Logo of Tirunelveli Today
English

Manur Ambalavanaswamy Thirukovil(மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோவில்)

வாசிப்பு நேரம்: 7.5 mins
No Comments
Manur Ambalavanaswamy Temple Tirunelveli

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலின் "ஆச்சாரிய சபை" யாக திகழும் மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோவில்.

மூலவர்: சுவாமி நெல்லையப்பர்.

அம்மை: காந்திமதி அம்மை.

சிறப்பு சன்னதிகள்: அம்பலவாண சுவாமி, கருவூர் சித்தர், திருவாளி போத்தி.

மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோவில் வரலாறு(History of Manur Ambalavanaswamy Temple):

முற்காலத்தில் அம்பலவாண முனிவர் என்பவர் இங்கு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஈசன் மீது அளவிலா பக்தி. அதிலும் ஈசன் ஆடும் திருநடனத்தின் மீது அளவு கடந்த நாட்டம் கொண்டிருந்தார். அவரின் தூய பக்திக்கு இறங்கி, இங்கு சுவாமி நெல்லையப்பர் திருநடன காட்சி காட்டியதாகவும், அந்த திருநடனக் காட்சியுடன் எழுந்தருளியிருக்கும் நடராஜரே, இங்கு முனிவர் பெயரினால் அம்பலவாண சுவாமி என்னும் பெயரில் காட்சியளிக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

இந்த கோவிலோடு கருவூர் சித்தருக்கும் வரலாற்று தொடர்பு உள்ளது. கருவூர் சித்தர் சிவ தல யாத்திரை மேற்கொண்ட போது ஒரு முறை திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வருகிறார். தான் அழைத்தவுடன் தனக்கு இறைவன் காட்சியளிக்க வேண்டும் என்ற வரத்தினை பெற்றிருந்த கருவூர் சித்தர், நெல்லை கோவில் வாசல் வந்து அங்கு உறையும் சுவாமி நெல்லையப்பரை, "நெல்லையப்பா" என மூன்று முறை அழைத்தும் இறைவன் செவி சாய்க்காத காரணத்தால், கோபமுற்ற சித்தர் இங்கு இறைவன் இல்லை எனவே எருக்கும் குருக்கும் சூழக் கடவது என சாபமளித்து விட்டு, வடதிசை தோக்கி பயணமாகிறார். அப்படி வரும் வழியில் இங்கு மானூரில் அம்பலவாண முனிவரை சந்திந்து நடந்ததைக் கூற, அவரோ தாமதாக வந்தாலும் தாமகவே வந்து தரிசனம் தருவான் ஈசன் எனக் கூறி சித்தரை ஆற்றுதல்படுத்துகிறார். அதே வேளை கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர், அம்மை காந்திமதியோடு தோன்றி காட்சியளித்து இருவருக்கும் அருள்புரிந்தார்கள். தன்னை தேடி வந்து தரிசனம் அளித்த சிவபெருமானின் மீது கொண்ட அன்பினால், கருவூர் சித்தர் மீண்டும் திருநெல்வேலி எழுந்தருளி இறைவன் இங்கு உள்ளார், எனவே எருக்கும் குருக்கும் நீங்கக்கடவது என சாப விமோசனம் அளித்தார்.

இதனை கருத்தில் கொண்டே இங்கும் சுவாமி நெல்லையப்பராகவும், அம்மை காந்திமதியாகவும் எழுந்தருளி காட்சிதருகிறார்கள்.

Indian Sculptures in Manur Ambalavanaswamy Temple Tirunelveli

ஆமை அன்னம் வீடு பேறு பெற்ற வரலாறு:

திருநெல்வேலியில் மாநகரில் விளங்கி வரும் நெல்லையப்பர் திருக்கோவிலில், தாமிரபரணியோடு சம்பந்தப்பட்ட நிறைய வழிபாடுகள் உண்டு. இந்த தாமிரபரணி நதி நெல்லை நகர் வழியாக பயணித்து அடுத்ததாக தடுக்கப்படும் இடமாக அப்போது மருதூர் அணைக்கட்டு இருந்துள்ளது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காலை நடைதிறக்கப்பட்டவுடன் முன்னர் சாத்தப்பட்ட அலங்காரங்கள் களையப்பட்டு, அந்த நிர்மாலயங்கள் (அதாவது சுவாமிக்கு சாத்தி களையப்பட்ட பூக்கள் மற்றும் பொருட்கள்) தினமும் யானை மீது வைத்து கொண்டு வரப்பட்டு தாமிரபரணியில் சேர்க்கப்படுமாம். பின்னர் தாமிரபரணி நீரை தினமும் குடங்களில் நிரப்பி, யானை மீது வைத்து வீதி உலாவாக கொண்டு வந்து சுவாமி அபிஷேகத்திற்கும் பயன்படுத்தப்பட்டதாம்.

இங்கு இப்படி தாமிரபரணியில் சேர்க்கப்படும் நிர்மாலய பிரசாதங்கள் தண்ணீரில் மிதந்து வந்து, அடுத்த தடுப்பணையான மருதூர் அணைக்கட்டிற்கு வந்து தங்குமாம். முற்காலத்தில் இந்த அணைக்கட்டில் முன்வினைப் பயனால் ஆமையாகவும், அன்னமாகவும் பிறந்த இரண்டு உயிர்கள் வாழ்ந்து வந்ததாம்.

இந்த ஆமையும், அன்னமும் முன்வினைப் பயனால் இப்பிறவி எடுத்திருந்த காரணத்தால் சுவாமி நெல்லையப்பர் மீது தீவிர பக்தி செலுத்தி வந்தார்களாம். இதனால் தினமும் தாமிரபரணியில் மிதந்து வரும் நிர்மாலயங்களை இறைவனின் பிரசாதங்களாக கண்டும், பெற்றும் மகிழ்வார்களாம்.

இப்படி இருக்கையில் இந்த ஆமைக்கும், அன்னத்திற்கும் அருள் செய்ய திருவுளம் கொண்ட சுவாமி நெல்லையப்பர் ஓர் அற்புத நிகழ்வை நிகழ்த்துகிறார். கருவூர் சித்தர் திருநெல்வேலி எழுந்தருளி இறைவன் பெயரை கூறி அழைத்ததும், இறைவன் செவி சாய்க்காத காரணத்தால் எருக்கு எழுக என சாபமிட்டு சென்றது பற்றி அறிந்தோம். அந்த காரணத்தால் திருநெல்வேலியில் எருக்கு முளைத்தது. இதனால் தாமிரபரணியிலும் எருக்கம் பூக்களாக மிதந்து வந்ததை கண்ட ஆமையும், அன்னமும் பதறிப் போய் ஏதோ ஆபத்து என அறிந்து அங்கிருந்து அன்னப் பறவை, ஆமையை தூக்கிய படி பறந்து திருநெல்வேலி வர, அதே நேரம் சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு காட்சியளிக்க மானூர் எழுந்தருளியிருக்க, இந்த அன்னமும், ஆமையும் நேரே மானூர் வந்து சேர, இங்கு சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கும், அம்பலவாண முனிவருக்கும், ஆமை, அன்னத்திற்கும் ஒரு சேர தரிசனம் நல்கி ஆட்கொள்கிறார். பின் அன்னத்திற்கும், ஆமைக்கும் அருள்புரிந்து வீடு பேறு அளித்தார் என்பது கூடுதல் சிறப்புமிக்க தகவல்களாக அறியப்படுகிறது.

இதனை இன்றும் மானூர் அம்பலவாண சுவாமி கோவிலின் வடகிழக்கு மூலையில் ஆமையும், அன்னமும் கல்லில் சித்திரமாக வடிக்கப்பட்டிருப்பதை நாம் கண்டு உணரலாம்.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

சுவாமி நெல்லையப்பர்:

கிழக்கு நோக்கிய கருவறையில் சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவில் காட்சித் தருகிறார். திருநெல்வேலியில் உறையும் சுவாமி நெல்லையப்பரே இங்கு எழுந்தருளி கருவூர் சித்தருக்கு காட்சியளித்ததால் இங்கும் நெல்லையப்பராகவே விளங்கி வருகிறார்.

அம்மை காந்திமதி:

கிழக்கு நோக்கிய கருவறையில் அம்மை காந்திமதி, சற்றே இடை நெளித்து நின்ற கோலத்தில், ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மற்றொரு கரத்தை தொங்கவிட்ட படியும், புன்னகை புரிந்த படி காட்சியளிக்கிறாள்.

அருள்மிகு அம்பலவாணநாத சுவாமி(Arulmigu Ambalavananatha Swami):

தெற்கு நோக்கிய சபையில் அம்பலவாணருக்கு காட்சியளித்த நடராஜர், சிவகாமி அம்மை மற்றும் மாணிக்கவாசகரோடு உற்சவத் திருமேனியாய் எழுந்தருளி காட்சியளிக்கிறார்கள். அம்பலவாணருக்கு காட்சியளித்து அவரின் பெயரிலேயே நடராஜர் விளங்கி வருவது சிறப்பம்சம். இங்கு அம்பலவாண லிங்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கருவூர் சித்தர் சன்னதி:

வாயு மூலையிலே கருவூர் சித்தருக்கு சன்னதி உள்ளது. கம்பீரமான அழகோடு கையினிலே தண்டோடு , இடையிலே சிறு ஆடையோடு கைகள் வணங்கிய நிலையிலே கரூர் சித்தர் காட்சி அளிக்கிறார்.

மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோவில் அமைப்பு(Manur Ambalavanaswamy Temple Structure):

கிழக்கு நோக்கிய இத் திருக்கோவில் முன் பக்கம் குளத்தோடு அமையப் பெற்றுள்ளது. கிழக்கு வாயில் பகுதியில் கொடிமரம், பலிபீடம் என இருந்தாலும், தெற்கு வாயிலே இங்கு பிரதானமாக உள்ளது. கிழக்கு வாயில் விழாக் காலங்களில் மட்டுமே திறக்கப்படுகிறது.

திருக்கோவில் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் வடதிசை நோக்கி "திருவடி போற்றி" என்னும் சன்னதி, தற்போது "திருவாளி போத்தி" என்று பெயர் மருவி அழைக்கப்படுகிறது . இவரை பாண்டிய மன்னன் வட தேசத்திலிருத்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த சக்தி வாய்ந்த ஸ்தூபி வடிவம் என்று சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

தெற்கு வாயில் வழியே படிகள் ஏறி உள்ளே சென்றால் நேராக அம்பலவாணர் சன்னதி. அவருக்கு முன்புறம் கிழக்கு நோக்கிய தனித் தனி சன்னதிகளில் சுவாமி நெல்லையப்பர், அம்மை காந்திமதி எதிரே தனித் தனி நந்தியோடு காட்சியளிக்கிறார்கள்.

உள் சுற்றில் பரிவார மூர்த்திகளாக கன்னி விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கருவூர் சித்தர், சுப்பிரமணியர், அம்பலவாண லிங்கர், சனீஸ்வரர், பைரவர் ஆகியோர் எழுந்தருளி உள்ளார்கள்.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

மானூர் அம்பலவாணநாதர் திருக்கோவில் சிறப்புக்கள்(Manur Ambalavananadhar Temple Specialities):

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலின் உபகோவிலாக திகழும் இத்தலம் நெல்லையப்பருக்குரிய ஆறு சபைகளுள் ஆச்சார்ய சபையாக திகழ்கிறது.

இது இறைவனின் நடன சபைகளுள் ஒன்றாக விளங்குவதால், இக் கோவிலுக்கென தனி தீர்த்தமோ, தல விருட்சமோ இல்லை.

இந்த திருக்கோவிலைப் பற்றி திருநெல்வேலி தலப் புராணத்தில் இரண்டு சருக்கங்களில் பாடப் பெற்றுள்ளது.

இங்குள்ள தூண்களில், சோழர்கால குடவோலை முறையைக் குறிப்பிடும் உத்திரமேரூர் கல்வெட்டை விட காலத்தால் முந்தைய பழமையான சிறப்புமிக்க மானூர்க் கல்வெட்டுகள் இருக்கின்றன.

சுமார் கி. பி. 800ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, மானூர் ஊர் மகாசபையில் உறுப்பினர் ஆவதற்குரியத் தகுதியினை தெளிவாக எடுத்து இயம்புகிறது. இதில் அக்கால நகர ஆளுகை முதலிய விபரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தகுந்த சில திறமை உடையவர்களுக்கே வாரியம் எனும், கழகத்தில் உறுப்பினராக உரிமை உண்டு எனவும், ஊர்ச் சண்டைகளினாலே இக்கழக வேலையை யாராவது தடை செய்ய முயன்றால் அதைத்தடுப்பதற்குரிய விதிமுறைகளும் இக்கல்வெட்டில் காணப்படுகின்றன.

மந்திரபிரமாணமும், தருமமும் கற்றவர் தந்தையின் பங்குக்குரிய உறுப்பினர் ஆகலாம். முழு உறுப்பினர் ஆனோர் ஊர் சபை நடவடிக்கையின் போது கொண்டுவரப்படும் தீர்மானத்தை எதிர்க்கக்கூடாது. அவ்வாறு தடங்கல் ஏதும் செய்தால் ஒவ்வோரு தடங்கலுக்கும் ஐயஞ்சு காசுகள் தண்டம் செலுத்த வேண்டும் எனவும் இக்கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

இது போல இத்திருக்கோவிலில் வடகிழக்கு மூலையில் உள்ள தூணின் அடிப்பகுதியில் ஆமையுடன் கூடிய இரண்டு அன்னப்பறவைகளின் சிற்பங்கள் உள்ளன. "மானூர் அம்பலத்தின் வடகிழக்கு மூலையில் ஆமையும் அன்னமும் கண்டதார்?" என ஒரு வாக்கியம் இங்கே வழங்கி வருகிறது. இங்கு இந்த ஆமையும், அன்னமும் அம்பலவாணரை வழிபட்டு வீடுபேறு பெற்றதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

Karuvur Siddhar Avani Moola thiruvizha in Manur Ambalavananatha Swamy Temple in Tirunelveli

மானூர் அம்பலவாண சுவாமி முக்கிய திருவிழாக்கள்(Important festivals of Manur Ambalavanaswamy):

திருநெல்வேலி நெல்லையப்பரின் ஆறுசபைகளுள் ஒன்றாக திகழும் இங்கு ஆவணி மூலம் மற்றும் மார்கழி திருவாதிரை திருவிழா விமரிசையாக நடைபெறும்.

அதிலும் ஆவணி மூலம் அன்று திருநெல்வேலியில் இருந்து இங்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளி, கருவூர் சித்தருக்கு காட்சியளிப்பார்கள் அன்று சுற்றுப்பகுதி கிராம மக்கள் அனைவரும் திரண்டு திருவிழாவாகவே கொண்டாடுவார்கள் என்பது சிறப்பம்சம்.

மானூர் கோவில் அமைவிடம் (Manur temple distance):

திருநெல்வேலி மாநகரிலிருந்து வடக்கே 15கி.மீ தூரத்தில், சங்கரன்கோவில் செல்லும் வழிப்பாதையில் அமையப் பெற்றுள்ளது மானூர் அம்பலவாணசுவாமி கோவில்.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothukudi - 1 hr 20 min (69.9 km)
  • Tirunelveli - 38 min (25.9 km)
  • Thiruchendur - 2 hr 3 min (75.8 km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by ஜானகி அரவிந்த்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram