நம்முடைய முன்னோர்களை நினைத்து பித்ருக்களை நம்முடைய இல்லம் தேடி வரவழைத்து செய்யக்கூடிய பரிகாரங்களை முறையாகச் செய்து அவர்களுடைய ஆத்மா சாந்தி பெறுவதற்கான ஒரு சிறப்பான வழிபாடு மகாளய அமாவாசை என்பதாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதியின் போது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்து மதத்திதனரின் பாரம்பரிய வழக்கமாகும். ஆனால் மிக முக்கியமாக முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை அதாவது மஹாளய அமாவாசை இவை அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் அதிலும் மகாளய அமாவாசை மிகவும் சிறப்புக்குரிய வழிபாடாகக் கருதப்படுகிறது.. மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை "பெரிய அமாவாசை" என்றும் "மகாளய அமாவாசை" என்றும் முன்னோர்களால் அழைக்கப்படுகிறது.
நம் முன்னோர்கள் பித்ரு லோகம் என்று சொல்லப்படும் தென்புலத்தில் இருந்துகொண்டே அங்கிருந்து நாம் ஒவ்வொரு அமாவாசைக்கும் தர்ப்பணம் மூலம் அளிக்கும் எள் மற்றும் நீரினை ஏற்று திருப்திஅடைவார்கள் என்பது உணர்வுப்பூர்வமான நம்பிக்கை ஆகும். ஆனால் மேலுலகத்தில் இருந்து பித்ருக்கள் பூலோகத்திற்கு வருவதற்கான நேரத்தை பற்றி மூன்று விதமாக சாஸ்திரத்தில் கணக்கிடப்பட்டுள்ளது. இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை. அடுத்ததாக நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள்தான் புரட்டாசி மகாளய அமாவாசை எனப்படுகின்றது, மூன்றாவதாக பூலோகத்தில் இருந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாளே தை அமாவாசை ஆகும்.
"மறந்து போனவனுக்குதான் மகாளய அமாவாசை" என்பார்கள்.’அப்படியானால் அமாவாசை படைப்பதற்கு தவறினாலும் மகாளய அமாவாசை வழிபடுவோருக்கு மோட்சம் கிடைக்குமா! ‘ என்று கேட்போருக்கு நிச்சயமாக அதற்காக கருத்தை விளக்கமாக தெள்ளத்தெளிவாக தெரிந்து கொள்வோம். அதாவது மூதாதையர்களின் இறந்த தேதி தெரியாதவர்கள் அல்லது மறந்து போனவர்கள் வருடந்தோறும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் 21 தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)மோட்சம் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு தர்ப்பணம் செய்யாது தவறினால் அந்த ஆத்மாக்கள் பூமியிலேயே சுற்றிக்கொண்டு அவர்கள் வம்சத்தில் வரக்கூடிய சந்ததிகள் துன்பத்தை அடைவார்கள். அதனால் நிச்சயம் திதி கொடுக்கத் தவறியவர்கள் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தாக வேண்டும்.
மஹாளய பட்சம் அன்று அன்னதானம் செய்தால் பித்ருக்கள் சாபம் நீங்கி புண்ணிய பலன் அனைவரும் பெற வேண்டும் என்று கொடைவள்ளல் கர்ணன் வரம் கேட்டான் என்கின்றது புராணம். அந்த புராணவரலாற்றை தெரிந்து கொண்டால் நாம் ஏன் மஹாளய பட்சம் அமாவாசையின் போது வழிபாடு செய்கின்றோம் என்பதன் சிறப்பை அறிந்து கொள்ள முடியும். அதற்கான வரலாற்றைப் பார்ப்போம்.
கர்ணன் மகாபாரத போரில் இறந்த பிறகு யம லோகத்திற்கு எமதர்மன் அழைத்துச் செல்கிறார். அங்கு அனைத்து விதமான மரியாதைகளும் செய்துவைத்து, கர்ணன் தர்மவான் என்பதால் சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கிறார், சொர்க்கத்தில்அவர் மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில் அவருக்கு பயங்கரமான பசி எடுக்கிறது. அதைக்கண்டு அங்கு உள்ளவர்கள் மிகவும் ஆச்சரியப் படுகின்றனர். அதற்கான காரணம் சொர்க்கத்தில் உள்ளவர்களுக்கு பசி என்பதே இருக்காது.. ஆனால் கர்ணனுக்கு ஏன் பசி எடுக்கின்றது என ஆச்சரியப்படும் வேளையில் தேவ குரு பிரகஸ்பதி அங்கு வருகிறார் கர்ணன் சொல்வதைக் கேட்டு அதற்கான காரணத்தை தம்முடைய ஞானதிருஷ்டியில் கண்டுபிடிக்கிறார். பிறகு பிரகஸ்பதி. கர்ணனிடம் உங்களுடைய ஆட்காட்டி விரலை எடுத்து சுவையுங்கள் என்று சொல்கிறார். பசியில் இருந்த கர்ணனும் தம்முடையஆட்காட்டி விரலை சுவைக்கின்றார். உடனே அவரின் பசியும் அடங்கி விடுகின்றது.
கர்ணன் மிகவும் ஆச்சரியத்தோடு, ஆள்காட்டி விரலை சுவைத்ததால் பசி அடங்கியதற்கான காரணத்தை கேட்கின்றார். பூலோகத்தில் கர்ணனாக நீ வாழ்ந்த போது பொன்னும் பொருளும் தானமாக அளிப்பதில் கவனம் செய்தாயே தவிர, பசித்தவருக்கு உணவு அளிப்பதற்கு தவறிவிட்டாய். இருந்தாலும் ஒரு நாள் பசி என்று வந்த அந்தணருக்கு அன்னதானம் செய்யப்படும் இடத்தை உன்னுடைய ஆள்காட்டி விரலால் காட்டினாய். அதனால் உன்னுடைய ஆள்காட்டிவிரல் அதற்கான புண்ணிய பலன் பெற்று நீ சுவைத்ததும் பசி அடங்கியது என்று பிரகஸ்பதி சொல்கிறார்.
இதைக்கேட்டதும் அன்னதானம் செய்யாமல் போனதற்கான நிலைமை குறித்த கர்ணன் வருந்துகிறான். மீண்டும் தாம் பூமிக்கு ஒரு பட்சம் (15 நாட்கள்) மனித உடலோடு சென்று மக்களுக்கு அன்னதானம் செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு எமதர்மனிடம் கோரிக்கை வைக்கிறார். எமதர்மராஜனும் அதற்கு சம்மதித்து கர்ணனை பூலோகத்திற்கு அனுப்பி வைக்கிறார். கர்ணன் மக்களுக்கு 15 நாட்கள் அன்னதானம் செய்து தம்முடைய கர்ம வினைப்பயன் அகன்று நிம்மதி கொள்கின்றான். அதன் பின்னர் 15 நாட்கள் கழித்து சொர்க்கத்திற்கு திரும்புகிறார்.
எமதர்மராஜனும் மிகவும் மகிழ்ந்து உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் எனக் கூறுகிறார். மக்கள் தம் முன்னோர்களுக்கு திதி, உணவு கொடுக்க மறந்தாலும் மஹாளயபட்ச அமாவாசையன்று ஒரு பட்சம் மற்றும் திதி, அன்னதானம் செய்தால்பித்ருக்களின்ஆசியைப் பெற்று அதற்கான புண்ணிய பலன்கள் அனைத்தும் அவர்களை சென்று அடைய வேண்டும் என்று கர்ணன்,வரம் கேட்க எமதர்மராஜனும் மகிழ்வோடு அந்த வரத்தை அளிக்கிறார். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய பட்சத்தில் முன்னோர்களை அன்னதானம் செய்ய வேண்டும் என்று கர்ணன் வரலாறு உணர்த்துகின்றது.
வருடந்தோறும் வரக்கூடிய பன்னிரு அமாவாசை திதிகளில் மிகவும் முக்கியமானது மகாளய அமாவாசை. 'மகாளய பட்சம்' என்பதுஆவணி மாதம் பவுர்ணமி தினத்திற்கு பிறகு அம்மாவாசைக்கு முன்பு வரை காண 15 நாட்களை குறிக்கின்றது. இந்த 15 நாட்களும் பித்ருக்களை நினைத்து வணங்கி வழிபாடு செய்வது நம் வழக்கமாகும். இந்தப் பதினைந்து நாள்களும், முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகம் வந்து நம்முடன் தங்குவதாக ஐதீகம். எனவே இந்த நாள்களில் முன்னோர்களை வழிபட்ட பிறகே வழக்கமான பூஜைகளைச் செய்யவேண்டும். தர்ப்பண காரியங்களை செய்த பிறகு வீட்டில் பூஜையை செய்ய வேண்டும்.
நம் முன்னோர்கள் நம்மோடு இருக்கும் இந்த நாட்களில் நாம் அவர்களை நினைத்து வழிபடுவதைக் கண்டு அவர்கள் மகிழ்ந்து நமக்கு நல் ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. எனவே மகா புண்ணியகாலமான மகாளயபட்சம் 15 நாட்களும் நாம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் தந்து வழிபட வேண்டும்.
இந்தப் பதினைந்துநாட்களும் சுப காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது முன்னோர் வழிபாடுகளைச் செய்து முடித்த பின்புதான் கோலம் போடவும் விளக்கு ஏற்றவும் வழக்கமான கடமைகளை செய்யவும் வேண்டும் மகாளயபட்சம் 15 நாட்களும் உணர்வில் அசைவ உணவு வகைகளை வெடித்தல் சாத்வீகமான சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் ஆடம்பரம் கேளிக்கைகளை தவிர்க்க வேண்டும் கிடைக்கும் நேரங்களில் நாம ஜெபங்களை செய்து வரவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.
தந்தை இல்லாத அனைவரும் இந்த அமாவாசை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். எனவே அவரவர் குடும்பவழக்கத்துப்படி இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். தந்தை இருக்கும் பட்சத்தில் அவர் இந்த வழிபாட்டை மேற்கொள்வார் என்பதால் மகன்கள் அதில் கூட இருந்தாலே போதுமானது. நம் நேரடி பித்ருக்களுக்கு என்ன பிடிக்குமோ அதைச் சமைத்துப் படையல் இட வேண்டும். இந்த நாளில் காக்கைக்கு அன்னம் இட்ட பிறகே உணவு உட்கொள்வது வழக்கம்.
மஹாளய அமாவாசை அன்று பக்தியோடு முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால் அதற்கேற்ப முழுமையான பலனை அவர்கள் பெறுவார்கள். பதினைந்து நாட்களும் தொடர்ந்து வழிபட முடியாதவர்கள் மஹாளய அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது, அவர்களை மனதால் நினைத்துக் கொண்டிருப்பது, ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்கள் செய்வது போன்ற காரியங்களை செய்தால் அளவற்ற பலன்களை பெறுவார்கள். அனைத்து தானத்திலும் மிகவும் சிறந்த தானம் மஹாளய தானமாகும். அந்த புண்ணிய நாளில் அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் என ஏழைகளுக்கு தானம் செய்வது மிகவும் சிறப்பானது.மஹாலய பட்சம் அன்று பசுமாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது, பித்ரு தோஷம் நீங்கி சந்ததிகள் வளமோடு வாழ்வார்கள் என்பதால் மஹாளய அமாவாசையை மனதால் உணர்ந்து வழிபாடு செய்ய வேண்டும்.
முன்னோர் தர்ப்பணத்துக்கு கடல் மற்றும் நதி தீர்த்தக்கரைகளும் மிகவும் விசேஷமானதாகும். ஸ்ரீராமர் சிவபெருமானைக் குறித்து ராமேஸ்வரம் என்னும் ஷேத்திரத்தில் மஹாளயபட்ச அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்தார் என்பது வரலாறு. அந்த மகா புண்ணிய ஷேத்திரத்தில் முன்னோர்களை நினைத்து பித்ரு காரியங்கள் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர்..
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சிக்கு அருகே உள்ள முக்கொம்பு
கொள்ளிடக்கரை திருநெல்வேலி அருகே உள்ள வகுலகிரி நதிக்கரை, மயிலாடுதுறை காவிரி படித்துறை, மூன்று நதிகள் சங்கமமாகும் பவானி, தேவிப்பட்டினம் நவபாஷாணம், தென்காசி அருகில் உள்ள பாபநாசம், திருவாரூர் போன்ற இடங்களுக்கு அருகில் உள்ள திலதர்ப்பணபுரி, சிவாலய தீர்த்தக்கரை, திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளக்கரை, குடந்தை மகாமகக் குளம் ஆகிய இடங்கள் மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் அளிப்பதற்கான மிகவும் உகந்த இடங்களாக அமைந்துள்ளது என்பதால் ஏராளமான மக்கள் அங்கு சென்று அந்தந்த அருகே உள்ள இடங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுக்கின்றனர்.
புண்ணிய நதிக்கரைகளுக்கோ, புண்ணியஷேத்திரங்களுக்கோ சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அவரவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள குளக்கரை அல்லது தங்களது இல்லத்தில் இருந்தவாறே தர்ப்பணம் கொடுக்கின்றனர்.
மகாளய அமாவாசைக்கு மறுநாள் முதல் நவராத்திரி ஆரம்பம்.