கத்திரிக்காய் கிச்சடி

Kathirikai Kichadi 3

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பார்க்கப்போறது கத்திரிக்காய் கிச்சடி.

இது இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளும் சட்னி வகைகளுள் ஒன்று.

பொதுவா எங்க வீடுகள்ல எல்லாம் ஒரு நாளைக்கு தோசை மாவு அரைச்சாங்கனா மறுநாள் இட்லி, அதற்கு மறுநாள் தோசை தான் காலை உணவாக இருக்கும். ஆக பெரும்பாலும் காலை உணவாக இட்லி, தோசையே இருக்கும்.

ஆனா இந்த இட்லிக்கு மட்டும் தொட்டுக்க சாம்போரோ, கத்திரிக்காய் கிச்சடியோ, தக்காளி கிச்சடியோ இல்லைனா நமக்கு தொண்டயில இறங்காது. அதனால ஒரு நாள் சாம்பார் வைச்சா, மறுநாள் கத்திரிக்காய் கிச்சடினு செய்வாங்க.

இந்த கத்திரிக்காய் கிச்சடி இட்லிக்கும் சரி, தோசைக்கும் சரி தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இப்போ எங்க ஆச்சி கைப்பக்கவத்துல எனக்கு சொல்லி கொடுத்த கத்திரிக்காய் கிச்சடி செய்முறை பத்தி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

நாட்டு வெள்ளை கத்திரிக்காய் பெரியது – 6 எண்ணம்,
பல்லாரி – 2 எண்ணம்,
மிளகாய் – 6 எண்ணம்,
தேங்காய் – துருவிய பூ,
புளி – சிறிதளவு (அ) தக்காளி – 1,
கடுகு, கு. பருப்பு, எண்ணெய் – தாளிக்க,
கருவேப்பிலை, மிளகா வத்தல், பெருங்காயம், உப்பு – தேவைக்கு,
மல்லித்தழை – சிறிதளவு.

Kathirikai Kichadi4

செய்முறையை பார்ப்போமா.

இந்த நாட்டு வெள்ளை கத்திரிக்காயை பொடியா நறுக்கி கொதிக்குற தண்ணீயில போட்டு வேக வைச்சுக்கனும்.

(திருநெல்வேலி சந்தை மற்றும் கடைகளில் தோட்டத்து வெள்ளை கத்திரிக்காய் தாரளமா கிடைக்கும், அதனால நம்ம டவுண் போஸ் மார்க்கெட் அல்லது பாளையங்கோட்டை மார்க்கெட் அல்லது உழவர் சந்தை போனா வாங்கியாரலாம். அதுலயும் பாளையங்கோட்டை மார்க்கெட்ல பெட்டிக்கார ஆச்சிகளிடமும் தரம் பார்க்காமலயே வாங்கியாரலாம். அந்த அளவு திருநெல்வேலியில கத்திரிக்காய் பிரசித்தம்.)

இப்போ சிறிது தேங்காய் துருவலோட, மிளகாய் சேர்த்து அரைச்சு வைச்சுக்கோங்க, புளியை தண்ணீர் விட்டு கரைச்சு வெச்சுக்கோங்க. (சில வீட்டுல புளி சேர்க்கறதுக்கு பதிலாக ரெண்டு தக்காளிய நறுக்கி கத்திரிக்காயோட வேக வைச்சு செய்யுற பழக்கமும் உண்டு.)

இப்போ வெந்த கத்திரிக்காயை அப்படியே தண்ணீரை வடிச்சிட்டு கரண்டியை வைச்சு மசிச்சு எடுக்கணும். ஒன்று இரண்டா மசிச்சாதான் கொஞ்சம் நல்லாயிருக்கும், மையா மசிச்சுராதீய பொறவு ருசி குறைஞ்சுரும். இந்த மசிச்ச கத்திரிக்காய் கலவையோட புளிக்கரைசல், உப்பு, அரைத்த தேங்காய் பூ-மிளகாய் விழுது சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடனும்.

இப்போ அடுப்புல இருப்புச்சட்டிய வைச்சு நல்லெண்ணெய் வஞ்சகம் இல்லாம விட்டு கடுகு, குத்து பருப்பு போட்டு தாளிச்சு, அடுத்து ஒரு மிளகாய் வத்தலை கிள்ளி போட்டு, கருவேப்பிலை சேர்த்து, நறுக்கிய பல்லாரியையும் போட்டு ஒன்னா வதக்கி, கொதிச்சு இறக்கி வைச்சுருக்க கலவையில தட்டி, கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து மேலும் ஒரு கொதி கொதிக்க வைச்சு கடைசியா மல்லித்தழைய தூவி இறக்கி வைச்சா கத்திரிக்காய் கிச்சடி ரெடி.

Kathirikai Kichadi 2

இத சூடா இட்லிக்கோ, தோசைக்கோ சேர்த்து பரிமாறுனா விருந்தாளி மக்க கொண்டா கொண்டானு கேட்டு வாங்கி சாப்பிடுவாகலே.

திருநெல்வேலி கோமதிசங்கர் தம்பி உபதேசித்த “கத்திரிக்காய் கிச்சடி” செய்முறை:

கத்திரிக்காய் தக்காளி மிளகாய ஒன்னு ரெண்டு வெட்டி நல்ல குக்கர்ல வேக விட்டு, தண்ணிய தனியா பிரிச்சு மத்த வச்சு நல்லா கடஞ்சு பின்னே, வாணலில நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு வெங்காயம் தாளிசம் போட்டு கடஞ்ச கத்திரி தக்காளி மிளகாய சேர்த்து கத்திரி வடித்த தண்ணியும் சேர்த்து நல்ல கொதிச்ச மல்லித்தழை சேர்த்த பிறவு இறக்கினா மணக்கும் கிச்சடி தயார்.

(குறிப்பு: இப்போ சொல்ல போற விஷயம் ரொம்ப ரகசியமானது. வெளியில சொல்லிராதீக. கத்திரிக்காய் கிச்சடி ருசி ஒழுங்கா வரனும்னா, அதுக்கு சில வழிமுறை இருக்கு, அது என்னன்னா கிச்சடி செய்ற அன்னைக்கு விடியாக்காலம் பிரம்ம முகூர்த்தத்துல எழுந்து தலைக்கு குளிச்சு, நெற்றியிலே பட்டை அடிச்சு, சந்தனம், குங்குமம் வைச்சுட்டு கிழக்கே பார்த்து நின்னு வலது உள்ளங்கையில ஒரு வெள்ளை கத்திரிக்காயை வைச்சு, தியானம் பண்ணிட்டு, அந்த கத்திரிகாய்க்கு பூ, பொட்டு வைச்சு சரியா சூர்யன் உதிக்கும் வேளையில் கத்தி கொண்டு ரெண்டா பிளந்து, அதை கிச்சடி செய்யப்போற பாத்திரத்துல போடனும். இந்த ரகசியத்தை ரகசியமா வைச்சுக்கோங்க. இந்த ரகசியம் தெரிஞ்சாலும் திருநெல்வேலி மக்க தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டாக. யாருட்ட வேணாலும் கேளுங்க இது கலாய்க்க போட்ட குறிப்புவேனு சொல்லுவாக. குறிப்பா நம்ம தம்பி அப்புறம் பெரியப்பா இவங்ககிட்ட மட்டும் கேட்டுரவே கேட்டுராதீக. ரெண்டு பேரும் இல்லவே இல்ல, இது திருநெல்வேலி குசும்புனுதான் சிரிக்காம சொல்லுவாங்க. ????)

சமையல் குறிப்பு உபசாரம்: சங்கரநயினார்

எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் மேலும் படிக்க>>

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.