குன்னத்தூர் கோத பரமேஸ்வரர் திருக்கோவில்

குன்னத்தூர் கோத பரமேஸ்வரர்  திருக்கோவில்.

 

நவகைலாய ஸ்தலங்களில் நான்காம் தலமான குன்னத்தூர் கோத பரமேஸ்வரர்  திருக்கோவில்.

 சுவாமி: கோத பரமேஸ்வரர்,

அம்மை: சிவகாமியம்மை,

திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம்,

தீர்த்தம்: தாமிரபரணி.

தல வரலாறு :

உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த  ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப்பெறுகிறது. அதில் நான்காவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் குன்னத்தூர். 

முற்காலத்தில் தற்போதைய கோவில் அமையப்பெற்றுள்ள பகுதியை மன்னர் ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அப்போது அங்குள்ள குன்றுகளுக்கு நடுவே இருந்த பொத்தையில்  அரிய வகையான மரம் ஒன்று இருந்ததாம். அதில் வருடத்திற்கு ஒரு முறை ஒரே ஒரு பூப்பூத்து ஒரே ஒரு பழம் மட்டுமே காய்க்குமாம். அந்தப் பழத்தை உண்டால் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழலாம் என்பதால்  மன்னர் அந்த மரத்தைப் பத்திரமாகக்  பாத்துகாத்து வந்தார். ஒரு நாள் அந்த ஊரில் வாழ்ந்த கர்ப்பிணிப்பெண் ஒருத்தி, குடத்துடன் தண்ணீர் எடுத்து அவ்வழியாகச் சென்றாள். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் காய்த்திருந்த பழம்  அவள் குடத்தினுள் விழுந்து விட்டது. அதை அறியாமல் கர்ப்பிணிப் பெண்ணும் வீட்டுக்குச் சென்று விட்டாள். மறுநாள் காலையில் மன்னர் வந்து பார்த்தபோது மரத்தில் இருந்த பழத்தைக் காணவில்லை. யாரோ வேண்டும் என்றே பழத்தைத்  திருடி விட்டார்கள் என்று எண்ணி காவலர்களை அழைத்துப் பழத்தைத் திருடியவர்களை கண்டுபிடித்துக் கொண்டுவந்து தன் முன்னே நிறுத்துமாறு ஆணையிட்டார்.  அவர்களும் தேடிச் சென்றனர். ஒவ்வொரு வீடாகச் சென்று சோதனை செய்தபோது கர்ப்பிணியின் வீட்டில் குடத்தில் இருந்த பழத்தைக் கண்டனர். கர்ப்பிணி, தான் திருடவில்லை என்றும், அது  எப்படி குடத்திற்குள் வந்தது என்பது தெரியாது என்றும் கூறினாள். ஆனால் காவலர்களோ அதை நம்பாமல் அவளை மன்னரிடம் அழைத்துச் சென்றனர். மன்னரும் அந்தப் பெண் கூறியதை நம்பாமல் அவளை கழுவேற்ற உத்தரவிட்டார். அந்தப் பெண்ணைக் கழுவன் திரடுக்கு கொண்டு சென்றபோது “கர்ப்பிணி  ”  என்றும் பாராமல் நான் செய்யாத குற்றத்திற்கு கழுவேற்றுவதால், இனி இந்த ஊரில் பெண்கள், பசுக்களைத் தவிர யாரும் இருக்கமாட்டார்கள்” என்று அவள் சாபம் விடுத்தாள். பின்னர் அவளின் சாபத்தின் படியே காலப்போக்கில் ஆண்கள் யாரும் அந்த ஊரில் இல்லாமல் போனார்கள். பின்னர் ஆண்கள் இல்லாததால்  பெண்களும் அவ்வூரை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் அந்த ஊரில் பசுக்கள் மட்டுமே இருந்தன. யாருமே இல்லாமல் வறண்டு போயிருந்த  ஊரில், உரோமச மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் மட்டுமே மண் புதருக்குள் மறைந்து இருந்தது. பிற்காலத்தில் ஒருநாள் தன் இருப்பை வெளிப்படுத்த நினைத்த சிவபெருமான் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுக் கூட்டங்கள் சென்று இறைவன் மறைந்திருந்த மண் புற்றுக்கு மேல் தானாகப் பாலை சொரிந்தன. அதனை கண்ட அந்த ஊர் மக்கள், இந்தச்  செயலை நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னரிடம் தெரிவித்தார்கள். மன்னரும் அங்கு வந்து அந்த அதிசயத்தை  நேரில் கண்டு மகிழ்ந்தார். தனக்கு காட்சியளித்த சிவபெருமானுக்கு கம்பீரமான கோவிலை ஒன்றை எழுப்பினார் என்று இந்தக் கோவிலின் வரலாறு கூறப்படுகிறது.

குன்னத்தூர் பெயர் காரணம்:

குன்னத்தூர் என்று தற்போது அழைக்கப்படும் இந்த பகுதிக்குச் சங்காணி என்ற பெயரும் உள்ளது. காணி என்றால் நிலம் என்றும் செங்காணி என்றால் செம்மண் நிறைந்த நிலம் என்றும்  பொருள்.  செங்காணி என்பதே பின்னர் சங்காணி என்று மறுவியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியில் சிறு சிறு குன்றுகள் சூழ்ந்து இருப்பதால் குன்றத்தூர் என்ற பெயர் வழங்கப்பெற்று பின்னர் குன்னத்தூராக மறுவியதாகவும் செய்தி உள்ளது.

சுவாமி கோதபரமேஸ்வரர்:

கிழக்கு நோக்கிய கருவறையில் சுவாமி கோத பாரமேஸ்வரர் லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருகிறார். இவருடைய திருமார்பில் சர்ப்ப முத்திரை காணப்படுவது சிறப்பம்சம் ஆகும். இதனை இவருக்கு அபிஷேகம் செய்யும்போது தெளிவாகப் பார்க்க முடியும். இவருக்குத் திருநாகீசர், கைலாசநாதர் போன்ற வேறு திருநாமங்களும் உள்ளன.

சிவகாமியம்மை:

தெற்கு நோக்கிய தனி கருவறையில் சிவகாமி அம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கையைக் கீழே தொங்கவிட்ட படியும், நின்ற கோலத்தில், புன்னகை பூத்த முகத்துடன் காட்சித்தருகிறாள். 

திருக்கோவில் அமைப்பு:

தாமிரபரணி ஆற்றின் கரையில் குன்றுகள்  நிறைந்த பொத்தை நிலப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது இந்தக் கோவில். இங்குத் தனி விமானத்துடன் கூடிய  கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் சுவாமியும், தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய சந்நிதியில்  அம்மையும் காட்சி தருகிறார்கள். இது தவிர சுற்று பிரகாரத்தில் நந்தி, தக்ஷிணாமூர்த்தி,  கன்னிமூலை கணபதி, வள்ளி – தெய்வானை உடனுறை ஆறுமுகநயினார், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். 

திருக்கோவில் சிறப்புக்கள்:

  1.  முற்காலத்தில் இந்த ஊர் கீழவேம்புநாட்டு செங்காணியான நவணி நாராயண சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
  2. இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் இந்தக் கோவில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
  3. இந்தக் கோவில் பூஜைகள் முறையாக நடைபெற வீரபாண்டிய மன்னன் 4200 ரூபாய் மதிப்புடைய பணம் கொடுத்துள்ளதும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
  4. இந்தக் கோவிலில் நில அளவுகோல் ஒன்று உள்ளது. இது ஊரில் ஏற்படும் நிலம் சம்மந்தமான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் கல்வெட்டில் குறிக்கப்பட்டு உள்ளது.
  5. திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் பாதுகாக்கப் பட்டுவரும்  செப்பேடு ஒன்றில் இந்தத் திருத்தலத்தின் பெயர் திருநாங்கீசநேரி என்றும், இங்குள்ள இறைவனின் பெயர் திருநாகீசர் என்றும் அழைக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பிட பட்டு உள்ளது.
  6. இங்குச் சுவாமிக்கு எதிரே காட்சிதரும் நந்தி மற்ற கோவில்களைப்  போல் அல்லாமல் கால்களை தூக்கி எழும்புவதற்கு தயாராக இருப்பது போல் உள்ளார். இதன் பொருள், பக்தர்களுக்கு ஆபத்து வரும் வேளையில் அவர்களை ஆபத்திலிருந்து மீட்பதற்குத்  தயாராக உள்ளார் என்பது போல உள்ளதாகக் கூறப்படுகிறது.
  1. இந்தக் கோவிலின் அருகே கீழத்திருவேங்கடநாதபுரம்  வரதராஜ பெருமாள் கோவிலும், சற்று தொலைவில் சிறிய மலைக்குன்றின் மீது மேலத்திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோவிலும் அமையப்பெற்றுள்ளது. இது திருப்பதிக்கு சென்று வழிபடும் நிகழ்வைக் குறிக்கும் விதத்தில் உள்ள சிறப்பம்சம் ஆகும். திருப்பதியில் காளஹஸ்தி, கீழ்திருப்பதி, திருமலை திருப்பதி உள்ளது போல, இங்குச் சங்காணி சிவன் கோவில், கீழத்திருவேங்கடநாதபுரம், மேலத்திருவேங்கடநாதபுரம் ஆகியவை அமையப்பெற்றுள்ளது சிறப்பம்சம் ஆகும்.

முக்கிய விழாக்கள்:

மாசி மாத சிவராத்திரி, மாதாந்திர பிரதோஷ வழிபாடுகள் ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது.

அமைவிடம்:

திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார் 11 கி. மீ தொலைவில் திருநெல்வேலி நகரம் – மேலத்திருவேங்கடநாதபுரம் செல்லும் சாலையில் உள்ளது குன்னத்தூர். இங்கு செல்லத் திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து மற்றும் திருநெல்வேலி நகரத்திலிருந்து சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.