Logo of Tirunelveli Today
English

தென்திருப்பேரை திவ்ய தேசம் (Thenthiruperai Divya Desam)

Thenthirperai Divya Desam Temple God with his wives adorned with jewellery, flowers and accessories.

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள்.

இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஆறாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஏழாவதாகவும் விளங்கும் கோவில் "தென்திருப்பேரை". இது சுக்கிரனின் அம்சமாக விளங்குகிறது.

108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

மூலவர் பெயர்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த கோலம்)
உற்சவர் பெயர் : நிகரில்முகில்வண்ணன்.
தாயார்கள்: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்.
விமானம்: பத்ர விமானம்
தீர்த்தம்: சுக்ர புஷ்கரணி தீர்த்தம், சங்கு தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம்.

தென்திருப்பேரை திருக்கோவில் வரலாறு (Thenthiruperai Temple History):

முற்காலத்தில் ஒருசமயம் மகாவிஷ்ணு ஒருமுறை பூமாதேவியுடன் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதனை பார்த்துவிட்ட ஸ்ரீ தேவி, தன் கணவன் பூதேவியோடு மட்டுமே அதிக நேரம் செலவிடுகிறார் என்று கோபித்து கொண்டாள். இதற்கு காரணம் பூதேவி கரிய நிறமாக காட்சியளிப்பது தான் என்றும் நினைத்துக்கொண்டாள். அப்போது அங்கு வந்த துர்வாச முனிவரை வரவேற்க, முனிவரோ வாடிய ஸ்ரீ தேவியின் முகத்திற்கு காரணம் கேட்கிறார். அதற்கு ஸ்ரீ தேவியும் தன் கணவர் கரியநிறம் கொண்ட பூ தேவி மீது தான் அதிக பாசம் காட்டுவதாக கூறி வருந்தினாள். நிலைமையை உணர்ந்த துர்வாசர் அவளை சமாதானப்படுத்திவிட்டு சென்றார். பின் ஒரு நாள் துர்வாச முனிவர் வைகுண்டத்திற்கு வருகையில் அங்கு விஷ்ணுவும், பூதேவியும் தனித்து உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பூதேவி துர்வாச முனிவரை வணங்கி வரவேற்காமல், கண்டும் காணாதது போல இருந்து விடுகிறாள்.

Front view of Thenthiruperai temple.

இதனால் வெகுண்ட துர்வாச முனிவர் எந்த அழகினால் நீ இருமாப்பு கொண்டு என்னை அவமதித்தாயோ அந்த கரியநிற அழகு போய் நீ சிவந்தமேனியாக கடவது என பூதேவிக்கு சாபமிட்டுவிடுகிறார்.

அதன்பின் தன் தவற்றை உணர்ந்த பூதேவி துர்வாச முனிவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் கொடுத்த சாபத்திற்கு விமோசனம் கேட்கிறாள். மனம் இறங்கிய துர்வாசரும் பூஉலகில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள பத்ரி வனம் சென்று தாமிரபரணியில் மூழ்கி மகாவிஷ்ணுவை வழிபட்டு வர மீண்டும் சுய உருவம் அடையப்பெறுவாய் எனக்கூறி சாபத்திற்கு விமோசன வழி கூறியருளுகிறார்.

அதன்படி பூதேவி பூஉலகம் வந்து, தாமிரபரணி ஆற்றின்கரையில் பத்ரி வனம் இருந்த இடத்தை கண்டுபிடித்து, தாமிரபரணியில் நீராடி மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிகிறாள். ஒரு பங்குனி மாத பெளர்ணமி தினம் அன்று பூதேவி தாமிரபரணியில் மூழ்கியெழுந்த போது அவள் கைகளில் மீன் வடிவமுடைய இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்கிறது. அதே நேரம் மகாவிஷ்ணுவும், பூதேவியின் தவத்திற்கு மகிழுந்து அவளுக்கு காட்சியளிக்கிறார். பெருமாளை வணங்கி துதித்த பூதேவி, தனக்கு கிடைத்த அந்த இரண்டு மகர குண்டலங்களையும் பெருமாளுக்கு சமர்பிக்க, பெருமாளும் அந்த மகர குண்டலங்களை தன் காதுகளில் அணிகலன்களாக ஏற்று அருள்புரிந்தார். எனவே தான் இங்கு பெருமாளின் திருநாமம் மகரநெடுங்குழைக்காதர் ஆகும்.

அந்தணர் வடிவாய் பெருமாள் அருள்புரிந்த வரலாறு:

முற்காலத்தில் இப்பகுதியை சுந்தர பாண்டியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் நித்தமும் இத்தல பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய விரும்பி காவிரி பாயும் சோழ வள நாட்டில் இருந்து நூற்றியெட்டு அந்தணர்களை அழைத்து வர ஆணையிட்டான். அவனது ஆணைப்படி சோழ நாட்டிற்கு சென்ற வீரர்கள் 107 அந்தணர்கள் மட்டுமே கிடைக்க, அவர்களை முதலில் மன்னனின் ஆணைப்படி இங்கு அழைத்து வருகிறார்கள். வந்திருந்த அந்தணர்களோ நூற்றியெழு பேர் தான், ஆனால் மன்னன் வந்து நேரில் பார்க்கும் போது மொத்தம் நூற்றியெட்டு அந்தணர்கள் இருந்தார்களாம். இத்தல பெருமாளே நூற்றியெட்டாவது அந்தணராக எழுந்தருளி அருள்புரிந்தார் என்றும் இதனால் இத்தல பெருமாள் எங்களில் ஒருவர் என்றும் சிறப்பித்துக்கூறுகிறார்கள் இவ்வூர் மக்கள்.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

வருணனின் சாபம் தீர்த்து வருணபாணத்தை திருப்பி கொடுத்த வரலாறு:

முற்காலத்தில் வருண பகவான் தன் குருவான வியாழபகவானை நிந்தனை செய்த காரணத்தால், குருவானவர் வருணனின் பராக்கிரம பலங்கள் அனைத்தும் அழிந்து போகும்படி சாபமிட்டு விடுகிறார். இதன்பின் அசுரர்களோடு நடைபெற்ற போரில், குரு சாபப்படி தன் பராக்கிரமங்கள் அனைத்தையும் இழந்து, சிறப்புமிக்க வருணபாணத்தையும் இழந்து தோற்றுவிடுகிறார். இதனால் வருணனின் இருப்பிடத்தை அசுரர்கள் ஆட்சி செய்தார்கள். தன்நிலை கண்டு வருந்திய வருண பகவான் தன் குரு வியாழ பகவானை சந்தித்து தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, தனக்கு சாபவிமோசனம் அளிக்கும்படி மன்றாடுகிறார். மனமிறங்கிய குருவானவர் நீ பூஉலகம் சென்று தாமிரபரணி நதிக்கரையில் பத்ரி வனத்தில் சேவை சாதிக்கும் பெருமாளை வணங்கி விமோசனம் பெறுவாய் என அருளுகிறார். குருவின் சொல்படி வருண பகவான் பூஉலகம் வந்து, தாமிரபரணியில் நீராடி, பத்ரி வனத்தில் மகாவிஷ்ணுவை குறித்து தவமியற்றி, அவரது காட்சியையும் பெறுகிறார். காட்சியளித்த விஷ்ணு வருண பகவானுக்கு சாப விமோசனமளித்து அவன் இழந்த பராக்கிரமங்களையும், வருண பாணத்தையும் அவனுக்கு திருப்பி அளித்ததாக ஒரு வரலாறும் கூறப்படுகிறது.

சுக்கிரனின் மகன் பத்திரனுக்கு சாபநிவர்த்தி வழங்கிய வரலாறு:

முற்காலத்தில் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரின் மகன் பத்திரன் என்பவன் துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறான். அந்த சாபத்திற்கு விமோசனம் தேடி அலைந்த போது இத்திருப்பேரை பகுதிக்கு வருகிறான். இங்கிருந்த மகரநெடுங்குழைக்காதருக்கு விமானம் ஏற்படுத்தி வழிபாடுகள் செய்கிறான். அவனுடைய பக்திக்கு மனமிறங்கிய பெருமாள் பரமபதத்தில் தன் தேவியர்களுடன் அமர்ந்திருக்கும் கோலத்திங் காட்சியளித்து பத்திரனுக்கு விமோசனம் அளித்ததாகவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. பத்திரன் அமைத்த விமானம் என்பதால் பத்ர விமானம் என்ற பெயரை இக்கோவில் விமானம் பெற்றிருக்கிறதாம்.

நாராயண தீட்சிதருக்கு அருள்புரிந்த வரலாறு:

முற்காலத்தில் மதுரையை நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் இத்திருப்பேரையில் நாராயண தீட்சிதர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் பெருமாள் மீது உள்ளார்ந்த பக்தி செலுத்தி வந்தார். பெரும் ஜமீன்தாராகவும், தமிழ்ப்புலவராகவும் விளங்கிய இவர் நாயக்க மன்னருக்கு வரிகட்டத்தவறிய காரணத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இருந்தாலும் பெருமாளை நினைத்து துதித்தபடியே இருந்து அவர்மீது பாமாலை பாடல்களை இயற்றி பாடினார். தன் பக்தனின் பக்தியில் மகிழ்ந்த பரந்தாமன், அந்த பகுதியை ஆண்ட சிற்றரசரின் கனவில் தோன்றி நாராயண தீட்சிதரை விடுவிக்கும்படி உத்தரவிடுகிறார். அதன்படி அம்மன்னனும் தீட்சிதரை விடுவிக்க, அகமகிழ்ந்த நாராயண தீட்சிதர் நேராக மகரநெடுங்குழைக்காதர் சன்னதி சென்று தான் இயற்றிய பாமாலை பாடல்களை பாடி வழிபட்டு மகிழ்ந்தாராம். இவர் திருப்பேரையில் வாழ்ந்தாலும் ஆழ்வார்திருநகரியில் உறையும் நம்மாழ்வார் மீதும் தீராத பற்று கொண்டிருந்த காரணத்தால், தினமும் ஆழ்வார்திருநகரி சென்று நம்மாழ்வாரை வணங்கி அவருடைய சன்னதியில் தீர்த்தமும், சடாரியும் பெற்று மகிழ்வாராம். இதனால் ஆழ்வார்திருநகரி கோவில் அர்ச்சகரும் இவருக்காக தினமும் தீர்த்தம், சடாரியுடன் காத்திருப்பாராம். இப்படி இருக்கையில் ஒருநாள் அதிகாலை தென்திருப்பேரையில் நாராயண தீட்சிதர் இறந்துவிட, அவர் இறந்து விட்ட செய்தி ஆழ்வார்திருநகரிக்கும் சொல்லப்படுகிறது. இதனால் அர்ச்சகர் பூஜைகளை முடித்து கிளம்ப தயராகும் வேளையில் இறந்ததாக சொல்லப்படும் தீட்சிதர், வேக வேகமாக நடந்து நம்மாழ்வார் சன்னதிக்குள் செல்ல, அதனைப்பார்த்த அர்ச்சகர் அங்கு ஓடிவர அப்போது தீட்சிதரின் ஆன்மாவானது நம்மாழ்வாரின் திருவடிகளில் ஐக்கியமானதை கண்டதாகவும் கூறப்படுகிறது.

மூலவர் மகரநெடுங்குழைக்காதர்:
கருவறையில் மூலவராக அமர்ந்த கிருக்கோலத்தில் ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாய் காட்சித்தருகிறார் மகரநெடுங்குழைக்காத பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், சங்கு-சக்கரம் ஏந்தியும், அபயம்-வரதம் காட்டியும், தன் காதுகளில் மீன் போன்ற அமைப்பை உடைய மகரகுண்டலங்கள் அணிந்து புன்சிரிப்புடன் வீற்றிருக்கிறார்.

குழைக்காதவல்லி:
பெருமாள் சன்னதிக்கு தென்புறம் தனி சன்னதியில் குழைக்காதவல்லி நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். இவள் அலைமகளின் அம்சமாக விளங்குகிறாள்.

திருப்பேரை நாச்சியார்:
பெருமாள் சன்னதிக்கு வடப்புறம் தனி சன்னதியில் திருப்பேரை நாச்சியார் நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். இவள் பூமகளின் அம்சமாக விளங்குகிறாள்

உற்சவர் நிகரில்முகில்வண்ணன் சிறப்பு:
இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு நிகரில்முகில்வண்ணன் என்னும் திருநாமம் தாங்கி ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார்.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

தென்திருப்பேரை திவ்ய தேசம் திருக்கோவில் அமைப்பு (Thenthiruperai Divya Desam Temple Architecture):

தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ள இக்கோவில், மூன்று நிலை ராஜகோபுரத்தை கொண்டது.

ஊரின் மத்தியில் அமையப்பெற்றுள்ள இக்கோவிலின் முன்புறம் விசாலமான தெரு அமைந்துள்ளது.

இந்த ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் முன் மண்டபம் நம்மை வரவேற்கிறது. அங்கு கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் கருவறைக்கு நேரெதிரே கருடன் சன்னதி உள்ளது.

அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் அர்த்தமண்டபம் அமையப்பெற்றுள்ளது. அதன் நடுவே தனி மண்டபத்தில் உற்சவர் நிகரில்முகில்வண்ணன் தாயார்களுடன் காட்சிதருகிறார். அவருக்கு பின்புறம் துவாரபாலகர்கள் காவல்புரியும் கருவறையில் மகரநெடுங்குழைக்காதர் காட்சித்தருகிறார்.

திருக்கோவில் உள் பிரகாரத்தில் தெற்கு திருச்சுற்றில் குழைக்காதவல்லி சன்னதியும், வடக்கு திருச்சுற்றில் திருப்பேரை நாச்சியார் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.

இதுதவிர வைணவ திருக்கோவில் பரிவார மூர்த்திகளான பன்னிரு ஆழ்வார்கள், இராமானுஜர், கிருஷ்ணன், நரசிம்மர் மற்றும் பிற சன்னதிகளும் உள்ளன.

வெளித்திருச்சுற்றில் நந்தவனமும், வடக்கு பக்கம் பரமபத வாசலும் அமையப்பெற்றுள்ளன.

தென்திருப்பேரை திருக்கோவில் சிறப்புக்கள் ( Specialities of Thenthiruperai Temple):

இங்கு கருவறையில் அமர்ந்திருக்கும் பெருமாளின் காதுகளில் உள்ள மகரகுண்டலங்கள் பிரசித்தி பெற்றதாகும். மீன் வடிவமுடைய இரண்டு குண்டலங்களுடன் தான் பெருமாள் சேவை சாதிப்பார்.

நம்மாழ்வார் இத்தலத்தின் மீது பதினொரு திருவாய்மொழி பாசுரங்கள் (3359 முதல் 3369வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

இங்கு கருவறைக்கு எதிரிலுள்ள கருடன் சன்னதி மற்ற கோவில்களை போல பெருமாளுக்கு நேரெதிராக இல்லாமல், சற்றே விலகியிருக்கிறது. இங்கு கோவிலுக்கு எதிரே உள்ள இடத்தில் குழந்தைகள் விளையாடுவதையும், அவர்கள் ஓதும் வேத மந்திர ஒலியை கேட்டு மகிழவும் விரும்பி, பெருமாளே கருடனை விலகியிருக்க சொன்னதாக ஐதீகம். இதனை நம்மாழ்வார் தன் திருவாய்மொழி பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Side view of Thenthiruperai temple.

நவதிருப்பதி கோவில்களுள் இத்தென்திருப்பேரை நிகரில்முகில்வண்ணனின் கருடவாகனம் தான் அளவில் பெரியது ஆகும்.

நவ திருப்பதி கோவில்கள் பற்றி இங்கே படிக்கவும்.

தென்திருப்பேரை கோவிலின் முக்கிய திருவிழாக்கள் (Festivals of Thenthiruperai Temple):

பங்குனி மாதம் இங்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந்திருவிழாவும், பத்தாம் நாள் தேரோட்டமும் விமரிசையாக நடைபெறும்.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல பெருமாள் நிகரில்முகில்வண்ணன் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார்.

ஆவணி மாதம் பவித்ரோற்சவமும், ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவமும் விமரிசையாக நடைபெறும்.

இதுதவிர புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறும்.

தென்திருப்பேரை கோவிலின் அமைவிடம் (Location of Thenthiruperai Temple):

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 36-கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது தென்திருப்பேரை.

திருநெல்வேலி புதியபேருந்துநிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் தென்திருப்பேரை வழியாகவே செல்லும்.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothukudi - 50 mins(30.4km)
  • Tirunelveli - 55mins(30.8km)
  • Thiruchendur - 42min(22.6km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by ஜானகி அரவிந்த்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram