முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோவில்.
நவகைலாய ஸ்தலங்களில் ஐந்தாம் தலமான முறப்பநாடு கைலாசநாதர் திருக்கோவில்.
சுவாமி: கைலாசநாதர்.
அம்மை: சிவகாமி அம்மை.
திருக்கோவில் விருட்சம்: பலா மரம்.
தீர்த்தம்: தாமிரபரணி.
தல வரலாறு :
உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் ஐந்தாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் முறப்பநாடு ஆகும்.
உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்து வணங்கிய இந்தக் கைலாசநாதரை பிற்காலத்தில் மிருகண்டு மகரிஷி, மார்க்கண்டேயன் மற்றும் காஞ்சனமாலை ஆகியோர் வழிபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Murappanadu Dam Thamirabharani river - 5min(1.1km)
- Mutharammal puram vallanadu - 9min(3.9km)
- Pakkapatti Anicut - 13min(6.4km)
- Vallanadu black buck wildlife sanctury - 29min(15.7km)
குதிரை முகம் நீங்கிய வரலாறு:
முற்காலத்தில் வாழ்ந்த சேரநாட்டு மன்னன் ஒருவனுக்கு முன்வினை பயனால் குதிரையின் முகம் கொண்ட பெண் குழந்தை பிறந்தது. தனது மகளின் அந்த நிலைமையைக் கண்டு வருந்திய மன்னன் பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தான். அவனுடைய தூய பக்திக்கு இறங்கி அருள் செய்யத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அவனது கனவில் தோன்றி இந்த முறப்பநாடு ஸ்தலத்திற்கு சென்று இங்குள்ள தாமிரபரணியில் நீராடித் தன்னை வணங்கிடுமாறு கூறினார். அதன் படியே மன்னனும் தன் மகளை அழைத்துக்கொண்டு இங்கு வந்து தாமிரபரணியில் நீராடி எழ, மன்னரின் மகளுக்கு இருந்த குதிரை முகம் மறைந்து, சுய முகம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் மகிழ்ந்த மன்னன் இங்குள்ள கைலாசநாதரை வணங்கிப் பல காணிக்கைகளை செலுத்தி மகிழ்ந்தாராம். மேலும் மன்னர் மகளின் குதிரை முகத்தை இந்தக் கோவிலில் உள்ள நந்தி ஏற்றுக்கொண்டதாகவும், அதனால் தான் இங்குள்ள நந்தி இன்றளவும் குதிரை முகத்துடன் காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது.
முறப்பநாடு பெயர் காரணம்:
முற்காலத்தில் சூரபத்மனின் தலைமை ஏற்ற அசுரப்படையினர் முனிவர்களையும், தவயோகிகளையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர். இந்த துன்பத்தைப் போக்க வேண்டி முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் நின்று இறைவனிடம் அசுரர்களின் கொடுமைபற்றி முறையிட்டனராம். அவ்வாறு அவர்கள் ஒன்றாக நின்று முறையிட்ட இடம் என்பதால் முறையிட்ட நாடு என்ற பெயர் ஏற்பட்டு பின்னர் அது முறப்பநாடு என மறுவியதாகவும், முறம்பு என்ற தடித்த கல்வகைகள் நிறைந்த மேடான பகுதியாக இருந்ததால் முறம்ப நாடு என அழைக்கப்பட்டு பின்னர் முறப்பநாடாகத் திரிந்ததாகவும், முற்காலத்தில் இங்கு வாழ்ந்த பெண்ணொருத்தி தன் வீட்டு முற்றத்திற்கு வந்த புலியை, முறத்தால் அடித்து விரட்டியதால் முறப்பநாடு என்ற பெயர் வந்ததாகவும், மூன்று வகை காரணங்கள் கூறப்படுகின்றன.
சுவாமி கைலாசநாதர்:
கிழக்கு நோக்கிய கருவறையில் சுவாமி கைலாசநாதர், லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருகிறார். இவரை உரோமசர், மார்க்கண்டேயர், காஞ்சனமாலை ஆகியோர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
சிவகாமியம்மை:
தெற்கு நோக்கிய தனி கருவறையில் சிவகாமி அம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்திய படியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும், நின்ற கோலத்தில், புன்சிரிப்புடன் காட்சித்தருகிறாள்.
குதிரை முக நந்தி:
இங்குச் சுவாமிக்கு எதிராக வீற்றிருக்கும் நந்தியெம்பெருமான், வழக்கத்திற்கு மாறாகக் குதிரை முகத்துடன் காட்சித் தருகிறார்.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
- Hotel BlueMoon
- Angel Villa
- THE HOTEL RAJA PALACE - 2-star
- Hotel Imperial Regency - 2-star
திருக்கோவில் அமைப்பு:
தாமிரபரணி ஆற்றின் கரையில் பச்சைப்பசேல் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ளது இந்த முறப்பநாடு கைலாசநாதர் கோவில். உள்ளே நுழைந்தவுடன் பத்து தூண்களை கொண்ட பந்தல் மண்டபம் நம்ம வரவேற்கிறது. அங்குக் கொடிமரம், பலிப்படம், நந்தி ஆகியவை காட்சியளிக்கின்றன. அதனை தாண்டி உள்ளே போனால் நேராக அர்த்தமண்டபமும், அதனை தாண்டிக் கிழக்கு நோக்கிய சுவாமி கைலாசநாதர் கருவறையையும் நான் கண்டு தரிசிக்கலாம். வெளியே தெற்கு நோக்கிய தனி கருவறையில் சிவகாமி அம்மை காட்சி தருகிறாள். கோவிலின் உள்சுற்று பிரகாரத்தில் முறையே அதிகார நந்தி, சூரியன், ஜுர தேவர் நால்வர், அறுபத்து மூவர்கள், தெற்கு திசை நோக்கிய தக்ஷிணாமூர்த்தி, கன்னிமூலை கணபதி, பஞ்சலிங்கங்கள், வள்ளி - தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், கஜலக்ஷ்மி, சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமி அம்மை, சந்திர பகவான் மற்றும் பைரவர்கள் ஆகியோர் பரிவார மூர்த்திகளாகக் காட்சித் தருகின்றார்கள்.
திருக்கோவில் சிறப்புக்கள்:
- வடக்கே உள்ள காசியில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்வதை போல, இங்கு முறப்பநாட்டில் தாமிரபரணி நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. எனவே இந்தத் தீர்த்தகட்டம் "தக்ஷிண கங்கை" என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
- இங்கு ஒரே சந்நிதிக்குள் இரண்டு பைரவர்கள் காட்சிதருவது சிறப்பம்சம்.அதில் ஒருவர் நாய் வாகனத்துடனும், மற்றொருவர் நாய் வாகனம் இல்லாமலும் காட்சித் தருகிறார்கள்.
- நவகைலாய ஸ்தலங்கள் ஒன்பதில் இந்த முறப்பநாடு கோவில் நடுநாயமாக அமையப்பெற்றுள்ளதால் இதற்கு 'நடு கைலாயம்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
- ஆடி, புரட்டாசி மற்றும் தை மாத அமாவாசைகளில் இங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற செய்யும்.
- இங்குச் சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாகத் தென் திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலித்து வருவதால், இது ஒரு சிறந்த குரு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
முக்கிய விழாக்கள்:
மாசி மாத சிவராத்திரி, மாதாந்திர பிரதோஷ வழிபாடுகள், மார்கழி திருவாதிரை, கார்த்திகை சோமவார வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது. இது தவிர இங்குக் குரு பெயர்ச்சி விழா வெகுசிறப்பாக நடைபெறும்.
அமைவிடம்:
திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார் 12 கி. மீ தொலைவில் திருநெல்வேலி - தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது முறப்பநாடு. இங்குச் செல்லத் திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி மார்க்கமாகச் செல்லும் புறநகர் பேருந்துகள் ஆகியவை அடிக்கடி உள்ளன. முறப்பநாடு பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊருக்குள் சுமார் 2.5 கி.மீ தொலைவில் உள்ள இந்தக் கோவிலை வாடகை ஊர்திகள் மூலம் சென்று அடையலாம்.