ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியில் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகின்றது . ஆறு நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா முருகப்பெருமானுக்கு விரதமிருந்து கொண்டாடக்கூடிய திருவிழாவாகும். முருகப்பெருமானுக்கும் சூரனுக்கும் நடக்கக்கூடிய சூரசம்ஹாரம் தரிசனம் செய்த பிறகே பக்தர்கள் விரதத்தை முடிப்பர் .’ சட்டியில் இருந்தால் அகப்பையில்’ எனும் பழமொழி கந்தசஷ்டி விரதத்தை பற்றி மிக அருமையாக எடுத்துரைக்கின்றது.சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள் அதாவது சஷ்டி திதியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை தரிக்கும் என்பது பழங்காலத்தில் இருந்து கூறி வருகின்ற ஒரு பழமொழி .அதன்படி மக்கள் கந்தசஷ்டி அன்று விரதமிருந்து முருகனை வழிபட்டு குழந்தைப்பேறு பெறுகின்றனர்.
முருகனை வழிபடக்கூடிய இந்த விழா மகா சஷ்டி விழா அழைக்கப்படுகின்றது. மாதம்தோறும் சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசி மாதம் கொண்டாடக்கூடிய மஹா சஷ்டி அன்று விரதமிருந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் ஜெயமாகும் என்று மக்கள் நம்பிக்கையோடு வழிபாடு செய்கின்றனர்.
முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் நடந்து சூரபத்மனை முருகன் ஆட்கொள்கிற தினமே கந்தர் சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகின்றது அன்றைய தினத்தில் காலையிலிருந்து மாலை வரை பயபக்தியோடு விரதம் இருக்க வேண்டும். குழந்தை வரம் வேண்டுவோர் குழந்தை பிறந்ததும் முதல் முடி காணிக்கை திருச்செந்தூர் கோவிலில் செலுத்துகின்றேன் என்று வேண்டி விரதம் இருப்பர். சஷ்டி அன்று விரதம் மேற்கொண்டு காலையும் மாலையும் விளக்கேற்றி கணவனும் மனைவியும் ஒன்றாய் அமர்ந்து கந்தர் சஷ்டி கவசம் படிக்க வேண்டும். மாலையில் சூரசம்ஹாரம் முடிந்ததும் கணவன் மனைவி இருவரும் தலை குளித்து கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். முறையான விரதத்தை கடைபிடித்தால் அழகான மழலைச் செல்வம் அடுத்த சஷ்டிக்குள் பிறக்கும் என்பது ஐதீகம்.
வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் என முருகனுக்கு நிறைய விசேஷங்கள் வந்தாலும் கந்த சஷ்டி விழா என்பது ஆறு நாட்களுக்கு நடைபெறக்கூடிய மிகப்பெரிய திருவிழாவாகும். சஷ்டிக்கு மறுநாள் முருகனுக்கு திருக்கல்யாணம் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடைபெறும்..அந்த கல்யாண கோலத்தை தரிசித்தால் நீண்டநாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக நம்பப்பட்டு வருகின்றது.
பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானை பக்தியுடன் வழிபட்டு சிறப்புடன் வாழ்ந்து வருகின்றார். ஒரு நாள் திடீரென்று கடுமையான நோயால் தாக்கப்பட்டு படுக்கையில் விழுகிறார். கோடி கோடியாக சொத்துகள் இருந்தும் அவருடைய நோயை யாராலும் குணப்படுத்த முடியவில்லை. இனிமேல் உயிர் வாழ்வதில் பயனில்லை என்று வாழ்க்கையை வெறுத்து சாகலாம் என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றார். கடைசியாக ஒருமுறை திருச்செந்தூருக்கு சென்று வரவேண்டும் என்று மனதில் தோன்ற திருச்செந்தூர் வருகின்றார். தம்முடைய நிலையை நினைத்து முருகனுடைய சன்னிதானத்தில் வருந்தி கதறுகிறார். அன்று இரவு கனவில் முருகப் பெருமான் தோன்றி தமக்காக ஒரு பதிகம் இயற்றுமாறும் அந்த பதிகத்தால் நல்ல மாற்றம் கிடைக்கும் என்றும் கூறி மறைகிறார்.
முருகப் பெருமானே நேரில் வந்து தரிசனம் கொடுத்தது கண்டு மன மகிழ்ச்சியோடு பதிகம் எழுத பாலதேவராய சுவாமிகள் ஆரம்பிக்கின்றார். அவர் பாடிய பதிகமே கந்தர் சஷ்டி கவசம் ஆகும் . திருச்செந்தூர் கடலிலே நீராடி அந்த பதிகத்தை பாடியதும் அவருடைய நோய் விலகி பூரணமாக குணம் அடைகின்றார். தெய்வத்தை நம்பிக்கையோடு வழிபடுவோருக்கு நிச்சயம் நல்லதே நடக்கும் என திருச்செந்தூர் திருத்தலத்தில் முருகன் அருள்பாலிக்கின்றார்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். திருச்செந்தூரில் முதல் 6 நாட்களுக்கு கந்த சஷ்டி விழா, ஏழாம் நாள் முருகன் தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள் சுவாமி திருக்கல்யாண வைபோகம் ஊஞ்சல் சேவை என 12 நாட்கள் தொடர்ந்து கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுகின்றது.
மீனவ குலத்தில் பிறந்தவள் இந்திரனின் மகள் தெய்வானை என்று பரதகுல பாண்டியர் வம்சம் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முருகப்பெருமானை’ மச்சான் சாமி’ என்று திருச்செந்தூர் மீனவர்கள் அழைக்கின்றனர். உற்சவர் குமார விடங்க பெருமாள் மாப்பிள்ளை சாமி என்று அழைக்கப்படுகின்றார். சூரசம்ஹாரம் அன்று மாப்பிள்ளை சாமியை வணங்கி வழிபடுபவர்களுக்கு மணக்கோல பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும் திருச்செந்தூருக்கு உரிய சிறப்பம்சமாகும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கி கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும், திருமணம் விரைவில் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும், நோய் நொடிகள் தீரும் என்று பாலதேவராய சுவாமிகள் கூறி இருக்கின்றார். அவர் எழுதிய பாடல் தான் கந்த சஷ்டி கவசம் என மக்களால் போற்றி பாடப்படுகின்றது..