புளித்தண்ணி

Pulithanni 1

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பார்க்கப்போறது புளித்தண்ணி. இது சாதத்துக்கு ஊத்தி பிசைஞ்சு சாப்பிடும் ஒரு வகை குழம்பு.

இந்த புளித்தண்ணிய செய்ய ஐந்து நிமிஷம் தான் ஆகும். அதனால இந்த குழம்பை அவசரகாலத்துக்கு உடனடியா வைச்சுரலாம்.

வீட்டுல எங்கேயாவது திடீர்னு வெளியபோயிட்டு வந்து சமைக்க நேரம் ஆயிட்டுன்னா, உடனே ஒரு பானையில உலை வைச்சு ஒரு பக்கம் சோறு வடிச்சா, அத பொங்கி இறக்குறதுக்குள்ள இன்னொரு பக்கம் புளித்தண்ணி தாளிச்சுரலாம். இதுக்கு தொட்டுக்க ரெண்டு அப்பளத்தையும் அஞ்சாறு கூழ்வத்தலையும் பொறிச்சு வைச்சுட்டா போதும். கூடுதலா இதுக்கு தொட்டுக்க பொரிகடலை துவையல் அரைக்கிற வழக்கமும் உண்டு.

இப்போ புளித்தண்ணி செய்முறையை பார்ப்போமா.

தேவையான பொருட்கள்:

புளி – எலுமிச்சை அளவு,
மிளகாய் வத்தல் – 5,
கடலைபருப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
உப்பு, பெருங்காயம் – தேவைக்கு,
கடுகு, குத்து பருப்பு – தாளிக்க,
நல்லெண்ணெய் – வஞ்சகம் இல்லாத அளவு,
கருவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை:

Pulithanni 4

  • புளியை தண்ணியில ஊற வைச்சு நல்லா தண்ணியா கரைச்சு, வடிகட்டி தயரா வைச்சுக்கோங்க. அதோட ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துக்கோங்க.
  • இப்போ அடுப்புல இருப்புச்சட்டிய வைச்சு வஞ்சகம் இல்லாம நல்லெண்ணெய விட்டு, அது காய்ந்ததும், கடுகு-குத்து பருப்பு போட்டு, அது வெடிச்சு வந்ததும், அடுத்து கடலைபருப்பு போட்டு தாளிச்சு, கருவேப்பிலை மற்றும் மிளகாய்வத்தல்களை பிய்ச்சு போட்டு வதக்குங்க.
  • இப்போ ஏற்கனவே தயரா வைச்சிருக்க புளித்தண்ணியை அப்படியே ஊத்தி, பெருங்காயத்தூள் தூவி கொதிக்க விடுங்க. நல்லா கொதிச்சு பச்ச வாசம் போயி, பக்கத்துட்டு வீட்டு அக்கா வந்து என்ன இன்னைக்கு உங்க வீட்டுல புளித்தண்ணியா? வாசனை இங்க வர வருதேனு வந்து கேக்குற பக்கவத்துக்கு கொதிக்க வைச்சு இறக்குங்க.
  • புளித்தண்ணி மேல நீங்க வஞ்சகம் இல்லாம விட்ட நல்லெண்ணெய் பிரிஞ்சு அழகா மிதக்கும். அப்படி மிதந்தா புளித்தண்ணி வைக்குறதுல நீங்க தேர்ச்சி பெற்றதா சான்றிதழ் கொடுத்துரலாம் ?.
  • இத சூடா சாதத்துல ஊத்தி பிசைஞ்சு சாப்பிட்டா சுவையா இருக்கும்.

Pulithanni 2

(குறிப்பு: சில வீடுகள்ல கோவத்துல இருக்க பெண்மணிகளின் வெளிப்பாடே இந்த புளித்தண்ணி தான். கோவத்துல புளியை செழிப்பா கரைச்சு, நல்லெண்ணெயில வஞ்சகம் பண்ணி மிளகாய் வத்தல வஞ்சகம் இல்லாம போட்டு வைச்சி சாப்பாடு போட்டு பழி வாங்குவாங்க??.

எங்க ஆச்சிக்கு கூட கோவம் வந்தா, ஏல இன்னைக்கு சாப்பிட மதியம் வீட்டுக்கு தான வருவ, புளித்தண்ணிய தாளிச்சு வைக்குறேன்னு தான் சொல்லுவாங்க. ?)

சமையல் குறிப்பு உபசாரம்: சங்கரநயினார்

எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் மேலும் படிக்க>>

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.