Logo of Tirunelveli Today
English

Navathirupathi - 9: Alwarthirunagari

Adhinaatha perumal idols with his wives well decorated with flowers.

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள்.

இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஐந்தாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஒன்பதாவதாகவும் விளங்கும் கோவில் "ஆழ்வார்திருநகரி". இது குருவின் அம்சம்சமாக விளங்குகிறது.

108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

மூலவர் பெயர்: ஆதிநாத பெருமாள் (நின்ற கோலம்)
உற்சவர் பெயர் : ஸ்ரீ தேவி, பூ தேவி, நீளா தேவி சகிதம் பொலிந்துநின்றபிரான்.
தாயார்கள்: ஆதிநாதநாயகி, திருகுருகூர்நாயகி
விமானம்: கோவிந்த விமானம்
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம்.
திருக்கோவில் விருட்சம்: உறங்காபுளிய மரம்.
சிறப்பு சன்னதி: நம்மாழ்வார், ஞானப்பிரான், உறங்காபுளி மரம், மதில் மேல் கருடன்.
மற்ற சிறப்புக்கள்: கல்நாதஸ்வரம், சங்கு மண்டபம்.

திருக்கோவில் வரலாறு:
முற்காலத்தில் படைக்கும் தொழிலை செய்து வந்த நான்முகனாகிய பிரம்மன், மகாவிஷ்ணுவை குறித்து தவம் செய்ய சிறந்த இடத்தை பூஉலகத்தில் தேடினார். அதற்குரிய இடத்தை கூறும்படி மகாவிஷ்ணுவிடமே வேண்டினார். அதற்கு மகாவிஷ்ணுவும், நான்முகனாகிய உன்னை நான் படைக்கும் முன்பே பூஉலகில் தாமிரபரணி ஆற்றின்கரையில் யாம் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ளோம், அந்த இடமே உம் தவத்திற்கு ஏற்ற இடம் என்று கூறி புன்முறுவல் புரிந்தார்.

Temple tower of alwarthirunagari temple.

பிரம்மனும் பூஉலகம் அடைந்து தாமிரபரணி ஆற்றின்கரையில் உள்ள தற்போதைய ஆழ்வார்திருநகரி பகுதிக்கு வந்து மகாவிஷ்ணுவை குறித்து கடுந்தவம் புரிந்தார். அந்த தவத்திற்கு இறங்கி மகாவிஷ்ணு பிரம்மனுக்கு காட்சியளித்து, குருவாக இருந்து படைப்பு தொழிலுக்குரிய வேத மந்திரங்களையும் உபதேசித்து அருளினார். இவ்வாறு பிரம்மன் இங்கு தவமியற்றுவதற்கு முன்பே சுயம்பு மூர்த்தமாய் பெருமாள் எழுந்தருளியிருந்ததால் இத்தலத்திற்கு 'ஆதிபுரி' என்றும் இப்பெருமாளுக்கு 'ஆதிநாதர்' என்றும் பெயர் வந்தது. குருவாக இருந்து உபதேசித்ததால் "திருகுருகூர்" என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

புலையனுக்கு அருள்புரிந்த வரலாறு:
முற்காலத்தில் ஒரு வேதபாடசாலையில் அந்தண குலத்தில் பிறந்த மந்தன் என்பவன் மாணவனாக பயின்று வந்தான். அவன் அதிக திமிர் பிடித்தவன் என்பதால் வேதங்கள் கற்பதில் ஆர்வம் காட்டாமல், வேதம் பயின்ற பிற மாணவர்களையும், வேதம் கற்பித்த ஆசிரியர்களையும் நிந்தனை செய்து வந்தான். இதனால் வெகுண்ட வேதபாடசாலையின் குருமுனிவர், மந்தனே நீ வேதம் கற்கும் பாடசாலையில் இருந்தும் வேதங்களை கற்காததோடு, மற்றவர்களையும் இழிவாக பேசிய காரணத்தால் நீ அடுத்தபிறவியில் புலையனாக பிறக்கக்கடவாய் என சாபிமிட்டு விடுகிறார். அப்போதும் சிறிதும் வருந்தாத, தாந்தன் வேதங்களை கற்பதால் மட்டும் இறைவனை அடைந்துவிட முடியாது, அவருக்கு தொண்டு செய்வதன் மூலமும் இறைவனை அடையலாம் எனக்கூறி அந்த வேதபாடசாலையை விட்டு நீங்கி, அங்கிருந்த விஷ்ணு கோவிலை அடைந்து அக்கோவிலை சுத்தப்படுத்தி, செப்பனிட்டு, தொண்டுகள் பல செய்து வாழ்வை கழித்தான். மறுபிறவியில் குருவின் சாபத்தால் தாந்தன் என்னும் பெயரில் புலையனாக பிறப்பெடுத்தான். முற்பிறவியில் விஷ்ணு கோவிலுக்கு தொண்டுகள் செய்த காரணத்தால் புலையனாக பிறந்தாலும் நல்ல ஒழுக்க சீலனாகவும், சிறந்த பக்திமானாகவும் விளங்கினான் தாந்தன். அவன் இந்த ஆதிபுரிக்கு வந்த போது, ஆதிநாத பெருமாளை தரிசிக்க செல்கையில், புலையன் என்பதால் உள்ளே செல்ல அந்தணர்களால் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் வருந்திய தாந்தன் ஆதிநாதரை வழிபடும் பொருட்டு வேள்வி ஒன்றை செய்ய எண்ணி வேள்விச்சாலை அமைத்தான். அங்கும் அந்தணர்கள் வந்து அவனுக்கு இடையூறு செய்தனர். இதனால் வருந்திய தாந்தன் பெருமாளிடம் முறையிட, பெருமாள் அவனுக்கு இடையூறு செய்த அந்தணர்களின் கண்கள் பார்வையிழந்து போகும்படி செய்கிறார். அப்போது வானில் ஓர் குரல் தாந்தன் என் பக்தன் அவனுக்கு இடையூறு செய்பவர்கள் என் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று அசிரீரியாக ஒலித்தது. இதனால் மனம்திருந்திய அந்தணர்கள் தாந்தனிடம் சென்று மன்னிப்பு கேட்க, அந்தணர்கள் இழந்த பார்வையை மீண்டும் பெற்றனர். அப்போது பெருமாள் அவர்களுக்கு காட்சியளித்து, முன்ஜென்ம சாபத்தினை போக்கி தாந்தனுக்கு முக்தியளித்தார். இந்த வரலாற்றை விளக்கும் வண்ணம் இக்கோவில் படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தாந்தன் ஆதிநாதரை வழிபட்ட இடம் அப்பன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு சாதி ஏற்றத்தாழ்வுகள் என்பது இறைவனுக்கு இல்லை என்பதை உணர்த்துகிறது.

நம்மாழ்வார் வரலாறு:

Perumal golden statue with his two wives decorated with ornaments and flowers.
முற்காலத்தில் கரிமாற பாண்டியன் என்ற குறுநில மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு உடையநங்கை என்னும் பெண்ணோடு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் ஆதிநாதர் மீது அளவற்ற பக்தி செலுத்தி வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைபேறு இல்லை. எனவே குழந்தை பேறு வேண்டி இவர்கள் ஆதிநாதரை வழிபட்டு வந்தனர். இவர்களின் வேண்டுதலுக்கு பலனாக வைகாசி மாத விசாக நட்சத்திர தினத்தில் கடக லக்னத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சடகோபன் என்னும் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். அந்த குழந்தை மற்ற குழந்தைகளை போல உண்ணாமல், உறங்காமல், இமைக்காமல், தும்மாமல், அழாமல், அசையாமல் அப்படியே இருந்தது. இதனால் வருந்திய பெற்றோர் அக்குழந்தையை ஆதிநாதர் சன்னதியில் கிடத்தி கண்ணீர்மல்க வேண்டினர். அப்போது அதுவரை அசைவில்லாமல் கிடத்தப்பட்ட குழந்தையானது தவழ்ந்து சென்று அங்கிருந்த புளியமரத்தினடியில் சென்று அமர்ந்துகொண்டது. அக்காட்சியை கண்ட பெற்றோர்கள் இது பெருமாளின் திருவிளையாடலே என்பதை உணர்ந்து அக்குழந்தையை தொந்தரவு செய்யாமல் பெருமாள் பார்த்துக்கொள்வார் என்று விட்டுச்சென்றார்கள். அதன்பின் 16 ஆண்டுகள் அக்குழந்தை அப்புளியமரத்தினடியில் அமர்ந்தபடியே யோக நிஷ்டையில் இருந்தது. 16 ஆண்டுகள் கழித்து கண்விழித்த அந்த குழந்தையே நம்மாழ்வார். நம்மாழ்வார் கண்விழித்ததும் வேதத்தின் சாரத்தையெல்லாம் பிழிந்து திருவாய்மொழியாக அருளினார். பின்னர் திருக்கோளூரில் இருந்த மதுரகவியாழ்வார் இங்கு வந்து நம்மாழ்வாரை தன் குருவாக ஏற்று பணிவிடைகள் செய்து வந்தார். மதுரகவியாழ்வார் வயதில் மூத்தவராய் இருந்தும் 16 வயது பாலகனான நம்மாழ்வாரை குருவாக ஏற்றதோடு அல்லாமல் நம்மாழ்வார் மீது தனி பாசுரங்களே பாடியுள்ளார். அவற்றுள் கண்ணி நுன் சிறுதாம்பு என்று துவங்கும் பாடல் பிரசித்தி பெற்றது ஆகும்.

மதுரகவியாழ்வார் இக்குருகூர் வந்து முதன்முதலாக யோக நிஷ்டையில் இருந்த நம்மாழ்வார் மீது சிறு கல் எறிந்து எழுப்பினார். எழுந்த நம்மாழ்வாரிடம் "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்" என்ற கேள்வியை மதுரகவியாழ்வார் கேட்க, அதற்கு அக் குழந்தை நம்மாழ்வாரோ "அத்தை தின்று அங்கே கிடக்கும்" என்ற உயர்ந்த அத்வைதத்தை பதிலாக உரைத்தார். இதனால் மகிழ்ந்த மதுரகவியாழ்வார் ஆகா இவர் அல்லவா என் உண்மையான குரு என்று கூறி நம்மாழ்வாரை தன் குருவாக ஏற்றார்.

நம்மாழ்வார் இங்கு புளியமரத்தடியில் 16 ஆண்டுகள் யோக நிலையில் இருந்து பின் கண்விழித்து பல திருவாய்மொழி பாடல்களை அருளியுள்ளார். அவர் பல திருக்கோவில்களுக்கு எழுந்தருளி தன் பாசுரங்களால் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இவருக்கு இங்கு ஆதிநாதப்பெருமாள் தனக்கு நிகரான அந்தஸ்து அழித்து சிறப்பித்துள்ளார். எனவே இங்கு நம்மாழ்வாருக்கு பெருமாளை விட ஒரு படி மேலாகவே சிறப்பளிக்கப்படுகிறது.

மூலவர் ஆதிநாதர்:

Idol of alwarthirunagari urshavar with sacred lion statues on both sides.
கருவறையில் மூலவராக ஆதிநாதப்பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாய் காட்சித்தருகிறார். இவர் சுயம்பு மூர்த்தி என்றாலும் நெடிதுயர்ந்த திருமேனி ஆவார். நான்கு கரங்களுடன், சங்கு-சக்கரம் ஏந்தியும், அபயம்-வரதம் காட்டியும் நின்ற கோலத்தில் நிற்கும் பெருமாளின் திருப்பாதங்கள் பூமிக்குள் புதைந்திருப்பதாக ஜதீகம்.

ஆதிநாத நாயகி:
அலைமகளின் அம்சமாக இங்கு ஆதிநாத நாயகி நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் காட்சித்தருகிறாள்.

திருக்குருகூர் நாயகி:
நிலமகளின் அம்சமாக இங்கு திருக்குருகூர் நாயகி நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் காட்சித்தருகிறாள்.

உற்சவர் பொலிந்துநின்றபிரான் சிறப்பு:
இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு பொலிந்துநின்றபிரான் என்னும் திருநாமம் தாங்கி ஸ்ரீ தேவி, பூ தேவி, நீளா தேவி சகிதமாக அருள்பாலிக்கிறார். பொலிவு என்றால் அழகு என்று பொருள். ஆக இத்தல பெருமாள் அழகே வடிவாக நின்ற கோலத்தில் அருள்பாலிப்பதனால் பொலிந்துநின்றபிரான் என்று அழைக்கப்படுகிறாரோ என தோன்றுகிறது.

ஞானப்பிரான் சன்னதி:
இரண்யாட்சன் என்னும் அரக்கன் முற்காலத்தில் பூமி உருண்டையை எடுத்து சமுத்திரத்துக்குள் மறைத்து வைத்ததும், அதனை பெருமாள் வராக அவதாரம் எடுத்து கொண்டுவந்த வரலாறும் நாம் அறிந்ததே. பல்வேறு புராணங்களிலும் இந்த வராக அவதாரம் பெருமையாக விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வராக அவதாரத்தை தரிசிக்கும் பொருட்டு இங்கு வாழ்ந்த வைணவ முனிவர்கள் சிலர் இங்கு தவமியற்றினார்கள். அவர்களின் தவத்திற்கு இறங்கி தன் மடியில் பூமாதேவியை இருத்தியபடி வராகராக பெருமாள் காட்சியளித்தார். இந்த வராக மூர்த்தியே ஞானப்பிரானாக இங்கு சேவை சாதிக்கிறார்.

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

நம்மாழ்வார் சன்னதி:
பெருமாளின் அம்சமாகவே பிறந்த நம்மாழ்வாருக்கு இங்கு, ஆதிநாதர் தனக்கு நிகரான அந்தஸ்து அளித்து சிறப்பித்துள்ளார். எனவே இங்கு நம்மாழ்வார் தனி விமானம், தனி கொடிமரம் கொண்டு தெற்கு நோக்கிய தனி சன்னதியில் காட்சித்தருகிறார். இவருக்கு வருடத்தில் இரண்டு முறை மாசி மாதம் மற்றும் வைகாசி மாதம் கொடியேற்றமாகி திருவிழா நடைபெறும்.

இங்கு பிறந்த நம்மாழ்வார் 16 வயது வரை இங்கிருந்த புளியமரத்தடியில் யோக நிஷ்டையில் இருந்து, வைணவ கோவில்கள் பலவற்றுக்கும் மங்களாசாசனம் செய்து, இறுதியில் மோட்சமடைந்த பின் அவரின் உடலானது இப்புளியமரத்தின் அடியிலேயே வைக்கப்பட்டு தனிக்கோவில் எழுப்பப்பட்டதாக கூறுகிறார்கள்.

உறங்காபுளி மரம்:

The sacred urangaapuli maram with a priest performing rituals for it.

பெருமாள் அம்சமாக நம்மாழ்வார் இப்பூவுலகில் அவதரிக்கும் முன்பே ஆதிசேஷனின் அம்சமாக இங்கு புளியமரம் அவதரித்ததாம். இம்மரம் சுமார் 5000 ஆண்டுகளை தாண்டி இன்றும் இத்தலத்தில் உறங்காபுளியாக நிலைப்பெற்றுள்ளது. இம்மரம் பூக்கும் ஆனால் காய்க்காது என்று கூறப்படுகிறது.

பொதுவாக புளியமரத்தின் இலைகள் மாலை 6.00 மணிக்கு பின் மூடி ஒன்றாகிவிடும். ஆனால் இந்த மரத்தின் இலைகள் எப்போதும் மூடாது என்பதால் உறங்காபுளி என்று சிறப்பிக்கப்படுகிறது.

மதில் மேல் கருடன்:
இத்திருக்கோவிலின் மதில்சுவற்றின் வடகிழக்கு மூலையின் மேல் காட்சி தரும் கருடாழ்வார் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர் இப்பகுதியிலுள்ள பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறார். இந்த கருடாழ்வார் மீது தனி பாசுரங்களே பாடப்பட்டுள்ளதாம். இவருக்கு ஆடி சுவாதியன்று விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அன்று இவருக்கு அமிர்தகலசம் என்னும் கொழுக்கட்டை படைத்து வழிபடுவதும், தேங்காய் விடலை சமர்ப்பிப்பதும் விசேஷமாக நடைபெறும்.

கல் நாதஸ்வரம்:
இத்திருக்கோவிலில் கல்லில் செதுக்கப்பட்ட நாதஸ்வரம் ஒன்று உள்ளது. இந்த அற்புத நாதஸ்வரத்தை தயார் செய்யவதே தனிக்கலை ஆகும். இந்த கல்நாதஸ்வரத்தை செதுக்க பல நுட்பங்களை கையாண்டுள்ளனர் கலைஞர்கள். இதற்கென சிறப்பு வாய்ந்த கருங்கல்லை தேர்ந்தெடுத்து செதுக்கும் போது அது உடையாமல் இருக்க அந்த கருங்கல்லை பலவகையான மூலிகைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றில் மூழ்க வைத்து, பக்குவப்படுத்தியே செதுக்கியுள்ளார்கள். இதனால் தான் இந்த நாதஸ்வரம் தற்போதும் நேர்த்தியாக உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும் இந்த நாதஸ்வரத்தை ஒரு குறிப்பிட்ட மணி அளவுக்கு மேல் வாசித்தால், வாசிக்கும் கலைஞரின் உமிழ்நீரானது மூலிகையின் சக்தியால் பச்சைநிறமாக மாறிவிடுமாம். இதனால் இதனை வாசிக்க தற்போது பலரும் தயங்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

சங்கு மண்டபம்:
ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுக்குள் சங்கு மண்டபம் எனப்படும் கல் மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபத்தில் எங்கு பார்த்தாலும் சங்கு வரையப்பட்டுள்ளது. பழங்காலத்தில் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அதிகரித்து பாய்ந்து வரும் வேளையில் இந்த மண்டபத்தில் இருந்து சங்கு முழங்கும் சத்தம் தானாக கேட்குமாம். அத்தகைய தொழில்நுட்பத்தை கையாண்டு அக்காலத்திலேயே இம்மண்டபத்தை கட்டியுள்ளார்கள். காலப்போக்கில் தற்போது மண்டபம் பழமையாகிவிட்டதால், சங்கு முழக்கம் கேட்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

திருக்கோவில் அமைப்பு:

தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ள இக்கோவில், ஐந்து நிலை ராஜகோபுரத்தை கொண்டது.

ஊரின் மத்தியில் அமையப்பெற்றுள்ள இக்கோவிலின் முன்புறம் பந்தல் மண்டபம் எனப்படும் கல் மண்டபம் பிரத்யேகமாக அமையப்பெற்றுள்ளது. இம்மண்டபத்தை கடந்தால் ராஜகோபுரத்தை அடையலாம்.

இந்த ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் கருவறைக்கு நேரெதிரே கருடன் சன்னதி உள்ளது.

அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் துவாரபாலகர்கள் காவல்புரியும் கருவறையில் நடுநயமாக பெருமாள் சன்னதியும், சுற்றிவர உள் பிரகாரமும் அமையப்பெற்றுள்ளது.

உள் பிரகாரத்தின் தெற்கு திருச்சுற்றில் மேடை மீது ஞானப்பிரான் சன்னதியும், தொடர்ந்து ஆதிநாதநாயகி சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. வடக்கு திருச்சுற்றில் திருகுருகூர் நாயகி சன்னதியும், திருவாய்மொழி மண்டபமும், அதனைத்தாண்டி உறங்காப்புளி சன்னதியும், தெற்கு நோக்கிய நம்மாழ்வார் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.

இதுதவிர பன்னிரு ஆழ்வார்கள், லட்சுமி நரசிம்மர், தசாவதாரங்கள், திருவேங்கடமுடையான், வேணுகோபாலன், மணவாளமாமுனிகள், இராமானுஜர், ஆஞ்சநேயர், சீதா உடனுறை ராமர் மற்றும் லட்சுமணன் சன்னதிகள் ஆகியவையும் பிரகாரத்தை சுற்றி அமையப்பெற்றுள்ளது.

வெளித்திருச்சுற்றில் நந்தவனமும், யானைக்கொட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திருச்சுற்றின் வடக்கு பகுதியில் பரமபத வாசலும் அதனையொட்டி பரமபத வாசல் மண்டபமும் அமையப்பெற்றுள்ளது. .

முன்பக்கம் கொடிமரத்துக்கு வடப்புறம் ஒரு மண்டபமும், தென்புறம் மற்றொரு மண்டபமும் அமையப்பெற்றுள்ளது.

இதுதவிர திருக்கோவில் மேல தேர்வீதியில் யானைக்கோவில் என்ற ஒரு தனிக்கோவிலும் அமையப்பெற்றுள்ளது.

திருக்கோவில் சிறப்புக்கள்:
இங்கு கருவறையில் நின்று அருள்பாலிக்கும் பெருமாளின் பாதங்கள் பூமிக்குள் புதைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இங்குள்ள நம்மாழ்வார் திருமேனி மதுரகவியாழ்வாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

நம்மாழ்வார் இத்தலத்தின் மீது பதினொரு திருவாய்மொழி பாசுரங்கள் (3106 முதல் 3116வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

இங்கு கருவறைக்கு எதிரிலுள்ள கருடன் மற்ற கோவில்களை போல கரம் கூப்பிய நிலையில் இல்லாமல், சங்கு-சக்கரம் ஏந்தியும், அபய-வரதம் காட்டியும் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பது சிறப்பு.

நவதிருப்பதிகளின் ஒன்பது பெருமாள்களும் வருடத்திற்கு ஒருமுறை இந்த ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சிகொடுப்பார்கள்.

நவதிருப்பதி கோவில்களில் இந்த ஆழ்வார்திருநகரி தவிர வேறெந்த கோவில்களிலும் நம்மாழ்வாருக்கு உற்சவ திருமேனி கிடையாது.

திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இங்குதான் அரையர் சேவை பிரசித்தமாக நடைபெறும்.

நம்மாழ்வார் பல கோவில்களின் பெருமாள் மீது பாசுரங்கள் பாடியிருக்க, இங்கு அவரின் சிஷ்யரான மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை போற்றி அவர் மீதே பாசுரங்கள் பாடியுள்ளார்.

இங்கு தனக்கு நிகரான அந்தஸ்த்தை பெருமாள், நம்மாழ்வாருக்கு வழங்கியிருந்தாலும், பெருமாளுக்கு ஒருபடி மேலாகவே இவர் சிறப்பிக்கப்படுகிறார். இங்குள்ள பெருமாளின் கருவறை விமானத்தை காட்டிலும், நம்மாழ்வாரின் கருவறை விமானமே அளவில் சற்று பெரியதாகும்.

இங்கு வேடன் ஒருவனும், வேழம் ஒன்றும், இங்கு வாழ்ந்த நாய் ஒன்றும் இத்தல மகிமையால் முக்தி பெற்றுள்ளது.

இங்கு பிரம்மன், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், சங்கன், தாந்தன், இந்திரன், பல ரிஷிகள் ஆகியோர் பெருமாளின் தரிசனம் கண்டுள்ளார்கள்.

இங்கு நடைபெறும் திருஅத்யன உற்சவத்தில் நம்மாழ்வார் எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு பெருமாளே நேரில் சென்று காட்சியளித்து, நம்மாழ்வாரின் திருமுடி மீது தன் திருவடி வைத்து சேவை சாதிப்பார். இதற்கு திருமுடி சேவை என்று பெயர்.

காசிப முனிவரால் சபிக்கப்பட்ட இந்திரன் இத்தலத்தில் ஆதிநாத பெருமாளை வணங்கி விமோசனம் பெற்றார்.

இங்கு மற்ற கோவில்களை போல இராமானுஜருக்கு காவி உடை சாத்தப்படாமல், வெள்ளை உடையே சாத்தப்படுகிறது.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள நம்மாழ்வாருக்கு மாறன், சடகோபன், பராங்குசன், பராங்குசநாயகி, வகுளாபரணன், குருகைப்பிரான், குருகூர்நம்பி, தொண்டர் பிரான், திருநாவீறு உடைய பிரான், உதயபாஸ்கரர், குழந்தைமுனி, ஞானத்தமிழ்க்கடல், மெய்ஞ்ஞானகவி, வரோக பண்டிதன் ஆகிய பெயர்களும் வழங்கப்படுகிறது.

கம்பர் தான் எழுதிய இராமாயணத்தை அரங்கேற்றம் செய்யும் முன்னர், இங்கு வந்து சடகோபன் என்று அழைக்கப்படும் நம்மாழ்வாரை வணங்கி அவர் மீது சடகோப அந்தாதி என்னும் பாடலை பாடி வணங்கி உள்ளார்.

தமிழ் தாத்தா என்று சிறப்பித்து கூறப்படும் உ. வே. சுவாமிநாத அய்யர் பத்துபாட்டு என்னும் ஓலைச்சுவடிகளை தேடி அலைந்த போது, இத்தலம் வந்து நம்மாழ்வாரை வேண்டிட, அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் அந்த ஓலைச்சுவடி கிடைக்கப்பெற்றதாம்.

இத்தலத்தில் தான் இராமானுஜரின் பிறப்பிற்கு முன்பே அவருக்கு தனிக்கோவில் எழுப்பப்பட்டது.

முக்கிய திருவிழாக்கள்:

சித்திரை மற்றும் பங்குனி மாதங்களில் இங்கு பொலிந்துநின்றபிரானுக்கு கொடியேற்றமாகி பதினொரு நாள் திருவிழா நடைபெறும். பத்தாம் நாள் தேரோட்டமும் நடைபெறும்.

இதுதவிர சித்திரை மாதம் திருவைகுண்டத்தில் நடைபெறும் கள்ளர்பிரான் கோவில் திருவிழாவின் ஐந்தாம் திருநாளுக்காக இங்கிருந்து பொலிந்துநின்றபிரானும், நம்மாழ்வாரும் தனித்தனி பல்லக்கில் திருவைகுண்டம் எழுந்தருளுவார்கள்.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த உற்சவத்திற்கு நம்மாழ்வார் சன்னதியில் கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் ஐந்தாம் திருநாளன்று நவதிருப்பதி கோவில்களின் ஒன்பது பெருமாள்களும் இங்கு எழுந்தருளுவார்கள். அன்று இரவு ஒன்பது கருடசேவை விமரிசையாக நடைபெறும். அப்போது நம்மாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி ஒன்பது பெருமாள்களையும் மங்களாசானம் செய்வார். உடன் தனிதோளுக்கினியானில் மதுரகவி ஆழ்வாரும் எழுந்தருளுவார். அன்று இங்கு ஒரே இடத்திலேயே நவதிருப்பதிகளின் ஒன்பது பெருமாள்களையும் தரிசிக்கலாம். பத்தாம் நாளான வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடைபெறும். இது தவிர மாசி மாதமும் நம்மாழ்வாருக்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும். அந்த விழாவின் பத்தாம் நாளும் நம்மாழ்வார் தேரோட்டம் நடைபெறும்.

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று மதில் மேல் கருடனுக்கு விசேஷ திருமஞ்சனங்களுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதுதவிர புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நடைபெறும் முன்பத்து, பின்பத்து, திருஅத்யன உற்சவம் ஆகிய திருவிழாக்களும் இங்கு சிறப்புப்பெற்றதாகும்.

அமைவிடம்: திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 30-கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது ஆழ்வார்திருநகரி.

நெல்லை புதியபேருந்துநிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் ஆழ்வார்திருநகரி வழியாகவே செல்லும்.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothukudi - 37.1kms (51 min)
  • Tirunelveli - 25.6kms (38min)
  • Thiruchendur - 28kms (50min)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by ஜானகி அரவிந்த்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram