திருநெல்வேலி மாவட்டம்., கல்லிடைக்குறிச்சி அருகே அமையப்பெற்றுள்ள மலையான்குளம் பாடகலிங்க சாஸ்தா திருக்கோவில் பற்றி இங்குப் பார்ப்போம்.
மூலவர்:
பரிவார மூர்த்திகள்:
திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம்.
திருக்கோவில் தீர்த்தம்: பாடலிங்க சுனை.
திருக்கோவில் வரலாறு:
முற்காலத்தில் இந்தக் கோவில் அமைந்திருக்கும் பகுதி சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. சேர மன்னனின் மனைவியான ராணி ஒருமுறை வனப்பகுதியின் அழகில் மயங்கி அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே அடர்ந்த காட்டிற்குள் வந்து விட்டார். அதிக தூரம் நடந்து வந்த களைப்பில் சோர்வாக இருந்த ராணிக்கு தண்ணீர் தாகம் எடுக்க, அங்கே ஒரு சுனை இருப்பதை பார்க்கிறாள். அந்தச் சுனைக்குள் இறங்கி தண்ணீர் அருந்தி, களைப்பு தீர ஒரு குளியல் போடலாமென நினைத்த மகாராணி தன் கால்களில் அணிந்திருந்த பாடகம் என்னும் அணிகலன்களைக் கழட்டி கரையில் வைத்துவிட்டு, சுனைக்குள் இறங்கி தண்ணீர் அருந்தி, சோர்வு தீரக் குளிக்கவும் செய்கிறாள். இறங்கும்போது எளிதாகச் சுனைக்குள் குதித்த ராணியால், தற்போது ஏறி மேலே கரைக்கு வரமுடியவில்லை. ராணியின் சத்தம் கேட்டு வீரர்கள் அங்கு வந்து ராணியை மீட்டு அரண்மனைக்குக் கூட்டி சென்றார்கள். அரண்மனை சென்றபின்னர் தான் கழட்டி வைத்த பாடகங்கள் பற்றி நினைவுக்கு வர, வீரர்களை அனுப்பி பாடகங்களை எடுத்து வர உத்தரவிடுகிறாள். வீரர்களும் அவ்வாறே ராணியின் கட்டளை படி வனத்திற்குள் சென்று சுனையின் கரையில் இருந்த பாடகங்களை எடுக்க முயற்சி செய்கிறார்கள். அனால் அவை அங்கிருந்த மூங்கில் முனையில் சிக்கிக்கொண்டு இருந்தன. உடனே வீரர்கள் அந்தப் பாடகங்களை மீட்டெடுக்க மூங்கில் முனைகளை ஆயுதம் கொண்டு வெட்ட முயற்சி செய்ய, அங்கிருந்து ரத்தம் பீறிட்டு வருகிறது. இதனைக்கண்ட வீரர்கள் பயந்து அங்கிருந்து அரண்மனை சென்று நடந்த விஷயங்களைக் கூறுகிறார்கள். உடனே ராஜாவும், ராணியும் தங்கள் பரிவாரம் சூழ அந்த இடத்திற்கு வர, அப்போது வானில் ஒரு அசரீரி அந்த இடத்தில் இரண்டு லிங்கங்கள் உள்ளதாகவும் அதனை வெளியே எடுத்துக் கோவில் கட்டி வணங்குமாறும் ஒலித்ததாம். உடனே ராஜாவும் அங்குக் கோவில் கட்டி அந்த லிங்கங்களை வழிபாட்டு வந்ததாகச் செவிவழி தகவல்கள்மூலம் இத்தல வரலாறு தெரிய வருகிறது. பாடகம் என்ற அணிகலன்மூலம் வெளிப்பட்ட மூர்த்தம் என்பதால் மூலவர் பாடகலிங்கம் என்ற திருநாமம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
பிற்காலத்தில் தங்கள் பகுதியைச் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த அந்த ராஜா மற்றும் ராணியை போற்றி கொண்டாடிய மக்கள் அவர்களைத் தங்கள் காவல் தெய்வமாக வணங்கியதாகவும், அவர்களின் திருவுருவங்களே கருவறைக்குள் இருக்கும் சித்திர புத்திர தர்ம சாஸ்தா மற்றும் பாடகலிங்க நாச்சியார் என்றும் சொல்லப்படுகிறது.
திருக்கோவில் சிறப்புகள்:
சேரநாட்டை ஆண்ட மன்னர் கட்டிய கோவில் என்பதால் இங்கு ஓணம் விழா மூன்று நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் திருவிழாவின் முதல் நாள் பாடகலிங்க நாச்சியாரை சுனைக்குள் இருந்து அழைத்து வரும் உற்சவம் வெகுசிறப்பாக நடைபெறும். இந்த விழாவின் மூன்றாம் நாள் சுவாமிகளுக்கு எண்ணைக்காப்பு செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
பங்குனி உத்திரம் அன்று இந்தக் கோவிலுக்குத் தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளத்தில் இருந்தும் பக்தர்கள் வழிபாடு செய்ய வருவார்கள். அன்று இங்குள்ள சுவாமிகளுக்குப் பொங்கல் வைத்து, சைவ படையல் இட்டு வணங்கி மகிழ்வார்கள்.
முற்காலத்தில் இந்தப் பகுதியில் ஏழு சகோதரர்களும், அவர்களின் ஒரே தங்கையும் வாழ்ந்து வந்தார்கள். அந்த ஒரே தங்கையான பெண் அங்கு வாழ்ந்து வந்த தாழ்ந்த குலத்து இளைஞனுடன் காதல் கொண்டு அவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பித் தன் அண்ணன்களிடம் தெரிவிக்க, அவர்களோ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் அந்தப் பெண்ணும், அந்த இளைஞனும் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு பாடகலிங்க சாமி கோவிலுக்குள் வருகிறார்கள். விஷயம் கேள்விப்பட்ட ஏழு அண்ணன்களும் கோவிலுக்கு வந்து எதிர்ப்பு தெரிவிக்க, இருவரும் அங்கிருந்த தங்கள் ராஜாவைப் பணிந்து நின்றார்கள். அப்போது ஒரு அசரீரி தோன்றி அவர்களை வாழ விடுங்கள், இல்லையேல் ஏழுபேரும் சிலையாகப் போகக்கடவீர்கள் என ஒலித்தது. அதன்படி பின்னரும் எதிர்ப்பு தெரிவித்த அந்த ஏழு அண்ணன்களும் சிலையாக மாறிவிட்டதாகவும், அந்த ஏழு அண்ணன்களின் சிலைகளே தற்போது கோவிலின் பின் பக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு அருகே தன் அண்ணன்களின் நிலை அறிந்து தன் தலையில் கைவைத்தபடி உட்கார்ந்து வருந்தும் தங்கையின் சிற்பமும் இருக்கிறது.
திருவிழாக்கள்:
பங்குனி உத்திரம், ஓணம் பண்டிகை, மாதப்பிறப்பு மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு ஆகியவை சிறப்பாக நடைபெறும்.
இருப்பிடம்/செல்லும் வழி:
திருநெல்வேலி மாவட்டம்., கல்லிடைக்குறிச்சியிலிருந்து சுமார் கி. மீத்தொலைவில் இந்த மலையான்குளம் பாடகலிங்க சாஸ்தா கோவில் அமையப்பெற்றுள்ளது. திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் பேருந்துகளில் ஏறிக் கல்லிடைக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து இந்தக் கோவிலுக்குச் சிற்றுந்துகள் மற்றும் தனியார் வாடகை வாகனங்களில் செல்லலாம். பங்குனி உத்திரம் அன்று இந்தக் கோவிலுக்குச் செல்லத் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்புப் பேருந்துகளை அம்பாசமுத்திரத்திலிருந்து கல்லிடைக்குறிச்சி வழியாக இயக்குகிறது.