Logo of Tirunelveli Today
English

வெங்கடேச பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்பு

Image of decorated Lord Vishnu in one of the Navathirupathi temples seen with Sridevi and Poodevi

புரட்டாசி மாதத்தை புண்ணியம் நிறைந்த மாதம் என்றும் வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றும் போற்றுகின்றனர் . புரட்டாசி என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் மக்கள் ஏற்று பெருமாளை போற்றி வழிபடுகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் தான் அம்பிகையை வழிபாடு செய்யக்கூடிய நவராத்திரி, பித்ருக்களை வணங்கக்கூடிய மகாளய அமாவாசை, சிவனுக்கு உகந்த மகா சனி பிரதோஷம், கதலீ கௌரி விரதம், உமா மகேஸ்வர விரதம், மஹா பரணி , கிருத்திகை,சங்கடஹர சதுர்த்தி, 'அஜா ஏகாதசி' ன்று அழைக்கப்படும் சர்வ ஏகாதசி என பலவிதமான விசேஷதினங்கள் வருகிறது . அனைத்து தெய்வங்களும் ஒரு சேர சங்கமித்து பெருமாள் காட்சி தருவதால் இந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய விரத தினங்கள் மிகவும் விசேஷத்துக்கு உரியதாக அமைகின்றது.

புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பதற்கான காரணம்

தமிழ் மாதத்தில். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்றால் புரட்டாசி மற்றும் மார்கழி மாதம் இரண்டுமே பெருமாளுக்குரிய மாதங்களாகும். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய விரத தினங்களில் அந்த ஒரு நாள் மட்டுமே மக்கள் விரதம் மேற்கொள்கின்றனர். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் மட்டுமே மாதம் முழுவதும் விரதம் எடுத்துக் கொள்கின்றனர் என்பது புரட்டாசி மாதத்திற்குரிய சிறப்பாகும்.. .

விரதம் என்பது தெய்வத்தை நினைப்பது மற்றும் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி , நல்வழி பாதையில் அழைத்துச் செல்வதற்கான பாதையாகவும் அமைகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் அசைவத்தை விடுத்து சாந்தம் கொடுக்கக்கூடிய ,சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொண்டு, விரதம் இருக்கக் கூடிய ஒரு அருமையான மாதமாக புரட்டாசி மாதம் திகழ்கின்றது .

புரட்டாசி சனிக்கிழமை மகிமை

ஒரு மாதத்திற்கு சைவஉணவுகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் பொழுது சாத்வீக எண்ணங்கள் அதாவது நல்ல எண்ணங்கள் மட்டுமே தோன்றுவதற்கான சாதகப் பலன்கள் ஏற்படுகின்றது. மேலும் தெய்வத்திற்கு விரதம் இருப்பதால் ஆன்மீகமும் அறிவியலும் சேர்ந்து நம் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றன . மேலும் பக்தியோடு விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து துன்பங்களும் விலகி நலம் யாவும் பெறுவோம்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளை நினைத்து படைத்து வழிபாடு செய்வது , திருப்பதி, ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீரங்கம் ,திருவந்திபுரம் என108 வைணவ திருத்தலங்களுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருவ து, தளியல் போடுவது, சனிக்கிழமை விரதத்தை கடைப்பிடிப்பது , என மாதம் முழுவதும் திருவிழாவாக புரட்டாசி மாதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

சனீஸ்வரரும் ஸ்ரீநிவாசப் பெருமாளும் : புராண வரலாறு

சனி பகவான் பிறந்த தினம் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் புரட்டாசி மாதம் சனிக்கிழமைதோறும் எம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்துகிறோம்.அப்படிப்பட்ட சனிபகவானுக்கு ஒரு முறை தம்முடைய உயர்வான நிலை கண்டு அகங்காரம் வந்துவிடுகிறது. அகம்பாவம் விடுத்து பணிவன்போடு நாராயணனை வழிபட்டால் மட்டுமே அவரின்பால் நெருங்க முடியும்.. அதை அறியாத சனி பகவான் ஸ்ரீனிவாசப் பெருமாளின் இருப்பிடத்திற்கு ஒரு நாள் வருகிறார். . ஆணவம் ,அகங்காரம் , மனம் முழுதும் நிறைந்திருக்க , ஸ்ரீ வேங்கட பெருமாள் வாசம் செய்யும் திருமலையில் கால் பதிக்கிறார். அதையறிந்த எம்பெருமான் சனியின் ஆணவத்தை அடக்க நினைக்க , அடுத்த நிமிடம் சனீஸ்வரர் திருமலையிலிருந்து தூக்கி வீசப்படுகிறார்.தன்னுடைய நிலை குறித்து வருந்திய சனி பகவான், பெருமாளிடம் மன்னிப்பு கேட்க ..பெருமாளும் சனிபகவானை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார் .

’ புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் எம்மை வழிபடுவோர் , சனிதொல்லையில் இருந்து முழுமையாக நீங்கி அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடு வாழ்வர் ‘என பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் வேங்கட மலையில் வாசம் செய்யும் வெங்கடேச பெருமாள்.புரட்டாசி மாதத்தில். பெருமாளின் அருளோடு சனிபகவானின் ஆசியும் நிறைந்து இருப்பதால் நாம் வேண்டுகின்ற வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும்.

புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று விரதம் இருக்கும் முறை

புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசிப்பதற்கு சனிக்கிழமை உகந்த தினமாகும்..புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் வரக்கூடிய எல்லா வித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவோம். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை போற்றி வழிபட வேண்டும் .நெற்றியில் திருநாமம் தினமும் தரிப்பது புரட்டாதி மாதத்தில் செய்யக்கூடிய முக்கிய வழிமுறையாகும் . பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பாகும். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் அனைத்துப் பழங்கள், வெண்பொங்கல், முந்திரிப்பருப்பு, நெய் அனைத்தும் சேர்ந்த பிரசாதத்தை வாழை இலையில் தளியல் போடுவது என்பது ஐதீகமாக செய்து வரக்கூடிய முறையாகும் . பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு தீபம் ஏற்றி வைத்து அறுசுவை காய்கறிகளோடு பெருமாளுக்கு படைப்பார்கள். படைக்கும் பொழுது கருட பகவானை காட்சி தருமாறு வேண்டி தீபாராதனை காட்ட , கண்முன்னே கருடபகவான் பறந்து வந்த காட்சி தருவது புரட்டாசி பெருமாளுக்குரிய மாதத்தின் தனி சிறப்பாகும்.

பெருமாளின் 108 நாமங்கள், பெருமாளுக்குரிய சுலோகங்கள்,சகஸ்ரநாமம், பகவத் கீதை போன்ற நூல்களை படித்தால் குடும்பத்தில் நடப்பது யாவும் நல்லதாகவே நடப்பதற்கு பெருமானின் அனுகிரகம் பரிபூரணமாக கிடைக்கும். புரட்டாசி மாத முதல் நாள் பெருமாளை நினைத்து வழிபட்டு துளசி தீர்த்தம் அருந்துவதன் மூலம் பிறவி பயன்கள் அனைத்தும் நீங்கி புண்ணிய பலன் அனைத்தும் பெறலாம். ஆரோக்கியம் செல்வம் ஆயுள் அனைத்தும் கொடுக்கும் கூடிய சிறப்பு மிகுந்த வழிபாட்டு முறையாகும். இந்த மாதத்தில் பெருமாளுக்குறிய பூஜை, வழிபாடு, பஜனை, பிரம்மோற்சவம் என எம்பெருமான் தத்ரூபமாக நம் மனதை ஆட்கொள்கிறார் என்று ஆச்சாரியர்கள் கூறுகின்றனர். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பெருமாள் தலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் கருடவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கும்

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனி மகா பிரதோஷம்

சிவபெருமானையும், நந்தி தேவரையும் ஒரு சேர தரிசித்து வழிபடும் சிறப்பான தினம் தான் பிரதோஷ காலம். அன்றைய தினத்தில் சிவபெருமானை தரிசனம் செய்தால் அளவற்ற நன்மைகள் நமக்குக் கிடைக்கும். அதுவும் சனிக்கிழமைகளில் வரக்கூடிய சனிப்பிரதோஷம் மிகவும் சிறப்புவாய்ந்த பிரதோஷம் ஆக அமைகின்றது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகா சனிப்பிரதோஷம் சிவபெருமானுக்குரிய மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடுவது என்பது புரட்டாசியில் காணக்கூடிய சிறப்பாகும்.சில சமயங்களில் அடுத்து மாதத்திலும் மகா சனிப்பிரதோஷம் மாறிவரும்.

கர்மவினை விலகி புண்ணிய பலன் தரக்கூடிய சர்வ மஹாளய அமாவாசை

மறைந்த நம்முடைய முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது என்பது புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசையின் சிறப்பாகும்,.. இதனை மஹாளயபட்ச அமாவாசை என்றும் சொல்வார்கள்,அமாவாசைக்கு முன்பாக முன்னோர்களை நினைத்து பதினைந்து நாட்கள் மஹாளயபட்ச விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். யாரொருவர் தவறாது பித்ருக்களை நினைத்து மஹாளயபட்ச அமாவாசையன்று வழிபடுகின்றார்களோ அவர்கள் முன்னோர்களின் சாபம் நீங்கப் பெற்று வாழ்க்கையில் அனைத்து நலன்களும் பெறுவார்கள். பக்தியுடனும் நம்பிக்கையுடனும் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டால் அவர்களுடைய சந்ததியினருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது சர்வ மஹாளயபட்ச அமாவாசையாகும்.

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய திருவோண நட்சத்திரத்தின் மகிமை

திருவோண நட்சத்திரம் என்பது பெருமாளுடைய நட்சத்திரம் என்பதால் .புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய திருவோண நட்சத்திர நாளில் பெருமாளை தரிசித்தால் புண்ணிய பலன்கள் யாவும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி திதியில் திருவோண நட்சத்திர நாளன்று பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும் . துளசிதரன் என்று அழைக்கக்கூடிய பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வணங்கினால் ஏழு ஜென்ம பாவங்கள் விலகும் என்பதால் ஏராளமான பக்தர்கள் பெருமாளின் கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். கோவிந்தனை வணங்குவதற்கு உரிய அற்புதமான திருவோண நட்சத்திரம் அன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் சொல்லி, வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.

புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயிலுக்குச் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் திருவரங்கம், திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர் , குணசீலம், முதலான பெரும்பாலான வைஷ்ண திருத்தலங்களில், பிரம்மோத்ஸவ விழா பத்து முதல் பனிரெண்டு நாள் வரை விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில், தினமும் காலையும் மாலையும் உற்சவங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது புரட்டாசி மாதம் முழுவதுமே பக்தர்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்று தரிசிப்பது மற்றும் பெருமாளின் திருநாமங்களை பாராயணம் படிப்பது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகமாகும்.

புதனும் சனியும் சேர்ந்து ஆட்சி செய்யும் புரட்டாசி மாதம்

நவக்கிரகங்களில் புதன் கிரகம் என்பது சுப கிரகமாக ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. புதன் பகவானுடைய அதி தேவதை மகாவிஷ்ணு என்பதால்,புரட்டாசி மாதம் புதன் கிரகத்திற்குரிய மாதமாகவும் போற்றப்படுகிறது. அதைப்போல புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசியில் வந்து அமர்கின்றார். புதன் பகவானுக்குரிய வீடு கன்னி ராசியாக அமைவதால் பெருமாளின் அம்சமாக புரட்டாசி மாதம் திகழ்கிறது.

சனி பகவானும், புதனும் நட்பு கிரகங்களாய் இருப்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகின்றது.பெருமாளை போற்றி வணங்கக்கூடிய வழிபாட்டு நாளாகவும் மக்கள் வணங்குகின்றனர். அக்னி புராணத்தில் எமனின் கோரைப் பற்களுள் ஒன்றுதான் புரட்டாசி மாதம் சொல்லப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த மாதத்தில் நாம் பெருமாளை வழிபாடு செய்வதால் எமபயம் நீங்கி, தீர்க்காயுசு பெறக்கூடிய நல் வாழ்க்கையை பெறலாம் என்பது புரட்டாசி மாதத்திற்குரிய தனிச்சிறப்பாகும்.

புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம்

திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில் என்பது பெருமாள் எழுந்தருளியுள்ள புண்ணிய மலையாக புகழ் பெற்று விளங்குகின்ற ஒரு ஸ்தலமாகும்.ஏராளமான மக்கள் திருப்பதி கோவிலுக்கு புரட்டாசி மாதத்தில் விரதமிருந்து செல்கின்றனர் . ஸ்ரீனிவாசன், நாராயணன், கோவர்தனன், மதுசூதனன், நீலமேக சியாமளன், கோவிந்தன், ஸ்ரீவேங்கடவன்என்று பல பெயர்களில் ஸ்ரீ வேங்கடேச பெருமாள் அழைக்கப்படுகின்றார்.அப்படிப்பட்ட புகழ் பெயர்களைத் தாங்கி நிற்கும் பெருமாளுக்கு திருப்பதி ஸ்தலத்தில் புரட்டாசி மாதம் 10 நாட்கள் தொடர்ந்து மிகவும் கோலாகலமாக பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இந்த பிரம்மோற்சவத்தின் பொழுது- ஹம்ச வாகனம் -சிம்ம வாகனம் அனுமந்த வாகனம் -புஷ்பவாகனம் ,கருட வாகனம்- முத்துப்பந்தல் வாகனம் - தங்கத்தேர் என்று பல வாகனங்களில் வெங்கடேச பெருமாள் எழுந்தருளுவார். வருடம் முழுவதும் திருப்பதி மலைக்கு பக்தர்கள் சென்றாலும் புரட்டாசி மாதம் விரதமிருந்து பக்தர்கள் செல்வது என்பது அந்த மாதத்திற்குரிய தனி சிறப்பாகும்.

புரட்டாசி மாதத்தில் தவிர்க்கவேண்டிய முக்கியமான செயல்கள்

புரட்டாசி மாதங்களில்புதன் பகவான் ஆளக்கூடிய கன்னிராசியில் சூரியன் சஞ்சரிப்பதாலும்சனி ராகு கேது போன்ற கிரகங்களின் தோஷங்கள் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது ஆதலால் புரட்டாசி மாதத்தில் திருமணம், வாஸ்து பூஜை செய்வது புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வது வாடகை வீடு மாறுவது போன்ற நல்ல காரியங்களை தவிர்க்க வேண்டும்.

புரட்டாசியில் செய்யக்கூடிய காரியங்கள்

புரட்டாசி மாதத்தில் 60ம் கல்யாணம், வளைகாப்பு, காது குத்துதல் நிகழ்ச்சிகள் தாராளமாக செய்யலாம்.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram