ்வார்குறிச்சி திருவிழா கோவில் எழுந்தருள திருவிழா நடைபெறும். இவ்விழாவில் பதினொராம் திருநாளான பங்குனி மாத கடை நாளன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

சித்திரை மாத பிறப்பின்று அதிகாலை அம்மை பரமகல்யாணி, சுவாமி சிவசைலநாதர் மடியில் தலை வைத்து சயனித்த கோலத்தில் எழுந்தருள்வாள். அன்று இரவு திருவிழாக்கோவிலில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு சிவசைலம் சேர்ந்து இரவில் கடனை ஆற்றில் விசு தீர்த்தவாரி நடைபெறும்.

சித்திரை மாதம் வசந்த அழைப்பு திருவிழாவுக்காக மூன்று நாட்கள் சுவாமி அம்மை ஆம்பூர் எழுந்தருளுவார்கள். அங்கு வைத்து வசந்த திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவுக்காக பங்குனி திருவிழாவின் போதே ஆழ்வார்குறிச்சி மாப்பிள்ளை வீட்டாரும், ஆம்பூர் பெண் வீட்டாரும் பேசி நல்ல நாள் குறித்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வார்கள். குறிப்பிட்ட நாளில் சுவாமி அம்பாள், அம்மையின் பிறந்த ஊரான ஆம்பூர் எழுந்தருளி மூன்று நாட்கள் சிறப்பிப்பார்கள். விழா முடிந்து சுவாமி, அம்பாள் திரும்பி வருகையில் ஊர் மக்கள் சீர் கொடுத்து கண்ணீர்மல்க தங்கள் வீட்டு பெண்ணை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பது போல வழியனுப்பி சிறப்பு செய்கிறார்கள்.

ஆடி மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இங்கு நந்தி களபம் சிறப்பாக நடைபெறும். அன்று நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்வித்து, சந்தனக் காப்பிட்டு அலங்காரம் செய்யப்படும்.

தைப்பூசத்தன்று சுவாமி, அம்பாள் ஆழ்வார்குறிச்சி எழுந்தருள தெப்ப திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இது தவிர புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, மாசி மாத சிவராத்திரி ஆகியவையும் இங்கு விசேஷ உற்சவங்கள் நடைபெறும்.

அமைவிடம்: திருநெல்வேலி மாநகரிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது சிவசைலம்.

இங்கு செல்ல திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு கருத்தபிள்ளையூர் செல்லும் ஒரு பேருந்து நேராக உள்ளது. இது தவிர திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் பேருந்தில் ஏறி அம்பாசமுத்திரம் இறங்கி, அங்கிருந்து தென்காசி செல்லும் பேருந்தில் ஏறி, ஆழ்வார்குறிச்சியில் இறங்கி, அங்கிருந்து சுமார் 7கி.மீ தொலைவில் உள்ள சிவசைலம் கோவிலை சிற்றூந்துகள், நகர பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களில் சென்றடையலாம்.

-திருநெல்வேலிக்காரன்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.