முழு உளுந்து தோசை பச்சை முளகாத் துவையல்

Muzhu Ulundhu Dosai

திருநெல்வேலினாலே அல்வா தான் சிறப்புன்னு எல்லாத்துக்கும் தெரியும். அதையும் தாண்டி இங்க நிறைய உணவுகள் வித்தியாசமா சிறப்பா உண்டு.

அதுல குறிப்பிட்டு சொல்லனும்னா சொதி குழம்பு – இஞ்சி பச்சடி, கருணைக்கிழங்கு மசியல், புளிமுளகா கீரை குழம்பு, கீரைச்சாறு குழம்பு, புளியில்லா குழம்பு-சுட்ட அப்பளம், வாழைக்காய் தொவரம், பருப்பு உசிலி, உக்காரை, சுரக்காய் அடை, இடிசாம்பார், உளுந்தம்பருப்பு சாதம், கூட்டாஞ்சோறு, வாழைக்காய் புட்டு, அவியல், கத்திரிக்காய் கிச்சடி, புளித்தண்ணி இப்படி அடுக்கிட்டே போகலாம்.

(என்னடா இது இந்த மூதி ஒரே சைவ உணவா அடுக்கிட்டே போகுதுனு நீங்க திட்டலாம். நான் சுத்த சைவம். அதனால நான் சாப்பிட்டு சுவைச்ச, சமைச்ச உணவு வகைகளை மட்டும் தான் குறிப்பிடுகிறேன்)

அதுபத்தி முகநூல் நட்பு வட்டங்கள்ல உள்ள சில பேரு அண்ணாச்சி உங்க ஊரு சிறப்பு உணவு வகைகள் பத்தி பதிவிடுங்கோனு கேட்டாக. அதனால இத போடுறேன்.

இன்னைக்கு முதல்ல முழு உளுந்து தோசை, பச்சை முளகாத்த துவையல் பத்தி பார்ப்போம்.

முழுஉளுந்து தோசைங்கிறது கருப்பு தொலி பருப்பை தொலியோட அரைச்சு மாவாக்கி செய்யற ஒரு உணவு.

அரிசி ஒரு பங்குக்கு அரை பங்கு தொலி உளுந்தும், ஐந்தாறு வெந்தயமும் சேர்த்து ஊறவைச்சு வழக்கமா அரைக்கிற மாதிரி தோசை மாவு அரைச்சு, உப்பு போட்டு பிசைஞ்சு வைச்சிறனும். மாவு புளிச்சப்புறம் இதை தோசைக்கல்லில் தோசையா ஊத்தி எடுத்துக்க வேண்டியது தான்.

தொலி உளுந்து தோசை சுடும் போதே ஒரு வகை வாசம் மூக்கை துளைக்கும். இதனை சூடாக இருக்கும் போதே சாப்பிட்ரனும். அப்போதான் ருசியா இருக்கும். இந்த தோசைய கொஞ்சம் கனமா ஊத்தனும். (அதாவது ஊத்தப்பம் மாதிரி). இதை சூடாக பச்ச முளகாத்த துவையல்ல நல்லெண்ணெய் விட்டு குழப்பி சாப்பிட்டா அருமையா இருக்கும்.

அதென்ன பச்ச முளாகத்த துவையல்?

சிவப்பு முளகா வத்தலை, புளி, பூடு, உப்பு சேர்த்து அரைச்சு பக்குவமா எடுத்தா துவையல் ரெடி. சிவப்பு நிறத்துல இருக்க துவையலுக்கு எதுக்கு பச்சமுளகாத்த துவையல்னு பெயர் வந்துச்சுனு கேட்கலாம். அதாவது பொதுவா துவையல்க்கு மிளகாவத்தலோட, மத்த பொருளை சேர்த்து பச்சை வாடை போக வறுத்து துவையல் அரைப்பாக. ஆனா இதுல எதையும் வறுக்காம பச்சயா அப்படி போட்டு துவையலா அரைச்சு எடுத்துறதால பச்சமுளகா துவையல்.

இது ரொம்ப காரமா இருக்கும். அதனால நல்லெண்ணெய் ஊத்தி குழப்பி முழு உளுந்து தோசையோட சாப்பிட்டா அட.. அட.. அட…. அம்புட்டு ருசியா இருக்கும்…

அதுலயும் எங்க ஆச்சி இருக்கும் போது, மாவரைக்கும் உரலில் மாவு அரைச்சு, அம்மியில பச்சமுளகாத்த துவையல் அரைச்சு, விறகு அடுப்புல சும்மா மொது மொதுன்னு தோசையை சுட்டு சூடா தட்டுல வைச்சு நல்லெண்ணெய் விட்டு குழப்பி தருவா பாருங்க… அதெல்லாம் நினைத்தாலே இனிக்கும்.

Muzhu Ulundhu Dosaium Pachaimilaga Thuvaiyalum

சமையல் குறிப்பு உபசாரம்: சங்கரநயினார்

எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் மேலும் படிக்க>>

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.