மரச்சீனி கிழங்கு புட்டு

கேரளாவில் மிகவும் பிரசித்தமானது கப்பை கிழங்கு. இது திருநெல்வேலி பகுதியில் மரச்சீனி கிழங்கு என்றும் மரவள்ளிக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. உணவில் பயன்படுத்தப்படும் இந்தக் கிழங்கில் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் இது எளிதாக செரிமானம் ஆகிவிடும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்தக் கிழங்கில் காணப்படும் பி தொகுப்பு வைட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளின் நரம்புக் குறைபாடுகளை நீக்குகிறது. மேலும் மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து, இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இந்தக் கிழங்கை கேரள மக்கள் தங்கள் உணவில் பெரும்பாலும் சேர்த்துக் கொள்வதை நாம் காண முடியும். இந்தக் கிழங்கில் உள்ள சத்துக்கள் காரணமாக இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

இப்போது நாம் இந்த மரச்சீனி கிழங்கைக் கொண்டு புட்டு தயாரிக்கும் முறை பற்றிக் காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • மரச்சீனி கிழங்கு – 1 கிலோ,
  • தேங்காய் – துருவியது,
  • சீனி (அல்லது) நாட்டு சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை:

மரச்சீனி கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி எடுத்து புட்டு சலிப்பில் வைத்துப் பூவாக சலித்து எடுத்துக் கொள்ளவும். இயற்கையாகவே அதில் தண்ணீர் இருக்கும் என்பதால், அதிக ஈரமாக இருந்தால் துருவிய கிழங்கை கைகளால் பிழிந்து எடுத்து உதிரியாக வைத்துக் கொள்ளவும். இப்போது புட்டு அவிக்கும் குழலில் துருவிய கிழங்கை ஒரு கைப்பிடியும், அடுத்ததாகத் துருவிய தேங்காயை சிறிதளவும் என மாற்றி மாற்றிப் போட்டுக் குழலை நிரப்பி, நீராவியில் பத்து நிமிடங்கள் வேக விடவும். பின்னர் நன்றாக வெந்தவுடன் குழலிலிருந்து புட்டை வெளியே எடுத்து, அதன் மீது தேவையான சீனி அல்லது நாட்டு சர்க்கரை தூவி பரிமாறவும். பொதுவாக மரச்சீனி கிழங்கை அவித்து தாளிசம் செய்தும் அல்லது சிப்ஸ் செய்தும் நாம் அடிக்கடி சாப்பிட்டு இருப்போம். இந்த மரச்சீனி கிழங்கு புட்டு அதிலிருந்து சற்றே மாறுதலாகவும், வித்தியாசமான சுவையுடனும் இருக்கும் என்பதால் குழந்தைகள் கூட இதனை விரும்பி உண்பார்கள்.

குறிப்பு:

இயற்கையாகவே மரச்சீனி கிழங்கில் தண்ணீர் இருக்கும் என்பதால், அதிக ஈரமாக இருந்தால் துருவிய கிழங்கை கைகளால் பிழிந்து எடுத்து உதிரியாக வைத்துக் கொள்ளவும். தண்ணீர் அதிகம் தங்கியிருந்தால் புட்டு குழைந்து விடும்.

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!