English

Karaiyaru Sorimuthaiyanaar Kovil

வாசிப்பு நேரம்: 5 Minutes
No Comments

திருநெல்வேலி மாவட்டம்., காணிக் குடியிருப்பு சொரி முத்து அய்யனார் திருக்கோவில். மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை சரகத்தின் அடர்ந்த வனப் பகுதிக்குள் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப் பெற்றுள்ள முதல் திருக்கோவிலாக விளங்கி வருகிறது சொரி முத்து அய்யனார் கோவில். 

சுவாமி பெயர்: மகா லிங்க சுவாமி.

சாஸ்தா பெயர்: பூர்ணா, புஷ்கலா உடனுறை சொரி முத்து அய்யனார்.

தெற்கு தனி சன்னதி: சங்கிலி பூதத்தார் மற்றும் அகத்தியர்.

தீர்த்தம்: தாமிரபரணி.

திருக்கோவில் விருட்சம்: இலுப்பை மரம் ( என்ற) மணி முழுங்கி மரம்.

சிறப்பு சன்னதிகள்:

 1. பொம்மக்கா, திம்மக்கா உடன் பட்டவராயர்
 2. பெரிய தளவாய் மாட சுவாமி
 3. கரடி மாட சுவாமி
 4. தூசி மாட சுவாமி
 5. கச மாடன் - கச மாடத்தி அம்மன்
 6. பலாவடி சன்னதி
 7. மணி முழுங்கி மரத்தடி சன்னதி
 8. பிரம்மராட்சி அம்மன், பேச்சி அம்மன், சுடலை மாட சுவாமி. 

திருக்கோவில் வரலாறு:

முற்காலத்தில் இமயமலையில் நடைபெற்ற அம்மை அப்பர் திருக்கல்யாணத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்கள், சகல ரிஷிகள் அனைவரும் குழுமியதால் வட பகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்தது. உலகை சம நிலை அடையச் செய்வதற்காக, சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்து, தென் திசை சென்று உலகை சம நிலை படுத்தும்படி உத்தரவிடுகிறார். 

அகத்திய பெருமானும் இறைவனின் ஆணைப்படி, தென் திசை நோக்கி பயணித்து பொதிகை மலையை வந்து சேர்கிறார். அங்கு தற்போது சொரி முத்து அய்யனார் கோவில் அமைந்திருக்கும் தாமிரபரணி நதியில் நீராடி, தனது நித்திய அனுஷ்டானங்களை முடித்த பின்னர் யோக நிஷ்டையில் அமர்ந்தார். அப்போது ஜோதி ஒன்று அவரது மனக் கண்ணில் தோன்றி மறைந்தது. அதைக் கண்டு அதிசயித்த அகத்திய மாமுனிவர், அந்த ஜோதியை தன் ஞான திருஷ்டியில் பார்க்க., அப்போது சாஸ்தா ஆனவர்,  மகா லிங்க பெருமானை பூஜிக்கும் காட்சியும், தேவர்கள் பூ மாரி சொரிந்து சாஸ்தாவையும், மகா லிங்கப் பெருமானையும் வழிபடும் காட்சியும் அவருக்கு தெரிந்தது. இதனை கண்டு வியப்புற்ற அகத்திய முனிவர் ஆனந்தம் அடைந்து, மலர் தூவி இவ் விடத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளை தரிசித்து வழிபடுவோருக்கு எல்லா இன்னல்களும் நெருப்பில் இட்ட பஞ்சு போல் பொசுங்கிட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். அப்போது சாஸ்தாவானவர் தேவர்களின் பூ மாரி சொரிதலால் சொரி முத்து அய்யனார் என்ற திருநாமம் தாங்கி, பூர்ணா, புஷ்கலா தேவியர்களுடன், மகா லிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார் உட்பட்ட சகல பரிவார மூர்த்திகளுடன் அகத்தியருக்கு காட்சியளித்ததாக வரலாறு கூறப்படுகிறது.

முற்காலத்தில் ஒரு சமயம் இப்பகுதியில் வற்கடம் என்று அழைக்கக் கூடிய கடும் பஞ்சம் ஏற்பட்டது. அதாவது சுமார் பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாக மழையே பொழியவில்லையாம். அப்போது அகத்திய முனிவர் ஒரு ‘ஆடி அமாவாசை' அன்று, இங்கு உள்ள சாஸ்தாவுக்கு புனித நீர் சொரிந்து அபிஷேகம் செய்தால், மாதம் மும்மாரி பொழியும், வறட்சி நீங்கும், என்று கூறியதாகவும்., அதன்படியே புனித நீரை பொற்குடங்களில் நிரப்பி, அபிஷேகம் செய்ய  நல்ல மழை பொழிந்து வறட்சி நீங்கியதாகவும்., மழையை பொழிய வைத்த அய்யனார், ‘சொரி முத்து அய்யனார்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.

இப்படி அகத்தியர் வணங்கிய இந்த கோவிலானது காலப்போக்கில் மண் மூடி போய்விட்டதாம். அப்போதைய காலக் கட்டத்தில் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் தான் பாண்டிய நாடு மற்றும் சேர நாட்டிற்கு இடையில் பண்ட மாற்று முறையில் வணிகம் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. எனவே வணிக சந்தையின் முக்கிய இடமாக திகழ்ந்த இங்கு வணிகர்கள் குவிவார்களாம். அப்படி ஒருமுறை வணிகத்திற்காக கொண்டு வரப்பட்ட பொதி மாடுகளின் காலடி பட்டு ஓரிடத்தில் இருந்து ரத்தம் பெருகி வருகிறது. இதைக் கண்ட வணிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டு திகைத்து நின்றனர்.

அந்த சமயம் வானில் இருந்து ஒரு அசரீரி, குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் மகா லிங்க சுவாமி., இங்கு அவருடன் சொரி முத்து அய்யனார், சங்கிலி பூதத்தார் உட்பட்ட பரிவார தேவதைகளும் புதையுண்டு இருக்கிறார்கள், அவர்களை கண்டறிந்து இங்கு கோவில் கட்டி வழிபடுவீர்களாக என்று ஒலித்தது. அதன்படியே வணிகர்களும், ஊர் மக்களும் சேர்ந்து கோவில் எழுப்பி, பரிவார தேவதைகளுக்கும் சன்னதிகளை அமைத்து வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் இக் கோவில் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் வரப் பெற்று தற்போது வரை நிர்வகிக்கப் படுகிறது.

சங்கிலி பூதத்தார் வரலாறு:

முற்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைந்த வரலாறு நாம் அறிந்ததே. அப்படி அந்த திருப்பாற்கடலை கடைந்த போது அமிர்தத்தோடு, ஆலகால விஷம், கற்பக விருட்சம், மகாலெட்சுமி, காமதேனு பசு, மற்றும்  பல அதிசயங்களும், அற்புதங்களும் வெளியே வரப்பெற்றது. அப்படி அமிர்தத்தோடு பல தரப்பட்ட விஷயங்கள் வெளிவரும் நேரத்தில் சங்கொலி முழங்கிட விசித்திரமான, வீரியமான பல விதமான பூத கணங்களும் வெளியே வந்தன. அந்த பூத கணங்களின் தலைவனாக கையில் தண்டத்தை ஆயுதமாகவும், உடல் மேல் கனத்த இரும்புச் சங்கிலிகளை ஆபரணமாகவும் அணிந்தவாறு வெளியே வந்தவர் தான் சங்கிலி பூதத்தார். அமிர்த கலசத்தோடு பிறந்ததால் இவருக்கு அமிர்த பாலன் என்ற பெயரும் உண்டு. 

அண்டமெல்லாம் நடுங்கச் செய்த அதி பயங்கர ஆல கால விஷத்தை உலக நன்மைக்காக விழுங்கி அனைத்துலக ஜீவராசிகளையும் அழிவில் இருந்து காப்பாற்றிய சிவபெருமான், வெளிவந்த  பூத கணங்களையும், பூத கணங்களின் தலைவனான சங்கிலி பூதத்தாரையும் கைலாயத்தில் சேர்த்துக் கொண்டார். 

இவ்வாறு சிவபெருமான் ஆணையிட்ட படி, சங்கிலி பூதத்தார் மற்ற பூத கணங்களின் உதவியோடு மிகவும் சிறப்பாக கைலாய மலையை பாதுகாத்து வந்தார். ஒருமுறை சிவபெருமான் சங்கிலி பூதத்தாரிடம் மொத்த கைலாய நிர்வாகப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு பூலோக சஞ்சாரம் மேற்கொள்ள போவதாக கூறிச் சென்றார். அப்படி போன சிவபெருமான் நீண்ட நாட்கள் ஆகியும் திரும்பி வராத காரணத்தினால், பொறுமை இழந்த அம்மை பார்வதி, பூதத்தாரை அழைத்து, பூலோகம் சென்று சிவபெருமானை கையோடு அழைத்து வர உத்திரவிடுகிறார்.  அம்மையின் உத்தரவை மீற முடியாத பூதத்தாரும் சிவபெருமானைத் தேடி பூலோகம் நோக்கி கிளம்பி வருகிறார். அப்படி அவர் தேடி வரும் போது தூரத்தில் சிவபெருமானும் கைலாயத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சிவபெருமான் வருவதை பூதத்தார் பார்த்து விட, கைலாயம் விட்டு கீழே இறங்கி வருவதை சிவபெருமான் பார்த்தால் கொடுத்த பொறுப்பை கவனிக்காமல், இப்படி போட்டு விட்டு வந்து விட்டாயே என கேட்பாரோ என பயந்து , அங்கு கிடந்த பாம்பு விட்டு சென்ற சட்டைக்குள் புகுந்து மறைந்து கொண்டார். இதனை தனது ஞான திருஷ்டி மூலம் உணர்ந்த சிவபெருமான் சங்கிலி பூதத்தாரை கைலாயத்தில் சிறப்பாக காவல் நிர்வாகம் செய்து வரும் உனது பாதுகாப்பும், திருவருளும் பூலோக மக்களுக்கும் வேண்டும் என்பதற்காகவே யாம் இந்த திருவிளையாடல் புரிந்தோம். நீதி, நேர்மை, நியாயம், நிர்வாகங்களில் சிறந்து விளங்கும் நீ பூலோகம் சென்று சிறப்பான திருவிளையாடல்கள் புரிந்து, மக்களுக்கு நன்மைகள் பல செய்து யாம் இருக்கும் தென் கைலாயமாகிய  பொதிகை மலை வந்து எம்மை அடைவாய் என்று கூறி அருள்புரிந்ததாகவும், அதன்படி பூத நாதரும் பூலோகம் அடைந்து பர்வத மலை, திருச்செந்தூர், திருக்குறுங்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் திருவிளையாடல்கள் பல புரிந்து தனக்கென நிலையம் அமைத்து அங்கு அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, இறுதியாக சொரி முத்து அய்யனார் கோவில் அடைந்து அகத்தியரின் வேண்டுகோளை ஏற்று இங்கேயே காவல் தெய்வமாக நின்று அருள்பாலித்து வருவதாக வரலாறு கூறப்படுகிறது. 

பட்டவராயர் வரலாறு:

முற்காலத்தில் பிராமணர் குலத்தில் பிறந்தவர் முத்து பட்டர். இவர் வாலிப வயதை எட்டிய பின்னர் அப் பகுதியில் வாழ்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகள்களான பொம்மக்கா, திம்மக்கா என்ற இரண்டு பெண்கள் மீதும் காதல் கொண்டார். அவர்களை மணம் முடிக்க தானும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக வேடம் புனைந்து, அந்த தொழிலாளியிடம் வேலைக்கு சேர்ந்து , செருப்பு தைக்கும் தொழிலை கற்று தொழில் செய்து வந்தார். நல்ல இளைஞனாக வாழ்ந்த முத்துப் பட்டரை அந்த தொழிலாளியும் ஏற்று தன் இரு மகள்களையும் அவருக்கே திருமணமும் செய்து வைக்கிறார். 

ஒருநாள் இவர்கள் வாழ்ந்த பகுதியில் உள்ள மாடுகளை சிலர் கவர்ந்து சென்று விட, அவர்களை கண்டறிந்து அவர்களுடன் போராடி வெற்றியும் பெற்று மாடுகளையும் மீட்டு விட்ட முத்துப் பட்டரை., கோபத்தில் எதிராளிகள், முத்துப்பட்டர் தன் உடலிலுள்ள குருதியைக் கழுவும் பொருட்டு கீழே குனிந்த போது, முதுகில் குத்தப்பட்டு உயிர் நீத்தார். அவரின் இறப்பை கேட்ட அவரின் இரண்டு மனைவிகளாகிய பொம்மக்கா மற்றும் திம்மக்கா ஆகியோரும் தங்களின் உயிரை துறந்தனர். இவர்களே பிற்காலத்தில் தெய்வங்களாக வணங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பட்டவராயர் கோவில் சொரி முத்து அய்யனார் கோவிலுக்கு வட பக்கம் மேற்கு திசை நோக்கி தனி கோவிலாக அமையப் பெற்றுள்ளது.

சுவாமி சொரி முத்து அய்யனார்:

கிழக்கு நோக்கிய கருவறையின் எதிரே குதிரை, யானை  வாகனங்களாக காட்சியளிக்க உள்ளே ஒரு கையில் மலர் ஏந்தியபடி, மற்றொரு கையை குத்துக்காலிட்ட முட்டின் மீது வைத்த படி அமர்ந்த கோலத்தில் புன்முறுவல் சொரியும் முகத்தோடு, பூர்ணா மற்றும் புஷ்கலா தேவியர்களோடு காட்சித் தருகிறார் சொரி முத்து அய்யனார்.

சுவாமி மகா லிங்கம்:

சொரி முத்து அய்யனார் சன்னதிக்கு வடபக்கம் கிழக்கு நோக்கிய தனி கருவறையின் எதிரே நந்தி வாகனம் காட்சியளிக்க, உள்ளே ஆதி லிங்க ரூபமாக காட்சியளிக்கிறார் மகா லிங்க சுவாமி.

சுவாமி சங்கிலி பூதத்தார்:

சொரி முத்து அய்யனார் சன்னதிக்கு தென் பக்கம் வட திசை நோக்கிய தனி சன்னதியில் கையில் தண்டம் என்னும் ஆயுதம் ஏந்தியபடி, நின்ற கோலத்தில், அருகே அகத்திய முனிவருடன் காட்சித் தருகிறார் சுவாமி சங்கிலி பூதத்தார்.

மணி விழுங்கி மரம்:

இத் திருக்கோவிலின் விருட்சமாகிய இலுப்பை மரத்தில் பக்தர்கள் மணிகளை காணிக்கையாக கட்டி வைப்பார்கள். அப்படி கட்டி வைத்த மணிகள் நாளடைவில் முழுவதுமாக மரத்துக்குள் பொதிந்து காணப்படுவதால் இம் மரம் மணி முழுங்கி மரம் என்று அழைக்கப்படுகிறது. இதன் அடியில் விநாயகர், பூதத்தார், மாட சாமி, பட்டவராயர், பிரம்மராட்சி அம்மை ஆகியோர் காட்சித் தருகிறார்கள்.

திருக்கோவில் அமைப்பு:

தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ள இக் கோவிலை தெற்கு கோவில், வடக்கு கோவில் என்று இரண்டாக பிரிக்கிறது காட்டாற்று ஓடை.

தெற்கு பகுதி கோவிலில் தான் சொரி முத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், மகா லிங்கம் சுவாமி ஆகியோர் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. தெற்கு கோவிலின் திருச்சுற்றின் தெற்கே சாஸ்தா சன்னதியும், பலாவடி பேச்சி சன்னதியும் இருக்கிறது. மேற்கே மேற்கு வாசல் பூதத்தாரும், அவருக்கு எதிரே மணி முழுங்கி மரத்தடி சன்னதியும், தீர்த்தக் கட்டமும் இருக்கிறது.

வடக்கு பகுதி கோவிலில் மேற்கு திசை நோக்கிய தனிக் கோவிலாக பட்டவராயர் கோவில் அமையப் பெற்றுள்ளது. பட்டவராயர் கோவிலில் செருப்பு காணிக்கை செலுத்தப்படுவதும், கிடா வெட்டி பலியிடுதலும் செய்யப்படும்.

தெற்கு கோவில் பகுதி முழுவதும் ஆசாரப் படையல் என்று கூறப்படும்  சைவ படையலே நிவேதனம் செய்யப்படும்.

வடக்கு கோவிலில் மாமிச படையலும், கிடா வெட்டுதலும் உண்டு. பட்டவராயர் கோவிலுக்கு தெற்கே தனிக் கோவிலில் பெரிய தளவாய் மாட சுவாமி, தூசி மாட சுவாமி, கச மாடன் - கச மாடத்தி ஆகிய சன்னதிகளும், இதற்கு பின்புறம் வடக்கு நோக்கிய தனிக் கோவிலில் பேச்சி அம்மன், பிரம்மராட்சி அம்மன், சுடலை மாட சுவாமி, கரடி மாட சுவாமி ஆகியோரின் சன்னதியும் உள்ளது.

திருக்கோவில் சிறப்புக்கள்:

இங்கு பட்டவராயர் சுவாமிக்கு செருப்புகள் காணிக்கையாக செலுத்தப்படுவது சிறப்பம்சம் ஆகும். இப்படி பக்தர்கள் செலுத்தும் செருப்புக்களானது சில நாட்கள் கழித்து கட்டி வைத்த இடத்தில் வந்து பார்த்தால் செருப்புக்களின் அடிப்பகுதி தேய்ந்திருக்கும் அதிசயம் நடைபெறுகிறது. இந்த செருப்புக்களை சுவாமியே அணிந்து வேட்டைக்கு சென்று வருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

இங்கு சங்கிலி பூதத்தாரின் பக்தர்கள் தங்களுக்கு அருள் வந்தால் இரும்பு சங்கிலியால் மார்பில் அடித்து சாமி ஆடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு பெண்கள் பிரம்மராட்சசி அம்மனுக்கு மஞ்சனை சாத்தி வழிபாடு செய்வதும் சிறப்பம்சம்.

இங்கு பெண்கள் சர்க்கரை பொங்கல் வைத்தும், கொழுக்கட்டைகள் அவித்தும் அம்மன்களுக்கு படைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் மாவட்டங்களில் பிரசித்த பெற்ற பங்குனி உத்திர குல தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற இக் கோவிலே இங்குள்ள சாஸ்தா மற்றும் குல தெய்வ கோவில்களுக்கு எல்லாம் தலைமை பீடமாக விளங்கி வருகிறது. தங்களுடைய குல தெய்வம் தெரியாதவர்கள் கூட இங்கு வந்து வழிபடுவது இக் கோவிலின் பெருமைக்கு சான்றாகும்.

இங்கு மழை பொய்க்கும் காலத்தில் அகத்தியர் அருள் வாக்கின் படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சொரி முத்து அய்யனாருக்கு பொன் குடங்களில் நீர் சொரிந்து அபிஷேகம் செய்யப்படுவதும், அப்படி செய்த 24- மணி நேரத்திற்குள் இங்கு மழை பொழியும் என்பது நம்பிக்கை.

முக்கிய திருவிழாக்கள்:

இங்கு ஆடி அமாவாசை அன்று பெருந் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக் கடன்களை பக்திப் பெருக்கோடு செலுத்தி இங்கு வழிபட்டு வருகின்றனர். ஆடி அமாவாசை அன்று இங்கு நடைபெறும் பூக்குழி இறங்கும் விழா பிரசித்தி பெற்றது ஆகும். அன்று இக் கோவிலில் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஜமீன்தார் அவர்கள் ராஜ உடையில் தோன்றி விழாவுக்கு சிறப்பு சேர்ப்பார்.

பங்குனி உத்திரம் விழாவும் இங்கு கோலாகலமாக நடைபெறும். பங்குனி உத்திரம் அன்று இக் கோவிலில் பக்தர்கள் தங்கள் குல தெய்வங்களுக்கு பொங்கல் வைத்தும், ஆசாரப் படையல் இட்டும் வழிபாடு செய்வார்கள்.

இது தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமை அன்றும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

அமைவிடம்:

திருநெல்வேலி மாவட்டம்., மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலைக்கு மேலே காணி குடியிருப்பு என்னும் மலைப் பகுதியில் இக் கோவில் அமையப் பெற்றுள்ளது. திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார் 45 கி. மீ தொலைவில் உள்ள பாபநாசத்திற்கு மேலே மலைப் பகுதியில் சுமார் 7 கி. மீ தொலைவில் உள்ள இக் கோவிலுக்கு காரையார் செல்லும் பேருந்தில் சென்றடையலாம்.

-திருநெல்வேலிக்காரன்.

Leave a Reply

Your email address will not be published.

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
 • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
 • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
 • போக்குவரத்து காவல்துறை : 103
 • மருத்துவ உதவி எண் : 104
 • தீயணைப்பு துறை : 101
 • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
 • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
 • குழந்தைகள் நலம் : 1098
 • பாலியல் துன்புறுத்தல் : 1091
 • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram