பாவநாசம் உலகாம்பிகை உடனுறை பாவவிநாச சுவாமி திருக்கோவில்
திருநெல்வேலி மாவட்டம்., மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சந்தனச் சோலைகளும், மூலிகைகளும், நிறைந்து, தென்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பொதிகைமலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகி பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையப்பெற்றுள்ளது., பாபநாச உலகாம்பிகை சமேத நாதர் திருக்கோவில்.
சுவாமி பெயர்:பாவவிநாசநாதர்.
அம்மை பெயர்:உலகம்மை.
திருக்கோவில் விருட்சம்:முக்கிளா மரம்.
தீர்த்தங்கள்:தாமிரபரணி, வேத தீர்த்தம், பைரவ தீர்த்தம், கல்யாண தீர்த்தம்.
சிறப்பு சன்னதிகள்:கல்யாணசுந்தரர் சன்னதி, புனுகு சபாபதி சன்னதி.
பாபநாசம் கோவில் வரலாறு(Papanasam Temple History):
பாபநாசர் திருக்கோவில் 1000-2000 ஆண்டுகளுக்கு முன்பாக பழமை வாய்ந்தது. முற்காலத்தில் (கிருத யுகத்தில்) பார்வதிக்கும்-பரமேஸ்வரனுக்கும் நடைபெற்ற திருமணத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்களும் இமயமலை அமையப்பெற்றுள்ள வடபகுதிக்கு வந்து விட்டதால் , வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்து விட்டது. உலகைச் சமநிலைப்படுத்த பரமேஸ்வரன் அகத்தியரை அழைத்து தென் திசை நோக்கிச் செல்ல கட்டளையிட, அகத்தியரோ தங்கள் திருமண காட்சி காண முடியாதே என வருந்த, பரமேஸ்வரன் இங்கு நடைபெறும் திருமணக்கோலத்தில் பொதிய மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்திலே சித்திரை மாதப்பிறப்பு தினத்தன்று வந்து காட்சி கொடுப்போம் என்று உறுதியளிக்கிறார். அவ்வாறே அகத்தியரும் அங்கிருந்து விடைபெற்று வரும் போது தாமிரபரணி தீர்த்தத்தை இறைவனிடமிருந்து தமது கமண்டலத்தில் பெற்று வந்துள்ளார்.
பின்னர் அகத்தியர் தென்பகுதி அடைந்து பரமேஸ்வரன் கூறியதை நிறைவேற்றிட, சித்திரை திங்களன்று திருமணக்கோலத்தில் இடபவாகனத்தில் அமர்ந்தபடி வானில் பார்வதியும் பரமேஸ்வரனும் காட்சியளித்து, அகத்தியரை பொதியமலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்க வேண்டும் என்றும், கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை இம்மலையின் உச்சியிலிருந்து தாமிரபரணி நதியாக பாய விட்டு விட வேண்டும் என்று கட்டளையிட்டார்.
இன்றும் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த வைபவம் இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் தேதியன்று இரவு 12: 00 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆக அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிய கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவிலை பொருத்தவரை சரியான வரலாற்று தகவல்கள் கண்டறிய முடியவில்லை. ஆனாலும் பாண்டிய மன்னன் சந்திரகுல பாண்டியனால் மதுரை பகுதியில் உள்ள கோவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது கோவிலின் மையத்தில் அமைந்துள்ள சன்னதி மற்றும் விமானத்தையும் சந்திரகுல பாண்டியன் கட்டியுள்ளார். கிபி 1609-23 ஆம் ஆண்டு மதுரை நாயக்கர் வம்சத்தில் மன்னன் வீரப்ப நாயக்கர் ஆட்சியாளராக இருந்த போது யாகசாலை, மற்றும் நடராஜ மண்டபம் மற்றும் துவஜஸ்தம்பம் (கொடித்தண்டு) முதலியவற்றை கட்டினார். இப்பொழுது கோவில் அனைத்து நிர்வாகமும் அறநிலைய வாரியம் மற்றும் இந்துசமயத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Thalaiyanai Bathing spot - 6min(1.5km)
- DKV POND - 8min(2.6km)
- Agasthiyar Falls - 14min(3km)
- Perungal Head Sluice - 32min(14.1km)
சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில் என பெயர்க்காரணம்(The reason for the name Serndhapoomangalam Sri Kailasanathar temple):
அசுரவகுலத்தின் குருவாக விளங்கிய சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவன், முற்காலத்தில் அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் கோபங்கொண்டு, துவஷ்டாவை கொன்றுவிடுகிறார் . இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விடுகிறது. அந்த தோஷ நிவர்த்திக்காக பூ உலகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடிக்கொண்டிருந்தான் இந்திரன்.
அப்போது தேவர்களின் குருவான வியாழ பகவான் தேவர்களின் தலைவனான இந்திரனிடம், இந்த பாபநாசம் தலத்தில் உள்ள இறைவனை வணங்கினால் அவனை பிடித்த பிரம்மகத்தி தோஷம் நீங்கும் என்று கூறுகிறார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்குள் வந்தபோதே தன்னைப்பிடித்த பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றான் என்கிறது இத்தல புராணம்.
இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இத்தல ஈசன் "பாவநாசநாதர்" என்றும், இத்தலம் பாவநாசம் என்று அழைக்கப்பெறுகிறது.
இத்தலத்தை "இந்திரகீழ க்ஷேத்திரம்" என்றும் போற்றுகிறது தலபுராணம்.
நவகைலாய கோவில் முதல் தலமாக கூறப்படும் வரலாறு:
அகத்தியரின் சீடர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் உரோமச முனிவர். அவருக்கு சிவபெருமானின் அருளை பெற்று முக்தி பெறவேண்டுமென்று விருப்பம். தனது விருப்பத்தை தன் குருவான அகத்தியரிடம் கூறினார். அதை கேட்ட அகத்தியர் தாமிரபரணி நதியில் நீராடி சிவபெருமானை வழிபட்டால் உனது ஆசை நிறைவேறும். நீ ஆற்றின் கரை வழியாகவே சங்கு முகம் செல். உனக்கு வழிகாட்ட ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை விடுகிறேன். ஒவ்வொன்றும் எந்த இடத்தில் ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார். அதன்படி அகத்தியர் ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணியில் மிதக்கவிட, ஒவ்வொரு தாமரை மலரும் ஒவ்வொரு ஊரின் கரையோரத்தில் ஒதுங்கியது. அப்படி கரை ஒதுங்கிய இடங்களில் எல்லாம் உரோமச முனிவர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இறுதியில் தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் இடத்தில் முனிவர் பூசை செய்து இறைவனின் அருள் பெற்று முக்தி அடைந்தார். அவர் பிரதிஷ்டித்த சிவலிங்கங்களே நவகைலாயங்களாக நிலைபெற்றன. பின்னாளில் அந்தந்த இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன.
- பாவநாசம் - சூரியன்
- சேரன்மாதேவி - சந்திரன்
- கோடகநல்லூர் - செவ்வாய்
- குன்னத்தூர் - இராகு
- முறப்பநாடு - குரு
- ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்
- தென்திருப்பேரை - புதன்
- இராஜபதி - கேது
- சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
இதில் முதல் தாமரை மலர் ஒதுங்கிய இடமே பாவநாசம் ஆகும். எனவே நவக்கிரகங்களில் முதல் கிரகமான சூரியனுக்குரிய கோவிலாக பாபநாசம் விளங்குகிறது.
மற்றொரு குறிப்புப்படி, நவகைலாய கோவில்கள் வேறு என்றும் கூறப்படுகிறது. திருக்குற்றால தல புராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதி நவகைலாயங்களாக குறிப்பிடப்பட்டுள்ள வேறு கோவில்கள்,
- பிரம்மதேசம்
- அரியநாயகிபுரம்
- திருநெல்வேலி
- கீழநத்தம்
- முறப்பநாடு
- திருவைகுண்டம்
- தென்திருப்பேரை
- சேர்ந்தபூமங்கலம்
- கங்கைகொண்டான்.
பாபநாச சுவாமி திருக்கோவிலின் மூலவரின் சிறப்புகள்(Papanasam Swamy Temple Specialities):
இங்கு கருவறையில் பாவநாசநாதர், உருத்திராட்சம் அணிந்த மேனியராய் லிங்கத்திருவுருவில் காட்சித்தருகிறார். இவருக்கு வைராசர், பழமறைநாயகர், முக்களாமூர்த்தி என்ற பெயர்களும் உண்டு.
அம்பாள் உலகம்மை :
இங்கு சுவாமி சன்னதிக்கு வடக்கில் அம்பாள் உலகம்மை சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் அம்மை அழகே உருவாக, வலது கையில் மலர்ச் செண்டுடனும், இடது கையைத் தொங்க விட்டும், நின்ற கோலத்தில், திருவதனம் சிரித்த முகத்துடன் காட்சிதருகிறாள்.
புடவையில் தாம்பூல எச்சில் காட்டி நமச்சிவாய கவிராயருக்கு அருள்புரிந்த வரலாறு:
முற்காலத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் உலகம்மை மீது அளவு கடந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். இவர் தினந்தோறும் பாவநாசம் திருக்கோயிலுக்குச் சென்று அர்த்தசாம வழிபாட்டில் அம்பிகையை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒருநாள் இவர் இங்கு தரிசனம் முடித்துவிட்டு அம்மையின் மீது பாடல்களைப் பாடிகொண்டு நடந்தபடியே வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், உலகம்மை கவிராயரின் பாடல்களைக் கேட்டவாறே அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து வருகிறாள்.
கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சிலை அவர் உமிழ்ந்து கொண்டே பாடி வர, அந்த உமிழ்ந்த எச்சில் பின் தொடர்ந்து வந்த அம்மையின் மீதும் பட்டுவிட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள்.
மறுநாள் காலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர், அம்மையின் வெண்ணிற ஆடை முழுவதும் படிந்திருந்த தாம்பூல எச்சில் திவலைகளைக் கண்டு மனம் பதறுகிறார். பின்னர் இவ்விஷயம் மன்னனிடம் முறையிடப்பட, மன்னனும் திருக்கோவில் வந்து பார்வையிட்டு, அதற்குரிய பிராயச்சித்த பூஜைகள் செய்ய உத்தரவிடுகிறார். இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகவும் உத்தரவு பிறப்பிக்கிறார்.
இதனால் தாம்பூலம் தரிக்கும் பழக்கமுடைய நமச்சிவக்கவிராயர் மீது சந்தேகம் கொண்டு, அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் அரண்மனை வீரர்கள். அன்றிரவு மன்னன் கனவில் அம்மை தோன்றி, நடந்த விவரங்களை கூறினாள். இதனால் திகைத்து விழித்தெழுந்த மன்னன் மறுநாள் காலை நமச்சிவாயக்கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை உலகறியச்செய்ய எண்ணி, அம்மையின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்து பொன் கம்பிகளால் கட்டிவைத்து, கவிராயரின் பக்தி உண்மையென்றால் அவர் பாடும் பாடல்களுக்கு இசைந்து அப்பூச்செண்டு கவிராயரின் கைகளுக்கு தானே வர வேண்டும் என கட்டளையிடுகிறான்.
உடனே நமச்சிவாய கவிராயரும் அம்மை மீது அந்தாதி பாடல்களை பாடினார். அப்படி அவர் பாடிய ஒவ்வொரு பாடலின் முடிவிலும், அம்மையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் ஒவ்வொரு சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இறுதியாக கவிராயர்.,
"விண்டல நின்ற சரற்கால சந்த்ரசு வேதமுக
மண்டல மும்கை மலரோடுந் தோளின் வழிந்தரத்ன
குண்டல மும்பொலி வாலப் பிரயாக் குமாரத்தியாய்ச்
செண்டலர் செங்கை உலகாள்என் நாவில் சிறந்தனளே"
என்ற பாடலை பாடி முடிக்கவும் அம்மையின் கரங்களில் இருந்த பூச்செண்டு கவிராயர் கைக்கு தானாக வந்தது. இதனைக்கண்ட மன்னனும் கவிராயரின் பக்தியை மெச்சி, அவரை விடுதலை செய்து, அவரிடம் மன்னிப்பு கோரினான். இதன்மூலம் நமச்சுவாயக் கவிராயரின் புகழை அம்மை உலகறியச்செய்தாள்.
அம்மை மீது கவிராயர் பாடிய வேறு பாடல்கள்,
சிங்கை சிலேடை வெண்பா, இன்னிசைக் கலிப்பா, உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, உலகம்மை சந்தவிருத்தம், உலகம்மை பிள்ளைத்தமிழ், பாவவிநாச வண்ணம், உலகம்மை அந்தாதி ஆகியன ஆகும்.
பிரம்மஹத்தி தோஷம் போக்கும் பாபநாசர் திருக்கோவில் அமைப்பு(Papanasar Temple Architecture):
தாமிரபரணி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கியபடி, ஏழுநிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமையப்பெற்றுள்ளது இக்கோவில்.
இத்திருக்கோவிலின் தீர்த்தமாக தாமிரபரணியின் வேத தீர்த்தம், பைரவ தீர்த்தம், கல்யாண தீர்த்தம் ஆகியவையும்., தல விருட்சமாக களா மரமும் விளங்குகிறது.
ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் பலிபீடம், நந்தி சன்னதி தாண்டி கொடிமரம் அமையப்பெற்றுள்ளது.
உள்ளே நமக்கு இடப்புறம் தல விநாயகர் சன்னதியும், வலப்புறம் முருகப்பெருமான் சன்னதியும் இருக்கிறது. இவற்றை வணங்கி உள்ளே சென்றால் உள்ளே செல்லும் வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் அருள்பாலிக்கிறார்கள்.
வாயில் வழி உள்ளே சென்றவுடன் வடக்கு நோக்கியபடி அதிகாரநந்தி சன்னதி இருக்கிறது. இவரை வணங்கி அனுமதி பெற்று நேரே சென்றால் சுவாமி பாபநாசநாதர் சன்னதி. உள்ளே கருவறையில் சுவாமி பாபநாசநாதர் கிழக்கு நோக்கி காட்சிதருகிறார். அவருக்கு முன் உள்ள மண்டபத்தில் தென் திசை நோக்கிய சன்னதியில் உற்சவ நடராஜர் சிவகாமி அம்மையோடு அமையப்பெற்றுள்ளது.
சுவாமி சன்னதியில் இருந்து சுவாமிக்கு இடப்புறம் உலகம்மை சன்னதி அமையப்பெற்றுள்ளது.
முதல் பிரகாரத்தில் சூரியன், நால்வர், சூரதேவர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சப்தமாதர்கள், தட்சிணாமூர்த்தி, கன்னிவிநாயகர், உற்சவ மூர்த்திகள், கல்யாணசுந்தரர், பிட்சாடன மூர்த்தி, லிங்க மூர்த்திகள், சண்டிகேசுவரர், துர்க்கை, சுப்பிரமணியர், சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக பிரகாரத்தின் நான்கு புறங்களிலும் அவரவர்குரிய இடத்தில் காட்சியளிக்கின்றனர்.
இரண்டாம் பிரகாரமான உள்வெளி பிரகாரத்தில் பனையடியான், விசுவநாதர் சன்னதியுடன், சுவாமி கருவறைக்கு நேராக பின்புறம் இக்கோவில் விருட்சமான களா மரம் அமையப்பெற்றுள்ளது. இம்மரத்தின் அடியிலும் லிங்கத்திருமேனியராய் சுவாமி அருள்பாலிக்கிறார்.
வெளி பிரகாரச்சுற்று முடிந்து முன் பக்கம் வருகையில் நவக்கிரக சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.
கொடிமரத்திற்கு வடதிசையில் அமையப்பெற்றுள்ள தென்திசை நோக்கிய சிறப்பு சன்னதியில் புனுகு சபாபதி காட்சியளிக்கிறார்.
வெளியே திருக்கோவிலுக்கு எதிரே கல்மண்டபமும், படித்துறையும் அமையப்பெற்றுள்ளது. படித்துறைக்கு கீழே தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவிலின் சிறப்புகள்(Arulmigu Papanasa Swamy Temple Specialties):
கல்யாணசுந்தரர் சன்னதி:
இங்கு சுவாமி, அம்மையோடு இடபவானத்தில் அமர்ந்தபடி திருமணக்கோலம் காட்டியருள, முன்னே அதனை தரிசித்தபடி அகத்தியரும் அவர் மனைவி லோபாமுத்ரையும் காட்சிதருகிறார்கள். சுவாமிக்கு குடைபிடித்தபடி குண்டோதரனும் இங்கு உள்ளார். இதுபோன்று ஒரே சன்னதியில் கல்சிற்ப மேனியராய் சுவாமி-அம்மையோடு இடபவாகனராய் காட்சியளிப்பது அபூர்வம்.
தல விருட்சம் சிறப்பு:
இக்கோவில் தலவிருட்சம் களாமரம், "முக்கிளா மரம்" என்று சிறப்பிக்கப்படுகிறது. ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களும் கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் ஈசனை வழிபட்டதாக இத்தல புராணம் கூறுகிறது.
மஞ்சள் பிரசாத மகிமை:
உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரலி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இந்த மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது நம்பிக்கை. மேலும் இத்தீர்த்தம் சகல ரோக நிவாரணியாகவும் இருக்கிறது.
இங்கு தினமும் உச்சிக்கால பூஜையின் போது, சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களை தாமிரபரணி நதியில் மீன்களுக்கு படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.
புனுகு சபாபதி சிறப்பு:
இக்கோவிலில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் காட்சித்தரும் ஆடல்வல்லானின் திருநாமமே "புனுகு சபாபதி" ஆகும். இவருக்கு புனுகு காப்பு சாத்தப்பட்டே காட்சியளிப்பார். அருகில் சிவகாமசுந்தரி அம்மையும் அழகாக காட்சித்தருகிறாள்.
இங்கு வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி மகரிஷி ஆகியோருக்கு தைப்பூசத்தன்று இறைவன் திருநடன காட்சியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கோவில் சகல தோஷ பரிகார தலமாக விளங்குவதால், இங்குள்ள தாமிரபரணியில் நீராடி இறைவனை தரிசித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகி, பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.
பாபநாசர் கோவிலில் சிறப்பான மிக முக்கிய திருவிழாக்கள்(Important Festivals of Papanasam Temple):
சித்திரை விசு திருவிழா:
இங்கு பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை விசுவை ஒட்டி நடைபெறும் வருடாந்திர உற்சவம் சிறப்பு பெற்றது. இந்த விழாவுக்காக இங்கு கொடியேற்றமாகியவுடன், சுவாமி-அம்பாள் இங்கிருந்து சுமார் 5-கி.மீ தொலைவில் உள்ள விக்கிரமசிங்கபுரம் என்னும் ஊருக்கு எழுந்தருள, அங்குள்ள சிவந்தியப்பர் திருக்கோவிலை சுற்றியே பத்து நாட்கள் விழாவும், பங்குனி கடைசி நாளில் தேரோட்டமும் நடைபெறும்.
சித்திரை மாதபிறப்பின்று விசு தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெறும். அன்று இரவு சுவாமி, அம்பாள் இடப வாகனங்களில் எழுந்தருளி, அகத்திய முனிவருக்கு திருமண காட்சி வழங்குவார்கள்.
மார்கழி திருவாதிரை விழா:
மார்கழி மாத திருவாதிரையன்று, நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்று, தாண்டவ தீபாராதனையுடன் கூடிய ஆருத்ரா தரிசனமும் சிறப்பாக நடைபெறும்.
இங்குள்ள தாமிரபரணி தீர்த்தக்கட்டத்தில் முறைப்படி நீராடி, சுவாமி பாபநாசரை தரிசித்தால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது திண்ணம்.
பாபநாசர் கோவிலில் நடக்கக்கூடிய பூஜைக்கான நேரங்கள்(Poojai Timings in Papanasam Temple):
காலை 6 மணிக்கு திருவனந்தல்
காலை 7.30 மணிக்கு சிறுகால சந்தி
காலை 8.30 மணிக்கு காலசந்தி
காலை 11.00 மணிக்கு உச்சி காலம்
மாலை6.00 மணிக்கு சாயரட்சை
இரவு 8.00 மணிக்கு அர்த்த சாமம்
என மிகவும் ஐதீகமாய் பூஜைகள் நடைபெறுகின்றன.
பாபநாசம் கோவிலில் பூஜை நேரங்கள்,சில சமயங்களில் திருவிழாக்கள் மற்றும் விசேஷ நாட்கள் வரும் பொழுது மாறும்.
கோவில் எப்பொழுதும் காலை முதல் 6.30 மதியம்1.00 வரை திறக்கப்பட்டிருக்கும். மாலை 6.30 முதல் இரவு 8.00 வரை திறந்திருக்கும்.
மாண்புமிகு முதலமைச்சர் அன்னதானத் திட்டத்தின் கீழ் இந்த திருக்கோவிலில் 15/09/2011 ஆம் தேதி முதலாக தினம்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
சுற்றுலாத்தலமாக விளங்கும் பாபநாசர் கோவிலுக்கு செல்லக்கூடிய போக்குவரத்து வழிகாட்டி
திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 49 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்தால் பாபநாசம் கோயிலுக்கு கோவிலை அடைந்துவிடலாம்.
திருநெல்வேலி மாவட்டம்., மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம். திருநெல்வேலி நகரிலிருந்து மேற்கே சுமார் 60-கி.மீ தூரத்தில் உள்ள பாபநாசம் செல்ல திருநெல்வேலி நகர் புதிய பேருந்துநிலையத்திலிருந்து பேருந்துகள் உள்ளன.
பெங்களூர், மங்களூர்,, திருப்பதி, ஹைதராபாத் , சென்னை & மைசூர் ஆகிய தென் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் திருநெல்வேலியில் இருந்தும் கோவிலுக்கு செல்வதற்கு வழக்கமான பேருந்து வசதிகள் அனைத்தும் இருக்கின்றது.
மதுரை விமான நிலையத்திற்கும் பாபநாசம் கோயிலுக்கும் இடையே 211 கி.மீதொலைவிலும், திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கும் பாபநாசம் கோயிலுக்கும் இடையே 49 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலிக்கும் பாபநாசம் கோயிலுக்கும் இடையே 55.5 கி.மீ, சென்னைக்கும் பாபநாசம் கோயிலுக்கும் இடையே 677.7 கி.மீ, கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்கும் பாபநாசம் கோயிலுக்கும் இடையே 7 கி.மீ தொலைவிலும் என கோவில் அமைந்துள்ளது.
கோவிலுக்கு அருகில் உள்ள இடங்களுக்கு செல்வதற்கு , பயணிகள் ரயில்கள் மட்டுமே செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அம்பாசமுத்திரம் மற்றும்தொலைதூர இரயில் பயணம் மேற்கொள்வதற்கு திருநெல்வேலி சிறந்த தேர்வாக அமையும்.. தூத்துக்குடி ,திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் கோவிலின் அருகில் விமான தளம் அமைந்துள்ளது.
செயல் அலுவலர்,
அருள்மிகு பாபநாசர் சுவாமி திருக்கோவில்,
அம்பாசமுத்திரம் வட்டம்,பாபநாசம்,
திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி-04634-293757
பாபநாச நாதர் கோவில், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம் - 627425