Sivalaperi Sundarraja Perumal Kovil

சீவலப்பேரி சுந்தரராஜ பெருமாள் கோவில்

தென் திருமாலிருஞ்சோலை என்று சிறப்பிக்கப்படும்., சீவலப்பேரி அழகர் கோவில்.

மூலவர்: சுந்தரராஜ பெருமாள்.

உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனாய அழகர் பெருமாள்.

தீர்த்தம்: தாமிரபரணி சக்கர தீர்த்தக் கட்டம்.

சிறப்பு: கருட வாகனம், திரி சங்கு.

திருக்கோவில் வரலாறு:

முற்காலத்தில் கயிலாயத்தில் நடைபெற்ற அம்மையப்பர் திருமணம் காண அனைவரும் ஒரே இடத்தில் குழுமியதால், வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்து விட்டது. இதனால் பூமியை சமநிலைப்படுத்திட அகத்திய முனிவர் தென் பகுதிக்கு வந்தார். அங்குள்ள திரிகூட மலை பகுதிக்கு அகத்தியர் வந்த போது, அங்கு இருந்த பெருமாள் கோவிலின் உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு இருந்த வைணவர்கள், அகத்தியர் சைவர் என்பதால் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். உடனே அகத்திய முனிவர் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்த திருமாலை வேண்டி அவர் தலை மீது கை வைத்து குறுகுக குறுகுக என்று கூறி சிவலிங்கமாக மாற்றினார். அப்படி அவர் சிவலிங்கமாக மாற்றிய பின்னர், அங்கிருந்த பெருமாளை அவர் சீவலப்பேரியில் எழுந்தருளச் செய்தார். அழகருக்கு சீவலப்பேரியின் அழகு பிடித்துப் போக அஙரும் இங்கேயே தங்கி நித்ய வாசம் புரிந்து விட்டார். பின்னர் திருமகளும் அழகரை வலம் வந்து அவர் மார்பில் சேர்ந்தாள். மகாலட்சுமி இந்த இடத்தை வலம் வந்து பெருமாளுடன் சேர்ந்ததால், இந்த இடம் ‘ஸ்ரீ வலம் வந்த பேரி’ என்று அழைக்கப்பட்டு., தற்போது அந்தப் பெயரே மருவி ‘சீவலப்பேரி’ என்று அழைக்கப்படுவதாக இத்தல வரலாறு கூறப்படுகிறது.

இங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்த பெருமாளுக்கு, கவுதம மகரிஷி கர்ப்பகிரகம் அமைத்து வழிபட்டதாகவும், ஸ்ரீ வல்லப பாண்டிய மன்னன் கோவில் எழுப்பியதாகவும் அதனால் இந்த ஊர் ‘ஸ்ரீ வல்லப பேரி’ என்று அழைக்கப்பட்டு தற்போது சீவலப்பேரி என மருவியதாகவும் கூறப்படுகிறது.

மன்னனுக்கு பார்வை அருளிய கருடாழ்வார்:

முற்காலத்தில் சுந்தர ராஜ பாண்டியன் என்னும் மன்னன் மணப்படை வீடு நகரை தலை நகரமாக கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு பிற்காலத்தில் கண் தெரியாமல் போய் விட்டது. அந்த சமயம் மற்றொரு நாட்டின் மன்னன் கருங்குளம் பெருமாளுக்கு கருட வாகனம் செய்து சீவலப்பேரி வழியாக எடுத்து சென்றான். கருட வாகனத்தின் எடை தாங்காமல் தாமிரபரணி ஆற்றங்கரையிலேயே அந்த கருட வாகனத்தை இறக்கி வைத்து விட்டான். அப்போது கூடலழகர், பாண்டிய மன்னனின் கனவில் தோன்றி அந்த கருட வாகனத்தை தனது கோவிலிலேயே வைக்க உத்தரவிட்டாராம். அவ்வாறே மன்னனும் செய்துவிட, கண் பார்வை இழந்த சுந்தர ராஜ பாண்டிய மன்னனுக்கு இழந்த கண்பார்வை மீண்டும் கிடைத்தது விட்டதாக கூறப்படுகிறது. இன்றும் அந்த கருட வாகனமே இந்த கோவிலில் உள்ளது.

இங்குள்ள கருடாழ்வாரின் கண்கள் மேல் நோக்கி பார்ப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இவர் நான்கு கரங்களை கொண்டும், சர்ப்பத்தை ஆபரணமாக ஆறு இடங்களில் அணிந்தும் காட்சித் தருகிறார். இந்த மாதிரியான கருட வாகனம் மதுரையில் உள்ள கள்ளழகர் கோவிலிலும், கூடலழகர் கோவிலிலும், இங்கும் தான் உள்ளது என்பது சிறப்பம்சம் ஆகும்.

சக்கரத்தாழ்வாரின் மகிமை:

முற்காலத்தில் ஒரு முறை விஷ்ணு பகவானின் கையில் உள்ள ஸ்ரீ சக்கரம், சுக்கிராச்சாரியாரின் தாயை சம்ஹாரம் செய்ததால் பிரம்மஹத்தி தோ‌ஷத்தால் பீடிக்கப்பட்டது. அந்த தோஷம் நீங்கிட இங்கு தாமிரபரணி முக்கூடலில் நீராடி விஷ்ணுவை வழிபட்டு விமோசனம் பெற்றதாம். இதனால் இங்குள்ள ஆற்றுக் கட்டம் சக்கர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

முப்புரி வலம்புரி சங்கு:

இங்குள்ள முப்புரி வலம்புரி சங்கு சிறப்பு பெற்றது. இந்த சங்கு ஒன்றுக்குள் ஒன்று என மூன்று சங்குகள் கொண்ட அமைப்பில் காணப்படும். இந்த முப்புரி வலம்புரி சங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் கடலில் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சங்கானது முற்காலத்தில் ஒரு முனிவரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது என கூறப்படுகிறது.

இந்த சங்கில் இருந்து நாற்பத்தொரு நாட்களுக்கு தீர்த்தம் பெற்று அருந்தினால் தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.

மூலவர் சுந்தரராஜ பெருமாள்:

இங்கு கருவறையில் கிழக்கு நோக்கி நான்கு கரங்களுடன், சங்கு மற்றும் சக்கரம் ஏந்தி நின்ற கோலத்தில் அழகே உருவான சுந்தரனாக காட்சித் தருகிறார் பெருமாள்.

உற்சவர் அழகர் பெருமாள்:

இங்கு உற்சவர் அழகர் என்ற திருநாமத்துடன் நான்கு கரங்கள் கொண்டு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அவரின் இருபுறமும் ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி தாயார்கள் காட்சித் தருகிறார்கள்.

திருக்கோவில் அமைப்பு:

பழம்பெருமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் வானளாவிய ராஜ கோபுரம் இல்லை என்றாலும் நான்கு புறமும் நீண்ட நெடிய மதில் சுவர்களால் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

உள்ளே சென்றால் அழகிய தூண்கள் மற்றும் சிற்பங்களுடன் உள்ள மண்டபங்களை காணலாம். கருவறைக்கு எதிரே கருடாழ்வார் சன்னதி, கொடி மரம், பலி பீடம் ஆகியவை உள்ளன. உள்ளே பிரகாரத்தில் ஆஞ்சநேயர், ஸ்ரீ நிவாச பெருமாள், ராமர், லட்சுமணர், சீதை, கிருஷ்ணன் ஆகியோர்கள் சன்னதி கொண்டிருக்கிறார்கள்.

திருக்கோவில் சிறப்புக்கள்:

இந்த கோவில் கருவறையில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கு தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்ட ராம நதி என்னும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில், இந்த பெருமாள் கோவில் அமையப்பெற்றுள்ளது. இந்த ஊருக்கு முக்கூடல், திரிவேணி சங்கமம் என்ற பெயர்களும் உண்டு. காசியில் உள்ள திரிகூட சங்கமத்திற்கு இணையாக இந்த முக்கூடலை கருதுகின்றனர்.

மதுரையில் உள்ள அழகர் கோவிலுக்கு திருமாலிருஞ்சோலை என்று பெயர். அதனால் சீவலப்பேரியில் உள்ள இந்த அழகர் கோவிலை, தென் திருமாலிருஞ்சோலை என்று சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

இந்த தென் திருமாலிருஞ்சோலை கோவில் திருப்பதி கோவிலுக்கு முன்பே உருவானதாக கூறப்படுகிறது.

இந்தக் கோவிலை பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் மாறவர்மன் ஸ்ரீ வல்லபனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

பிற்காலத்தில் பாண்டிய மன்னர்கள் இந்தக் கோவிலுக்கு பல வகை மானியங்கள் அளித்து சிறப்பித்துள்ளதாக கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.

இங்கு ஸ்ரீ வல்லப பாண்டியனின் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கோவிலில் தனி சன்னதியில்ஆஞ்சநேயர் சிறிய குழந்தை வடிவில் கைகூப்பிய நிலையில் காட்சித் தருகிறார். அவருக்கு வெண்ணெய் காப்பு, வடமாலை சாத்தி சனிக்கிழமைதோறும் வழிபடுகிறார்கள்.

இந்த கோவிலில் நல்ல காரியங்களுக்கு பூக்கட்டி பார்க்கும் பழக்கமும் இன்று வரை நடைமுறையில் உள்ளது.

இங்குள்ள லட்சுமணர் முன்பக்கம் மனித ரூபமாகவும், பின் பக்கம் சர்ப்ப ரூபமாகவும் காட்சித் தருவது சிறப்பம்சம்.

முற்காலத்தில் ராமர், சீதையை தேடி இங்கு வந்த போது, பக்கத்தில் உள்ள மலை மேல் ஏறி சீதையை தேடியதாகவும்., இதனால் ராமருடைய பாதம் மலை அடிவாரத்தில் உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் பாசுரங்களில் இந்த கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதி நடைபெறும்.

முக்கிய திருவிழாக்கள்:

இங்கு பங்குனி மாதம் 24–ந் தேதி கொடியேற்றம் ஆகி பத்து நாட்கள் திருவிழா நடைபெற்று வந்துள்ளது. இந்த திருவிழாவின் இறுதி நாளான சித்திரை விசு அன்று தேர்த் திருவிழா நடைபெற்று உள்ளது.

இங்கு புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் கருட உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இது தவிர ஆடி ஸ்வாதி அன்று கருட சேவையும், ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைகளில் விசே‌ஷ பூஜையும் நடைபெற்று வருகிறது.

அமைவிடம்:

திருநெல்வேலி நகரிலிருந்து புளியம்பட்டி செல்லும் சாலையில் சுமார் 18 கி. மீ தொலவில் அமையப்பெற்றுள்ளது சீவலப்பேரி. இங்கு செல்ல திருநெல்வேலி சந்திப்பில் இருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.

 – திருநெல்வேலிக்காரன்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.