திருநெல்வேலி அருகில் உள்ள செய்துங்கநல்லூர் ஸ்ரீ சுந்தரபாண்டிய சாஸ்தா திருக்கோவில்.
மூலவர்: ஸ்ரீ சுந்தரபாண்டிய சாஸ்தா.
பரிவார மூர்த்திகள்:
- தளவாய் மாடசாமி அம்மன்,
- கருத்தசாமி,
- கருத்த அம்மன்,
- பேச்சியம்மன்,
- பிரம்மராட்சி அம்மன்,
- இசக்கியம்மன்,
- சுடலைமாடன்,
- மாடத்தி அம்மன்,
- பாதாளகண்டி அம்மன்,
- பலவேஷக்கார சாமி,
- வன்னியசாமி,
- வன்னியச்சி அம்மன்,
- முண்டன்சாமி,
- சப்த கன்னியர்,
- ஆழிபூதத்தேவர்.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Reddiarpatti Hill - 19mins(11km)
- Kongaraya Kurichi River Beach - 11min(5.6km)
- Tamilakurichi Dam - 43min(25.7km)
- Suthamalli Check Dam சுத்தமல்லி தடுப்பணை - 50min(28.3km)
திருக்கோவில் வரலாறு:
முற்காலத்தில் தற்போது இந்தக் கோவில் அமையப்பெற்றிருக்கும் இடத்திற்கு மேற்கே உள்ள சிவந்திபட்டி என்னும் ஊரில் இருந்து, செய்துங்கநல்லூர் பகுதிக்குத் தினமும் பெண்ணொருத்தி நடந்து வந்து பாலும் மோரும் விற்பனை செய்து வந்தாளாம். அப்படி ஒருநாள் இந்தப் பெண் வழக்கம் போல சிவந்திபட்டியில் இருந்து செய்துங்கநல்லூர் நோக்கி நடைபயணமாக வரும்போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் கால் தடுக்கிட பாலும், மோரும் கீழே கொட்டி விடுகிறது. இப்படியே அடுத்து வந்த நாட்களிலும் நடைபெற, மறுநாள் வரும்போது தனது மகனையும் உடன் அழைத்து வருகிறாள். அப்போதும் அந்தக் குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் போது அங்கிருந்த கல் தட்டி வழக்கம்போல பாலும், மூரும் சிந்திவிடவே, அந்தப் பெண் தனது மகனிடம், ஏலே இப்படிதாம்ல தினசரி இந்தக் கல்லு தடுக்கி நான் சுமந்து கொண்டார பாலும், மோரும் வீணா மண்ணுல கொட்டிருது என மண்மணம் மாறாத மொழியில் முறையிடுகிறாள். அதனைக்கேட்ட அவளுடைய மகனும் தனது தாய்க்கு இடையூறு விளைவிக்கும் அந்தக் கல்லை அங்கிருந்து அப்புறப்படுத்தத் தன்னுடன் கொண்டு வந்திருந்த இரும்புத் தடியால் இடித்துப் பெயர்க்க முயற்சி செய்கிறான். அப்போது அந்த கல்லில் இருந்து ரத்தம் பீறிட்டு ஆறாக ஓடி வருகிறது. அதனை கண்ட தாயும் மகனும் அதிர்ச்சியில் மயங்கிக் கீழே விழுந்துவிடுகின்றனர். சிறிது நேர கால இடைவெளிக்குப் பின்னர் இருவரும் மயக்கம் தெளிந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் எழுந்து நிற்க அப்போது, ஒரு அசரீரி குரல் கேட்கிறது. குழந்தைகளே பயப்படாதீர்கள் நான் தான் சாஸ்தா, என் முதல் மனைவியான பூரணாவுக்குத் தெரியாமல் புஷ்கலை தேவியை காந்தர்வ திருமணம் செய்துகொண்டதால், பூரணா எட்ட சாபத்தின் படி இங்குக் கல்லாக மாறிக் கிடந்தேன், தற்போது அந்தச் சாபகாலம் முடிவடைந்ததால் நான் இருந்த இந்த இடத்தை வெளிக்காட்டவே இவ்வாறு திருவிளையாடல் புரிந்ததாக அசிரீரியில் கூறுகிறார் சாஸ்தா. மேலும் தனக்கு அந்த இடத்தில் கோவில் ஒன்றை கட்டி வழிபட்டு வந்தால் அங்கு நித்யவாசம் புரிந்து உன் ஊர் மக்களை காத்து நிற்பேன் எனக் கூறி அருள்கிறார். அந்தக அசரீரி வாக்கைக் கேட்ட தாயும் மகனும் நடப்பதெல்லாம் கனவை இல்லை நனவா என்று யோசித்த வண்ணம் ஊருக்குள் சென்று, நடந்த விஷயங்கள் பற்றி விளக்கிக் கூறினார்கள். ஊர் மக்களும் பெரியவர்கள் தலைமையில் அந்த இடத்தில் ஒன்று கூடி சுயம்புவாக வெளிப்பட்ட அந்தச் சாஸ்தா திருமேனியை வணங்கி, அவரின் உத்தரவுப்படி அங்குக் கோவிலொன்றை எழுப்பிச் சாஸ்தாவுக்கு சுந்தரபாண்டிய சாஸ்தா என்னும் திருநாமம் சூட்டி வணங்கி வருவதாக இந்தக் கோவிலின் புராணம் செவி வழி செய்தியாகக் கூறப்படுகிறது.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
திருக்கோவில் சிறப்புகள்:
- இங்குப் பூர்ணா அம்மையின் சாபத்தால் கல்லாக மாறிப் பின் விமோசனம் பெற்றதால் இங்குக் கருவறையில் சாஸ்தா தன்னுடன் தேவிகள் இல்லாமல் தனியாகவே காட்சித் தருகிறார்.
- இவருக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு நேர்த்தி கடனாகச் செய்யப்படுகிறது. எனவே பங்குனி உத்திரம் அன்று இங்குக் கூடும் பக்தர்கள் பால்குடம் எடுத்து இந்தச் சுந்தர பாண்டிய சாஸ்தாவை வணங்கி வருகிறார்கள்.
- இந்தக் கோவிலின் காவல் தெய்வமாக விளங்கும் ஆழிபூதத்தேவர் சுதை திருமேனியாக விஸ்வரூப திருக்கோலத்தில் பிரம்மாண்டமாகக் காட்சித் தருகிறார்.
- இங்குள்ள சுந்தரபாண்டிய சாஸ்தா கருவறை திருமேனி சுயம்பு மூர்த்தம் ஆகும்.
- இந்தச் சுந்தர பாண்டிய சாஸ்தாவை வணங்கி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத வழக்குகளும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.
இருப்பிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி நகரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 18 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது செய்துங்கநல்லூர். அங்கிருந்து அய்யனார்குளம்பட்டி செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது சுந்தரபாண்டிய சாஸ்தா திருக்கோவில். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, ஏரல் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளில் ஏறிச் செய்துங்கநல்லூர் நிறுத்தத்தில் இறங்கி கொள்ளலாம்.