Logo of Tirunelveli Today
English

Karungulam Venkatachalapathy Kovil

வாசிப்பு நேரம்: 9 mins
No Comments
Outer view of karungulam temple.

கருங்குளம் வெங்கடாசலபதி கோயில்

வகுளகிரி என்று சிறப்பிக்கப்படும் கருங்குளம் வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில்.

மூலவர் பெயர்: ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் ( வகுளகிரி நாதர்)

உற்சவர் பெயர் : ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக ஸ்ரீ நிவாச பெருமாள்.

திருக்கோவில் விருட்சம்: உறங்கா புளிய மரம்.

தீர்த்தம்: தாமிரபரணி.

Front view of karungulam temple.

கோவில் வரலாறு:

முற்காலத்தில் சுபகண்டன் என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு ஒரு முறை கண்ட மாலை என்னும் கொடிய நோய் பீடித்தது. தனது அந்த கொடிய நோய் நீங்க அவன் பெருமாளை பல கோவில்கள் தோறும் சென்று வழிபட்டு வந்தான். அப்படி அவன் ஒரு முறை திருப்பதி சென்று வெங்கடாசலபதி பெருமாளை வணங்கி தன் நோய் தீர மனமுறுக வேண்டி நின்றான். அவனது பக்திக்கு இறங்கிய திருப்பதி பெருமாள், அன்று இரவு சுபகண்டனின் கனவில் தோன்றி, எனக்குச் சந்தனக் கட்டைகளால் தேர் ஒன்றைச் செய்வாயாக அப்படி செய்யும் போது அவற்றில், இரண்டு சந்தனக் கட்டைகள் மிச்சமாக இருக்கும். அந்த சந்தன கட்டைகளை தெற்கே இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வகுளகிரி மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உன் நோய் நீங்கப் பெறுவாய் என கூறி அருள் புரிகிறார்.

Side view of karungulam temple.

கனவில் இருந்து திடுக்கிட்டு எழுந்த மன்னன் சுபகண்டன், மறுநாளே திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளுக்கு சந்தன மரக் கட்டைகளைக் கொண்டு தேர் செய்யத் தொடங்கினான். அவன் தேரை செய்து முடிக்கும் தருவாயில் அவனது கனவில் பெருமாள் கூறியவாறே, இரண்டு சந்தன கட்டைகள் மிச்சமாகின்றன. அந்த சந்தன கட்டைகளை எடுத்துக் கொண்டு, தென் பாண்டி நாட்டை அடைந்த சுபகண்டன், அங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த வகுளகிரி பகுதியை கண்டறிந்து கனவில் பெருமாள் கூறியபடியே தான் கொண்டு வந்திருந்த சந்தன கட்டைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்து தாமிரபரணியில் மூழ்கி பெருமாளை வழிபட அவனது நோய் நீங்கப் பெற்றதாக இக் கோவில் வரலாறு கூறப்படுகிறது.

சித்ராங்கதனுக்கு வயிற்று வலி நீங்கிய வரலாறு:

முற்காலத்தில் பாஞ்சல நாட்டை சித்ராங்கதன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ஒரு முறை தீராத கடும் வயிற்று வலி ஏற்படுகிறது. தன் வயிற்று வலி தீர மிகப் பெரிய ராஜ வைத்தியம் எல்லாம் செய்தும் பலனில்லாமல் போனது. இந்த வலியை தாங்க முடியாமல் அவதியுற்ற மன்னன் மிகுந்த வேதனையில் இருந்தான்.

அப்போது ஒரு நாள் நாரத மகரிஷி மன்னனை சந்திக்க வருகிறார். அவரிடம் தன் வேதனையை கூறி வருந்துகிறான் சித்ராங்கதன். அதற்கு நாரதர், மன்னா வருந்தாதே, உன் முன் ஜென்ம வினைப் பயனால் தான் நீ தற்போது அவதியுறுகிறாய் என்று கூறினார். சித்ராங்கதன் தான் முன் ஜென்மத்தில் செய்த வினை என்ன என்று கேட்க, அதற்கு நாரதர்., நீ முன் ஜென்மத்தில் வேடர்கள் குலத்தின் தலைவனாக இருந்த போது, சேர்ந்திருந்த இரு மான்களை நீ வேட்டையாடும் பொருட்டு அம்பு எய்தாய். அந்த அம்பு ஆண் மானை கொன்றுவிட்டது. அந்த இரண்டு மான்கள் உருவில் இருந்தவர்கள் தர்ப்யர் என்ற முனிவரும், அவரது மனைவியும் தான். அவர்கள் இருவருமே மான் உருவத்தில் சேர்ந்திருந்தனர். அடிபட்ட தர்ப்யர் சுய உருவெடுத்து உனக்கு சாபமிட்டு, இறந்து போனார். அந்த சாபத்தின் விளைவே இந்த தீராத வயிற்று வலி ஆகும். இந்த வினைப் பயன் தீர ஒரு வழி உள்ளது என கூறுகிறார். சித்ராங்கதனும் அந்த வழியை கூறும்படி வேண்டிட, நாரதரோ தென் பாண்டி நாட்டில் உள்ள வகுளகிரி சேத்திரத்திற்கு சென்று தாமிரபரணி ஆற்றில் நீராடி அங்கு உறையும் பெருமாளை வழிபட்டால் சுபகண்டனின் கண்டமாலை நோய் நீங்கியது போல உன் வயிற்று வலியும் நீங்கிவிடும் என்று கூறுகிறார். அதன்படியே சித்ராங்கதனும் இந்த வகுளகிரி சேத்திரத்தை அடைந்து தாமிரபரணியில் நீராடி வகுளகிரி பெருமாளை வணங்கிட தன் வயிற்று வலி நீங்கப் பெற்றதாக கூறப்படுகிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

பெருமாளின் திருவிளையாடல்:

முற்காலத்தில் இந்த வகுளகிரி மலைக் கோவிலுக்கு செல்ல சிறந்த வசதிகள் கிடையாது. கரடு முரடான பாறைகளின் வழியாகவே கோவிலை சென்றடைய வேண்டும். அந்த காலக் கட்டத்தில் இங்கு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. கோவில் முன்பு நட வேண்டிய நிலைக் கல் ஒன்றை அம்பாசமுத்திரத்தில் இருந்து ஒரு கூலி தொழிலாளி தனது மாட்டு வண்டியில் ஏற்றிய படி வகுளகிரி மலை அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தான்.

Decorated statue of karungulam temple swamy.

பின்பு கோவில் நிர்வாகிகள் அந்த நிலைக் கல்லை மலை மீது உள்ள கோவிலுக்கு கொண்டு வரும் படி பணித்தார்கள். அதன் படி மிக அதிகமாக கூலி கேட்டு வாக்கு வாதம் செய்தான். அவர்களும் கரடு மரடான மலைப் பாதையில் சிரமப்பட்டு கொண்டு வந்திருக்கிறானே என அதிக கூலி கொடுக்க நினைத்த போதிலும், அந்த வண்டிக்காரன் பேராசையால் அதையும் தாண்டி அதிக கூலி வேண்டும் என்று சண்டையிட்டான். வேறு வழி இல்லாமல் நிர்வாகத்தினரும் அவன் கேட்ட கூலியை கொடுக்க ஒப்புக் கொண்டு விட்டார்கள். பின்னர் அந்த நிலைக் கல்லை ஏற்றிக் கொண்டு மலை மீது ஏறி இங்குள்ள உறங்காப் புளி மரத்தின் அருகில் வந்த போது, வண்டியின் சக்கரம் கழன்று விழ, வண்டிக்காரனும், மாடுகளும் காயமின்றி பெருமாள் அருளால் தப்பித்து விடுகின்றனர். இதில் அதிசயம் என்ன என்றால் வண்டியின் அச்சாணியானது வண்டிக்காரன் கோவில் நிர்வாகிகளிடம் சண்டையிட்ட, மலை அடிவாரத்திலேயே கழன்று விழுந்துள்ளது. அவ்வளவு சுமையுடன் அச்சாணி இல்லாமலேயே வண்டியானது மலையில் ஏறியுள்ளது. இதனைக் கண்டு திகைத்த வண்டிக்காரன், பெருமாளின் அருளால் தான் நாம் பிழைத்தோம் என்று உணர்ந்து கூலியே வேண்டாம் எனக் கூறி, அதனை தன் பங்காக கோவில் திருப்பணிக்கு செலவிட கூறி பெருமாளை வணங்கி சென்றதாக ஒரு நிகழ்வும் பெருமாளின் திருவிளையாடலாக கூறப்படுகிறது.

மூலவர் வெங்கடாசலபதி பெருமாள்:

இங்கு மலை மீது உள்ள கோவிலின் கருவறையில் சுபகண்டனால் கொண்டு வரப்பட்ட இரண்டு சந்தன கட்டைகளில் தான் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார். சந்தன கட்டைகளுக்கு வஸ்திரம் அணிவித்து, திருநாமம் சாத்தி பெருமாள் அலங்காரம் செய்யப்படுகிறது.

உற்சவர் ஸ்ரீ தேவி, பூ தேவி சகித ஸ்ரீ நிவாச பெருமாள்:

இங்கு தனிக் கோவிலில் உற்சவர் பெருமாள் நான்கு கரங்களுள் மேல் இரண்டு கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய முத்திரை காட்டி, கதாயுதம் தாங்கியும் நின்ற கோலத்தில், ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி சகித ஸ்ரீ நிவாச பெருமாளாக சேவை சாதித்து அருளுகிறார்.

Priests performing sacred rituals during karungulam temple festival.

திருக்கோவில் அமைப்பு:

வகுளகிரி என்ற மலைக் குன்றின் மீது கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது வெங்கடாசலபதி கோவில். மேலே ஏறிச் செல்ல படிக்கட்டுகளும், சாலை வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

திருக்கோவில் சிறப்புக்கள்:

திருப்பதியிலிருந்து பெருமாள் இங்கு வந்தமையால் இந்த கோவில் 'தென் திருப்பதி' என்று சிறப்பிக்கப்படுகிறது.

திருப்பதிக்குப் போக முடியாத பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை இந்த வகுளகிரி பெருமாள் கோயிலில் நிறைவேற்றலாம் என்றும் கூறப்படுகிறது.

இங்கு ஆதிசேஷனே வகுளகிரி மலையாக இருப்பதாக கூறப்படுகிறது.இங்கு மூலவர் பெருமாள் சந்தன கட்டைகளாக இருந்தாலும், பால், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்தும் இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது.

இங்கு பெருமாளுக்கு நீராஞ்சனம் செய்து வழிபடுவது விசேஷமாக கருதப்படுகிறது.இங்கு கருடசேவை உற்சவத்தின் போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மலையில் சுற்றி வருவது காண மிக அழகாக இருக்கும்.

வருடத்திற்கு ஒரு முறை சித்ரா பெளர்ணமி அன்று மட்டுமே பெருமாள் மலையில் இருந்து கிழே இறங்கி ஊருக்குள் வீதி வலம் வருவார்.

A popular idol in karungulam temple.

இங்குள்ள உறங்காப் புளிய மரம் சிறப்பு பெற்றது ஆகும். இதில் உள்ள இலைகள் மாலை நேரமானாலும் மூடுவதில்லை. அது போல இந்த மரத்தில் பூ பூத்தாலும், காய் காய்ப்பதில்லை என்பது சிறப்பம்சம்.

இந்த கோவிலில் உள்ள தீர்த்தக் கிணற்றில் உள்ள தண்ணீரும் எந்த காலத்திலும் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கோவிலுக்கு வருபவர்கள் மலை அடிவாரத்தில் உள்ள மார்த்தாண்டேஸ்வரரை வழிபட்ட பின்னரே, வகுளகிரி மேல் உள்ள பெருமாளை வழிபட வேண்டும் என்பது விதிமுறை.

இங்கு தீராத நோய்கள் தீர நீராஞ்சனம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு பலன்களை தரும்.

முக்கிய திருவிழாக்கள்:

இங்கு சித்ரா பெளர்ணமியை ஒட்டி பத்து நாட்கள் பெருந் திருவிழா நடைபெறுகிறது.

இந்த திருவிழா தேங்காய் சாத்தி, பந்தல் கால் நாட்டு விழா உடன் கோலாகலமாக துவங்கும். திருவிழாவின் முதல் நாள் தோளுக்கினியான் வாகனத்திலும், இரண்டாம் நாள் சிம்ம வாகனத்திலும், மூன்றாம் நாள் அனுமன் வாகனத்திலும், நான்காம் சேஷ வாகனத்திலும், ஐந்தாம் நாள் கருட வாகனத்திலும், ஆறாம் நாள் யானை வாகனத்திலும், ஏழாம் நாள் தங்க சப்பரத்திலும், எட்டாம் நாள் குதிரை வாகனத்திலும், ஒன்பதாம் நாள் தவழ்ந்த கிருஷ்ண திருக்கோலத்தில் பல்லக்கிலும் எழுந்தருளி ஸ்ரீ நிவாச பெருமாள் மலை மேல் கிரி வீதி வலம் வருவார்.

பத்தாம் திருநாளான சித்ரா பெளர்ணமி அன்று இரவு பெருமாள் தாயார்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மலையில் இருந்து கீழே இறங்கி ஊருக்குள் வீதி உலா வந்து மறுநாள் காலை தாமிரபரணி நதிக்கரைக்கு எழுந்தருளி வெள்ளை சாத்தி கோலத்தில் மீன் விளையாட்டு கண்டருள்வார்.

அதனை தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் தாயார்களுடன் மீண்டும் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மீண்டும் மலை மேல் திருக்கோவில் சேர்வார்.

Karungulam temple swamy decorated with jewellery and flowers.

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று காலை முதல் பிற்பகல் வரை பெருமாள் அனந்த சயன கோலத்தில் காட்சி தருவார்.

அமைவிடம்:

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், சுமார் 18 கி. மீ தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையின் தென் கரையில் இருக்கும் சிறிய மலைக் குன்றின் மீது அமையப் பெற்றுள்ளது கருங்குளம் பெருமாள் கோவில். திருநெல்வேலியில் இருந்து திருவைகுண்டம் வழியாக ஏரல், உடன்குடி, திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் கருங்குளம் வழியாக செல்லும்.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothukudi - 1 hr 2 min (46.1 km)
  • Tirunelveli - 14.8 kms (25 mins)
  • Thiruchendur - 1 hr 6 min (39.9 km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by ஜானகி அரவிந்த்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram