கணியான்கூத்து.

Author
April 5, 2021
Est. Reading: 1 minute
No Comments

தென்தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கிராமிய தெய்வங்கள் கோவில்களில் நடைபெறும் கொடை விழாக்களில் முக்கிய இடம் பெறுகிறது கிராமியக் கலையான "கணியான் கூத்து". கணியான் ஆட்டம், மகுட ஆட்டம் என்றும் அழைக்கப்படும் இது தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்தக் கணியான் கூத்து மகுடம் என்ற இசைக்கருவிகளை கொண்டு நிகழ்த்தப் படுவதால் இதற்கு மகுட ஆட்டம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

இந்தக் கணியான் ஆட்டம் எனப்படும் மகுட ஆட்டம் கிராமிய தெய்வங்களான சுடலை மாட சாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், கரடி மாட சாமி, தளவாய் மாட சாமி ஆகிய தெய்வங்களுக்கு நடைபெறும் கொடை விழாக்களில் முக்கியமாக இடம்பெறும். இது அசைவ படையல் ஏற்கும் தெய்வங்களின் விழாக்களில் மட்டுமே பெரும்பாலும் நடத்தப்படும் கலையாக விளங்குகிறது. இந்தக் கலையின் தொன்மையை ஆராய்ந்தால் இது பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கலையாகத் திகழ்கிறது. இந்தக் கலையானது முற்றிலும் ஆண்களை கொண்டே நிகழ்த்தப்படும். கோவில்களில் கொடை விழாக்கள் நடைபெறும் போது இடைவேளையே இல்லாமல் இரவு முழுவதும் விடிய விடிய நிகழ்த்தப்பெறும். இந்தக் கணியான் கூத்து மூலம் கோவில்களில் உள்ள சாமி கொண்டாடிகளுக்கு அருள் வரச் செய்யப்படும். பல காலம் தொட்டு பயன்பாட்டில் இருந்து வரும் இந்தக் கலையானது, தற்போதும் திருநெல்வேலி பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது. இன்றும் இங்கு நடைபெறும் கோவில் கொடை விழாக்களில் இந்தக் கணியான் கூத்து நிகழ்ச்சி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. எனினும் இந்தக் கலையை நிகழ்த்தக்கூடிய கலைஞர்கள் தற்காலத்தில் குறைந்து வருகிறார்கள் என்பது வேதனை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது.

இந்தக் கிராமிய கலையைக் கணியான் என்னும் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நிகத்துவதால் அவர்கள் பெயராலேயே கணியான் கூத்து என்று அழைக்கப்படுகிறது. கணியான் என்னும் சமூக மக்கள் குறைந்த அளவிலேயே வாழ்ந்து வருகிறார்கள் என்பதால் தற்போது இந்தக் கலை சுருங்கி வருகிறது. இந்தக் கிராமிய தெய்வங்களின் கோவில்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்தக் கணியான் கூத்து, அந்தந்த கிராமிய தெய்வங்களின் வரலாற்றைக் கருவாக கொண்டு நிகழ்த்தப்படுகிறது. இந்த நிகழ்வின் போது சில சடங்களுகளும் கணியான் கூத்து கலைஞர்களால் நிகழ்த்தப்படும். குறிப்பாகச் சுடலை மாட சாமி முன்பு நடக்கும் கணியான் கூத்து நிகழ்ச்சியில் கணியான் என்று அழைக்கப்படுபவர் தனது கையை அறுத்து அதில் இருந்து விழும் இரத்த துளிகளை படையல் சோற்றில் கலந்து தர, அதனை மண்டையோட்டில் வைத்துச் சாமியாடிகள் சாப்பிடும் நிகழ்வு போன்ற சடங்குகள் பின்பற்றப்படும். அதிலும் கொடை விழாக்கள் நடைபெறும்போது இரவு நாடு சாமத்தில் சுடலைமாட சாமி கோவிலில் இலைகள் போட்டு, படையலிட்டு பூஜை நடைபெறும். அப்போது அந்த இலை படையல்களிலும் கணியான் தனது புறங்கையை வெட்டி அதில் இருந்து விழும் இரத்த துளிகளை கலந்து தர, அந்தப் படையலானது சாமி கொண்டாடிகளால் எடுத்துச் சென்று எட்டு திசைகளிலும் வீசப்படும். இது போன்ற திகில் நிறைந்த சடங்குகள் இந்தக் கணியான் கூத்தில் இடம்பெறும். சில கோவில்களில் சாமிகொண்டாடி ஆனவர் நடுசாமத்தில் சுடுகாட்டிற்கு சென்று வேட்டையாடி மண்டையோடு எடுத்து வரும் நிகழ்வு நடைபெறும். அந்த நிகழ்வின் போதும் கணியான் கூத்து நிகழ்த்தும் கலைஞர்கள் சாமி கொண்டாடிகளோடு இணைந்து வேட்டைக்கு சென்று வருவார்கள்.

இந்தக் கணியான் கூத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய இசைக்கருவி "மகுடம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த மகுடம் என்பது பறை அல்லது தப்பட்டை என்று அழைக்கப்படும் இசைக்கருவியின் வடிவமைப்பை ஒத்திருக்கும். இந்த மகுடம் என்னும் கருவியோடு, ஜால்ரா என்று அழைக்கப்படும் தாளமும் இந்த நிகழ்ச்சியில் இசைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படும். மகுடம் என்னும் கருவி நன்று வைரம் பாய்ந்த வேம்பு, பூவரசு மரங்களில் இருந்து வட்டமாக வெட்டி எடுக்கப்பட்டு அதில் பசுவின் தோலைக் கட்டி தயார் செய்யப்படும். இந்தக் கணியான் கூத்து நிகழ்ச்சியில் உச்சகட்ட ஓசையமைப்பு கொண்ட ஒரு மகுடமும், மந்தமான ஓசையமைப்பு கொண்ட ஒரு மகுடமும் பயன்படுத்தப்படுகிறது. இதில் உச்சகட்ட ஓசையமைப்பு கொண்ட மகுடம், அதிகமான ஓசையையும், மந்தமான ஓசையமைப்பு கொண்ட மகுடம் சற்று இளகிய மிதமான ஓசையையும் தரும். இந்த மகுடத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை சூடான நெருப்பில் காட்டி உரமேற்ற வேண்டும். அப்போது தான் இதன் ஓசை துடிப்பாக இருக்கும். இந்தக் கணியான் கூத்து தொடங்கும்போது முதலில் மகுடம் இசைக்கப்படும். உடன் ஜால்ராக்களும் இசைக்கப்படும். இதில் புலவர் தான் பாடும் போது தனதுஇ ஒரு காதலி கையால் பொத்தி, மறு கரத்தை வீசியபடியே பாடல்களை பாடுவார். உடனிருக்கும் அண்ணாவி புலவர் பாடும் வரிகளுக்கு ஏற்ப ஜால்ராக்களை தட்டி ஓசை எழுப்பிய படியே, புலவரின் பாடலை ஆமோதிப்பது போல உடன் பாடுவார். இதில் புலவர் அந்தந்த கோவில் தெய்வங்களின் கதையை மரபிசையோடு இணைத்துப் பாடலும், கதையாகப் பாடுவார். அதற்க்கு ஏற்றப் படி மகுடங்கள் ஏற்றி, இறக்கி வாசிக்கப்படும். இந்தக் கணியான் கூத்து மூலம் அந்தந்த திருக்கோவிலின் சாமி கொண்டாடிகளுக்கு அருள் வரச் செய்யப்படும். இதற்காகச் சாமி கொண்டாடிகளுக்கு மிக அருகில் இருந்தபடியே மகுடங்களை வாசித்தும், பாடல்களை பாடியும் சாமி கொண்டாடியை ஆவேசம் அடைய செய்வார்கள்.

இந்தக் கணியான் கூத்திற்கும், சுடலை மாட சாமிக்கும் தொடர்பு இருப்பதாகக் கதையில் கூறப்படுகிறது. முன் ஒரு காலத்தில் இந்தப் பூவுலகில் தவம் இயற்றிக்கொண்டிருந்த முனிவர்கள் தங்களின் காவலுக்கு ஒரு தெய்வம் வேண்டும் என எண்ணம் கொண்டு சிவபெருமானை நோக்கித் தவம் இருக்க, அவர்களின் தவத்திற்கு இறங்கிய சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி , வேள்வி ஒன்றை நடத்திட ஆணையிடுகிறார். அப்படி வேள்வி நடத்தினால் அந்த வேள்வித்தீயில் இருந்து ஒரு தெய்வம் தோன்றும் எனவும் அந்தத் தெய்வத்தை வணங்கி அது கேட்பதை செய்தால் அது உங்களை காத்து நிற்கும் எனக் கூறி அருள்பாலிக்கிறார். அதன்படியே முனிவர்களும் வேள்வி ஒன்றினை நடத்திட, அதற்குள் இருந்து ஒரு தெய்வம் தோன்றுகிறது. அந்தத் தெய்வமே சுடலைமாடன் என்று அழைக்கப்பட்டது. வேள்வித் தீயில் தோன்றிய சுடலைமாடன், அங்கிருந்த முனிவர்களை நியோங்கி தான் வெளியே வந்து உங்களுக்குக் காவல் தெய்வமாக விளங்க வேண்டும் என்றால், தன்னை மகிழ்விக்கும் பொருட்டு ஆடு, கோழி போன்ற உயிரினங்களின் பலி வேண்டும் எனவும், தன்னை எப்போதும் ஆடல், பாடல் நிகழ்த்தி மகிழ்விக்கக்கூடிய இரண்டு நபர்கள் வேண்டும் எனவும் கேட்கிறார். அதன் படியே சுடலை மாடனுக்கு உயிர் பலி கொடுத்து, அவரை ஆடல் மற்றும் பாடல் செய்து மகிழ்விப்பதற்காக இரண்டு நபர்கள் தோற்றுவிக்கப் படுகிறார்கள். அந்த இரண்டு நபர்களே பின்னர் கணியான் என்று அழைக்கப்பட்டதாகவும், இந்த இரண்டு நபர்களில் இருந்து வம்சாவளியாகத் தோன்றிய நபர்களே இப்போதுள்ள கணியான் என்றும் இவர்களின் வரலாறு வாய்மொழியாகக் கூறப்படுகிறது. இதனால் தான் சுடலை மாட சாமியின் படையலில் மட்டும் கணியானின் கையைக் கீறி ரத்தம் படைக்கப்படுகிறது எனத் தெரிய வருகிறது. தெய்வ வழிபாட்டுடன் கூடிய நாட்டுப்புற கலையாகக் கணியான் கூத்து திகழ்கிறது. இந்தக் கணியான் கூத்து எனப்படும் மகுட ஆட்டத்தின் மூலம் தான் சாமி கொண்டாடிகளுக்கு அருள் வரச் செய்யப்படும். அருள் இறங்கும் சாமி கொண்டாடிகள் ஆவேசம் ஆரவாரம் செய்து கொண்டே அருள்வாக்கு கூறுவார்கள். அவர்கள் அருள் கூறும் நேரத்தில் மகுடம் இசைப்பதும், பாடல் பாடுவதும் நிறுத்தப்பட்டு, பின்னர் ஆவேசம் அடையும் போது மகுடங்கள் இசைத்து, பாடல்கள் பாடப் பட்டு என இந்த நிகழ்ச்சி அமையும். சாமிகொண்டாடிகளுக்கு அருள் வரச் செய்வதற்காக இந்தக் கணியன் கூத்து பெரும்பாலும் நிகழ்த்தப்படும். முற்காலத்தில் இரண்டு நபர்கள் மட்டுமே பங்குபெற்று நடத்தப்பட்ட இந்தக் கணியான் கூத்து, பின்னர் வந்த நாட்களில் ஜால்ரா இசைப்பவர்கள், பெண் வேடம் இட்டு ஆடுபவர்கள், மகுடம் இசைக்கும் கலைஞர்கள் என விரிவடைந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது கணியான் கூத்தில் குறைந்தது ஐந்து முதல் ஏழு கலைஞர்கள் வரை பங்கு பெறுவார்கள். இவற்றுள் இரண்டு கலைஞர்கள் பெண் வேடமிட்டு புலவர் பாடும் பாடல்களுக்குத் தகுந்த படி ஆடுவார்கள். இந்தப் புலவரின் கதை பாடலைக் கேட்டு அதனை திருப்பிப் பாடும் துணைப்பாடகர் அண்ணாவி என்று அழைக்கப்படுவார்கள். இதில் புலவர் பாட, அண்ணாவி என்று அழைக்கப்படுபவர் ஜால்ரா இசைத்து கொண்டே திருப்பி எடுத்துப் பாட, இரண்டு பெண் வேடமிட்ட கலைஞர்களும் ஆட, பின்னணியில் மகுடம் இசைக்கும் கலைஞர்கள் மகுடம் இசைக்க எனக் கணியான் கூத்து நிகழ்த்தப்படும்.

பொதுவாக ஆடி, ஆவணி, தை, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் செவ்வாய்கிழமைகளிலும், சுடலை மாட சாமி கோவிலில் வெள்ளிக்கிழமைகளிலும் கொடை விழாக்கள் நடைபெறும். இந்தக் கொடை விழாவானது ஒரு வாரத்திற்கு முன்பே கால்நாட்டுதலுடன் தொடங்கும். அன்றில் இருந்தே காணியான்கள் என்று அழைக்கப்படும் இந்தக் கூத்து நிகழ்த்தும் கலைஞர்கள் இரண்டு வேளையிலும் குளித்து, காப்புக்கட்டி, ஒரு நேரம் பச்சரிசி சாதம் மட்டும் உண்டு விரதம் இருக்க துவங்குவார்கள். பின்னர் மறுவாரம் கொடை விழா நடைபெறுவதற்கு முதல் நாள் நடைபெறும் குடியழைப்பில் துவங்கி, மறுநாள் உச்சிக்கொடை, சாமக்கொடை, சுடுகாட்டு பூஜை, கை வெட்டு அளிக்கும் நிகழ்வு, முடிந்து மஞ்சள் நீராட்டு முடியும் வரை கணியான் கூத்து நிகழ்ச்சியை நடத்துவார்கள். இந்த விழாவின் துவக்கமாகக் கோவில் சாமிகொண்டாடியை அழைத்து அமரவைத்து அவருக்கு வெற்றிலை - பாக்கு வழங்கி மரியாதை செய்து, அவர் முன்னர் கணியான் கூத்து நிகழ்ச்சி நடத்தி, அவருக்குள் சாமியை இறங்க செய்வார்கள். பின்னர் மறுநாள் நள்ளிரவு நடைபெறும் சுடுகாட்டு திரளை பூஜையிலும், கலந்து கொண்டு கணியான் கூத்தை நிகழ்த்துவார்கள். இதோடு சாமிகொண்டாடிகள் உண்ணுவதற்கு தேவையான சாப்பாட்டையும் அன்று இந்தக் கணியான் தான் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு கிராமிய கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் கணியான் கூத்து முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கணியான் கூத்தை நிகழ்த்துபவர் வெறும் கலைஞராக மட்டும் இல்லாமல், தெய்வ சக்தி மிக்கராகவும் விளங்குகிறார் என்பதால் கிராம மக்கள் கணியான் கூத்து மீது அதிகளவு ஈடுபாடு காட்டி வருகிறார்கள் என்பதை கண்கூடாக இன்றும் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2021 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram