கூட்டாஞ்சோறு

Kuttansoru1

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது கூட்டாஞ்சோறு.

திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவுகளுள் ஒன்று இந்த கூட்டாஞ்சோறு. இது பெரும்பாலும் வீட்டில் சமைக்கப்படும் உணவு, உணவகங்களில் கிடைப்பது அரிது.

திருநெல்வேலி மற்றும் சுத்துவட்டாரத்துல (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி) தேரோட்டம், கோவில் கொடை, திருவிழானு வந்து, வீட்டுக்கு சொந்தங்காரங்க வந்துட்டா பெரும்பாலும் கூட்டாஞ்சோறு தான் மதிய உணவாக இருக்கும்.

அதே மாதிரி குடும்பத்தோட கிளம்பி திருச்செந்தூர், சங்கரன்கோவில், குற்றாலம், பாபநாசம் இப்படி எங்கயாவது ஒருநாள் சுற்றுலா போறதா இருந்தா கூட அன்னைக்கு காலையிலயே கூட்டாஞ்சோறு பொங்கி தூக்குசட்டியில நிரப்பி கொண்டுபோயிருவோம்லா…

அதுலயும் நான் சின்னபுள்ளையா இருக்கும்போதெல்லாம் எங்க குடும்பத்தோட போயி திருச்செந்தூருல இரண்டு நாள் தங்குவோம். அப்போ கையில சிறிய வாயு அடுப்பு, பாத்திரங்கள் எல்லாம் கொண்டு போய் சமைச்சு சாப்பிடுவோம். அப்போ கூட கூட்டாஞ்சோறுக்கு தான் முதலிடம்.

அவ்ளோ ஏன் சின்னபுள்ளையா இருக்கும் போது எங்க வளவுல இருக்குற புள்ளைங்க எல்லாம் சேர்ந்து விளையாடுவோம். அப்போ ஒருநாள் ஒவ்வொரு வீட்டுல இருந்து ஒவ்வொரு பொருள் கொண்டாரசொல்லி, எல்லாத்தையும் கூட்டி சோறு ஆக்கியெல்லாம் சாப்பிட்டிருக்கோம். அந்த அளவுக்கு கூட்டாஞ்சோறு ரொம்ப பிரசித்தம்.

வீடுகள்ல சொந்தக்காரங்க எல்லாம் ஒன்னு சேர்ந்தாலே பெரும்பாலும் கூட்டாஞ்சோறு தான். சித்தி ஒரு பக்கம் உள்ளிய உறிக்க, பெரியம்மா மற்றும் அத்தை சேர்ந்து காய்கறிகள நறுக்க, அக்கா ஒரு பக்கம் தேங்காய் துருவ, ஆச்சி அம்மியில மிளகாத்த சீரகம் அரைக்க, மயினி உக்காந்து முருங்கை இலைகளை உருவ, அம்மா அடுப்பு பக்கம் நின்னு பொங்கி இறக்கனு சொந்தங்கள் எல்லாம் கூட்டா சேர்ந்து பொங்குறதால தான் கூட்டாஞ்சோறு னு பெயர் வந்துச்சோனு ஒரு பக்கமும்,

இல்லை இல்லை இதுல சிவப்பு நிற கேரட், பச்சை நிற முருங்கை, பீன்ஸ் மற்றும் காய்கள், வெள்ளை கலர் தேங்காய் மற்றும் பிற அரிசி, பருப்பு, புளி கலவைகள்னு கூட்டா சேர்த்து பொங்குறதால தான் கூட்டாஞ்சோறு னு பெயர் வந்துச்சோன்னு மறு பக்கமும் பேச வைச்சு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்னா பாத்துக்கோங்களேன்.

ஆக இப்போ கூட்டாஞ்சோறு செய்முறையை பத்தி பார்ப்போமா.

ingredients for kuttansoru

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 2 உழக்கு,
துவரம்பருப்பு – அரை உழக்கு,
புளி – பெரிய எலுமிச்சம் பழம் அளவு,
மஞ்சள் தூள் – தேவைக்கு,
உப்பு – தேவையான அளவு,

காய்கறிகள்:
2 கேரட்,
10 பீன்ஸ்,
10 சீனிஅவரைக்காய்,
5 அவரைக்காய்,
2 முருங்கைக்காய்,
5 கத்தரிக்காய்,
1 வாழைக்காய்,
2 உருளைக்கிழங்கு,
அரை மாங்காய்,
1 கப் முருங்கைக்கீரை,
1 தேங்காயின் பூ துருவியது.

இவற்றோடு
20 எண்ணம் ஈராய்ஞம் தொலி உரித்தது,
10 பூண்டு பற்கள் தொலி உரித்தது.

அரைக்க:
மிளகாய் வத்தல் காம்புடன் – 20 எண்ணிக்கை,
ஈராய்ஞம் (சின்ன வெங்காயம்) – 10 எண்ணம்,
பூண்டு – 10பற்கள்,
சீரகம் – 1 சிறுகரண்டி (20 கிராம்)

தாளிக்க:
கடுகு, குத்து பருப்பு – தேவைக்கு,
நல்லெண்ணெய் – 200மிலி,
வெங்காய வடகம் – 6 எண்ணம்,
ஈராய்ஞம் – 15 தொலி உரித்தது,
கருவேப்பிலை – 5 கொத்து உருவியது,
பெருங்காயம் – தேவைக்கு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் புளியை தண்ணீயில ஊறவைச்சு கரைச்சு வைச்சுக்கோங்க.
அரிசியையும் பருப்பையும் பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும்.

அடுப்பில் பெரிய பாத்திரத்தில் 4 மடங்கு தண்ணீரில் உலை வைத்து நன்றாக கொதித்தவுடன் முதலில் அரிசி பருப்பு கலவையை போடவும்.

kuttansoru2

கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், சீனிஅவரைக்காய், வாழைக்காய் மற்றும் கத்தரிக்காயை நீளமாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். மாங்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், முருங்கைகீரையை உறுவிக்கொள்ளவும்.

இப்போ உலையில் அரிசி, பருப்பு அரை வேக்காடு வெந்தநிலையில் புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நறுக்கிய வைத்துள்ள காய்கறிகளுள் மாங்காய், கத்திரிக்காய், வாழைக்காய் தவிர மற்ற காய்கறிகள், முருங்கைகீரை, ஈராய்ஞம், பூண்டு பற்களை சேர்க்கவும். அவைகள் பாதி வெந்த நிலையில் பின்னர் இந்த மாங்காய், கத்திரிக்காய், வாழைக்காயை சேர்க்கவும்.

இவைகள் ஓரளவு பக்குவமாக வெந்து வரும்போது தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து சோற்றில் சேர்த்து, தேங்காய் பூ துருவல்களையும் தூவி வேகவிடவும்.

பின்பு அனைத்தையும் சேர்த்து கிளறி, தண்ணீர் ஈஞ்சிய பக்குவத்தில் இறக்கி வைத்துவிட்டு, அடுப்பில் இருப்புச்சட்டியை வைத்து வஞ்சகம் இல்லாமல் நல்லெண்ணெய் ஊத்தி, அது காய்ந்ததும், கடுகு-குத்து பருப்பு போட்டு தாளித்து, பின் அதில் ஈராய்ஞம், கருவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கி சோற்றில் கொட்டவும். பின்னர் மீண்டும் வஞ்சகம் இல்லாமல் எண்ணெய் விட்டு வெங்காய வடகத்தை வறுத்து பொடியாக்கி சோற்றில் தூவவும்.

பின்னர் இவையனைத்தையும் சேர்த்து கிளறி ஒரு தட்டைபோட்டு மூடி சிறிது நேரம் வைத்தால் சுவையும், மணமும் மிக்க கூட்டாஞ்சோறு தயார்.

இதனை குக்கரில் செய்யும் போது முதலில் அரிசியையும் பருப்பையும் சேர்த்து ஒரு விசில் வர வைத்துவிட்டு, பின்னர் காய்கறி மற்றும் அரைத்த கலவை பிற பொருட்களை சேர்த்து 2, 3 விசில் வர வைத்துவிட்டு இறக்கி இறுதியாக தாளிசம் செய்து கொள்ளலாம்.

இந்த கூட்டாஞ்சோற்றில் அனைத்து காய்கறிகளும் சேர்ந்துள்ளதால் தனியாக தொடுகறி தேவையில்லை, அப்பளம், வடகம் தொட்டுக்க இருந்தாலே போதும். எங்கள் வீட்டில் கூடுதலாக தயிர் பச்சடி சேர்த்துக்கொள்வோம்.

ஆக வாழைஇலையில் சூடாக கூட்டாஞ்சோறை பரப்பி, அப்பளம், வடகம், தயிர்பச்சடி தொட்டுக்கொண்டு விருந்தினருகளுடன் கூட்டாக சாப்பிடுவதே மகிழ்ச்சி தான். இரண்டாம் சுற்றுக்கு இந்த கூட்டாஞ்சோறுடன் தயிர் சேர்த்து பிசைந்து, நார்த்தங்காய் ஊறுகாயுடன் சாப்பிடுவதும் தனி ருசிதான்.

சூடாக சாப்பிடும் போது ஒருவகை ருசியில் இருக்கும் இந்த சோறு, நன்றாக ஆறியபின் புளிப்பு, காரம், காய்கறிகளின் மணம் ஆகியவைகள் சோற்றில் இறங்கி கூடுதல் சுவையளிக்கும். அவ்வளவு ஏன் சட்டியில் அடிதங்கும் பொறுக்குக்கூட அவ்வளவு சுவையாக இருக்கும்.

kuttansoru3

(குறிப்பு: நம்ம தம்பி கோமதிசங்கர்லாம் வீட்டுல கூட்டாஞ்சோறு பொங்குறாங்கனு தெரிஞ்சா நேரா குறுக்குத்துறை ஆத்துக்கு போய் ஒரு குளியலை போட்டுட்டு, வாழைத்தோப்புல நாலு வாழை இலையை அறுத்து எடுத்துக்கிட்டு, வீட்டுக்கு வந்து நெத்தி நிறைய திருநீறு பூசி சாமியை கும்புட்டுட்டு இலையை போட்டு உட்கார்ந்துருவாரு., பொங்கி வருகிற கூட்டாஞ்சாறு மணத்துக்கும், நம்ம தம்பி உக்காந்து சங்கிலிபூதத்தாருக்கு போடுற படையல் அளவையும் தாண்டி போட்டிபோட்டு சாப்பிடுற அழகை பார்க்கவும் நம்ம பக்கத்து வளவுல இருந்து லட்சுமணன் தம்பி, பக்கத்து தெரு நயினார் அண்ணாச்சி, நம்ம குறிச்சி ராமசாமி மற்றும் சுத்துபகுதி மக்க எல்லாம் வரிசைகட்டி குமுஞ்சு நிப்பாங்க, சாயங்காலம் இருட்டுக்கடையில அல்வா வாங்க நிக்குற கூட்டத்தை தாண்டி நம்ம தம்பி சாப்பிடுற அழகை பார்க்க வீட்டு முன்னாடி அவ்வளவு கூட்டம் நிக்கும்னா பாத்துக்கோங்க.. ???

அப்புறம் நம்ம தியாகராஜநகர் பெரியப்பா வீட்டில கூட்டாஞ்சோறு பொங்குற வாசம் பாளையங்கோட்டை ரயில்நிலையம் தாண்டும் போதே ரயில் பயணிகள் மற்றும் ரயில் ஒட்டுனர்களின் மூக்கை துளைக்க, சரியா நம்ம பெரியப்பா வீட்டு முன்னாடி சில நிமிடம் திருச்செந்தூர் போற ரயிலை நிறுத்தி அந்த வாசனைய அனுபவிச்சிட்டு தான் போவாங்கனா பாருங்களேன் ??? )

சமையல் குறிப்பு உபசாரம்: சங்கரநயினார்

எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் மேலும் படிக்க>>

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.