Logo of Tirunelveli Today
English
Vaithamanidhi perumal urshavar well decorated with flowers.

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள்.

இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றுள் நவக்கிரக வரிசையில் மூன்றாவதாக, செவ்வாய்க்குரிய தலமாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் எட்டாவதாகவும் விளங்கும் கோவில் "திருக்கோளூர்".

108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

மூலவர் பெயர்: வைத்தமாநிதி பெருமாள் (கிடந்த கோலம்)
உற்சவர் பெயர் : நிஷேபவித்தன் (நித்தியபவித்திரர் - நின்றகோலம்)
தாயார்கள்: குமுதவல்லி நாச்சியார், கோளூர்வல்லி நாச்சியார்.
விமானம்: ஸ்ரீகர விமானம்
தீர்த்தம்: நிதி தீர்த்தம், குபேர தீர்த்தம், தாமிரபரணி.

திருக்கோவில் வரலாறு:

Temple tower of sri vaithamanidhi perumal temple.

முற்காலத்தில் ஒருசமயம் குபேரன் அழகான செல்வச்செழிப்பு கொண்ட அழகாபுரியை அரசாண்டு வந்தான். அப்போது ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க குபேரன் கைலாயம் சென்றிருந்த வேளையில், சிவபெருமான் தனது பத்தினியான பராசக்தியோடு அன்போடு பேசிக்கொண்டிருந்தார். அதுசமயம் சென்ற குபேரன் பராசக்தியின் அழகில் மயங்கி ஓரக்கண்ணால் அவளை பார்க்க, அதைக்கண்டு வெகுண்ட உமையவளோ மிகுந்த கோபத்துடன், நீ தவறான எண்ணத்தில் என்னைப் பார்த்ததால் அந்த ஒரு கண்ணின் பார்வையை இழந்து, உன் செல்வங்களை இழந்து, விகார தோற்றுத்துடன் திரிவாய் என குபேரனுக்கு சாபமிட்டாள். அடுத்த நிமிடமே நவநிதிகளும் குபேரனை விட்டு அகல, ஒரு கண் பார்வையும் மறைந்து, விகாரமான தோற்றத்தை பெற்றான் குபேரன்.

இப்படி குபேரனை விட்டு விலகிய நவநிதிகளும் தாங்கள் தஞ்சமடைவதற்கு தகுந்த தலைவன் இல்லையே என்று தவித்தபடி தாமிரபரணிக்கரையில் தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடி திருமாலை நினைத்து வழிபட, அவர்களின் வேண்டுதலுக்கு இறங்கி திருமால் காட்சியளித்து, நவநிதிகளையும் தன்னோடு சேர்த்தபடி பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளித்தார். நிதிகளை தன் பக்கத்துல் வைத்து அதற்கு பாதுகாப்பளித்து, அவற்றின் மீது சயனம் கொண்டதால் வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமத்தை பெற்றார்.

தன் தவறை உணர்ந்த குபேரனும் பரமசிவனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்க, சிவபெருமானோ பார்வதியிடம் மன்னிப்பு கேட்கும்படி திருவாய் மலர்ந்தார். அதன்படி பார்வதியிடம் மன்னிப்பு கேட்ட குபேரனிடம், உன் நவநிதிகளும் பெருமாளிடம் தஞ்சம் புகுந்துள்ளன, எனவே தாமிரபரணிக்கரையில் உள்ள பெருமாளை வழிபட்டு அருள் பெறுவாய் என்று விமோசனமளித்தாள். உடனே குபேரனும் தாமிரபரணிக்கரையில் உள்ள திருக்கோளூர் பகுதிக்கு வந்து, பெருமாளை நினைத்து கடுந்தவம் புரிந்தார்.

இறுதியாக குபேரனின் தவத்தை மெச்சிய பெருமாள், குபேரனுக்கு காட்சியளித்து சாபவிமோசனமருளியதுடன், அவன் இழந்த நிதிகளில் ஒரு பகுதியை மரக்காலால் அளந்து குபேரனுக்கு திருப்பி அளித்தார். அந்த நிதிகளை பெற்று மீண்டும் அழகாபுரி சென்று ஆட்சிபுரிய தொடங்கினான் குபேரன்.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

தர்மகுப்தன் செல்வம் பெற்ற வரலாறு:

முற்காலத்தில் தர்மகுப்தன் என்பவர் எட்டு பிள்ளைகளை பெற்று மிகவும் வறுமையோடு வாழ்ந்து வந்தார். தரித்திரம் அவரை பல வகையில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் அவர் தன் குரு பரத்பாஜரை சந்தித்து, வணங்கி தன் நிலை விவரித்து வருந்தினான். அதற்கு குரு அவனிடம், "நீ முற்பிறவியில் செல்வந்த அந்தணராக பிறந்திருந்தாய், அப்போது உன் ஊர் அரசன் உன்னிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது என்று கேட்டமற்கு உண்மையை மறைத்து பொய்யான தகவல்களை கூறினாய், அந்த செல்வத்தை கொண்டு பிறர் ஒருவருக்குக்கூட நீ உதவி செய்யவில்லை, அந்த வினைப்பயனை தான் இப்போது நீ அனுபவிக்கிறாய்" என எடுத்துரைத்தார். ஆகவே உன்னுடைய முற்பிறவி பாவம் நீங்க, நீ தாமிரபரணி நதிக்கரையில் குபேரனின் நவநிதிகளையும் ஏற்று அருள்புரிந்த வைத்தமாநிதி பெருமாளை சரணடைந்தால், உன் பாவங்கள் விலகி அருள்பெறலாம் என்று உபதேசித்தார். குருவின் உபதேசத்தை ஏற்று இங்கு வந்த தர்மகுப்தன், இங்கு பெருமாளை நோக்கி தவம்புரிந்து, வைத்தமாநிதி பெருமாளின் காட்சிபெற்று தன் முன்வினை பாவங்கள் நீங்கி, செல்வங்களை பெற்றான் என்றும் கூறப்படுகிறது.

திருக்கோளூர் பெயர் காரணம்:

Inner view of sri vaithamanidhi perumal temple.
கோள் என்றால் புரம் கூறுவது என்று அர்த்தம். புரம் கூறுவது தகாத செயலாக கூறப்படும் போது, அந்த கோளுக்கு முன் திரு சேர்த்து திருக்கோளூர் என்று அழைக்கிறார்களே என்னவாக இருக்கும் என அறிய முற்பட்ட போது, அதற்கும் ஒரு செவிவழி புராணக்கதை கூறப்படுகிறது.

ஒருமுறை தர்மதேவதை இந்த இடத்தில் வந்து அதர்மத்திற்கு பயந்து ஒளிந்து கொண்டதாம். அப்போது இங்கு வந்த அதர்மம், தர்மதேவதையிடம் சண்டையிட இறுதியில் தர்மதேவதையே வென்றுவிட, அதர்மம் இங்கிருந்து வெளியேறிய போது, குபேரனிடம் சென்று உன்னுடைய நவநிதிகள் அனைத்தும் இந்த தலத்தில் தான் நிரந்தர வாசம் புரிகின்றன எனக்கோள் சொல்லியதாகவும், அதனால் தான் இத்தலம் "திருக்கோளூர்" என்று அழைக்கப்பட்டதாகும் தெரியவருகிறது.

குபேரனிடமிருந்த நவநிதிகள்:
சங்கநிதி, பதுமநிதி, மகரநிதி, கச்சபநிதி, மகுடநிதி, நந்தநிதி, நீலநிதி, கர்வநிதி மற்றும் மஹாபதுமநிதி இவை ஒன்பதும் குபேரனிடமிருந்த ஒன்பது வகை செல்வங்கள் ஆகும்.

மூலவர் வைத்தமாநிதி பெருமாள்:

Black idol of sri vaithamanidhi perumal adorned with dhoti and flowers.
கருவறையில் ஸ்ரீகர விமானத்தின் கீழ் ஆதிசேஷன் மீது புஜங்க சயனத்தில், வலக்கையை நீட்டியவாறு, குபேரனுக்கு செல்வங்களை அளந்து கொடுத்த மரக்காலைத் தன் தலைக்கு வைத்தும், கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்க்கும் கோலத்தில் சேவை சாதிக்கிறார், வைத்தமாநிதி பெருமாள்.

கோளூர்வல்லி தாயார்:
பெருமாள் சன்னதிக்கு வலப்புறம் தனி சன்னதியில் பூமகளாகிய ஸ்ரீ தேவியின் அம்சமாகிய கோளூர்வல்லி தாயார் நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

குமுதவல்லி தாயார்:
பெருமாள் சன்னதிக்கு இடப்புறம் தனி சன்னதியில் நிலமகளாகிய பூ தேவியின் அம்சமாகிய குமுதவல்லி தாயார் நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள்

உற்சவர் நிஷேபவித்தன்:
இங்கு உற்சவர் நிஷேபவித்தன் என்னும் திருநாமம் கொண்டு, நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் காட்சித்தருகிறார்.

மதுரகவியாழ்வார் சன்னதி சிறப்பு:
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராக திகழ்பவர் மதுரகவியாழ்வார் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஈசுவர ஆண்டு, சித்திரை திங்கள் வளர்பிறையுடன் கூடிய சதுர்த்தி திதியில் அந்தணர் குலத்தில் இத்திருக்கோளூர் தலத்திலே அவதரித்தார்.

இவர் பெரியதிருவடி என்று சிறப்பித்து கூறப்படும் கருடனின் அம்சமாக பிறந்தவராவார். இவர் வேத சாத்திரங்களை நன்கு கற்றுணர்ந்து கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இனிமையான சொற்களால் கவிகளை இயற்றியதால் மதுரகவி என்று சிறப்பித்து அழைக்கப்பெற்றார்.

இவர் வடநாட்டு புண்ணிய தேசங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்த வேளையில். ஒருநாள் இரவு பேரொளி ஒன்றினைக் கண்டு வியப்படைந்தார். அவ்வொளியை மறுநாளும் அவர் காணவே, அவ்வொளி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக அதனை பார்த்தவாறே தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார். அயோத்தி, பூரி, அஹோபிலம், திருப்பதி ஆகிய புண்ணிய தலங்களை தாண்டியும் அவ்வொளித் தெரிந்ததால் ஆழ்வாரும் தெற்கு நோக்கி நடந்து கொண்டே இருந்தார். இறுதியாக அந்த ஒளி, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருக்குருகூரில் (ஆழ்வார்திருநகரி) சென்று மறைந்தது. அங்கு வந்த மதுரகவியாழ்வாரும் அவ்வூர் மக்களிடம், இவ்வூரில் ஏதேனும் சிறப்பு உள்ளதா என்று கேட்க, அவ்வூர் மக்களும் இங்கு 16 வயது பாலகனாக ஒருவர் ஒரு புளிய மரத்தடியில் தவம் செய்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.

மதுரகவியாழ்வாரும் அங்கு சென்று அப்பாலகனுக்கு உயிர் இருக்கிறதா என்று சோதிக்கும் பொருட்டு அவர் மீது ஓர் கல்லை எடுத்து எறிந்தார். அப்பாலகன் தான் நம்மாழ்வார்.

தன் மீது கல் விழுந்ததால் முதன்முறையாக கண் திறந்துப் பார்த்தார் அந்த பாலகரான நம்மாழ்வார். மதுரகவிகளும் இவர்க்கு உயிர் இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டு, இவரால் பேச முடியுமா என்று பரிசோதிக்க விரும்பி.,

"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?" என்று கேட்டார். அதற்கு நம்மாழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார். இந்த பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட மதுரகவிகள், நம்மாழ்வாரின் பெருமையையும் ஞானத்தையும் புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.

இந்த வினா விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது.

செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால், பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.

தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைக்கொண்டே பக்தி வளரும்.

மதுரகவியாழ்வார் தன்னுடைய பாசுரங்களில் திருமாலை மையப்படுத்தி பாடாது, நம்மாழ்வாரையே மையப்படுத்தி பாடியிருக்கிறார். இவரது பாசுரங்கள் குரு பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் பாசுரங்களை எல்லாம் ஓலைச்சுவடியாக பதிந்தார். பின் நம்மாழ்வார் முக்தியடைந்துவிட, தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் கிடைக்க, அவ்விக்ரகத்தை எடுத்துக்கொண்டு மதுரகவியாழ்வார் பல தலங்களுக்கும் சென்று நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவுசெய்தார்.

நம்மாழ்வாரின் பலவிருதுகளைப் பாடிக்கொண்டே மதுரகவியாழ்வார் மதுரையுள் சென்றார். அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல், விருதுகளாக பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அக்காலத்தில், சங்க பலகையில் பாடலை எற்றுவர். அப்பலகை அந்த பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, இரெண்டே வரியுள்ள, ஒரு பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார். சங்கப்பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் நம்மாழ்வாரின் பெருமைகளை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும் தாம் செய்த தவற்றின் பரிகாரமாக நம்மாழ்வாரின் பெருமையை தாமே பாடலாக இயற்றினார்கள். இதில் வியப்பு என்ன என்று கேட்டால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் ஒரே பாடலையே நம்மாழ்வார் குறித்து எழுதியிருந்தனர். இவ்வாறு மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி இறுதியில் வைகுண்டம் சேர்ந்தார். இவ்வாறு மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர் என்ற சிறப்பை பெறுகிறார். இவரது பிறந்த தலமான இங்கு இவருக்கு தனி சன்னதி அமையப்பெற்றுள்ளது.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்:
திருக்கோளூர் என்றாலே ‘தேடிப் புகும் ஊர்’ என்கிறார்கள் ஆச்சார்யார்கள். அத்தகைய இந்த ஊருக்கு முன்னர், ராமானுஜர் வைத்தமாநிதி பெருமாளை தரிசிப்பதற்காக வரும் ஓர் அதிகாலை வேளையில், மோர் விற்கும் அம்மையார் ஒருவர் வியாபாரத்திற்காக ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார். அதைக் கண்ணுற்ற ராமானுஜர், ‘புகும் ஊருக்கு நாங்கள் வரும் போது நீங்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே’ என்று கேட்கிறார்.

அதற்கு, ராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் தெரிந்த அந்த அம்மையார், வெகு இயல்பாக, ‘அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே’, ‘அகல் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே’ எனத் தொடங்கி ‘துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே’ என முடியும் 81 விஷயங்களைக் கூறி, அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல, எனவே வெளியேறிக் கொண்டிருக்கிறேன்’ என்று சாதுர்யமாக பதில் அளிக்கிறார்.

அந்த 81 வாக்கியங்களில் அவர் வைணவத்தின் பெருமைகளை விவரிக்கிறார். அதைக் கேட்ட ராமானுஜர், சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இத்தகைய ஞானம் இருக்குமானால் நிச்சயம் இது புக வேண்டிய ஊர்தான் என அம்மையாரைப் பணிகிறார். பின்னாளில் அந்த அம்மையாரும் ராமானுஜரின் சீடராகிறார்.

இவர் கூறிய 81 வாசகங்கள் அதாவது ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ நமக்கு பாமரப் பெண்களும் கூட இந்த நாட்டில் மேதைகளாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.

திருக்கோவில் அமைப்பு:

front view of sri vaithamanidhi perumal temple.
தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமையப்பெற்றுள்ள இக்கோவில், மொட்டை கோபுரத்தை கொண்டது.

இந்த கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் முன்மண்டபம் நம்மை வரவேற்கிறது.

முன்மண்டபத்தில் கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி கருவறைக்கு நேரெதிரே கருடன் சன்னதி உள்ளது.

அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் நடுநயமாக கருவறை அமையப்பெற்றுள்ளது.

வெளித்திருச்சுற்றில் தென்புறம் கோளூர்வல்லி தாயார் சன்னதியும், மேற்கு திருச்சுற்றில் யோக நரசிம்மர் சன்னதியும், தொடர்ந்து வடக்கு திருச்சுற்றில் குமுதவல்லி தாயார் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. உள்ளே தீர்த்தக்கிணறும் உள்ளது.

முன்பக்கம் மதுரகவியாழ்வாருக்கு தெற்கு நோக்கிய தனி சன்னிதியும், திருக்கோவில் யானை வளர்ப்பிற்கு தனி இடமும் என இத்திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது.

திருக்கோவில் சிறப்புக்கள்:
பன்னிரு ஆழ்வார்களுள் மதுரகவியாழ்வார் அவதரித்த தலம் இது ஆகும்.

இங்கு பெருமாள் குபேரனுக்கு படியளந்த மரக்காலை தன் தலைக்கு கீழ் வைத்தபடி சயனித்திருக்கிறார்.

நம்மாழ்வார் பன்னிரெண்டு பாசுரங்களால் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.

இங்கு கருவறைக்கு பின்புறம் யோக நரசிம்மர் சன்னதி மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்த திருமேனி ஆவார். இவருக்கு பிரதோஷ காலத்தில் பானகம் நிவேதனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

முக்கிய திருவிழாக்கள்:
இங்கு ஆவணி மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பிரம்மோத்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். ஆவணி திருவிழாவிரல் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

வைகாசியில் ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள், இத்தல பெருமாள் ஆழ்வார்திருநகரி எழுந்தருளி கருடசேவை காட்சியருளுகிறார்., இவ்விழாவிற்கு இங்கிருந்து மதுரகவி ஆழ்வாரும் புறப்பட்டு செல்வார்.

இதுதவிர புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நடைபெறும் முன்பத்து, பின்பத்து திருவிழாக்கள் ஆகியவையும் இங்கு சிறப்புப்பெற்றதாகும்.

அமைவிடம்: திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 36-கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருக்கோளூர்.

நெல்லை புதியபேருந்துநிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் திருக்கோளூர் விலக்கு வழியாக செல்லும். அங்கு இறங்கி தென்திசை நோக்கி நடந்தால் 2கி.மீ தொலைவில் கோவில் அமையப்பெற்றுள்ளது.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothukudi - 38.5 kms (55min)
  • Tirunelveli - 28.7kms (47min)
  • Thiruchendur - 31.5kms (47min)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by ஜானகி அரவிந்த்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram