பாளையங்கோட்டை நகரில் உள்ள சாந்திநகர் பகுதியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ நடுக்காவுடையார் சாஸ்தா திருக்கோவில்.
மூலவர்: ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ நடுக்காவுடையார் தர்ம சாஸ்தா.
முற்காலத்தில் செண்பக மரங்கள் நிறைந்த காடாக இருந்த இந்த இடத்தில் உக்ரத முனிவர் என்பவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். உக்ரத முனிவர் தீவிர சாஸ்தா பக்தர் என்பதால் அவர் சாஸ்தாவின் மூல மந்திரத்தை உச்சரித்தபடியே தவம் இயற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் சங்குகர்ணன் என்னும் நான்கு கொம்புகளையுடைய அசுரன் ஒருவன் பிரம்மாவை குறித்து கடும் தவம் இருந்து பல சக்திமிக்க வரங்களை பெற்று, தன்னுடன் பல அசுரர்களை கூட்டு சேர்த்து பலவிதமான அட்டகாசங்களை செய்து வந்தான். அவன் ஒரு முறை வேட்டையாடிக்கொண்டே உக்ரத முனிவர் தவம் இருக்கும் செண்பகாரண்யம் பகுதிக்கு வந்துவிடுகிறான். அங்குத் தவம் இயற்றிக் கொண்டிருந்த முனிவரைக் கண்டு பல சேட்டைகளை செய்கிறான். முனிவரோ கடும் தவத்தில் ஆழ்ந்து இருந்ததால் சங்குகர்ணனை சட்டை செய்யவில்லை. சாஸ்தா மூல மந்திரத்தை முறையாக உச்சரித்து தவம் இயற்றும் தனது பக்தனை ஒரு அசுரன் துன்புறுத்தும் போது சாஸ்தா பார்த்துக் கொண்டிருப்பாரா என்ன? வானில் இருந்து கோடி சூரிய பிரகாசத்துடன் சாஸ்தாவானர் சங்கு மற்றும் சக்கரத்துடன் தோன்றி, சங்குகர்ணனுடன் போரிட்டு அவனை சம்ஹாரம் செய்தருளி, தன பக்தனான உக்ரத முனிவருக்குக் காட்சியளித்தார். முனிவரும் சாஸ்தாவை வணங்கிப் பணிந்து போற்றி துதித்து, எனக்காக வந்து அருள்புரிந்த நீங்கள், இங்கு நித்யவாசம் புரிந்து உங்களை நம்பி வரும் பக்தர்களுக்கும் அருள்புரிய வேண்டுமென விண்ணப்பம் செய்கிறார். அவ்வாறே சாஸ்தாவும் அந்தச் செண்பக மரங்கள் நிறைந்த காட்டிற்குள் அமர்ந்து விடுகிறார். நாடு காட்டிற்குள் அமர்ந்த சாஸ்தா என்பதால் இவர் நடுக்காவுடையார் சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார்.
இங்குக் கருவறையில் காட்சிதரும் சாஸ்தா தனது கால்களில் வீர வண்டயம் அணிந்தும், தனது இடுப்பையும் முழங்காலையும் சேர்த்து யோக பட்டம் அணிந்தும், மார்பில் பல்வேறு ஆபரணங்களை தரித்தும், தனது தோள்களில் தோள் வளைகள் தரித்தும், தனது புஜங்களில் வாகு வளையங்கள் தரித்தும், தனது மணிக்கட்டுகளில் வீர கங்கணங்கள் அணிந்தும், தனது காதுகளில் மகர குண்டலங்கள் அணிந்தும் அழகே உருவாகக் காட்சித் தருகிறார். இவரின் வலது புறம் பூர்ணா தேவியும், இடது புறம் புஷ்கலா தேவியும் வீற்றிருக்கின்றனர்.
ஸ்ரீ பூர்ணா தேவி :
இங்கு கருவறையில் சாஸ்தாவுக்கு வலது பக்கம் ஸ்ரீ பூர்ணா தேவி வலது காலை தொங்கவிட்டும், இடது காலை மடித்தும், இடது கையில் மலரை பிடித்தபடியும், வலது கரத்தை தொங்க விட்ட நிலையிலும் அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறாள்.
ஸ்ரீ புஷ்கலா தேவி:
இங்கு கருவறையில் சாஸ்தாவுக்கு இடது பக்கம் ஸ்ரீ புஷ்கலா தேவி இடது காலை தொங்கவிட்டும், வலது காலை மடித்தும், வலது கையில் மலரை பிடித்தபடியும், இடது கரத்தை தொங்க விட்ட நிலையிலும் அமர்ந்த கோலத்தில் காட்சித் தருகிறாள்.
இந்தக் கோவில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பாரம்பரியத்தை பெற்று திகழ்கிறது.
திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஊர்களில் வாழும் சுமார் 700 க்கும் மேலான பல சமூகங்களை சார்ந்த குடும்பங்களுக்கும் ஸ்ரீ நடுக்காவுடையார் தான் குல சாஸ்தாவாக விளங்குகிறார்.
புராண காலத்தில், முனிவர்கள் தியானம், தவம் செய்யும் செண்பக மரங்கள் நிறைந்த காடாக இருந்த இப்பகுதி, தற்போது நகரத்தின் வளர்ச்சியால் குடியிருப்புகளால் சூழப்பட்டு விட்டது.
இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ நடுக்காவுடையார் தர்ம சாஸ்தாவைப் பற்றிய வரலாறு ஸ்கந்த மஹா புராணம், சம்பகாரண்ய மஹாத்மியம் மற்றும் மத்யாரண்யேஸ்வர சாஸ்த்ரு வைபவம் ஆகிய சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குள்ள சாஸ்தா கல்யாண விரதத்தின் பயனைத் தருபவராக விளங்குவதால், திருமணம் ஆகாதவர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும்.
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாளையங்கோட்டை - சாந்திநகரில் அமையப்பெற்றுள்ளது நடுக்காவுடையார் சாஸ்தா திருக்கோவில். இங்கு செல்ல திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து நிறைய நகரப் பேருந்துகள் உள்ளன.