Paruppuvadai MoorKuzhambu

paruppuvadai moorkuzhambu1

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்:

  1. பருப்புவடை_மோர்க்குழம்பு.
  2. வெண்டைக்காய்_மோர்க்குழம்பு.
  3. தடியங்காய்_மோர்க்குழம்பு.
  4. சேப்பங்கிழங்கு_மோர்க்குழம்பு.

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது மோர்க்குழம்பு.

இந்த மோர்க்குழம்பு சாதத்துக்கு ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும்.

திருநெல்வேலியில செய்யுற மோர்க்குழம்பு ஒருவித சுவையோட இருக்கும்னா, நம்ம பக்கத்து ஊரான நாகர்கோவில் நாஞ்சில் நாட்டு மோர்க்குழம்பு ஒருவித சுவையோட இருக்கும். நாஞ்சில் நாட்டுல இதுக்கு புளி சேரி னு பெயர். நாஞ்சில் நாட்டு கல்யாண வீடுகளில் மோர்க்குழம்பு முக்கிய இடம்பெறும். உணவகங்களில் கூட தினசரி சாப்பாட்டில் புளி சேரி இருக்கும்.

திருநெல்வேலில மோர்க்குழம்புல வெண்டைக்காய் (அ) தடியங்காய் (அ) பருப்பு வடை (அ) சேப்பங்கிழங்கு போட்டுதான் பெரும்பாலும் மோர்க்குழம்பு வைப்பாக.

இதுபோக வாழைத்தண்டு (அ) செள செள (அ) பருப்பு உருண்டை (அ) வேறு சில காய்கள் போட்டும் மோர்க்குழம்பு வைப்பாங்க.

எங்க வீட்டுல உறை ஊத்தி வைக்குற தயிர் அதிகமா சேரும் நாளில் மோர்க்குழம்பு வைச்சிருவோம். எப்படியும் வாரத்துல ஒரு நாள் மோர்க்குழம்பு இருக்கும்.

மோர்க்குழம்பு வைக்கப்போறாங்கனா எப்படியும் பருப்பு வடை சூடுவாங்க, அதனால கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும்.

ஆனா வெண்டைக்காயோ, சேப்பங்கிழங்கோ போட்டு வைச்சுட்டா கொஞ்சம் ஏமாற்றம் இருக்கும். ஆனால் அதுவும் ஒரு வகை சுவையா இருக்குங்கறதால, சாப்பாட ஒரு வெட்டு வெட்டிருவோம், அது வேற விஷயம்.?

ஆனாலும் பருப்பு வடை சூட்டு மோர்க்குழம்புல மிதக்கவிட்டு, அது ஊறின பிறகு ஊத்தி சாப்பிடுற அழகே தனி தான்.

இப்போ மோர்க்குழம்பு செய்முறையை பார்ப்போமா..

தேவையான பொருட்கள் :

புளித்த தயிர் – அரை லிட்டர்,
பெருங்காயத்தூள் – சிறிமளவு,
பல்லாரி வெங்காயம் – 2 தோல் உறித்து நறுக்கியது,
கடுகு, குத்து பருப்பு, நல்லெண்ணெய் – தாளிக்க,
கருவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு,
உப்பு, மஞ்சள் தூள்- தேவைக்கு.

ingredients for moorkuzhambu

அரைக்க:

பூண்டு – 2 பற்கள்,
இஞ்சி – ஒரு துண்டு,
சீரகம் – 10கிராம்,
தேங்காய்த் துருவல் – தேவையான அளவு,
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
துவரம்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
பச்சரிசி – ஒரு தேக்கரண்டி,
பச்சை மிளகாய் – 2 (அ) காஞ்ச மொளகாத்தல் – 2

பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பை சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

செய்முறை :

தயிரை கடைந்து மோராக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.

ஊற வைத்த அரிசி, பருப்புகளை தண்ணீர் வடித்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களோடு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

(பச்சை மிளகாய்க்கு பதில் காஞ்ச மொளகாத்த வைச்சும் அரைச்சு கொள்ளலாம்)

இந்த அரைத்த விழுதை கரைத்து வைத்துள்ள மோர்க்குழம்பு கரைசலோடு சேர்த்து கொள்ளவும்.

paruppuvadai moorkuzhambu3

அடுப்பில் இருப்புச்சட்டி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, குத்து பருப்பு போட்டு தாளித்து, நறுக்கிய பல்லாரி, கருவேப்பிலை போட்டு வதக்கி, தயாராக வைத்துள்ள மோர்க்குழம்பு கரைசலில் கொட்டி, பெருங்காயத்தாள் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்க விட வேண்டும். லேசாக பொங்க ஆரம்பிக்கும் பக்குவத்தில் இறக்கி மல்லித்தழை தூவி மூடி வைத்து விட வேண்டும்.

இதனை அதிகமாக கொதிக்க விட கூடாது.

பருப்பு வடை மோர்க்குழம்பு என்றால், தயாரித்து வைத்துள்ள வடைகளை இறக்கிய மோர்க்குழம்பில் போட்டு கால் மணிநேரம் ஊற விடவும்.

தடியங்காய், சேப்பங்கிழங்கு, செள செள போன்ற கிழங்கு, காய்கள் சேர்ப்பதாக இருந்தால் முன்னதாக நறுக்கி வேக வைத்ததை, மோர்க்குழம்பில் தாளித்து கொட்டும் போதே சேர்த்து சூடாக்கி கொள்ள வேண்டும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு என்றால் வெண்டைகாய்களை நறுக்கி, எண்ணெயில் நன்றாக வதக்கி மோர்க்குழம்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மோர்க்குழம்பிற்கு மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு காய் அல்லது கிழங்கு அல்லது வடை சேர்த்து தனியே வைக்கலாம்.

Paruppuvadai MoorKuzhambu2

பருப்பு வடை போடுவதாக இருந்தால் குழம்பின் அளவை கூட்டிக்கொள்ள வேண்டும். பருப்புவடை அதிகமான குழம்பு கரைசலை குடித்து விடும்.

சமையல் குறிப்பு உபசாரம்: சங்கரநயினார்

எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் மேலும் படிக்க>>

About

Avatar

Check Also

Idi Sambar

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது இடிசாம்பார். இது சாதத்துக்கு ஊத்தி சாப்பிடும் ஒரு குழம்பு வகை. சாதாரண …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.