தமிழகத்தின் தென்கோடியில் உள்ள திருநெல்வேலி மாநகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கும். குலதெய்வம் மற்றும் குல சாஸ்தா திருக்கோவிலை வழிபடும் நாளாக இந்தப் பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல சாஸ்தா கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் என ஒரு குல தெய்வம் மற்றும் குல சாஸ்தா இருக்கும். சில குடும்பத்தில் கசாஸ்தா மற்றும் குலதெய்வம் ஒன்றாக இருக்கும், சில குடும்பத்தில் குல தெய்வம் என்பது தனியாகவும், குல சாஸ்தா என்பது தனியாகவும் இருக்கும்.
எது எப்படியோ பங்குனி உத்திரத்து அன்று இப்பகுதி மக்கள் தங்கள் குலதெய்வம் மற்றும் குல சாஸ்தா கோவில்களுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இதற்காகத் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் எண்ணற்ற சாஸ்தா கோவில்களும், குல தெய்வ கோவில்களும் உள்ளன. இந்தக் கோவில்களுள் மிகவும் பிரசித்தி பெற்ற சாஸ்தா கோவில்கள் என்றால் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், அம்பை - மலையான்குளம் பாடகலிங்க சாஸ்தா கோவில், பத்தமடை மகாலிங்கசாஸ்தா கோவில், சித்தூர் தென்கரை மகாராஜா கோவில், பிரான்சேரி வீரியப்பெருமாள் சாஸ்தா கோவில் ஆகியவற்றை கூறலாம். எனினும் இந்தச் சாஸ்தா கோவில்களை பட்டியலுக்குள் அடக்குவது கடினம் தான். இந்தச் சாஸ்தா கோவில்களுக்கு எல்லாம் தலைமைக்கோவிலாகக் காரையார் சொரிமுத்துஅய்யனார் கோவில் விளங்குகிறது. இதனால் குல தெய்வம் மற்றும் குலசாஸ்தா தெரியாத குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தச் சொரிமுத்து அய்யனாரை தங்கள் குலதெய்வமாக வழிபடலாம் என்று கூறப்படுகிறது. அதுபோலக் குல தெய்வங்களாகவும் எண்ணற்ற தெய்வங்கள் இருந்தாலும் அவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்ற குல தெய்வங்களாகச் சங்கிலி பூதத்தார், சுடலைமாட சுவாமி, கொம்பு மாடசாமி, தளவாய் மாடசாமி, பட்டவராயர், தூசிமாடசாமி, பேச்சி அம்மன், பிரம்மராட்சி அம்மன், வனபேச்சி அம்மன், இசக்கி அம்மன் ஆகிய தெய்வங்களை குறிப்பிடலாம். பெரும்பாலும் இந்தக் குல தெய்வங்கள், சாஸ்தா கோவில் வளாகத்திலேயே தனி சன்னிதியில் எழுந்தருளியிருப்பார்கள். எனவே குல சாஸ்தா மற்றும் குல தெய்வத்தைத் தனித்தனியாக கொண்ட குடும்பத்தினரும் ஒரே கோவிலில் தங்கள் வழிபாட்டை மேற்கொள்ள முடியும்.
பங்குனி உத்திரம் அன்று தென்மாவட்டங்களில் குறிப்பாகத் திருநெல்வேலி மற்றும் சுற்று பகுதியைச் சார்ந்த மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் குல சாஸ்தா / குல தெய்வ கோவில்களுக்குப் படையெடுத்து செல்கின்றனர். பெரும்பாலும் இந்தக் கோவில்கள் கிராமங்களில் ஊரை விட்டு ஒதுக்குபுறமாகக் காட்டுப்பகுதியிலோ, மலைப்பகுதியிலோ, ஆற்றங்கரையிலோ, குளத்தங்கரையிலோ தான் அமையப்பெற்றிருக்கும் என்பதால் மாட்டு வண்டிகளில் குடும்பத்தினருடன் செல்வதை இன்றும் காண முடியும். இருந்தாலும் தற்போது மக்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகங்கள் பங்குனி உத்திரம் அன்று முக்கிய சாஸ்தா கோவில்களுக்குப் பேருந்துகளை இயக்குகிறது. திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3000 சாஸ்தா கோவில்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றன. இந்தக் கோவில்களில் எல்லாம் பங்குனி உத்திரத்தை ஒட்டித் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும்.
வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் குடியிருக்கும் மக்கள் கூட வருடத்தில் ஒருமுறை தங்கள் சொந்த ஊருக்கு வந்து குலதெய்வ கோவில்களுக்குச் செல்வதை தவறாமல் கடைபிடிக்கிறார்கள். எனவே அன்று மட்டும் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்தப் பங்குனி உத்திர திருவிழாவுக்கு ஒரு மாதம் முன்னதாகவே குல சாஸ்தா கோவில்களிலிருந்து அந்தந்த குடும்பத்தினருக்கு பங்குனி உத்திர திருநாள் நடைபெறுவதை பற்றிய அழைப்பிதழ் கடிதங்கள் தபால் மூலமும், தற்போது அலைபேசி மூலமும் தெரிவிக்கப்படுகிறது. அப்போது இருந்தே கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சர்கள் மூலம் அந்தந்த குடும்பத்தினரிடமிருந்து திருவிழா வரி வசூலிக்கப்படுகிறது. அதனை கொண்டு கோவிலை வெள்ளை அடித்து, காவி வர்ணம் பூசி, பந்தல் அமைத்து, வளாகத்தைத் தூய்மைபடுத்தி, திருக்கோவிலை தயார் செய்கிறார்கள். பங்குனி உத்திரத் திருவிழா அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்கிறார்கள்.
பங்குனி உத்திரம் அன்று கோவில்களில் சாஸ்தா பிறப்பு பற்றிய வில்லு பாட்டுக் கச்சேரி நடைபெறும். அதற்காக முன்கூட்டியே தகுந்த வில்லிசை கலைஞர்களையும், மேளம் மற்றும் நாதஸ்வரம் கலைஞர்களையும் பதிவு செய்து வர வைக்கிறார்கள். மக்கள் அனைவரும் கூடுவார்கள் என்பதால் அன்று கோவில் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் களைகட்டும். குறிப்பாகக் கோவிலுக்கு தேவையான தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, சூடன், சாம்பிராணி, பத்தி மற்றும் நேர்த்திக்கடன் செலுத்த தேவையான பொருட்கள் விற்கும் கடைகள், பூக்கடைகள், தின்பண்ட கடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள், சிற்றுண்டி கடைகள் ஆகியன தற்காலிகமாக அமைக்கப்படும். இந்த விழாவை வைத்துப் பல சிறு தொழில் செய்யும் வணிகர்களும், நாட்டுப்புற கலைஞர்களும் வருமானம் பெறுகிறார்கள். அந்த அளவுக்குப் பங்குனி உத்திர திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
குலதெய்வம் / குல சாஸ்தா கோவிலுக்குப் பங்குனி உத்திரத்தன்று அனைத்து குடும்பத்தினரும் வருவதால், தங்கள் அண்ணன், தம்பி, சொந்தம், பந்தம், சொக்காரர்களை ஒரே இடத்தில் சந்திக்கலாம். இதனால் வேலை நிமித்தமாக வெளியூர்களில் சென்று வாழும் மக்களுக்கும், வருடத்திற்கு ஒருமுறை தங்கள் சொந்த பந்தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தக் குல தெய்வம் வழிபாட்டில் கலந்து கொள்ளும் குடும்பத்தினர் தங்களுக்குள் எந்த வித மனக்கசப்பு மற்றும் மனஸ்தாபங்கள் இருந்தாலும் அதனை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விழாவில் ஒன்று சேர்ந்து குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்றுவதால் பிரிந்து போன சொந்தங்கள் ஒன்றாகச் சேரும் வாய்ப்பும் உருவாகிறது. இப்படி ஒவ்வொரு விஷயங்களையும் உள்ளடக்கி நம் முன்னோர்கள் நம் விழாக்களை வடிவமைப்பு செய்துள்ளதை இன்று நினைத்தாலும் நம் மெய்சிலிர்க்கும் என்பது உண்மையே.
தங்கள் குல தெய்வம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அன்று ஒன்று கூடி பொங்கல் வைத்தும், படையல் இட்டும், தேங்காய் உடைத்தும், மொட்டை அடித்தும், காத்து குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்கள் குலதெய்வங்களை வழிபடுகிறார்கள். இதில் அனைத்து சாஸ்தாக்களும் சைவ முறை பூஜை ஏற்றுகொள்கிரார்கள் என்றாலும் குல தெய்வங்களுள் சில சுவாமிகளுக்குக் கிடா வெட்டி, அசைவ படையல் போடும் வழக்கமும் உண்டு. குல தெய்வங்களுக்குரிய வழிபாடு முறை ஒவ்வொரு தெய்வத்தைப் பொறுத்து மாறும். குறிப்பாகக் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ள பிரம்மராட்சி அம்மனுக்கு கொழுக்கட்டை செய்து படைத்தல், சங்கிலிபூதத்தாருக்கு வடைமாலை அணிவித்தும், உருளி பாயசம் வைத்தும் வழிபடுதல், சுடலைமாடன் சுவாமிக்குக் கிடா வெட்டி வழிபடுதல் போன்ற தனித்தனி வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படும். ஆகப் பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ / குல சாஸ்தா வழிபாடு என்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் விதமாக, சாதிய, சமய பேதமின்றி கொண்டாடப்படும் ஒரு விழாவாக அமைகிறது.