Home / Nellai Koyilkal / Pappankulam Thiruvenkadar Sivan Kovil

Pappankulam Thiruvenkadar Sivan Kovil

பாப்பாங்குளம் திருவெண்காடர் சிவன் கோவில்

சந்திர காந்த கல் திருமேனியராக ஈசன் உறையும் பாப்பாங்குளம் (மடவார் விளாகம்) திருவெண்காடர் திருக்கோவில்.

சுவாமி : திருவெண்காடர்.

அம்மை : வாடாகலை நாயகி.

தல விருட்சம் : வில்வம்.

தீர்த்தம் : கடனா நதி.

திருக்கோவில் வரலாறு:

முற்காலத்தில் பாண்டிய மன்னர் ஆதித்தவர்மன் என்பவர் சிறந்த சிவஙபக்தராக திகழ்ந்தார். அவர் பல சிவன் திருக்கோவில்களை கட்டி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். அவர் கட்டிய கோயில்களை சதுர்வேதி என்ற சிற்பி வடிவமைத்தார். கலை நுணுக்கத்துடன் சிலை வடித்து மன்னரின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் சிற்பி சதுர்வேதி. தன் மனத்தில் இடம் பிடித்த அந்த சிற்பிக்கு ஆதித்ய வர்ம பாண்டிய மன்னர், பெரிய நிலம் ஒன்றை தானமாக வழங்கினார். அந்தப் பகுதி சதுர்வேதி மங்கலம் என்ற பெயரால் அழைக்கப்பட்டதாம்.

இப்படி மன்னருக்கு சிற்ப தொழிலை நேர்த்தியாகவும், திறமையாகவும் செய்து வந்த அந்த சிற்பிக்கு சில காலம் கழித்து, வாழ்வில் பல இன்னல்களும் இடையூறுகளும் ஏற்படுகின்றன. இதனால் மனம் வருந்திய சிற்பி சதுர்வேதி ஒரு ஜோதிடரை அனுகி தனக்கு ஜோதிடம் பார்த்த போது, சந்திர கிரக தோஷமே அவன் தன் துயரத்துக்கு காரணம் என்று கூறுகின்றனர். அந்த ஜோதிடரிடம் சிற்பி சதுர்வேதி, தன் தோஷம் நீங்கிட பரிகாரம் கூறும் படி பணிகின்றார். இதற்குப் பரிகாரமாக சந்திர காந்தக் கல்லில் சிவ லிங்கம் வடிவமைத்து ஒரு கோயில் கட்டும் படி கூறினார். இதை மன்னரிடம் சதுர்வேதி தெரிவித்து அவரது துணையுடன் தனக்கு தானமாக தரப்பட்ட நிலத்தில் தான் ஒரு கோயில் கட்ட விருப்பப்படுவதாக கூறினார். அதற்கு மன்னனும் சம்மதம் தெரிவிக்க உடனே முறைப்படி கோவில் ஒன்றைக் கட்டி, அழகிய குளம் ஒன்றையும் வெட்டினார். இந்தக் குளம் இன்றும் கோவில் முன்னர் உள்ளது. இவ்வாறாக சிற்பி சதுர்வேதி இந்தக் கோவிலை முறைப்படி நிர்மானித்து, சுவாமிகளை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்து வைத்தான்.

இதன் பிறகு சிற்பியின் கிரக தோஷம் நீங்கிட, அவருடைய துன்பங்கள். குறைந்தது. ஆக சிற்பி சந்திரகாந்தக் கல்லில் உருவாக்கிய சிவலிங்கமே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு திருவெண்காடர் என்ற பெயரில் விளங்கி வருகிறது.

பாப்பாங்குளம் பெயர்க் காரணம்:

தாமிரபரணி ஆற்று தண்ணீரின் செழிப்பால் இந்த பகுதியில் பல வகையான பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததால் இந்த பகுதி முதலில் “பாப்பாங்கு” என்று பெயர் பெற்றது. “பாப்பாங்கு” என்றால் பறவைக் குஞ்சு என்று அர்த்தம். இந்த பெயரே காலப் போக்கில் மருவி பாப்பாங்குளம் என்றாகி விட்டதாக கூறப்படுகிறது.

சுவாமி திருவெண்காடர்:

வடக்கே வெண்பனி உறைந்த கயிலை மலையில் உறையும் ஈசனே இங்கு வந்து எழுந்தருளி இருப்பதால் இவருக்கு திருவெண்காடர் என்று பெயர்.

கிழக்கு நோக்கிய கருவறையில் சந்திர காந்தக் கல்லால் ஆன லிங்கத் திருமேனியராக காட்சித் தருகிறார் “திருவெண்காடர்”.

அம்மை வாடாகலை நாயகி:

இங்கு அருள்பாலிக்கும் அம்மையின் திருவடிகளில் ஆயகலைகள் 64 உம் அமர்ந்திருப்பதாலும், இந்த அம்மையின் திருமேனி 32 லட்சணங்களுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதாலும் “வாடாகலை நாயகி” என்று அழைக்கப்படுகிறாள்.

தெற்கு நோக்கிய கருவறையில் புன்சிரிப்பு காட்டிய பொலிவான முகத்துடன், சற்றே இடை நெளித்து நின்ற கோலத்தில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை கீழே தொங்கவிட்ட படியும் அம்மை அழகாக காட்சித் தருகிறாள்.

திருக்கோவில் அமைப்பு:

அழகிய குளத்தின் கரையில் மூன்று நிலை புதிய ராஜ கோபுரத்துடன் காட்சியளிக்கிறது இந்த திருக்கோவில். உள்ளே சென்றவுடன் பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவற்றை தரிசிக்கலாம். அதனை தாண்டி உள்ளே சென்றால் நேராக கிழக்கு நோக்கிய சுவாமி திருவெண்காடர் சன்னதி. சுவாமிக்கு வலது பக்கம் தெற்கு நோக்கிய அம்மை வாடாகலைநாயகி சன்னதி.

சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் விநாயகரும், சுப்பிரமணியரும், நனராசரும், தல உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளி உள்ளனர். இது தவிர பிரகாரத்தில் அதிகார நந்தி, தட்சிணாமூர்த்தி, சப்த மாதர், விநாயகர், விஷ்ணு, மகாலட்சுமி, சுப்பிரமணியர், சனீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோரோடு நவக்கிரகங்களும் பரிவார மூர்த்திகளாக எழுந்தருளி உள்ளனர்.

திருக்கோவில் சிறப்புக்கள்:

இங்கு கருவறை முன் உள்ள அர்த்த மண்டபத்திலிருந்து தரிசித்தால் சிவலிங்கம் சிறியதாகவும், கொடிமரத்தின் அருகில் நின்று தரிசித்தால் பெரியதாகவும் தெரிகிறது.

இங்குள்ள மூலவர் சந்திரகாந்த கல்லில் செய்யப்பட்ட லிங்கத் திருமேனி என்பதால் குறிப்பிட்ட விநாடிக்கு ஒரு முறை சில நீர் துளி சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

இங்கு மழை வேண்டி தாரா ஹோமம் செய்விப்பது சிறப்பானது ஆகும் மழை இல்லாத காலத்தில், இங்குள்ள திருவெண்காடருக்கு தாரா அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தால் உடனடியாக மழை பொழியும் என்பது நம்பிக்கை.

இங்கு தாராஹோமம் நடைபெறும் போது வெளியே வானில் கருடன் வட்டமிடுவது சிறப்பு.

இங்குள்ள சனீஸ்வரனின் சிற்பம் மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவரை முறையாக வழிபட்டால், எதிரி பயம் நீங்கும் என்பது நம்பிக்கை.

முக்கிய திருவிழாக்கள்:

இங்கு மாசி மாதம் சிவராத்திரி விழா விமரிசையாய் நடைபெறுகிறது.

இது தவிர சித்திரை விசு, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடி வெள்ளி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தைப் பூசம், பங்குனி உத்திரம் ஆகிய வருடாந்திர விழாக்களும், பிரதோஷம் மற்றும் பெளர்ணமி மாதாந்திர வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அமைவிடம்:

திருநெல்வேலி நகரிலிருந்து மேற்கே சுமார் 38 கி. மீ தூரத்தில் திருநெல்வேலி – பொட்டல்புதூர் சாலையில் இந்த பாப்பாங்குளம் அமையப் பெற்றுள்ளது. இங்கு செல்ல திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் புறநகர் பேருந்துகள் இருக்கின்றன.

– திருநெல்வேலிக்காரன்.

About சங்கர நயினார்

சங்கர நயினார்
எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். திருநெல்வேலியின் சிறப்பு உணவு வகைகள் என்ற தலைப்பில் நான் சமைத்த உணவு வகைகளை பற்றி எழுதிவருகிறேன். அதுபோல திருநெல்வேலிக்கு என்று சிறப்பு சேர்க்கும் கோவில்கள், கலைகள், விழாக்கள் மற்றும் விஷயங்களை தேடியும், படித்தும் எழுதிவருகிறேன். Read More

Check Also

Kodaganallur Kailasanathar Thirukovil

கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோயில் கார்க்கோடகன் வழிபட்ட கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: கைலாசநாதர், அம்மை: சிவகாமி அம்மை, சிறப்பு சன்னதி: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.