கொழுக்கட்டை என்றால் அனைவருக்கும் ஒரு தனி பிரியம் தான். நம் முழுமுதற் கடவுளான பிள்ளையாருக்கு பிடித்தமானது கூட கொழுக்கட்டை தான். இந்த கொழுக்கட்டையில் பல்வேறு வகைகள் இருந்தாலும் அவற்றுள் பால் கொழுக்கட்டை என்பது சிறப்பிடம் பெறுகிறது. இந்த பால் கொழுக்கட்டை சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்பார்கள். மாலை வேளையில் இதனை சிற்றுண்டியாக செய்து கொடுக்கும் வழக்கம் உள்ளது.
இங்கு நாம் பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி விரிவாக காணலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - அரை கிலோ.
அச்சு வெல்லம் (அ) மண்டை வெல்லம் - அரை கிலோ பொடித்தது.
உப்பு - சிறிதளவு.
தேங்காய் பால் - 1 டம்ளர்.
துருவிய தேங்காய் பூ - சிறிதளவு.
ஏலக்காய் - 3 நுணுக்கியது.
செய்முறை:
பச்சரிசி மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி பிசையவும். பிசைந்த மாவு நன்றாக உருட்ட வசதியாக கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகம் இருந்தால் உருட்டும் போது கையில் ஒட்டிக்கொள்ளும். பின்னர் கையில் சிறிதளவு நல்லெண்ணெய் தடவி கொண்டு, பிசைந்து வைத்துள்ள மாவை கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாகவும், தேவையான வடிவங்களிலும் உருட்டி எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்த உடன் அதில் நாம் உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை போட்டு வேக விடவும். கொழுக்கட்டை நன்றாக வெந்து வரும்போது, கொழுக்கட்டை கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் பொடித்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு கிளறிவிடவும். வெல்லம் நன்றாக கரைந்தவுடன், அதில் நுணுக்கிய ஏலக்காய், மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைத்து தேங்காய் பாலை ஊற்றி கிளறினால் பால் கொழுக்கட்டை தயார்.
குறிப்பு:
பால் கொழுக்கட்டையை அடுப்பில் இருந்து இறக்கிய பின்னரே தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.